24. ஸூஃபிகள்

டிசம்பர் மாதம் குர்ஆன் குரலில் வெளிவந்த கட்டுரை 2025

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபியாக்களின் சொற்கள்....

===================================





ஞானி ஹசன் முதல்முறையாக பக்தாத் வந்தார். அங்கே தங்குவதற்கு அறைகளைத் தேடினார். இவருக்கு அந்த ஊரில் யாரும் அறிமுகம் இல்லாததால் எவரும் அறை வழங்கவில்லை.

இந்நிலையில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டின் உரிமையாளரிடம் விபரத்தை கூறி "இன்று ஒரு இரவு மட்டும் தங்கிக் கொள்ள அனுமதி தாருங்கள்" என கேட்டார். மேலும் நாளை வேறு அறைகளில் தங்கிக் கொள்வதற்கு தாங்கள் எனக்காக சிபாரிசு செய்ய வேண்டும் எனவும் வேண்டி நின்றார்.

அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளர், "நான் ஒரு திருடன், நீங்கள் என் வீட்டில் வேண்டுமானால் இன்று தங்கிக் கொள்ளுங்கள், நான் சிபாரிசு செய்தால் யாரும் உங்களுக்கு வீடு தர மாட்டார்கள், நீங்கள் விரும்புகிறவரை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை" என கூறினார்.

அந்த திருடன் சொல்லிவிட்டு, "நான் என் வேலையை பார்க்கச் செல்கிறேன் நீங்கள் தங்கி ஓய்வெடுங்கள்" என சொல்லிவிட்டு சென்று விட்டார்.

விடியற்காலையில் திருடன் வீட்டுக்கு வந்தான். ஞானி ஹசன்  தஹஜ்ஜத் தொழுது கொண்டிருந்தார். திருடனைப் பார்த்ததும், "போன காரியம் நிறைவேறியதா?" என்று கேட்டார். "இன்று ஒன்றும் கிடைக்கவில்லை நாளை ஏதேனும் கிடைக்கலாம்" என சாதாரணமாக சொல்லிவிட்டு அவர் உறங்கச் சென்று விட்டார்.

இப்படி ஒரு மாத காலம் தொடர்ந்து அந்த திருடனுக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை. தினம் தினம் ஏமாற்றத்தோடு தான் திரும்பினார். ஆனால் ஒரு நாள் கூட அவர் அழுத்துக் கொள்ளவில்லை. வருத்தப்படவில்லை. கை சேதப்படவில்லை. வேதனைப்படவில்லை. நாளை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் அவர் நாட்களை கடத்தினார்.

பிந்நாளில் ஹஸன் ஞானம் பெற்ற பிறகு சொன்னார். "என் ஞானகுரு அந்த திருடன் தான். தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஒரு காரியத்தை செய்வதைப் பார்த்து நானும் கற்றுக் கொண்டேன். எனக்கும் ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நான் இறைவழிபாட்டில் ஈடுபட்டேன் ஞானம் பெற்று விட்டேன்" என்று சொன்னார். 

எனவே ஞானம் பெறுவதாக இருந்தாலும் எதை அடைய வேண்டுமானாலும் அதற்கான வழியை தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டும்.

கடப்பாரை பெயர்க்க முடியாத பாறையை மரத்தின் வேர்கள் இரண்டாகப் பிளந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அது போல தான் நமது ஏதோ ஒரு சிறிய செயல் நம்மை ஞான வாசலை திறக்க வைத்து விடும்.

ஒரு வழிபாட்டில் ஊன்றிடுக

=============================


பெரியதில் இருந்து சிறியதை கொண்டு வர மனிதனால் முடியும். பெரிய வேட்டியை சிறு துண்டாக்க அவனால் முடியும். ஆனால் சிறு துண்டை சேலையாக்க அவனால் முடியாது. ஆனால் இயற்கை சிறு விதையிலிருந்து பெரிய மரத்தைப் படைத்துக் காட்டிவிடும்.

ஜலாலுதீன் ரூமி தோட்டத்திற்குச் சென்றார். அங்கு மூன்று பள்ளங்கள் இருந்தன. என்ன இது? என்று மாணவர்களிடம் வினவினார். "முதலாவது இடத்தில் கிணறு தோண்டினோம். அந்த இடத்தில் தண்ணீர் வரவில்லை. உடனே இரண்டாவதாக வேறொரு இடத்தில் தோண்டினோம். அங்கும் தண்ணீர் வரவில்லை. இப்போது மூன்றாவதாக இந்த மூலையில் தோண்டுகிறோம்" என்றனர்.

"பூமியின் அடியில் எல்லா இடத்திலும் நீர் உண்டு. பல இடங்களில் தோண்டுவதைவிட ஒரே இடத்தில் நன்கு ஆழமாகத் தோண்டுங்கள் நீர் பீறிட்டுக் கொண்டு வரும்" என்றார்.

மனிதர்கள் இறைவனை அடைய ஏதாவது ஒரு வழியில் முயற்சிப்பார்கள். பின்னர் அதில் சலித்துப்போய் வேறொரு வழியில் முயற்சி செய்வார்கள். பிறகு அதனை விட்டுவிட்டு இன்னொரு முயற்சி மேற்கொள்வார்கள் இப்படி யோகம், தவம், வழிபாடு, யாத்திரை என்றெல்லாம் மாறி, மாறி முயற்சிப்பதைவிட ஒரே முயற்சியை உறுதியுடன் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மூச்சு விட யாரும் மறப்பதில்லை. அதனால் மூச்சு விடுவது பற்றி யாரும் நினைப்பதே இல்லை. மூச்சு எப்படி இறுதிவரை உள்ளதோ மூச்சு விடுதல் எப்படி இயல்பான தொடர் நிகழ்வோ அதுபோல் தொடர்ந்து ஒரே நற்செயலை செய்து வந்தால் ஞானம் பிறக்கும்.

ஞானப்பசி மூள முயற்சிக்கிறேன்

===============================


பசி என்ற ஒன்று எடுக்காவிட்டால் உங்கள் முன் எவ்வளவு உணவு வகைகளை அடுக்கி வைத்தும் பலன் இல்லை. பசியே இல்லாதவனால் அதிலிருந்து ஒரு பிடி கூட சாப்பிட முடியாது. நன்கு ருசித்து சாப்பிடுவதில் உணவின் தேவை இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. உனக்குள் பசி இருப்பதே இங்கு முக்கியம்.

