28. வலீமார்கள்

 மாபெரும் ஞான

மஹபூப் சுப்ஹானி

=====================




உலக அறிஞர்கள் சொல்வது போல் சாதிமத ஏற்றத் தாழ்வின்றி மனிதர்கள் மத்தியில் அனைவரும் அந்தஸ்த்தில் சமமானவர்கள்தாம். இருப்பினும் அல்லாஹ்விடத்தில் நெருக்கமானவர் முதலில் நபிகளாரும், பிறகு ரசூல்மார்களும், பிறகு நபிமார்களும், பிறகு இம்மூவரின் தோழர்களும் பிறகு ஷுஹதாக்களும் பிறகு வலிமார்களும் ஆவர்; இவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக இருக்கக் காரணம் இவர்கள் செய்யும் வணக்கங்களாகும்.

யார் வலீ?

============


இன்று நம்மிடையே நபிமார்களோ அவர்களின் தோழர்களோ இல்லை. ஆனால் அவ்லியாக்கள் இருக்கிறார்கள்; இருப்பினும் அவர்களை அறிவது தன்னை அறிவது போல் சிறமமாகும். அவர்களைப் பற்றிய அடையாளங்களில் சிலவற்றை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

1) 2:38 வேதத்தைப்பின்பற்றி வாழ்வோர்.

2) 2:62 ஈமானின் ஃபர்ளுகள் ஏழு மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கையை நம்புவோர்.

3) 2:112 குர்ஆன் காட்டும் வழியிலேயே வாழ்ந்தவர்கள்.

4) 2:262, 274 - ஜகாத் மற்றும் தர்மம் செய்வோர்.

5) 2:277 இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை செய்வோர்.

6) 3:170 தீனுக்காக போர்முனையில் இறந்தவர்கள்.

7) 6:48 நபிகளாரை அப்படியே பின்பற்றி வாழ்வோர்.

8) 7:49 இறைசொற்படி வாழ்ந்த ஏழைகள்.

9) 46:13 இறைவனுக்கு இணை வைக்காதவர்கள்;


மேற்கண்ட ஒன்பது வகை இபாதத்களில் சிலவற்றை தம் வாழ்வில் கடைப்பிடித்து செய்பவர் கப்ரை நினைத்தோ, மறுமைநாளை நினைத்தோ, நரகை நினைத்தோ கவலைப்படவும் வேண்டாம் அச்சப்படவும் வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மேற்கண்ட ஒன்பது வகையான போதனைகளையும் செய்து வருபவர்கள் வலிமார்கள் ஆவர்; அவர்களைப் பற்றி அல்லாஹ்.

الا ان أولياء الله لأخوفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (10:62)

அறிந்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய (நேசர்களான) அவ்லியாக்களுக்கு எவ்வித பயமும் இல்லை; இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். 10.62

இந்த வலிமார்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் இப்படி சொல்வான்.

يعباد لا خوف عليكم اليوم ولا أَنتُمْ تَحْزَنُونَ (43:68)

என்னுடைய அடியார்களே! இன்று உங்களின் மீது பயம் இல்லை, நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள் (என்று பயபக்தியாளர்களுக்கு அல்லாஹ் அறிவிப்பான். 43:68


வலிமார்கள் பற்றி நபிகளார் :

=================================


عن ابن عباس رضي عنهما قال رجل یا رسول الله من اولياء الله؟ قال: الذين اذار ؤوا ذكر الله (رواه : البزار)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபிகளாரிடம் ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் நேசர்கள் அவ்லியாக்கள் என்பவர்கள் யார்?" என வினவினார். "நீங்கள் சிலரை பார்த்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் ஞாபகம் வருமே அவர்கள் தாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல் : அல்பஸார்


عن ابي هريرة رضي الله عنه قال رسول الله صلي الله عليه وسلم ان من عباد الله ليغبطهم الانبياء والشهداء قيل من هم يا سول الله لعلنا نحبهم؟ قال: هم قوم تحابوا في الله من غير أموال ولا انساب وجوهم نور على منابر من نور لا يخافون اذا

خاف الناس (رواه : ابوداود, تفسير ابن كثير (۲:۲۰۰


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். நபிமார்களையும், போராளிகளையும் மிகைத்தவர்களாக இருப்பார்கள் என நபிகளார் கூரியதும் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? (தெரிந்தால்) அவர்களை நாங்களும் நேசிப்போமே!" என்றார்கள். "செல்வந்தன், நல்ல பறம்பரை உடையவன் என்பதற்காக அல்லாமல் அல்லாஹ்விற்காக அவர்கள் சிலரை நேசிப்பார்கள்; 

