குர்ஆன்

 1. ஜிஹாத் என்பதின்  பொருளும் விளக்கமும்:

================================

"இறை நம்பிக்கை கொண்டு, (வீடு வாசலைத்) துறந்துச் சென்று, அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தோர் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான்." (அல் குர் ஆன் 2:218)

"ஜிஹாத்" என்றால் பயங்கரவாதம் என சிலர் சொல்லுகிறார்கள். இதன் உண்மை விளக்கத்தைக் காண்போம். 

ஜிஹாத் எனும் அறபுச் சொல்லுக்கு ஊக்கம், கஷ்டமெடுத்து செய்தல், தியாகம், முயற்சி என பொருள் கூறலாம்.

இஸ்லாத்தின் அடிப்படையில்“ஜிஹாத்” என்பதற்கு நன்மை மற்றும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்படும் "நன்முயற்சிகள்” என்றும்,

கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சி  என்றும் பொருள் கொள்ளலாம்.

இஸ்லாத்திற்கு எதிராகச் சிலர் அவர்களது கற்பனைகளின் அடிப்படையில் "உளவியல் ஜிஹாத்" சம்பந்தமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அது முழுக்க முழுக்க அவர்களது கற்பனையே ஆகும்.

இஸ்லாமிய அறிஞர்கள் ஜிஹாதை ஐந்து உட் பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர். இவை ஜிஹாத் அல் அக்பர் - மிகப்பெரிய ஜிஹாத் என இஸ்லாமிய அறிஞர்களால் விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றை விரிவாகக் காண்போம்.

1. உள்ளத்தினால் செய்யப்படும் ஜிஹாத் (ஜிஹாத் பில் நஃப்ஸ்/கல்ப்) 

===================================

"தன் மனதில் உண்டாகும் கெட்ட எண்ணங்கள், மற்றும் மனோ இச்சைகளுக்கு எதிராக செய்யப்படும் மனப்போராட்டமே மிகப் பெரிய ஜிஹாத்" என இஸ்லாம் போதிக்கின்றது. 

நூல்: முஸ்னது அஹமத் 24004

இச்செயல் ஒருவருடைய மனதை பரிசுத்தப்படுத்தி, உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தி, கோபம் மற்றும் வன்மத்தை தவிர்க்கும் மனநிலையை உண்டாக்குகிறது.

ஒரு மனிதன் ஒழுக்க விழுமியங்களோடு வாழ்வதற்குக் காரணம்  பரிசுத்தமான உள்ளம்தான்.  இவ்வகையான உள்ளத்தை பெறுவதையே ' ஜிஹாத் ' என்கிறோம்.

எனவே, 'ஜிஹாத்' என்பது முழுக்க முழுக்க தன் மனதுடன் நடத்தப்படும் யுத்தமாகும். இஸ்லாத்தின் பார்வையில் தன் மனதுடன் போர் புரிபவனே உண்மையான வீரனாவான்.

2. நாவினால் (சொல்லால்) செய்யப்படும் ஜிஹாத் (ஜிஹாத் பில் லிஸான்) 

=====================================

சமூகத்தில் நடைபெறும் தவறுகள், அநியாயங்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தல், சத்தியத்தை உரக்கச் சொல்லவும் நல்வழியின்பால் மக்களை அழைக்கவும் பேசப்படும் பேச்சுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் போன்றவை இவ்வகையினுள் அடங்கும்.

அநீதியான ஆட்சியாளனுக்கு முன்னால் அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைப்பது மிகச்சிறந்த ஜிஹாத் என இஸ்லாம் நமக்கு போதிக்கின்றது. 

நூல் : நஸாயீ 4209

3. பேனாவினால் /அறிவினால் செய்யப்படும் ஜிஹாத் (ஜிஹாத் பில் கலம் / இல்ம்)

===================================

உலகில் நடைபெறும் அநீதிகள், அநியாயங்களுக்கு எதிராகச் செயல்படுவது. இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், தவறான அல்லது தீய கருத்துக்கள் சம்பந்தமாக சிறந்த மற்றும் சரியான முறையில் விளக்கங்களை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் அறிவியல் ஆராய்ச்சிகள், மற்றும், இஸ்லாத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவை இவ்வகையினுள் அடங்கும்.