சிந்திக்கும் திறனற்ற மாணவனுக்கு எத்தனை பேராசிரியர்கள் கூடி அறிவு நூல்களிலிருந்து போதித்தாலும் பலனில்லை. மரமண்டை என்று பள்ளி ஆசிரியர்கள் திட்டுவதுபோல் புத்தியில் எதுவும் ஏறாது. சிந்தனைத் திறன் இருக்கும் மாணவனுக்கு போதிக்க ஆசிரியர்களே இல்லாவிட்டாலும் அந்த நூல்களை அவனே படித்துத் தேர்ந்து விடுவான்.

இதையெல்லாம் தாண்டியது ஞானப்பசி மனத்துள் ஆன்ம வேட்கை மூண்டு விட்டால் அவனே மலர்களைத் தேடி வண்டு பறப்பதுபோல் ஞானத்தைத் தேடிச் சென்று விடுவான். இல்லையேல் மகான்களும், ஞானிகளும் அவனைத் தேடி வந்து போதனை செய்யினும் அதனை ஏற்க மாட்டான்.

வயிற்றுப்பசி, உடற்பசி இவற்றையெல்லாம் தாண்டியது ஞானப் பசி ஞானம் பெறுவது இரண்டாம் பட்சம்தான். முதலில் அந்த ஞான வேட்கை மனத்துள் மூள வேண்டும். இந்த ஞானப்பசி உங்களிடம் மூளத்தான் நான் முயற்சிக்கிறேன்.

ஞானம் சுரக்கும் வழி அன்பு

===========================


ஒருமுறை சூஃபி ஞானி கபீர் தன் மகனிடம், மாடுகளுக்குத் தீனி வைக்க புள் வெட்டிக் கொண்டு வருமாறு சொன்னார். போனவன் நெடு நேரமாகியும் திரும்பி வரவில்லை. பொறுமை இழந்த கபீர் மகனைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். 

புல்வெளி ஒன்றின் நடுவே அவரது மகன் நின்று கொண்டிருந்தார். அங்கே சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அவற்றுடன் கபீரின் மகனும் அழகாக அசைந்தாடிக் கொண்டிருந்தார்.

கோபத்துடன் மகளை உலுக்கிய கபீர், "உனக்கு என்ன பைத்தியமா? என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கே" என்றார். "நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் எல்லாம் ஏகாந்தமாக காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. 

சட்டென்று ஒரு ஆனந்தம் என்னையும் தொற்றிக் கொண்டது. நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டேன். என்னை மறந்து நானும் புல்லோடு புல்லாக ஆகிவிட்டேன்.

ஆஹா! என்ன ஆனந்தம் அது?" என்றார் அவர்.

அதிர்ச்சி அடைந்த கபீர், "உன்னை புற்களை வெட்டி எடுத்து வரும்படியல்லவா சொன்னேன்" என்று தான் அவருக்கு இட்ட வேலையைப் பற்றி நினைவூட்டினார்.

"என்னது? புல்லை வெட்டுவதா? என்னால் அது ஒருபோதும். முடியாது. இவை எனக்கு அளவற்ற ஆனந்தம் அளித்தவை. இவற்றுடன் நெருங்கிய உறவு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு தனி உலகில் இவற்றுடன் நான் இதுவரை இருந்தேன், ஒருபோதும் இவற்றை என்னால் கிள்ளக்கூட முடியாது" என்றார் அவர் பதைப்புடன்.

பிரமித்துப்போன கபீர் அப்போதே தனது மகனுக்கு கமால் என்று பெயர் சூட்டினார்.

கமால் என்றால் அற்புதம் என்று பொருள். அந்தப் பெயரே அவருக்கு  சூஃபி வரலாற்றில் நிலைத்து விட்டது.

புல்லுக்கும் உயிர் உண்டு என்றுணர்ந்து அந்த ஜீவனையும் நேசித்த அன்பு உள்ளம் இது.

உலகில் முதலில் தோன்றியவை தாவரங்களே. பின்னர்தான் அனைத்து உயிர்களும் தோன்றின ஆண்டவன் படைப்பில் தாவரங்களே மூத்தவை. நாம் தான் கடைசியாகப் பிறந்த செல்ல கடைக்குட்டிகள்,

இறைவனுடன், ஆகாயத்துடன் நேரடியான தொடர்பு மனிதனுக்கும், தாவரங்களுக்கும் மட்டுமே உண்டு. இவை இரண்டும்தான் நேராக வானம் நோக்கி வளர்பவை. மற்றபடி புழு, பூச்சி முதல் யானை, திமிங்கிலம், ஒட்டகம், மலைப்பாம்பு எல்லாமே பக்கவாட்டில் நீண்டு வளர்பவைதான்.

எனினும் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உண்டு. புழு, பூச்சி முதல் திமிங்கலம், ஒட்டகம். மலைப்பாம்பு என அனைத்து உயிர்களும் பக்கவாட்டில் உணவு எடுத்து பக்கவாட்டில் செலுத்தும். மனிதன் மேற்புறமாக உணவெடுத்து கீழ்ப்புறமாக செலுத்துகிறான். தாவரங்கள் மட்டுமே கீழ்ப்புறமாக உணவை எடுத்து மேல் நோக்கி செலுத்தும், அதே சமயம் மேற்புறமாகவே வளரும்.

வேர்கள் பூமியுடனும், உச்சி ஆகாயம் நோக்கியும் செல்வதால் இயற்கையுடன் ஒன்றி வாழும் ஒரே ஜீவன் தாவரம் மட்டுமே. 

எனவே நமக்கும் முன்னால் பிறந்த தாவரங்களை கபீர் நேசித்தது போல் நாமும் நேசிக்க வேண்டும். சொல்லுவார்கள் எல்லோரும் நேசியுங்கள் எல்லோரையும் நேசியுங்கள்.

இல்லற வாழ்விற்கும் சூஃபி வழிகாட்டுதல்

====================================


சூஃபி ஞானி கபீரைப் தேடிக் கொண்டு பலரும் வருவார்கள். அவர்களது சந்தேகங்களையெல்லாம் அவரிடம் தெரிவிப்பார்கள். அவரும் பொறுமையுடன் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பார். 

ஒருநாள் அவரிடம் வந்தவர்கள் எல்லாம் போய் விட்டனர். ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மாலைப் பொழுதும் ஆகிவிட்டது. அவர் இருந்த இடத்தை விட்டு அசைவதாக இல்லை.

"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் கபீர். வந்தவர் தயங்கினார்.

அவரது முகத்தைப் பார்த்து கபீர் சொன்னார். "உங்கள்

முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்று தெரிகிறது. நான் சொல்வது சரியா?"

