23. ஆலிம்கள்
மஹான் ஹலரத் "கிப்லா"
மௌலானா மௌலவி, அல்ஹாஜ், K. K. அபூபக்கர் ஹலரத் (பாஜில் பாகவி -தேவ்பந்த்)
முதல்வர்: மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி
_______________________________________
இப்பாருலகின் இருள் நீங்க பரிதி, திங்கள் மற்றும் எண்ணற்ற கோளங்களை எல்லாம் வல்ல இறைவன் படைத் தளித்திருக்கிறான். இவைகள் படைக்கப்பட வில்லையானால் உலகம் பேரிருள் சூழ்ந்துவிடும்!
இது இப்புற உலகின் நிலை!
மனித சமுதாயத்தின் அகவிருளையும் அறியாமை இருளையும் அகற்றிட வல்ல இறைவன் தனது திருத்தூதர்களை உலகின்கண் அனுப்பிவைத்தான். இவ்விறைத் தூதர்களின் தொடர் அண்ணல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் முற்றுப் பெற்று விட்டது! எனினும்,
இவ்விறை தூதர்களின் திருப்பணியை அவர்களின் வாரிசுகளாகிய உலமாப் பெருமக்கள் ஆற்றினார்கள். ஆற்றிவருகிறார்கள்!
மக்களின் அகவிருள் அகற்றும் இப்பெருமக்கள் - ஞான சூரியன்கள் மறைந்தால் புற உலகில் ஒளி வழங்கும் சூரியன் - சந்திரன் மற்றும் கோளங்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கின்றன.
இத்தகைய ஞான சூரியன்களின் -அகவிருள் அகற்றி, அறிவொளி வழங்கிடும் முழு மதிகளான அறிஞர் பெரு மக்களின் அணியில் ஒருவரான அண்ணல் அபூபக்கர் ஹலரத் கிப்லா அவர்களின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒன்றாகும்.
1912-ம் ஆண்டு பிறந்த அல்லாமா “கிப்லா" ஹலரத் அவர்கள் இவ்விருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்திற்கு அறிவொளி வழங்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.
செம்மலின் சொல்லாற்றல்:
பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் பெரும் கூட்டங்களிலும் அல்லாமா கிப்லா ஹலரத் அவர்கள் ஆற்றும் பேருரைகள் அனைத்து மக்களையும் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் நிறைந்தவை. மணிக்கணக்காக அவர்கள் உரையாற்றினாலும் சிறிதுகூட சலிப்படையாது. அவர்கள் திருவாய் மலரும் தெள்ளிய கருத்துக்களை அள்ளிப் பருகுவதில் மக்கள் பேரார்வம் கொண்டிருப்பார்கள்!
அவர்களின் பேருரை சமுதாயத்தின் எல்லாத் துறையினருக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருக்கும். அரிய கருத்துக்கள், இஸ்லாமிய சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றை ஆதாரத்துடனும் அழகாகவும் விளக்கும். அவர்களின் பேருரை கேட்க அறிஞர்களும் - உலமாப் பெருமக்களும் ஆர்வத்துடன் கூடிடுவர்.
ஹலரத் அவர்களின் சொற்பொழிவால் கேரளத்திற்கு பல சிறப்பான இஸ்லாமிய சமுதாயப் பணிகள் நடந்தேறியிருக்கின் றன.
"சமஸ்த கேரள ஜம்மிய்யதுல் உலமா" சபையின் கிளையாக இயங்கி வரும் 'ஸுன்னி யுவஜன சங்கம்' என்ற இளைஞர் இயக்கத்தின் சார்பாக "ஸுன்னத்-வல்-ஜமஅத்" கொள்கை முரசறையும் "ஸுன்னீ டைம்ஸ்" என்ற வார இதழ் துவங்கப் பெருவதற்கு அல்லாமா கிப்லா ஹலரத் அவர்களே காரணமாக இருந்தார்கள்.
இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் விரும்பிப் படிக்கும் "ஸுன்னி டைம்ஸ் " இதழ் ஹலரத் அவர்களின் சொற்பொழிவினால் கிடைத்தபெரும் பேறாகும். அவர்களின், சன்மார்க்கப் பிரச்சாரத்தின் காரணமாக கள்ளிக் கோட்டை, காசர்கோடு, தலைச்சேரி, பைஜாபாத், கக்காடு, திரூரங்காடி, பாலக்காடு போன்ற ஊர்களில் மிகப் பெரிய மாறுதல்களும் மார்க்க உணர்வும் ஏற்பட்டிருப்பதை. நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
போதனையில் சாதனை:
போதிப்பதில் தனக்கென தனிப் பாணியைக்கொண்டிருந்தார்கள். மிகச் சிரமமான கருத்துக்களையும் மிக எளிமையாக விளக்கிடும் ஆற்றல் அவர்களுக்கே கைவந்த கலை! விளங்கும் ஆற்றல் குறைவான மாணவர்கள்கூட ஹல்ரத் அவர்களிடம் பாடம் கற்றால், தனக்கும் நல்ல விளங்கும் ஆற்றல் இருக்கிறது என்று எண்ணுமளவுக்கு ஹலரத் அவர்களின் போதனையின் ஆற்றல் சிறப்புடையது!
வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் ஹலரத் அவர்கள் பல்லாண்டு காலம் பணியாற்றியது மார்க்கக் கலை பயிலும் நம் தலைமுறையினருகுக் கிடைத்தமாபெரும் பாக்கியமாகும்! அவர்களிடம் கற்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது பெரும் பேறாகும். ஹலரத் அவர்களுக்கு முன் பாக்கியாத் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு வகித்த ''ஷைகுனா' ஷைகு ஆதம் ஹலரத் (ரஹ்) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக விளங்கினார்கள் நம் கிப்லா ஹலரத் அவர்கள். தனக்குப் பின் முதல்வர் பொறுப்புக்கு தகுதி மிக்கவராக கருதி அப் பொறுப்பை நம் கிப்லா ஹலரத்திடம் "ஷேகுனா ஹலரத்" ஒப்படைத்தது இதற்குச் சான்றாகும்.
பாகியாதுஸ் - ஸாலிஹாதின் முதல்வர் பொறுப்பேற்ற ஹலரத் கிப்லா அவர்கள், அதன் உயர்விற்கும் வளர்ச்சிக்கும் முன்னைவிட அதிக அக்கரையுடன் பாடுபட்டார்கள். ஷைகுனா ஹலரத் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை ஷைகுனா ஹலரத், அப்துர்ரஹீம் ஹலரத் ஆகியோரின் காலத்தில் இயங்கிய அதே அமைப்பில் சிறப்பான முறையில் செயல்படுத்தி பணி புரிந்தார்கள்.
மிகச் சிறப்பாக பணிபுரிந்ததின் காரணமாகத்தான் சில பூசல்கள் உறுவாகி, கிப்லா ஹலரத் அவர்கள் பாகியாத் கல்லூரியிலிருந்து விலகும் நிலை உருவானது!
அல்லாமா " கிப்லா' அவர்கள் பாகியாத் கல்லூரியைவிட்டு விலகியது மார்க்க ஞானம் பயிலும் மாணவர்களுக்கும் தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாதுக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் நஷ்டம்! அவர்களால் ஏற்பட்ட இடைவெளி இன்றுவரை பாகியாத் கல்லூரியில் நிறப்பப்படவில்லை.
தலையாய பணிபுரிய மலையாளப் பயணம்:
பாகியாதுஸ் ஸாலிஹாத் கல்லூரியிலிருந்து லிலகிய அல்லாமா "கிப்லா " அவர்கள் காலம் சென்ற காயிதே மில்லத் அவர்களுடையவும் சையித் அப்துர்ரஹ்மான் பாபகி தங்கள் அவர்களுடையவும் பெரு முயற்சியின் பலனாக, கேரள மானிலத்தின் தனிப் பெரும் இஸ்லாமியப் பல்கலைக் கழக மான "ஜாமிய்யா நூரிய்யா"வின் பிரதான பேராசிரியராக பொறுப்பேற்றார்கள்.
இப்பல்கலைக் கழகத்தின் பொறுப் பில், பொன்னானி மவூனதுல் இஸ்லாம்" அரபிக் கல்லூரி, பொட்டச்சிரா "அன்வரிய்யா" அரபிக் கல்லூரி, பாலக்காடு 'ஜன்னதுல் உலூம்" அரபிக் கல்லூரி ஆகியவை போன்ற பெரிய கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளிலிருந்து தேர்ச்சி பெற்று வரும் மெளலவிகள், கேரளா பள்ளிகளில் நடைபெறும் "தர்ஸு"களில் பயின்று உயர் கல்வி கற்பதற்காக வருபவர்கள் ஆகியோர், 'தஹ்ஸீல்'', 'முதவ்வல்" ஆகிய உயர் பட்டப் படிப்புக்களில் கலந்து பயிலுவதற்குரிய முறையில் "ஜாமிய்யா நூரிய்யா" பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய ஸ்தாபனத்துக்கு அல்லாமா ' கிப்லா' அவர்களைப் போன்ற இஸ்லாமிய கலை ஞானத்தில் பழுத்த அனுபவ மிக்க பேராசிரியர் கிடைத்தது மிகப்பெரும் பேறு என்பதில் ஐயமில்லை. அல்லாமா கிப்லா அவர்கள் "ஜாமிய்யா நூரிய்யா"வில் சேவையாற்றிய காலம் அதன் பொற் காலமாகும்.