அவர்களின் முகங்கள் பேரொளியால் இழங்கும், மக்கள் பயந்தாலும் அவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். மக்கள் கவலையடைந்தாலும் அவர்கள் எப்பொழுதும் எதற்கும் கவலைப்பட மாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் இப்னு கஸீர்


மஹ்பூப் சுப்ஹானி வாழ்வும் வாக்கும்:

======================================


நபி வழி தோன்றலான அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர் உலகில் இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களைப் பற்றி மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

காடுகளிலும் மலைகளிலும் கடும் தவம் இருந்த வலியவர்கள் ஹாஜி அபூசயித் மக்ரமி (ரஹ்) என்பவரின் பாபுல் அஸ்ஜ் என்ற சிறிய மதரஸாவில் உஸ்தாதாக பொறுப்பேற்றார் கள். 

மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதித்தார்கள்; குர்ஆன் ஹதீஸ்களுக்கு மிக அருமையான விளக்கங்களை கொடுத்தார்கள்; இதனை அறிந்த மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து ஞான உபதேசங்களை கற்று சென்றார்கள்.

மக்களின் வருகை அதிகமாகவே மதரஸாவில் இடம் பற்றாகுறை ஏற்பட்டது. மதரஸாவை இடித்து விட்டு விரிவுப்படுத்தி செல்வந்தர்கள் கட்டிக் கொடுத்தனர். மந்திரிகள் அரசர்கள் பெரும் செல்வந்தர்கள் என பலரும் அவ்வலியின் பேச்சைக் கேட்க கூடினர்; சிலசமயங்களில் இடம் பற்றாக்குறையால் வலியவர்கள் மதரஸா அடுப்பின் மீது சேர்போட்டு அமர்ந்து பயான் செய்வார்கள்.

வறண்டுப்போன பயிர்கள் முளைக்காத தரிசு நிலமாக இருந்த பூமியில் மழைநீர் விழுந்ததும் பூமி எப்படி உயிர் பெறுகின்றனவோ அதுபோல மார்க்க ஞானம், தீன் இன்றி கிடந்த இதயங்களை தன் பயான் மூலம் செழிக்க செய்தார்கள்; அண்ணாரின் பயானுக்கு தினமும் 70 ஆயிரம் பேர்கள் வருவார்கள்.

எனது கரத்தில் ஐந்து ஆயிரம் யூத கிருஸ்தவ போதகர்கள் முஸ்லிமாகி இருப்பார்கள்; ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இஸ்லாமிய பெரும் பாவிகள் என்னிடம் இனி பாவம் செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளார்கள்" என வலி அவர்களே கூறியதாக ஜுப்பாயி (ரஹ்) அவர்கள்  அறிவிக்கிறார்கள். 

தமது 73 ஆண்டுகால முழு வாழ்வையும் இறைவனுக்கும் தனக்கும் நெருக்கமான (தொழுகை, நோன்பு, ஜகாத், திக்ரு, போன்ற) வழியில் மட்டுமின்றி மக்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தொண்டாற்றியே, தம் வாழ்வை அற்பணித்தார்கள். 

பெரும்பாலான வலிமார்கள் மக்களை விட்டும் ஒதுங்கிதான் வாழ்வார்கள்; ஆனால் இவர்கள் மக்களுடன் ஒன்றிதான் வாழ்ந்துள்ளார்கள்; அதனால் இவர்களை எல்லோரும் அறிந்திருக்க முடிகிறது.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர் 


சிறந்த அறிஞர் :

===================


ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த வலியவர்களிடம் ஒரு சிக்கலான வழக்கு ஒன்று கொண்டு வரப்படுகிறது; ஒரு கணவன் சொல்கிறான்; "நான்  செய்யும் அதே வணக்கத்தை உலகில் வேறு எவரும் செய்யக்கூடாது அப்படி செய்தால் என் மனைவி தலாக் ஆவாள்" என சத்தியம் செய்தேன்.

பக்தாதில் இவர் தொழும்போது குர்ஆன் ஓதும்போது நோன்பு நோற்றிருக்கும் போது உலகில் வேறு யாரும் இதே வணக்கத்தை செய்யக்கூடாது என எதிர்பார்க்க முடியுமா?