வந்தவர் ஆச்சரியப்பட்டார். "என் மனைவியும், நானும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தவில்லை. என் பேச்சை அவள் மதிப்பதே இல்லை. நாள் முழுவதும் எங்களுக்குள் போராட்டம்தான். வாழ்க்கையே நரகமாக இருக்கிறது."

கபீர்தாசர் இதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. தன் மனைவியை அழைத்து இருவருக்கும் பால் கொண்டு வரும்படி சொன்னார். அவர் மனைவி பால் கொண்டு வந்து வைத்ததும் இருவரும் குடிக்க ஆரம்பித்தனர். வந்தவர் முகம் அஷ்ட கோணலாக சுருங்கியது. காரணம் அந்தப் பாலில் இனிப்பே இல்லை. இனிப்பு போட மறந்துவிட்டார் அவர் மனைவி.

ஆனால் கபீர் முகம் கோணாமல் பாலை அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார். உள்ளிருந்து அவர் மனைவி “போதுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று கேட்டார்.

"போதும். ருசியாக இருக்கிறது" என்றார் கபீர். வந்தவர் கேட்டார். "என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?"

கபீர் சொன்னார். குவளையைக் காட்டியபடி, "இதுதான் என் பதில். குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே இனிய இல்வாழ்க்கைக்கு வழி

எதையும் பெரிது படுத்தாமல், இதுதான் நடக்க வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் தன் இஷ்டத்துக்கு வளைக்காமல் அதன் இஷ்டப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சூஃபிகளின் மார்க்கமாக என்றுமே இருந்து வந்துள்ளது.

எனவே நமது இல்லற வாழ்வு எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க சூஃபியாக்களின் இல்லற வாழ்வும் நமக்கு வழி காட்டுகிறது.

ஞானம் பெறுவதே முதன்மையானது

====================================


முல்லா நசிருதீன் ஒரு நாள் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு எதிரே பள்ளிக் குழந்தைகளை கூட்டமாக அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். 

"பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எங்கே செல்கிறீர் கள்?" என்று அவரைப் பார்த்து முல்லா கேட்டார்.

"நாட்டில் மழை இல்லை. குழந்தைகள் களங்கமற்ற மனம் கொண்டவர்கள். இந்தக் குழந்தைகளின் தூய இதயங்களின் பிரார்த்தனைக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான். ஆகவே அவர்களை அழைத்துச் சென்று மழை வேண்டி பிரார்த்தனை செய்யப் போகிறோம்."

இதைக் கேட்டு சிரித்தார் முல்லா, ஒரு சிறுவனை அழைத்து, "உலகத்தில் உனக்குப் பிடிக்காத இடம் எது?" என்று கேட்டார். "பள்ளிக்கூடம்” என்றான் அந்தச் சிறுவன். வேறொரு பையனிடம் "உலகத்தில் உனக்குப் பிடிக்காத மனிதன் யார்?" என்று கேட்டார்.

“என்னுடைய கணக்கு வாத்தியார்" என்றான் அவன்,

"பார்த்தீர்களா?" என்றார் நசிருதீன். "குழந்தைகள் இஷ்டப்பட்டது எல்லாமே நடக்கும் என்றால் உலகின் எல்லா பள்ளிக் கூடங்களும் தீப்பற்றி எரியும். அதிலுள்ள எல்லா ஆசிரியர்களும் செத்து விடுவார்கள்" என்றபடி தன் வழியே போனார்.

குழந்தைகள் அறியாமையில் இருப்பவர்கள். அதனாலேயே அனைவரது அன்புக்கும் பாத்திரமானவர்கள். ஆனால் அதற்காக அறியாமையை போற்றிக் கொண்டாட முடியாது. அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய பயணமே கல்வி என்பது. அதேபோல் வாழ்விலிருந்து ஞானத்தை நோக்கிய பயணமே உண்மையான உயிரோட்டமுள்ள கவ்வியாகும்.

நடுநிலை சூஃபியாக்களின் நிரந்தர நிலை

==================================


புத்தரிடம் ஒருவன் கேட்டான். "உங்களுக்கு கடவுளிடமிருந்து என்ன கிடைத்தது?" என்று, புத்தர் சிரித்தார், "நான் எதையும் பெறவில்லை.

அனைத்தையும் இழந்தேன். அதனால் என்றும் இருத்தல் என்பதை உணர்ந்தேன்" என்றார்.

பெறுபவன். கொடுப்பவன் இரண்டும் அற்ற நிலை சூஃபி நிலை. சூஃபிகள் எதையும் வேண்டுவது இல்லை.  சூஃபியிசத்தின் தத்துவம் இதுதான். "வாழ்வில் பாதிப்பேர் சொர்க்கத்தை அடைவதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மீதிப்பேர் நரகம் பற்றியே சதா சர்வகாலமும் எண்ணிக் கொண்டிருப்பதால் அச்சத்துடனேயே வாழ்க்கையை கழிக்கிறார்கள். இந்த மகிழ்ச்சி, அந்த அச்சம் இரண்டும் அற்றவர்கள்தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இந்த  சந்தோசமே வாழ்வின் தெய்வீக அம்சம் ஆகும்.

நாம் இதயத்தின் அடிமைகளா?

=================================


அரசன் ஒருவன் ஞானியிடம், "என் மனம் அமைதியின்றி தவிக்கிறது" என்றான்.

"அப்படியா! உன் மனத்தை என்னிடம் கொடுத்துவிட்டு போ.. நாளை வந்து வாங்கிக் கொள். அதற்குள் சரி செய்து வைக்கிறேன்" என்றார் ஞானி.

"மனத்தை எப்படி எடுத்துத் தருவது? அது எனக்குள் அல்லவா இருக்கிறது?" என்றான் அவன்.

"அப்படியா! சரி. கண்களை மூடிக் கொண்டு உளக்குள்ளே எந்த இடத்தில் அந்த மனம் இருக்கிறது என்று கண்டுபிடி" என்றார் ஞானி.

நமது மனம் எங்குள்ளது என்பதை நாம் உணர முடியாத வரையில் மனம்தான் நமது அரசன். அதன் அடிமைகளாகத்தான் ஆயுள் முழுதும் நாம் செயல்பட்டுக் கொண்டிருப்போம். உள்மனம் எங்கே என்று நீ தேடத் துவங்கும்போதே உள்மனம் பதுங்க ஆரம்பித்து விடும். அதனை நீ தேடிக் கண்டுபிடித்த மறுகணமே அது மறைந்து போய்விடும்.