அல்லாமா கிப்லா ஹலரத் அவர்களின் பண்பும், குண நலன்களும் மிகக் குறுகிய காலத்தில் அனைவரையும் கவர்ந்து விட்டன. "ஜாமிய்யா நூரிய்யா"வின் நிர்வாகிகள், பிரமுகர் கள், சகபேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருடையவும் தூய அன்பையும், நன் மதிப்பையும் பெற்றார்கள். ஹலரத் அவர்களின் அரிய ஆலோசனைகள் "ஜாமிய்யா நூரிய்யா"வின் வளர்ச்சிக்குப்பெரிதும் துணைபுரிந்தன. நிர்வாகிகளும் சக பேராசிரியர்களும் ஹலரத் அவர்களின் ஆலோசனைகளை செயல்படுத்தினார்கள்."ஜாமிய்யா நூரிய்யா" முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட்டது!
எனினும், ஹலரத் அவர்களின் சேவை "ஜாமிய்யா நூரிய்யா ' வுக்கு நீண்ட நாள் கொடுத்து வைக்கவில்லை.
காயல்பட்டணம் மஹ்லரதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி நிர்வாகிகளும், அவர்களின் சார்பாக கண்ணியத்துக்குரிய மர்ஹூம் காயிதே மில்லத் அவர்களும் வற்புறுத்தி அழைத்ததற் கிணங்க கிப்லா ஹலரத் அவர்கள் 'ஜாமிய்யா நூரிய்யா' வின் பொறுப்பி லிருந்து விலகவேண்டியதேறபட்டது. இது காயல்பட்டணம் மஹ்லரதுல் காதிரிய்யாவிற்கு லாபம்தான்! எனினும் ஜாமிய்யா நூரிய்யாவிற்கு நஷ்டமே!
"ஜாமிய்யா நூரிய்யா"வின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர். கிப்லா ஹலரத் அவர்கள் தொடர்ந்து "ஜாமிய்யா நூரிய்யா"விலேயே சேவையாற்ற வேண்டும் என்று பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்; ஹலரத் அவர்கள் விலகியது இவர் களுக்கெல்லாம் எல்லையில்லாக் கவலையை அளித்தது. மஹ்லரா கல்லூரியின் நிர்வாகிகள், மாணவர்கள் தம்வதனத்தில் மகிழ்ச்சிதாண்டவ மாடிய நேரம், "ஜாமிய்யா நூரிய்யா" மாணவர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்களுடைய முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்திருந்தன.
பின்னர் மஹ்லரதுல் காதிரிய்யாவின் முதல்வர் பொறுப்பேற்ற ஹலரத் கிப்லா அவர்கள், அதன் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தீவிர கவனம் செலுத்தினார்கள். தமிழகத்திலே சிறந்த மார்க்கக் கலைக்கூடமாக மிளிரச் செய்திட அரும்பாடுபட்டார்கள். இன்று மஹ்லரா சீரோடும் சிறப் போடும் இயங்கி வருகிறதென்றால் அதன் சிறப்பு 'கிப்லா' அவர்களையே சாரும்.
காயல் நகர வாசிகள் அபிப்பிராய பேதங்கள் இன்றி - வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற கிப்லா ஹலரத் அவர்களின் விருப்பத்திற்கிணங்க காயல் நகர வாசிகளும் செயல்பட்டார்கள். இறையருள் ஞானிகள் - ஆலிம் பெருமக்கள் பலருடைய பிறப்பிடமாக இருப் பதால், அறிஞர்களுக்கும் உலமாப் பெருமக்களுக்கும் சங்கை செய்யும் நற்பண்பை காயல் நகர மக்கள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, சிறந்த அறிஞரும் இஸ்லாமிய கலைஞான மேதையுமான அல்லாமா கிப்லா ஹலரத் அவர்களையும் அன்புடனும், பண்புடனும், பாசத்துடனும் நேசித்தார்கள். காயல் நகர ஆலிம்கள், செல்வந்தர்கள், தாய்மார்கள், சிறுவர்கள் ஆகிய அனைவருடைய அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்களாக ஹலரத் அவர்கள் விளங்கினார்கள்,
இதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை “அப்பா” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டுவந்த ஹலரத் மரணச் செய்தி காயல் பட்டணம் வாசிகளுக்குப் பேரிடியாக இருந்தது. என்செய்வது! இறைவன் ஆணை! பொறுமையைக் கைக்கொள்வது தவிர வேறு வழி இல்லையே!