ஜீலானி (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள் : அவன் மக்காவிற்குச் செல்லட்டும் கஃபாவை தவாஃப் வலம் வரும் இடத்தைத் தனக்கென சில நிமிடங்கள் அங்கிருப்போரிடம் கேட்டு அவன் மட்டும் ஏழுமுறை தவாஃப் செய்யட்டும்; அவனது சத்தியம் நிறைவேறி விடும்; இப்பதிலை கேட்டு ஈராக் உலமாக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

நூல் : அத்தபகாதுல் குப்ரா 


ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களின் கராமத்துகள் :

======================================

====================================


பக்தாதில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது அபுல் அப்பாஸ் என்ற ஒருவர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்து பசி பட்டினியிலிருந்து எனக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் எனக் கேட்டார். 

அவ்வாறே ஜீலானி (ரஹ்) அவர்கள் துஆ செய்து சிறிது கோதுமையை தம் பொற்கரத்தால் அள்ளி அவரிடம் கொடுத்து "இதனை ஒரு டப்பாவிற்குள் போட்டு அதன் வாய் பகுதியை துணியால் கட்டிவிடுங்கள்; அதன் நடுவே ஒரு ஓட்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு உணவு தேவைப்படும் போது அந்த ஓட்டை வழியாக எடுத்துக் கொள்ளுங்கள்; துணியை கழற்றி விடாதீர்கள்" எனக் கூறினார்கள்.

அவரும் குடும்பத்தினரும் ஐந்து வருடங்கள் அந்த பைமூலம் சாப்பிட்டனர்; ஒருமுறை அவரது மனைவி அந்த துணியை அவிழ்த்து விட்டார்; அன்றிலிருந்து ஏழாம் நாள் தானியம் காலியாகி விட்டது பிறகு தானியம் வரவே இல்லை.

நூல் : தாரிக் பக்தாத், நூருல் அப்ஸார்


இதேப் போன்று நபி தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொருமையும் ஏழ்மை நிலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு பையை கொடுத்து, "இதில் உணவு உள்ளது; உமக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடுங்கள்; பசித்தவர்களுக்கு கொடுங்கள்; ஆனால் பையை தலைகீழாக கவிழ்க்காதீர்" என்று கூறினார்கள்; 

அதை வைத்துக்கொண்டு 30 ஆண்டுகள் அபூஹுரைரா (ரலி) சாப்பிட்டு வந்தார்கள்; உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட அன்று ஏற்பட்ட அமளியில் அபூஹுரைரா ரலி அவர்களின் இடுப்பிலிருந்த பை கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.

ஹதீஸ் சுருக்கம் : நூல் : ஹயாத்துஸ்  ஸஹாபா


அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஜிலானீ (ரஹ்) அவர்களிடம் சென்று "நான் ஹஜ் செல்கிறேன்; காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒரு ஒட்டகம் உள்ளது அது  மெலிந்து கிழடாக இருக்கின்றது;  வேகமாக செல்வதில்லை; ஆதலால் தாங்கள் துஆ செய்து தரும்படி வேண்டுகிறேன்” என தனது ஒட்டகையை ஜிலானி (ரஹ்) அவர்கள் அருகே நிறுத்தினார்கள்.

ஷைகு அவர்கள் துஆ செய்த பிறகு அந்த ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவினார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட மிக வேகமாகவும் வலிமைமிக்கதாகவும் ஆகிவிட்டதை அறிந்தேன்.

நூல்: கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்

மெலிந்த கிழடான ஒட்டகையில் தாமதமாக மதீனாவிற்கு வந்த  ஹலிமா (ரலி) அவர்கள்  நபிகளாரை பால் குடிப்பாட்ட பெற்றுக் கொண்டு மீண்டும் தமதூருக்கு திரும்புகையில் குழந்தை நபிகளாரும் செவிளித் தாயும் அமர்ந்திருந்த கிழட்டு ஒட்டகம் இப்பொழுது மற்றவர்களின் ஒட்டகத்தைவிட மிக விரைவாக சென்றது.

நூல் : இப்னு ஹிஷாம், ரஹீக்குல் மக்தூம்.


இவ்வாறு அனேக கராமத்துகளை அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செய்துள்ளார்கள்; கராமத்துகளை நம்புவது சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையாகும் மறுக்கக் கூடாது.

நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸைலமா என்பவன் தம்மை நபியென கூறி கிராமப்புர மக்களை நம்ப வைத்து தன்னை புகழ்பாட பெரும் கூட்டம் ஒன்றை சேர்த்துக் கொண்டான். மேலும் இவன், "இனியாரும் பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை தொழ வேண்டாம்; அது உங்கள் மீது கடமையில்லை" எனவும், "விபச்சாரம், மது, குறி பார்க்குதல் போன்றவை இனி உங்களுக்கு ஹலால்" என்றும் கூறி மக்களை திசைத்திருப்பினான். 

நூல் : தாரிஹுல்  ஹுலபா

இந்த மனித ஷைத்தானைப் போன்றே உண்மையான ஷைத்தான் ஒரு நாள் ஷைகு ஜீலானி (ரஹ்) அவர்களிடம் மேகத்தைப் போல் காட்சியளித்து "அப்துல் காதிரே! இனி உமக்கு ஹராம்கள் அனைத்தும்  ஹலால் ஆக்கப்பட்டுவிட்டது; இனி நீர் தொழ வேண்டியதில்லை; நான் தான் உன் இறைவன் கூறுகிறேன்" என அசரீரியாக கூறினான். 

இவன் ஷைத்தான் என ஜீலானி (ரஹ்) அவர்கள் விளங்கிக் கொண்டு "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என கூறினார்கள்.

அவன் எதிரே வந்து, "அப்துல் காதிரே! உம் இறைவனின் சட்டங்களை -  வரைமுறைகளை நீர் அறிந்து வைத்துள்ள காரணத்தால் என்னிடமிருந்து தப்பித்து கொண்டீர்; ஆனால் தரீக்காவைப் பின்பற்றிய எழுபது நபரை இது போன்று சொன்னதின் மூலம்  நான் வழிக் கெடுத்திருக்கிறேன்" என்று கூறினான்.

நம் எதிரே உள்ள கெட்ட மனிதர்களையும் மனித ஷைத்தான்களையும் நம்மால் அறிய முடியவில்லை; ஆனால் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உண்மையான ஷைத்தானை ஒதுக்கி விட்டார்கள். நாமும் கெட்ட மனிதர்களின் தொடர்பை துண்டித்து வாழ வேண்டும்.


விலைமதிப்பற்ற கல்வி எது?

===============================


ஷைஹு அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொழுது ஒரு பிக்ஹு சட்டத்தை கற்பித்துவிட்டு "இது பத்தாயிரம் தங்க காசுக்கு ஈடான கல்வி" என்பார்கள். 

மற்றொரு சமயம் ஒரு ஹதீஸை கற்பித்துவிட்டு "இது ஒரு லட்சம் தங்கக் காசுக்கு நிகரான கல்வி" என்பார்கள். 

இன்னொரு சமயம் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கங்களை கற்பித்துவிட்டு "இது ஒரு கோடி தங்க நாணயத்திற்கு ஈடான விளக்கம்" என்பார்கள். 

ஏன் இப்படி கூறுகிறார்கள் என்றால், மாணவர்கள், தாம் படித்த கல்வியின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்கே.

ஒரு சமயம் ஒரு மாணவர் தெருவில் நடந்துச் செல்லும் பொழுது செருப்பு வாரு அறுந்து விட்டது. அங்கிருந்த கூலி தொழிளாலியிடம் "இந்த செறுப்பு வாரை தைத்துக் கொடுங்கள்; உமக்கு பத்தாயிரம் பொற்காசு மதிப்புள்ள ஒரு கல்வியை கற்றுத் தருகிறேன்" என்றார். 

அந்த தொழிலாளி "அது வெல்லாம் எனக்கு வேண்டாம்; காசு இருந்தா கொடு தைத்து தருகிறேன்; இல்லையானால் உன் செருப்பை எடுத்துச் செல்" என கூறி விட்டார். 

அம்மாணவர் மிக வருத்தத்துடன் ஆழ்ந்த சிந்தனையோடு மதரஸாவிற்கு வந்தார்.

ஷைஹு அவர்கள் அன்று பாடம் நடத்தும் பொழுது எப்பொழுதும் போல் அது அவ்வளவு பொறுமான கல்வி இது இவ்வளவு பெறுமான கல்வி என்றார்கள். 

அந்த பாதிக்கப்பட்ட மாணவர் எழுந்து "உஸ்தாத் அவர்களே! இந்தக் கல்வியை கொண்டு என் செருப்பு வாரைக்கூட தைக்க முடியவில்லை" என தமக்கு நேர்ந்ததை விவரமாகக் கூறினார்.