தன்னை உணர்ந்த ஞானிகள் எல்லோரும் தன்னை மறந்தவர்களாக இருப்பதாக வரலாறு கூறுகிறது. இயற்கையின் எதிர்மறையான விநோதம் இது. தனை இழப்பதன் மூலமே ஒருவன் தன்னை உணர முடியும்.


உணர்வுகளை எழுத முடியாது

==============================


இந்து மன்னர் ஒருவர் தினமும் அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்களிடம் வருவார். வந்து காலில் விழுந்து வணங்குவார். 

"வாழ்வின் ரகசியத்தை எனக்குக் கூறுங்கள்" என்பார்.

இவர் வெறும் புன்னகையுடன் பேசாமலிருப்பார்.

ஒருமுறை அவர் நெடுநேரமாக வற்புறுத்தினார். விடாமல் துளைத்தெடுத்தார். அபா யாஜீத் கேட்டார் அவரிடம், "என்ன வேண்டும் உனக்கு?"

"வாழ்வின் ரகசியத்தை எனக்குத் தாங்கள் கூறவேண்டும் "

"ஒரு விஷயத்தை ரகசியம் என்று கூறிய பின்னர் அதை எப்படி மற்றவரிடம் சொல்ல முடியும்? பிறரிடம் கூறினால் அது எப்படி ரகசியம் ஆகும்?" என்றார் அபாயாஜீத்.

"நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன். அதை யாரிடமும் கூற மாட்டேன்."

"நானும் அப்படித்தான். யாரிடமும் கூறமாட்டேன்"என்றார் அபா யஜீத்

அங்கே கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதரிசனமான உண்மை. உணர்வால் அறியக் கூடியதை, உணர்வால் ஒன்றக் கூடியதை வார்த்தைகளால் விவரிக்க வழியே கிடையாது. அப்படி வார்த்தைகளால் விளக்க முற்படும்போதே மூலத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்து விடுவோம்.

எல்லாம் அடங்கியதே முழுமை. அதில் ஒன்றை எடுத்து இதுதான் முழுமை என்று எப்படிக் கூறுவது?.

மௌனத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும், ஓசை வந்ததுமே மவுனம் அகன்றுவிடும்.

பேதங்கள் போக பற்றற்றிறு :

=============================


ஒரு அரசர் ஞானி சூஃபி காஜா முயீனுத்தின் சிஸ்தி (ரஹ்) அவர்களை சந்தித்தார். “ யா ஷைக்! எனக்காக தாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

"நல்லது'' என்ற ஞானி மண்டியிட்டுப் பிரார்த்தித்தார். "இறைவா! அனைவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும். எங்கும் அமைதி நிலவ வேண்டும். அனைவரும் சகல நன்மைகளும் பெற்று நிம்மதியாக இருக்கவேண்டும்."

அவரது வழிபாடு மன்னருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

பிரார்த்தனை முடிந்ததும் அவர் ஞானியிடம் கேட்டார்.

"யா ஷைக்! என்ன இது? எனக்காக பிரார்த்திக்கும்படி கேட்டேன். நீங்கள் உலகத்துக்காக பிரார்த்திக்கிறீர்கள். இதில் என் நாட்டின் பெயரோ, என் பெயரோ வரவில்லையே?"

ஞானி சிரித்தார். ''அனைவருக்குமாக வேண்டும்போது அதன் பலன் உனக்கு மட்டும் இல்லாமலா போகும்?'' 

"இருந்தாலும்...?" என்று இழுத்தார் மன்னர். ஞானி அவர்கள், வாளி நிறைய தண்ணீரை எடுத்தார்கள். அரசனிடம் கொடுத்து செடிகளுக்கு அதை ஊற்றும்படி சொன்னார்கள். 

ஊற்றிவிட்டு வந்தவரிடம் "எங்கே ஊற்றினீர்?'' என்று கேட்டார்.

"எல்லா செடிகளுக்கும் ஊற்றினேன்." "செடியின் எந்த பாகத்தில் ஊற்றினீர்?"

"வேர்ப் பகுதியில்தான்.''

"இது என்ன வேடிக்கை? இலைகள்தானே வாடிப் போய் காணப்படுகின்றன? நீங்கள் வேரில்போய் தண்ணீரை ஊற்றியிருக்கிறீரே?"

"வேரில் ஊற்றினால் எல்லா கிளைகளுக்கும், இலைகளுக்கும் அதுவே தானாகப் பரவாதா?"

"அதேதான்" என்றார் ஞானி. ஒட்டு மொத்த மனித குலத்துக்காகவும் வேண்டும் போது அதன் பலன் அனைவருக்கும் தானே வந்து சேரும்.''

நான், நீ என்ற பேதங்களை ஏற்படுத்துவதுதான் மனத்தின் அடிப்படை வேலையே. அந்த பேதங்கள் உள்ளவரை மனம் எல்லாவற்றையும் விரும்பும். எல்லோரையும் வெறுக்கும். மனதில் பேதங்கள் அற்றுப் போகும்போது தனிப்பட்ட எதன் மீதும் பற்று உண்டாவதில்லை. அனைத்தின் மீதுமான அன்பு மட்டுமே அதன் வெளிப்பாடாக இருக்கும்.


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

==================================


ஞானத் தேடலின்போது ஒரு முறை துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் பாலைவனத்தில் நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றார். கிராமம் ஒன்றை அவர் அணுகியபோது ஒரு வீட்டின் கூரை மீது ஓலைகளை அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துச் சிரித்தாள்.

குழம்பிப் போன துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள், "எதற்காக என்னைப் பார்த்து சிரித்தீர்கள்?" என்று கேட்டார்.

"நீர் இந்த கிராமத்தை நெருங்கியபோது உமது கம்பளியைக் கண்டு சூஃபி ஞானி என்று எண்ணினேன். பிறகு உமது முகத்தைக் கண்ட பின்பே நீர் குரு அல்ல சீடர்தான் என்றெண்ணினேன். அருகில் நெருங்கிப் பார்த்த பின்புதான் நீர் சீடர்கூட அல்ல, வெறுமனே ஞானம் தேடி அலைபவர் என்று நினைத்தேன். 

பிறகு உமது கண்கள் சொன்னது. நீர் ஞானத்தை தேடி அலைபவர்கூட இல்லை என்று. ஞானத்தை தேடுகிறேன் என்ற எண்ணத்திலேயே பெருமிதம் கொள்ளும் ஒரு சவடால் பேர்வழிதான் நீர் என்று எனக்கு அப்போது நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் சிரித்தேன்" என்றாள் அவள்.