நீதி, நியாயம் மற்றும் மார்க்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்பவரின் இரத்தத்தை விடவும் அறிஞரின் பேனா மை சிறந்தது. இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கங்களை வழங்கி, சத்தியத்தை தெளிவுபடுத்துதலும் இந்த ஜிஹாத் வகைக்குள் அடங்கும்.

4. கைகளினால் செய்யப்படும் ஜிஹாத் (ஜிஹாத் பில் யத்)

=====================================

ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல், டெங்கு, கொரானா போன்ற பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவ தற்காகவும் மக்களுக்கு உபகாரமாகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், "ஸகாத்" எனப்படும் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய தர்மம், "ஹஜ்" மற்றும் "உம்ரா" எனப்படும் மார்க்க வணக்க வழிபாடுகள் போன்றவை இவ்வகையினுள் அடங்கும்.

ஒரு யுத்தத்தின் போது நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனது பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால் நான் யுத்தத்தில் கலந்து கொள்வதா? அல்லது வயதான பெற்றோருடன் இருந்து அவர்களைக் கவனித்துக் கொள்வதா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

பெற்றோருக்கு பணிவிடை செய்யுங்கள் அதுவும் ஒரு ஜிஹாது தான்" என்று கூறினார்கள். ( நூல் : புகாரி 3004) 

5. வாளினால் (ஆயுதங்களால்) செய்யப்படும் ஜிஹாத் (ஜிஹாத் பில் ஸயிஃப்)

====================================

சில சந்தர்ப்பங்களில் அமைதி, நீதி மற்றும் நியாயத்திற்காக வாளினால் ஜிஹாத் (சண்டை) செய்தல் அவசியமாகும். இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே வாளினால் ஜிஹாத் செய்ய முடியும் என அல் குர்ஆன் கூறுகிறது.

i)  பாதுகாப்புக்கான ஜிஹாத்

===========================

உங்கள் நாட்டுக்கெதிராகத் தாக்குதல் நடந்தால், இஸ்லாம் மற்றும் தற்காப்பிற்காக யுத்தத்தில் ஈடுபடுவது அவசியமாகும். இந்த முடிவை ஏதோ சிலர் தனியாக எடுப்பதில்லை. அரசு அல்லது பொறுப்புள்ள நபர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் எடுக்கப்பட வேண்டும்.

இந்த ஜிஹாத் வழிமுறைகள் சம்பந்தமாக அல்லாஹ் அல் குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

"உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிபுரியுங்கள். ஆனால், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல் குர்ஆன் 2:190)

ii) ஆக்கிரமிப்பு ஜிஹாத்

=======================

உலகில் நடைபெறும் குற்றச்செயல்கள், அநீதிகள், தீமைகள், பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசு மேற்கொள்ளும் யுத்த நடவடிக்கை என இதைக் கூறலாம். தீமைகள் மற்றும் அநீதி நடைபெறுவதை கண்டும் காணாததுபோல அமைதியாக இருக்க ஒரு இஸ்லாமிய அரசுக்கு அனுமதி இல்லை.

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போது எந்த அரசுதான் அமைதி காக்க முடியும்? இயற்கை விதிகளை மீறாமல் இவற்றுக்கு எதிராக செயல்படுவது நமது கடமையாகும்.

எதிரியியை வீழ்த்தி நீதியை நிலைநாட்டும் வரை ஜிஹாதில் ஈடுபடுவது ஒவ்வொரு இஸ்லாமிய அரசுக்கும் கடமையாகும்.

இது ஆக்கிரமிப்பு ஜிஹாத் என அழைக்கப்படும். இந்த ஜிஹாத் சம்பந்தமாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

"எங்கள் இறைவா! அநீதியாளர்கள் வசிக்கின்ற இந்த ஊரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எங்களுக்குப் பொறுப்பாளர் ஒருவரை ஏற்படுத்துவாயாக! ஓர் உதவியாளரையும் உன்னிடமிருந்து எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்திக்கும் பலவீனமான ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் (அமைதியாய்) இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?