ஹலரத் அவர்கள் இறுதியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி அதிராம்பட்டணத்தில் நடைபெற்ற மேதை இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்களின் சட்டங்கள் குறித்த விழாவாகும்.
இவ்விழாவில் ஹலரத் அவர்கள் நிகழ்த்திய நீண்ட அரிய உரையின் இறுதியில், "இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்களின் சேவைகளில் மிக முக்கியமானது அவர்களால் கோர்வை செய்யப்பட்ட நூல்கள்தான் என்றும், அவர்களின் நினைவாக அவர்களின் சிறிய நூல்களை புதிதாகப் பதிப்பித்து வெளியிட வேண்டுமெனவும், குறிப்பாக இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்களின் "ஃபிக்ஹூல் - அக்பர்" என்ற நூலை முதலில் வெளியிட ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்கள்.
ஹலரத் அவர்களின் இவ்வேண்டுகோளை அதிரை வாசிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோமாக!
தன்னலமற்ற சேவையாளராக சன்மார்க்கத்திற்காக தூய தொண்டாற்றிய தூயவராக விளங்கிய ஹலரத் அவர்கள், சிறந்த பண்புகள் குடிகொண்ட குணக்குன்றாக திகழ்ந்தார்கள். வசதியற்ற எளிய மாணவர்களுக்கு, கிதாபுகள், துணிமணிகள், பணஉதவிகள் உட்பட பல்வேறு உதவிகளை செய்வார்கள்.
பிறர் நலனுக்காகவே தன் வருவாயில் பெரும் பகுதியை செலவிட்ட அந்த நல்லார், தன் குடும்பம் தங்கிட சொந்தமாக ஒரு வீடுகூட கட்டிக் கொள்ளவிலலை. என்னே அவர்களின் எளிமை!
அவர்கள் நம்மை விட்டும் பிரிந்து விட்டார்கள் தான்! எனினும் அவர்களின் வழிமுறைகள் நமக்குத் தெளிவான முன்மாதிரியாக இருக்கின்றன. பின்பற்றி நடந்திட இறைவன் அருள் புரிவானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லாமா ஹலரத் கிப்லா அவர்களுக்கு மறுமையில் உயர் பதவியும் ஈடேற்றமும் தந்து, ஸாலிஹீன்கள், முத்தகீன்கள் வரிசையில் சேர்த்து, சிறப்பிப்பானாக! சுவனத்தில் மிக உயர்ந்த பதவியும், "அஃலா யில்லிய்யீன்”களின் அந்தஸ்தும் அளித்தருள்வானாக! ஆமீன்!!
================================
மீலாது விழாக்களின் அவசியம் :
===============================
மவ்லவீ, ஆவூர் அப்துஷ் ஷுகூர் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இஸ்லாத்தைப் பரப்ப
இனிய நாள்
இறைத்தூதரின் பிறந்தநாள்.
1973 களில் மவ்லவீ, ஆவூர், அப்துஷ் ஷுகூர் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) கும்பகோணம் அருகே உள்ள ஆவூருக்கு மீலாது விழா சொற்பொழிவாற்றச் சென்று இருந்தார்கள்.
தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு தெருவில் பயான் நடைபெற்றது. அந்த பயானில் ஊரில் இருந்த முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அத்துடன் சகோதர சமயத்தைச் சார்ந்த இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட கலந்துக் கொண்டார்கள்.
ஹள்ரத் அவர்கள் அமர்ந்திருக்கிற இடத்தில் மட்டும் இரண்டு ராந்தல்கள் இருக்கும்.
தெருவின் ஒரு சில இடங்களில் மட்டும் ராந்தல்கள் வெளிச்சத்திற்காக கட்டப்பட்டு இருந்தது.
உபன்யாசத்தை கேட்க வந்திருந்த மக்கள் அவரவர் வீட்டு வாசலிலும், தெருவில் பாய் விரித்தும், சாக்குகளை விரித்தும், தம் வீட்டுத் திண்ணையிலும், ஆங்காங்கே இருந்த மணல்மேடுகளிலும் , நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டிகளிலும், கற்களின் மீது அமர்ந்தும் கேட்டார்கள்.