தன் அங்கிக்கும், தனது ஞானத்துக்கும் தொடர்பே இல்லை என்று உணர்ந்த மறுகணம் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் தமது அங்கியை தூக்கி எறிந்தார்கள். பிறகு இருபது  வருடங்களாக அவர் எங்கிருந்தார் என்பதைக் கூட எவரும். அறியவில்லை.

பிறகு ஒருநாள் எகிப்தில் மீண்டும் காணப்பட்டார் அப்போது அவரது முகம் நிர்மலமாகக் காணப்பட்டது. அவர் கண்கள் அபாரமாக ஜொலித்தன. "இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டனர் பலரும்.

"ஒன்றும் செய்யவில்லை" என்றார் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள். எதைச் செய்தாலும்

அங்கே நான் என்பது வந்து விடுகிறது. எதைச் செய்ய முடியும் அதன் பின்பு. அதை அழிக்கத்தான் எனது கடந்த காலம் எனக்கு பயன்பட்டது.

தூரத்தில் தெரிந்த உருவத்தை பார்த்த பெண்மணி அந்தந்தத் தோற்றம் தனக்கு என்ன மனநிலையை உண்டாக்கியதோ அதை அப்படியே சொன்னார் அந்த பெண்மணி. அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்கள்

அதற்குப் பிறகுதான் தன் குறையை தெரிந்து கொண்டு, அதை சரி செய்ய இருபது ஆண்டுகள் தனிமையில் தவமிருந்து தன்னை அறிந்தார். 

நாம் துந்நூன் மிஸ்ரி (ரஹ்) அவர்களையே பெரும் இறை நேசராக கருதுகிறோம். ஆனால் இவர், ஞானம் பெற வழி காட்டியவர் அந்தப் பெண்மணிதான்.

சுயத்தை இழக்காதவர்கள் சூஃபிகள்

==================================


கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார். அம்மார் அதை வாங்க ஆசைப்பட்டான். அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும், பெரும் பணமும் தருவதாக சொன்னான். எனினும் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் அதற்கு இணங்கவில்லை.

எப்படியாவது அந்த குதிரையை அடைய வேண்டும் என்று அம்மார் முடிவு செய்தான். கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் குதிரையில் தினமும் சவாரி செய்யும் பாதையில் ஒரு நாள் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.

அந்த வழியாக வந்தகலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள் பாதையோரம் விழுந்து கிடந்தவனைக் கண்டு பரிதாபப்பட்டார். இறங்கி வந்து அவனைத் தூக்கினார். அம்மார் முனகினான். "ஐயா! நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். என்னால் நிற்கக் கூட முடியவில்லை" என்று.

இதையடுத்து அவனைத் தூக்கி தமது குதிரையின் மீது அமர்த்தினார் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள். மறுகணமே குதிரையுடன் ஓட ஆரம்பித்தான் அம்மார்.

திகைத்துப்போன கலீஃபா சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டார். அதற்குள் அம்மார் வெகு தொலைவிற்கு போய்விட்டான். "நில். ஒரு கணம் நில். நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் போ" என்றார் அவர் உரத்தக் குரலில்.

அம்மார் குதிரையிலிருந்தபடியே திரும்பிப் பார்த்து, "என்ன?" என்றான் உரத்த குரலில்.

'உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்பதை எவரிடமும் சொல்லாதே. ஒருவேளை உண்மையாகவே உடம்பு முடியாதவனாக சாலையோரம் எவராவது விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்" என்றார் கலிஃபா மஅமூன் ரஷீத் அவர்கள்.

தனது குதிரை களவு போனது பற்றி கூட அவர் கலங்கவில்லை. மக்களிடையே இதுபோன்ற செய்திகள் பரவினால் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் செய்யாமல் போய் விடுவார்களே என்றுதான் அவர் வருந்தினார்.

அந்த இக்கட்டான நிலையிலும் அவர், இறைநினைவோடு கூடிய மக்கள் நலன் கருதியே ஒரு கருத்தையே பேசி இருக்கிறார். இப்படி ஒரு கருத்தை அந்த சூழ்நிலையில் எவரும் உடனே பேசி விட முடியாது. அவர் பேசியிருக்கிறார் என்றால் அவர் சூஃபியிசத்தில் மூழ்கி முத்தெடுத்த மாமனிதர் என்பதில் ஐயமில்லை.


பதிவேற்ற நாள் 1/11/2025


பொங்கல் லீவை முன்னிட்டு குடும்பத்தினருடன் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். பஸ்ஸில் சும்மா இருக்கிற நேரத்தில் செய்த வேலை இது




•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••





சொர்க்கத்திற்கு 'நான்'

போனால் போகலாம் 

----------------------------------------

ஒரு பள்ளிவாசலில் பேசிக்கொண்டிருந்த இருவர் "சொர்க்கத்திற்கு நான் போவேன்" என்று ஒருவர் கூற மற்றவர் "இல்லை யில்லை, நான்தான் போவேன்'' என்று கூறினார். 


இவ்வாறு இருவரும் விவாதம் செய்து கொண்டிருக்கையில், அவ்வழியாக தண்ணீர் எடுத்துச் சென்ற ஒரு பெண்மணி இவர்கள் இருவரும் கேட்கும் வண்ணம் ''சொர்க்கத்திற்கு நான் போனால் போகலாம்" என்று சொல்லிக் கொண்டுச் சென்றார். 

அப்பெண்ணின் பேச்சைக் கேட்ட இருவரும் மிக்க வெட்கமும் வியப்பும் அடைந்து, அப்பெண்ணை பின்தொடர்ந்துச் சென்றனர். அப்பெண் தன் வீட்டிற்குள் சென்றுவிட்டார். வந்திருந்த இருவரும் உரக்க ஸலாம்  சொன்னார்கள்.  "அம்மா ! நாங்கள் இருவரும் பல வருடங்களாக தனிமையில் தியானம்  செய்தும் எங்களில் யார் சொர்க்கத்திற்குச் செல்வோமென்று தெரியாமல் இருக்கின்றோம். அப் படியிருக்க, "தாங்கள் போகலாம்" என்று கூறியது எப்படி ? '' என்று கேட்டனர்.

அப்போது அப்பெண் கூறினார்.

 "சொர்க்கத்திற்கு நான் போனால் போகலாம்'' என்று நான் கூறிய வார்த்தையில், 'நான்' என்பதற்குப் பொருள் 'தான்' என்பதல்ல. அதாவது "நான் வேண்டுமானால் போகலாம்" என்று கூறவில்லை. மாறாக, "நான் போனால் " என்ற சொற் தொடருக்கு "நான் என்கிற அகங்காரம் ஒழிந்தால்" என்பதே பொருளாகும்."