உஸ்தாத் அவர்கள் "மாணவரே! இந்தக் கல்வியின் மதிப்பு, அத்துரை சார்ந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் அதன் உண்மையான மதிப்பு உமக்குத் தெரியும்" என்றார்கள். ஆனால் அம்மாணவருக்கும் அச்சபையில் கேட்ட சில மாணவர்களுக்கும் திருப்தியாக தெரியவில்லை.

இவ்வேளையில் மிகப்பெரிய வியாபாரியான ஷைஹு ஜீலானி அவர்களிடம் அச்சமயம் ஒரு வைரக்கல் வியாபாரி வந்தார். அவர் கணமான ஒரு வைரக்கல்லை எடுத்து வந்து "ஷேஹ் அவர்களே! இந்த கல்லை விற்பனை செய்ய பக்தாத் முழுவதும் சுற்றி விட்டேன்; இதற்கு ஈடான பணம்  கொடுக்க எவரிடமும் வசதி இல்லாத தால் எல்லோரும் என்னை உங்களிடம் போகச் சொன்னார்கள் அதனால் வந்தேன்" என்றார்.

ஷைஹு அவர்கள் அவரை ஒரு ஓரமாக அமரச் செய்து விட்டு அந்த வைரக்கல்லை  திருப்தியடையாத மாணவரை அழைத்து “இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று ஊருக்குள் விசாரித்து விட்டுவா" என்றார்கள்.

அம்மானவர் அதனை எடுத்துக் கொண்டு தாம் வழமையாக கீரை வாங்கும் மூதாட்டியிடம் சென்று ''மூதாட்டியே இதனை வைத்துக் கொண்டு ஏதேனும் பணம் கொடு" என்றார். அம்மூதாட்டி அதனை பார்த்து விட்டு, ''தம்பி! இது என்னனு எனக்கு தெரியல, ஆனாலும் பார்க்க நன்றாக இருக்கின்றது; மின்னுகிறது அதுக்காக வேண்டுமானால் ஒரு கீரைக் கட்டுத் தருகிறேன்" என்றாள்.

அம்மாணவர் அதற்கு சம்மதித்திடாமல் அதனை வாங்கிச் சென்று தம் வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் கொடுத்த போது அவர் ஒரு கிலோ கோதுமை, சிறிது ஆலிவ் என்னை தருவதாகக் கூறினார்.

அதற்கும் சம்மதிக்காமல் ஒரு கசாப்பு கடையில் சென்று கொடுத்தார்; அவர் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி தருவதாகக் கூறினார். 

பிறகு அம்மாணவர் ஒரு நகைக் கடைக்குள் சென்று கொடுத்த போது அம் முதலாளி அதன் தரத்தை புறிந்துக் கொண்டார். மேலும் சற்றுமுன் வேறு ஒருவர் இதே கல்லை எடுத்து வந்து பணம் கேட்ட பொழுது பணம் இல்லை, இதற்கு பணம் வைத்திருக்கும் ஒரே நபர் ஷைகு அவர்கள் மட்டும் தான் என அவருக்கு சொல்லி அனுப்பியது நினைவிற்கு வந்தது.

ஆகவே அவர் இது உன்னுடையதல்ல! இது உனக்கு ஏது என மிரட்டும் தோரனையில் கேட்டபொழுது அம் மாணவர் உஸ்தாத் கொடுத்ததாக கூறினார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் மாணவரை அழைத்துக் கொண்டு மதரஸாவிற்கு வந்தார். அங்கே அக்கல்லுக்குறிய வரும் அமர்ந்திருப்பதை கண்டு நிம்மதியானார். 

மேலும் அவர் ஷைகிடம் விசாரித்த போது நேரடியாக அம்மாணவர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என கூறிவிட்டு அதற்கு ஈடான பணத்தை ஒரு பை நிறைய ஷெய்கு அவர்கள் அள்ளி தந்ததை அம்மானவரும் கண்கூடாகக் கண்டார். 

அப்பொழுது தான் அக்கல்லின் மதிப்பை உணர்ந்தார். தம் கல்வியின் உண்மையான மதிப்பையும் உணர்ந்தார்.

ஆகவே, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஆலிம்களுக்கும், இஸ்லாம் சம்பநதமான போதனைகள் செய்வோருக்கும் மதிப்பளியுங்கள்; அல்லாஹ் அதன் மூலம் மட்டுமே கூட சொர்க்கத்தில் நுழைத்திட முடியும்.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்