அல்லாஹ்வின் கருணையினால் நம் ஹஜ் ஒப்புக் கொள்ளப்படுகிறது

சூஃபிகளின் ஹஜ் : - 13
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அல்லாஹ்வின் கருணையினால் 
நம் ஹஜ் ஒப்புக் கொள்ளப்படுகிறது 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

பொதுவாகவே அனைத்து முஸ்லிம்களும் செய்கிற அமல்களில் கலப்படமும் குறைபாடுகளும் இருக்கின்றது. 

ஒரு சிலருடைய அமலில் மட்டுமே குறையும், கலப்படமும் இல்லாமல் இறைவனால் முழுமையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

"மறுமை நாளில் சிலருடைய அமல், அழுக்கேறிய துணிகளை சுருட்டி நாம் மூளையில் வீசுவது போல் நமது முகங்களில் நமது அமல்களை இறைவன் வீசுவான்" என்று நபி (ஸல்) அவர்கள் ( புகாரி) சொல்லி இருப்பது தாங்கள் அறிந்ததே! 

எனவே நமது அமல்கள் அங்கீகரிக்கப்படுவதும், அதற்கு ஏதேனும் சன்மானமாக நன்மைகள் வழங்கப்படுவதும் அல்லாஹ்வின் அன்பினாலும் கருமைநாளுமே தவிர நமது செயல்களால் அல்ல!

இறைநேசர் அபூ அப்துல்லாஹ் ஜவ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

நான் ஒரு ஹஜ்ஜின் போது அரஃபாவில் தங்கியிருந்தேன். எனக்கு சிறிது தூக்க மேலிட்டு கண்களை மூடினேன். 

கனவில் இரண்டு மலக்குகள் வானிலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். ஒருவர் மற்றவரைப் பார்த்து, "இவ்வருடம் எத்தனைபேர் ஹஜ்ஜுக்கு வந்திருக்கின்றனர்?'' என வினவினார். 

அதற்கு மற்றவர், "ஆறு லட்சம் பேர் வந்திருக்கிறார்கள்" 

அவர்களில் எத்தனை பேருடைய ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்டது ?

ஆறு லட்சம் நபர்களில் வெறும் ஆறு பேரின் ஹஜ்ஜு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்று பதில் அளித்தார்.

இதைக்கேட்ட எனக்கு வருத்தத்தால் உள்ளமே வெடித்து விடும் போலிருந்தது. 

என்னை நானே கன்னத்தில் அறைந்து கொள்ளலாமா, வீறிட்டுக் கதறி அழலாமா என்று எண்ணினேன். 

அப்பொழுது அந்த முதல் வானவர், "யாருடைய ஹஜ்ஜு ஒப்புக் கொள்ளப்பட வில்லையோ அவர்களைப்பற்றி அல்லாஹ் என்ன முடிவு செய்தான்?" என வினவினார். 

அதற்கு மற்றவர் "அவன் கருணையாளன்; தாராள மனப்பான்மையோடு நடந்து கொண்டான்; ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொருவரின் பொருட்டால் ஒரு லட்சம் நபர்களின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்" என பதிலளித்தார்.

அல்லாஹ் தன் தனிப்பெருங் கிருபையால் யாருக்கு வேண்டுமானாலும் அருள்பாலித்து தனது அன்பான அரவணைப்பில் சேர்த்துக் கொள்வான்.

நூல் : ரவ்ழுர் ரைய்யாஹீன்

இந்த நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் வரும் ஒரு ஹதீஸை ஒத்து இருக்கிறது.

"இவருடைய கண்கள் உறங்குகிறது; ஆனால் இவருடைய இதயம் விழித்திருக்கிறது" என்கிற நபிமொழியே நீங்கள் வாசித்திருக்க கூடும்.

புகாரி 1147, 3570, முஸ்லிம் 738 , ஆகிய எண்களில் இந்த நபி மொழியை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் அமல் 
உங்களின் செயலால் 
ஒப்புக்கொள்ளப்படவில்லை. 

அல்லாஹ் 
தன் தயாள குணத்தால் 
ஏற்றுக்கொள்கிறான் என்பதை உண்மை.

Comments