'நான்' என்ற அகங்காரம்  இல்லாத மனிதனே இல்லை. நான் என்ற அகங்காரத்தை அழித்தால் அல்லாஹ்வை அடையவும், அவன் அளிக்கும் இன்பங்களை பெறவும் முடியும்" என்று கூறினாள்.

நான், நான்தான் :

___________________

உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது 'நான்' என்ற எண்ணத்தை விடுவதாகும்.

அகந்தை, செருக்கு என்ற சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்றும் கூறுவார்கள். அதாவது "நான்' என்ற எண்ணம் அதிகமாக உள்ளவர்கள்" என்றும் கூறுவார்கள். ஆணவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் பல இன்னல்களை அடைய நேரிடும். 'நான் தான்" என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

'நான்’, 'எனது' என்பது அறியாமை...

'நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை.

தனக்கு எல்லாம் தெரியும் என்பதில் எந்த அகங்காரமும் இல்லை.

தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதில்தான் அகங்காரம் இருக்கிறது.

எப்போது ஒருவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று சொல்கிறானோ அப்பொழுது அவன் தன்னைச் சார்ந்தவர்களை எல்லாம் முட்டாளாகவே பார்க்கின்றான்.

இவ்வாறு தன்னை உயர்த்திக்கொண்டு பிறறை தாழ்வாக நினைப்பது தான் அகங்காரம்.

'நான்’ என்பதன் பொருள் என்ன?  

------------------------------

ஒரு அரசன், சூஃபி ஒருவரிடம் ஞானம் அடைய விரும்பி சந்திக்கச் சென்று, அவர் குடிசை கதவை தட்டினார். ஞானி, "யாரது?" எனக் கேட்டார். அரசன் "நான் இந்த தேசத்து அரசன் வந்திருக்கிறேன்" என்றான். அதற்கு ஞானி, "நான் செத்த பிறகு வா" என்றார்.

இப்படியே அரசன் பல முறை வரும் போது அவர் அதே பதிலை கூறினார். ஒரு நாள் அரசன் புரிந்து கொண்டு கதவை தட்டினார். ஞானி "யார்?" என கேட்க, "தங்கள் சீடனாக வந்து இருக்கிறேன்" என கூறினான் மன்னன். அப்போதே ஞானி, "உள்ளே வா" என்றார்

நான் என்ற அகந்தை கர்வம் எப்போது ஒருவனிடத்தில் இல்லாமல் போகிறதோ அப்போதே அவன் ஞானி ஆகிறான்.

அல்லாஹ் படைத்த உயிர் என்றும் அழியாதது. ‘நான் அழியாமல் எப்போதும் இருக்க வேண்டும்’ என்ற ஆசை நம் மனதில் இருப்பதற்கு உண்மையில் 'நான் அழியாதவன்' என்று அறியாமல் இருப்பதுதான். மரணமடைவது வெறும் உடல் மட்டுமே. இறைவன் படைத்த உயிர் மரணத்துக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை மனிதனுக்கு உணர்த்தவே, ஒவ்வொருவரும் வாழும்போதே அல்லாஹ்வை அறிய முயற்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு.  ஆனால், ‘நான்’ என்ற சொல்லுக்கு உண்மையான பொருள், இன்னதுதான் என்று தெளிவாக தெரியவில்லை. இஸ்லாம் மார்க்கத்தைப் முறையாகப் படித்து, இறைவனை அறியும் வரை, இந்த அறியாமை மக்கள் மனதிலிருந்து விலகாது.

உலகிலுள்ள அனைத்தும் கண்டு, கேட்டு, தொட்டு, சுவைத்து, நுகர்ந்து  அறியப்படும் பொருள்களாகும். உதாரணமாக, தரையில் கிடக்கும்  ‘மாங்கொட்டை’  என்ற  பொருள், நமது மனதில்  ‘மாங்கொட்டை’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதுபோல் நமது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்குமான ஒரு பொருள் வெளியே இருக்கிறது. 

ஆனால் ‘நான்’ என்ற எண்ணத்தையே ‘நான்’ என்ற சொல்லுக்கான பொருளாக  நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

‘நான்’ என்ற எண்ணத்தின் உண்மையான பொருள் அல்லாஹ். இதை அறியாமல், உடல், மனம், உடல்-மனம் சேர்ந்த கலவை என்று வெவ்வேறு பொருள்களை வெவ்வேறு சமயங்களில் ‘நான்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். 

இந்த அறியாமையால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்க்கலாம்.

நான் வருகிறேன்’ என்று நமது உடம்பை ‘நான்’ என்ற பொருளில் சில சமயம் குறிப்பிடுகிறோம். 

சில சமயம் ‘என் உடம்பு சரியில்லை’ என உடம்பை நமது உடமையாகக் குறிப்பிடுகிறோம். அதாவது 'நான்' ஆக குறிப்பிடுகிறோம்.

சில சமயம் ‘என்னுடைய மனது சரியில்லை’ என்று கூறும்போது, ‘நான் வேறு, என் மனது வேறு’ என்று முடிவு செய்து கொண்டு, ‘நான்’ என்பது மனதைக் குறிப்பதாகவே நினைத்துச் சொல்கிறோம். 

இதனால் மனதின் துன்பங்களை நமது துன்பம் என்று கருதி வருத்தப்படுகிறோம்.

இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது.

அது, அவருடைய நிலம் என்பதால், ‘பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே…’ என்றேன்.

உடனே அவர், ‘நாசமாப் போக, மூணு மாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன?, விளையாட்டி என்ன…?’ என்றார் கடுப்புடன்.

அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்று இருக்கிறார்;

இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது.

ஏனென்றால் எப்பொழுதும்போல் இந்த நிலம் இன்றும் நன்கு விளைந்திருக்கிறது. ஆனால் அன்று இந்த நிலம் அவருடையதாக இருந்தது. இன்று இவருடையதாக இல்லை என்கிற காரணத்தினாலே இவர் சளிப்படைகிறார்.

சொத்து நம்முடையதாக இல்லாததுபோல், 'நான்', 'எனது' என்கிற எண்ணம் நம்மில் உருவாகாமல் இருந்தால், நிம்மதி நிரந்தரமாக இருக்கும்.

சிறுபிராயம் முதல் முதுமைவரை ஒவ்வொருவருக்கும்  ‘நான்’ என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது. 

முதுமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து ‘நீ கொஞ்சம் கூட மாறவில்லை, அப்படியே இருக்கிறாய்’ என்று சொன்னதும் அவர் சந்தோஷம் அடைகிறார். அவர், 'நான்' என்ற சொல்லுக்கு உடலைப் பொருளாகக் கொண்டு அது மாறாமல் இளமையுடன்  இருப்பதாக விளங்கிக் கொண்டதே காரணம்.

அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.

வடமொழியில் ‘அஹம்' என்றால் ‘நான்' என்று பொருள்படும். அவ்வாரே ‘மம' என்றால் ‘எனது' என்றாகும். தன்னை வேறு ஒருவர் போல் பாவித்தல் அகங்காரம். தனக்கு இல்லாத ஒன்றை தனக்குரியதைப்போல் பாவித்தல் மமகாரம். ஆங்கிலத்தில் முதற்கு ‘vanity’ என்றும் பின்னர்க்கு ‘envy’ என்றும் கூறுவர்.

அதாவது, தானே வலியவன், சிறந்தவன் என்ற செருக்கும் பிறர் தன்னைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமும் ஏற்படுவதை குறிக்கும்.

என்னால் மட்டும் தான் இதை செய்ய முடியும் என்று எண்ணினால் 'தன்முனைப்பு' வந்துவிட்டது என்று பொருள். தன்முனைப்பு என்பதை ஆங்கிலத்தில் Ego என்று கூறுவார்கள். அதனை தலைக்கனம் என்றும் கூறலாம்.

ஆன்மீக வாழ்வில் "நான்" என்ற எண்ணமே இறைவனை காண்பதற்கு எப்பொழுதும் தடையாக இருக்கிறது. இந்த எண்ணத் திரையை நீக்க வேண்டுமானால்

அண்டத்தைப் பற்றியும், நம்மைப் பற்றியும் ஆய்ந்தறியும்போது இறைவனையும் நம்மையும் உணர முடியும். 

இதனால் நான் என்ற அகங்காரத்தை நம்மில் இருந்து அகற்ற முடியும்.

பொதுவாக "நான் அகந்தையை விட்டுவிட்டேன்" என்றும், "என்னிடம் அகந்தை சிறிதளவும் இல்லை” என்று சொன்னாலும் அதிலும் அகந்தை வெளிப்படவே செய்கிறது.

ஒரு முறை, இரண்டு வேடர்கள் சில ஆமைகளை பிடிப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதிகமாகப் பேசும் ஒரு ஆமையின் காதில் இது விழுந்தது. இந்த சதித் திட்டத்தை எப்படியாவது முறியடிப்பதற்காக, இந்த ஆமை இரண்டு கொக்குகளின் உதவியை நாடியது. அந்த இரண்டு கொக்குகளும், ஒரு நீளமான குச்சியின் இரண்டு ஓரங்களை தங்களின் அலகில் பிடித்துக் கொண்டு பறப்பதுதான் திட்டம்.

கொக்குகள் பறக்கும் போது, இந்த ஆமை தன் வாயால் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டு வெகுதூரம் சென்று விடலாம் என்று நினைத்தது.

இந்தத் திட்டத்திற்கு கொக்குகள் ஒப்புக் கொண்டு, ஆமையிடம் குச்சியை கெட்டியாக பிடிக்குமாறு கூறின. ஆமையும் அவ்வாறே செய்தது. இவ்வாறு பறந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட மனிதர்கள் இந்த அதிசயத்தைப் பார்த்து வியப்படைந்தனர்.

அவர்கள், “சாமர்த்தியமான பறவைகள்! ஆமையை தூக்கிச் செல்ல பிரமாதமான வழி” என்று சொல்லி வியப்படைந்தனர்.

தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்த ஆமை “இது என் திட்டம் தான்” என்று கூற, மேலிருந்து கீழே விழுந்தது.

ஆமையிடம் 'நான்' என்ற அகம்பாவம் இருந்ததால் அது கீழே விழுந்து அழிந்தது.

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல்,  ‘தான்’ என்கிற மனம் கொண்டவன் தன்னுடைய அழிவைத் தானே தேடிக் கொள்கிறான்.

மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.

ஒரு நாட்டின் அரசன் "நான் தான் பெரியவன்" என்ற அகங்காரத்தோடு இருப்பவன். ஒரு நாள் அந்த அரசன் வேட்டைக்கு காட்டுச் சென்றான். அப்போது அவன் தியானம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியைப் பார்த்தான். துறவி கண்ணை மூடி தியானம் செய்யும் போது அவரிடம் சென்று "நான் பல நாடுகளை வென்று என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால் என் கஜானா நிரம்பி வழிகிறது. மேலும் அந்தபுரம் முழுவதும் நான் கவர்ந்து வந்த அழகிகள் இருக்கின்றனர். இருப்பினும் நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது சந்தோஷம் கிடைக்கும்?" என்று கேட்டான்.

தியானம் செய்து கொண்டிருந்த துறவி, தியானம் கலைந்ததால் சற்று கோபமாக "நான் செத்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அதைக் கேட்ட அரசன் "நான் எவ்வளவு பெரிய அரசன். என்னையே அவமானப்படுத்துகிறாயா?" என்று சொல்லி, துறவியை கொல்ல, தன் இடுப்பில் இருந்த கத்தியை உருவினான்.

அப்போது அந்த துறவி "அட மூடனே, நான் என்றால் என்னை சொல்லவில்லை, "நான்" என்ற அகங்காரம் செத்தால் தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று சொல்லி விளக்கினார்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், "தேங்காயின் கடுமையான ஓடு உடைந்தால் எப்படி சுவையான இளநீர் கிடைக்கிறதோ, அதேப் போல் நம்மிடம் இருக்கும் அகங்காரம் எனப்படும் ஈகோ உடைந்தால் சந்தோஷம் வெளிப்படும்" என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வள்ளுவன் கூறுகிறான் :

--------------------------

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

நான் என்ற ஆணவத்தால் வரும்அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

திருக்குறள் 431:

தாயுமானவர் கூறுகிறார் :

-----------------------

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்

தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.

எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும். அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ? தாயுமானவர் பாடல்கள் 636:7

அருணகிரிநாதர் என்ற துறவி தன் திருப்புகழ்த் தொடரில் கூறுகிறார்.

‘எனது யானும் வேறு ஆசி எவரும் யாதும் யானாமும் இதய பாவனாதீகம் அருள் வாயே!