(அல் குர்ஆன் 4:75)


இதனடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட வற்றுள் ஒன்று முதல் நான்கு வரையிலான ஜிஹாத் வகைகள் மட்டுமே இந்திய வாழ் இஸ்லாமியர்களுக்கு உரித்தாகும். ஐந்தாவது வகையைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு மற்றும் தற்பாதுகாப்புக்கான ஜிஹாதானது அரசு அனுமதி இல்லாமல் இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு உரியதாகாது.

மேலும் "ஜிஹாதை" அடிப்படையாகக் கொண்டு "முஸ்லிம்களை பீதியடையச் செய்வதும், முஸ்லிம்கள் மீது வெறுப்பை உருவாக்க முயற்சிப்பதும் அர்த்தமற்ற, அடிப்படையற்றச் செயலாகும்.



•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



2. கட்டாயமாக போர் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறதா?.

==================================

"உங்களுக்கு வெறுப்பாக இருந்தாலும் (தற்காப்புப்) போர் உங்கள்மீது கடமை யாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; (ஆனால், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம்; அது உங்களுக்குத் தீங்காக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்."

( அல் குர்ஆன் 2:216)

இது வசனம் சம்பந்தமான விளக்கம்:

=================================

யுத்தம் செய்வது கட்டாயக் கடமை போல் இவ்வசனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது யுத்தம் செய்தல் அல்லது கட்டாய இராணுவ சேவை என்பது நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்ட எடுக்கப்படும் முயற்சி மட்டுமேயாகும் என அல் குர்ஆன் விளக்கவுரை நூற்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தற்கால உலகில் ஏராளமான நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சித்தாந்தமாகும்.

ஆர்மேனியா, அவுஸ்திரியா, பெலருஸ், அஸர்பைஜான், பெர்முடா, பிரேசில், மியன்மார், சைப்ரஸ், டென்மார்க், எகிப்து, பின்லாந்து, கிரீஸ், ஈரான், இஸ்ரேல், வட கொரியா. தென்கொரியா, மெக்ஸிகோ, நோர்வே, ரஷ்யா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தாய்வான், தாய்லாந்து, உக்ரேன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் (UAE) இராணுவ சேவையை கட்டாயமாக்கியுள்ள நாடுகளாகும். நெதர்லாந்து, நியூசிலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, சுவீடன், போலந்து, போர்த்துக்கல், ருமேனியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் அவ்வப்போது இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

நம் அண்டை நாடான இலங்கையில் மூன்று  முறை நடைபெற்ற பிரிவினைவாத யுத்தம் தீவிரமடைந்த போது கட்டாய இராணுவ சேவையை (Conscription) அமுல்படுத்தும்படியான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

மேலும், கட்டாய இராணுவ சேவையானது முற்கால இலங்கையில் அமுல்படுத்தப் பட்டிருந்ததாகவும், இதன் காரணமாவே உலகின் பலம் வாய்ந்த நாடுகளுக்கும் கூட இலங்கையைக் கைப்பற்றுவது கடினமாக இருந்ததாகவும் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் விமோசனத்திற்காகவும், அமைதி மற்றும் நியாயத்தை ஏற்படுத்தவுமே இஸ்லாம் போர் செய்ய வலியுறுத்துகிறது என்பதை 4:75 ஆம் வசனம் தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு போர்புரிந்து சமூக நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதவர்கள் சுயநலத்துடன் இப்போர்களை வெறுத்து, அவற்றிலிருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்பது சம்பந்தமாகவும் அல் குர்ஆன் 2:216 , 4: 75 ஆகிய வசனங்களில் விவரிக்கிறது.


இஸ்லாம் என்பது நீதி மற்றும் நியாயத்தை மக்களிடையே நிலைநாட்ட முயற்சிக்கும் மார்க்கமாக இருப்பதால், அநீதி, அநியாயம் மற்றும் குற்றச்செயல்கள் மிகைக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வது எமது கடமையாகும் என இவ்வசனங்கள் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வளவு தானே தவிர, மக்கள் அமைதியாக, சந்தோசமாக வாழும் ஒரு நாட்டின் மீது யுத்தம் செய்தாக வேண்டும் என்ற அல்குர்ஆன் கூறவில்லை.



•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

3.


 அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் முஸ்லிம்களின் எதிரிகளா?

