நபித்தோழர்கள்

 அன்சாரிகளை நேசித்த அண்ணலார் :

======================================

ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியாகும்.                                                      

இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.                                           

முஸ்லிம்களின் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும் கைகோர்த்துக் கொண்டனர்.

இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள் கிடைத்தன. 

கிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக {வெற்றிப் பொருளாக} கிடைத்தன.   கனீமத் பொருட்களை மாநபி {ஸல்} அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் {ரலி}, அபூ சுஃப்யான் {ரலி} போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள்.

புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் நிறைய கொடுத்தார்கள்.  

ஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை.  இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி {ஸல்} அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள்.

சூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா {ரலி} அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்து “அன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள்.

ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்” என்றார்கள்.  அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஸஅதே! நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.                                  

நானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே!” என்று ஸஅத் {ரலி} அவர்கள் பதில் கூறினார்கள்.                                  

 உடனே நபி {ஸல்} அவர்கள் “சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்” என்றார்கள்.                            

அங்கிருந்து வெளியேறிய ஸஅத் {ரலி} அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடினார்கள்.

அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் {ரலி} அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.   

இது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் {ரலி} அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். 

அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி {ஸல்} அவர்களிடம் சென்று ஸஅத் {ரலி} அவர்கள் “வாருங்கள்! அல்லாஹ்வின் தூதரே! அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்” என்றார்கள்.                                                      

 நபி {ஸல்} அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு “ ஓ! அன்ஸாரிகளே! உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா? என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே?...                                                        

 “நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.

 நீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.” என்று கூறினார்கள். அதற்கு அன்ஸாரிகள் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான்.”

அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கருணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.” என்று கூறினார்கள்.

பின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி {ஸல்} அவர்கள் “ஓ! அன்ஸாரிகளே! நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.  

அதற்கு அன்ஸாரிகள் “ அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்?    என்றார்கள்.

அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.” என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம். 

அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அன்ஸாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்?” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். “மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன்.

 உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். {உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்}     

அன்ஸாரிகளே! மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா?”

 இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன். 

யா அல்லாஹ்! அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக!”” என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.                                               

இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.  

 ”அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.” என்றார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். (  நூல்:தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:244,245,246., தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத்,  ஹதீஸ் எண்:923. அஹ்மத், ஹதீஸ் எண்:11153. )








Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்