‘இறைவா! நான், எனது என்ற ஆணவப் போக்கு அடியோடு நீங்கி அனைத்தையும், அனைவரையும் ஒன்றாகக் கருதும் உயர்ந்த மனோ பாவத்தை எனக்கு அருள்க’ என்று இறைவனிடம் வேண்டுகிறார். 

( நட்பு வட்டத்தினின்றும், உறவு வளையத்தினின்றும், ஏன் இந்த உலகத்தினின்றே ஒருவரை தனியாகப் பிரிக்க வல்லது அகந்தை என்ற தீயகுணம்.

ஆணவம், திமிர், செருக்கு, அகந்தை  என்றெல்லாம் பேசப்படும் இந்த தீய குணம் மனிதர்களாக வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் சற்றும் வளர விடாமல் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டிய ஒன்று.)

ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(ஒருவன் லட்சாதிபதியாக இருக்கிறான்.

அவனால் பற்றற்ற வாழ்வு வாழ முடியுமா? என இமாம் அஹ்மத் பின் ஹம்பலிடம் கேட்கப்பட்டபோது ”ஆம் முடியும் என்ன அத்துனை கோடிகளும் அழியும் போது அவன் துக்கப்படாவிட்டால், அல்லது அத்துனை கோடியும் பல மடங்காக அதிகரிக்கும் போது, நான் என்ற ஆணவம் கொள்ளாமல் இருந்தால் அவன் பற்றற்ற வாழ்வு வாழும் ஒரு துறவியே” என பதிலளித்தார்கள்.)

(பற்றற்ற வாழ்வு என்பது மறுமையில் பயனளிகாதவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.)

'நான்' என்ற அகங்காரம் தந்திரமானது

--------------------------------------

ஒருவனுக்கு மார்க்கத்தின் மீது பற்றுதலும் பக்தியும் ஏற்பட்டதாலேயே நான் என்ற அகங்காரம் போய்விட்டது என்று பொருள் அல்ல. காரணம் நான் என்ற அகங்காரம் மிகவும் தந்திரமானது. வஞ்சனையானது. காத்திருந்து காலம் பார்த்து நுழையும் கலைகள் அறிந்தது. "அகங்காரம் அழிதல்' அவ்வளவு எளிய விஷயமல்ல.

அணுகுண்டுகள் வீசப்பட்ட பிரதேசங்களில்கூட 'கரப்பான் பூச்சிகள் மட்டும் அழியவில்லை' என்கிறார்கள். அது எதையோ ஆதாரமாய்ப் பிடித்துக்கொண்டு உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கிறது. 

அதேபோன்று அகங்காரமும் எது கிடைக்கிறதோ அதையே ஆதாரமாகக் கொண்டு உயிர் பிழைத்துக் கொள்கிறது. 

சிலர் எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு தம் வயிற்றை நிரப்பிக்கொண்டு விடுவார்கள். அதுபோல செல்வம் கிடைத்தால் "நான் எவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறேன் பார்'' என்கிறது அகங்காரம். 

ஞானத்தின் பாதையில் போனாலும் "நான் எவ்வளவு ஞானம் குவித்திருக்கிறேன் பார்'' என்று கொக்கரிக்கிறது. 

தியாகமோ, தியானமோ செய்தாலும்கூட "நான் எவ்வளவு பெரிய தியாகி பார், நான் தியானிப்பதுபோல தியானிக்க யாரால் முடியும்?" என்று கேள்வி எழுப்பி எப்போதும் அகங்காரம் எப்படி எப்படியோ புதுப்புது வடிவங்களில் பிழைத்து வருகிறது. 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் (ஆசிரமம்) காங்காவில் அதிகாலை நேரத்தில் ஜீலானி (ரஹ்) முன்பு 

நின்றபடியே ஒரு முரீத் - மாணவர் கேட்டார். ‘யா ஷைஹ்! ‘மனிதன் மகானாக உயர்வது எப்படி ?’ என்று இன்று பாடம் நடத்துவதாக கூறியிருந்தீர்களே! இன்றைய பாடத்தைக் கேட்க எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. எனவே விடியற் காலையிலேயே விழித்து, என் கடமைகளை எல்லாம் முடித்து விட்டேன். மற்ற மூன்று சக மாணவர்கள்  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காங்காவில் நான்கு சீடர்களில் நன்கு படிப்பவர் என்று அவர் பெயர் எடுத்திருந்தார். அதனால் ஷைஹுவின் அன்பையும் அவர் பெற்றிருந்தார். இதன் காரணமாக ஆணவமும் அடுத்தவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத போக்கும் அவரிடம் அதிகரித்து வந்தன. 

‘காலை ஆறு மணிக்குத்தானே அனைவரையும் பாடம் கேட்கவரச் சொல்லி இருக்கிறேன். நீயும் சிறிது நேரம் கூடுதலாக தூங்கி இருக்கலாமே! என்றார் ஜீலானி (ரஹ்) அவர்கள். 

மாணவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘உதயத்திலேயே உறக்கம் கலைந்து அன்றாட கடமைகளைத் துவக்குவது நல்லது தானே! என்றார் மாணவர். 

‘நான் அதைக் குறிப்பிடவில்லை. நீயும் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி அதிகாலையிலேயே குறை கூற மாட்டாய் அல்லவா!’  ஷைஹுவின் பதில் அவரைக் குறுக வைத்தது. ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அடுத்தவர்களை மதிக்காத போக்காக, நான் என்ற ஆணவமாக மாறிவிட அனுமதித்துவிடக் கூடாது. 'நான்', 'எனது' என்னும் தீய குணத்தை ஆரம்பத்திலேயே இனம் கண்டு அதை வேரும், வேரடி மண்ணுமாகக் களைந்தால்தான் மனிதன் மகானாக உயர முடியும்.

நான் என்ற அகங்காரத்தை முற்றிலுமாக இழக்காதவரை முழுமையாக இறைவனை அடைய வாய்ப்பில்லை.

நான் என்ற எண்ணம் நம்மில் எப்படி இருக்கிறது என்று உணர்வது கஷ்டம். எங்கு பணிவு, துணிவு, கண்ணீர், அடக்கம், தொண்டுள்ளம், இரக்கம் இவை எல்லாம் குடியிருக்கின்றனவோ, எங்கு கோபம், ஆத்திரம், பகை இவை இல்லையோ அங்கு நான் என்ற எண்ணம் இருப்பதில்லை என்று ஓரளவு நம்பலாம். 

உங்களில் உள்ள 'நான்'னை அழித்து நீங்கள் வாழ முற்படுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்