==================================

"இறைவனை நிராகரிப்பவர்களை நெருங்கிய நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள்" என்ற அல் குர்ஆன் (3:28) வசனத்தின் சரியான அர்த்தமும் விளக்கமும் :

ஆலு இம்ரான் அத்தியாயத்தில் உள்ள 3:28 ஆம் வசனத்தை பிற மதத்தவர் குறை சொல்வது போன்று இன்னும் சில வசனங்களும் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த அத்தியாயம் அருளப்பட்ட பின்னணியை நாம் காண்போம்.

மக்காவிலிருந்து மதீனாவிற்கு குடி பெயர்ந்த பின் முஸ்லிம்கள், எதிரிகளால் துன்புறுத்தப்பட்டு வந்த வேளையில் இந்த வசனங்கள் அருளப்பட்டது. 

முஸ்லிம்களுக்கும், மக்கா நகர் இறை நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் "பத்ர்" என்னும் இடத்தில் முதல் யுத்தம் நிகழ்ந்தது.

இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். அதன் காரணமாக, தோல்வியடைந்த மக்காவாசிகள் முஸ்லிம்கள் மீது கடும் கோபம் கொண்டனர். இந்த யுத்தம் நிகழ்ந்து ஒரு வருடத்திற்கு பின் மக்காவாழ் நிராகரிப்பாளர்கள் மதீனா நகர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். அது "உஹத்”எனும் இடத்தில் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் 70 நபர்கள் இறந்து போனது மட்டுமின்றி தோல்வி என்றும் வெற்றி என்றும் சொல்ல முடியாத ஓர் பின்னடைவு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கும் மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கு இடையில் மீண்டும் (அகழ்) யுத்த சூழ்நிலை ஏற்பட்டது. மதீனா 

மற்றும் அதற்கு அருகிலுள்ள நகர்ப்புறங்களில் வாழ்ந்து வந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டிருந்த உடன்படிக்கைகளை மீறி, மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கு உதவினார்கள்.

இப்படி தொடர்ந்து இஸ்லாமியர்கள், இறை நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்டு வந்த வேலையில் தான் இது போன்ற வசனங்கள் அருளப்பட்டது.

இவ்வாறான வசனங்களை எந்தவித ஆய்வுமின்றி வாசிக்கும் ஒருவரது மனதில் இஸ்லாம் மார்க்கம் மற்றும் முஸ்லிம்கள் சம்பந்தமாக ஒரு பயங்கரமான தோற்றம் உருவாவது எதார்த்தமானது தான். 

எனவே, இது சம்பந்தமாக சரியான விளக்கத்தைக் காண்போம். அதற்கு முன் மேலே மேற்கோள் காட்டிய அல் குர்ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பை பார்ப்போம்.


இறைநம்பிக்கை கொண்டோர் (தம்போன்ற) இறைநம்பிக்கை கொண்டோரை விட்டுவிட்டு, இறைமறுப்பாளர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அந்த இறைமறுப்பா ளர்களிடமிருந்து (தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தாலே தவிர, யாரேனும் அவ்வாறு செய்தால் அவருக்கு) அல்லாஹ்விடம் (உத்தரவாதம்) எதுவுமில்லை. அல்லாஹ், தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கின்றான். (அனைவரும்) அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது. (அல் குர்ஆன் 3:28)

வேறுமதத்தினர் முஸ்லிம்களை குரூரமாக கொலை செய்வதற்கும், அவர்களின் உடைமைகளை அழிப்பதற்கும் திரண்டு வரும் சந்தர்ப்பத்தில், எதிரிப் படையில்

ஒருவரை தமது நெருங்கிய நண்பராக, பாதுகாவலராக ஆக்கிக் கொள்பவர் தற்கொலைக்கு நிகரான ஓர் காரியத்தை செய்தவர் போலாவார் என்று தாங்களும் அறிவீர். 

அதாவது இரு தரப்பினருக்கும் கடுமையான யுத்த சூழ்நிலை நிலவும் சந்தர்ப்பத்தில், வேறொரு மதத்தைச் சார்ந்தவரை ஒரு முஸ்லிம் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்வதைத் தான் அல்குர்ஆன் தடுக்கிறது.

அவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் முஸ்லிம் அல்லாதவரை நெருங்கிய நண்பராக வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் அனைத்து வகையான நட்புறவாடல்களையும் குறிப்பிடுவதாக தாங்கள் கருதக்கூடாது. 

இந்த வசனத்தைப் பிழையின்றி புரிந்து கொள்ள வேண்டுமானால், நட்புறவாடுதல் சம்பந்தமான இஸ்லாத்தின் கோட்பாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இஸ்லாத்தின் பார்வையில் நட்பு பாராட்டுதலை நான்கு வகையாக பிரித்துக் கூறலாம்.


1. நெறி முறை வழுவாத நட்புறவு (முதாராத்) இது பொதுவாக நல்ல முறையில் மென்மையாக, அமைதியாக, உண்மையாக உறவாடுதல் ஆகும். 

"எப்பொழுதும் மென்மையுடன் உறவாடி செயல்படுத்தப்படும் விசயங்கள் மிக அழகானவையாகும். 

மென்மையற்ற முறையில் செயல்படுத்தப்படும் விசயங்கள் அவலட்சணமானவையாகும்" என்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ( நூல் : முஸ்லிம் 6767)

2. சமத்துவம் பேணிய நட்புறவு (முவாஸாத்)


மனிதர்களிடம் நட்புடன் பழகுவது, சாதி மத வேறுபாடு இன்றி பிறருடன் நெருங்கிப் பழகி உதவிகள் செய்வது, மற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பண  உதவிகளையும் செய்வதை முவாஸாத் எனக் கூறப்படும்.

“ஒருவருடைய பக்கத்து வீட்டார் தனது துன்பங்களிலிருந்தும், அநியாயங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறவில்லையானால், அவர் உண்மையான முஸ்லிமாகமாட்டார்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியுள்ளார்கள்.(நூல் : தப்ரானி 8171) 

3. வியாபார ரீதியான நட்புறவு (முஆமலாத்)


இது கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரம் போன்ற பண ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத கிறிஸ்தவ, யூத மற்றும் பாரம்பரியமான மதங்களைப் பின்பற்றும் மக்களுடன் பல்வேறுவிதமான கொடுக்கல் வாங்கல் தொடர்புகளை பேணி வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இஸ்லாமிய கிரந்தங்களில் ஏராளமாக இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வை உங்களுக்கு முன் வைக்கிறேன். 

முஹம்மத்  நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களுடைய உலோகத்தாலான யுத்த ஆடை தனது குடும்ப உறுப்பினர்களின் உணவுத் தேவைக்காக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டு கடனாக உணவுப் பொருட்கள் பெறப்பட்டிருந்தது.( நூல் : புகாரி 2069)

4. ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நட்புறவு. (முவாலாத்) 


போர்க் களத்தில் முஸ்லிம்களின் எதிரிகளோடு அல்லது வேறு எவருடனோ தம் மொத்த கலாச்சாரமும் மாற்றத்திற்குள்ளாகி பாதிக்கப்படும் அளவிற்கு முஸ்லிம்கள் இரண்டறக் கலந்துறவாடுவது.

முஸ்லிம்களை கருவறுக்கவும், அவர்களின் அழகிய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் எண்ணத்தோடும்  பழகும் மனிதர்களிடம் தம் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக, உண்மைகளை மறைத்து செயல்பட இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கண்ட அல் குர்ஆன் (3:28) வசனம் கூறும் நட்புறவாடல் நான்காவது வகையைச் சார்ந்தது. அவ்வாறான பிரிவினருடனான நட்புறவாடல் மட்டுமே கூடாது என அல்குர்ஆன் கூறுகிறது. நான்காவது பிரிவைச் சாராத மற்றவர்களுடன் நெருங்கி உறவாடும் படியே அல்குர்ஆன் கூறுகிறது.

"தீன் -  இறைமார்க்கத்தின் விஷயத்தில் யார் உங்களுடன் போர் புரிந்தார்களோ மேலும் உங்களின் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றினார்களோ மேலும் உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து கொண்டார்களோ அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் நட்பு கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அவர்களுடன் யாரேனும் நட்புகொண்டால் அவர்கள்தாம் கொடுமையாளர்கள் ஆவர். (அல் குர்ஆன் 60:9)

எனவே முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் கஷ்டம் கொடுக்காதவர்களோடு நெருங்கி, பழகி, சந்தோசமாக வாழலாம் என்று அல்குர்ஆன் கூறுகிறது.



Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்