தினமும் இரண்டு மணி நேரம் சொற்பொழிவு நடை பெற்றது. ஹள்ரத் அவர்கள் தமக்கே உரிய பாணியில் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும், சோகமாகவும் சிரிப்பாகவும் பேசினார்கள்.
பேச்சைக் கேட்க வந்திருந்த அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பது போன்று அழகுறப் பேசினார்கள்.
அன்றெல்லாம் நல்லதை யார் சொன்னாலும் மக்கள் கேட்பார்கள்.
இவ்வாறு பன்னிரண்டு நாட்களும் சொற்பொழிவு நடைபெற்று முடிவுற்றது.
பன்னிரண்டாம் நாளில் சொற்பொழிவாற்றிய ஹள்ரத் அவர்களுக்கு அன்பளிப்புகளும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அப்பொழுது ஊரின் தலைவராக இருந்த சகோதரச் சமயத்தைச் சார்ந்தவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.
"பாய்! உங்கள் மூலம் இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் நானும் என்னை போன்றவர்களும் மிகச் சரியாக விளங்கிக் கொண்டோம்; உங்களுக்கு நான் ஏதாகிலும் செய்ய வேண்டும்; நான் உங்களுக்கு என்னச் செய்வது? சொல்லுங்கள் நான் செய்துத் தருகிறேன்" என்று கேட்டுக் கொண்டார்.
ஹள்ரத் அவர்கள், "அல்ஹம்துலில்லாஹ் ! அதுவெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீங்கள் கேட்டதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றுச் சொன்னார்கள்.
அவர், "இல்லை பாய்! நான் உங்களுக்கு கண்டிப்பாக ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
சில நாட்களுக்குப் பிறகு ஹள்ரத் அவர்கள் பணி செய்த பள்ளிவாசலின் வாசலில் ஒரு போஸ்ட் பாக்ஸ் - அஞ்சல் பெட்டியை வைத்தார்.
"பாய்! நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு தினமும் கடிதம் எழுதுகிறீகள்; நீங்கள் உங்களுடைய கடிதங்களை அஞ்சல் செய்ய தொலை தூரத்திற்கு தினமும் சென்று வருவதைப் பார்க்கின்றேன். எனவே உங்களின் சிரமத்தைக் குறைக்க உங்களுக்காக ஒரு அஞ்சல் பெட்டியை வைக்கிறேன்" என்று சொல்லி வைத்தார்.
அது இன்று வரை பள்ளிவாசலின் வாசலில் இருந்து வருகிறது.
மீலாது விழாக்களை நடத்துவதின் மூலம் அனைவருக்கும் நன்மையே ஏற்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று!
மேலும் மீலாது விழாக்கள் நடத்துவதன் மூலம் சமயநல்லிணக்கம் , சகோதரத்துவம் வளரும் என்பதற்கான எடுத்துக்காட்டு இது!
ஹள்ரத் அவர்களின் சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை .
ஹள்ரத் அவர்களின் சொந்த ஊர் செங்கோட்டை என்று சிலருக்குத் தான் தெரியும். ஆனால் ஆவூரில் பணிச் செய்ததால், ஆவூர் தான் அவர்களின் சொந்த ஊர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறியப்படாமல் இருந்த கிராமம் இது! ஹள்ரத் அவர்களின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகிவிட்டது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது வாழ்வை வளமாக்கியவர்களில் ஒருவர் கிப்லா ஹள்ரத் :
================================
ஒரு முறை ஓ. எம். ஹள்ரத் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார்கள்.
நான் பாகியாத் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் நான்காம் வகுப்பு சேர சென்றிருந்தேன். அப்பொழுது கிப்லா ஹள்ரத் அவர்கள்தான் என்னை பரீட்சை கேட்டார்கள்.
அல்ஃபியாவில் இருந்து வாசிக்க சொன்னார்கள். நான் வாசித்து முடித்ததும், "நீ நான்காம் வகுப்பிலேயே சேர்ந்து கொள்" என்று அனுமதித்தார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு எனது குடும்ப கஷ்டம் மற்றும் வறுமை நிலையை ஹள்ரத் அவர்கள் தெரிந்து கொண்டு முதல் வகுப்பில் எனக்கு இரண்டு பாடங்களைப் போட்டார்கள்.
அதாவது உருது தமிழ் மாணவர்கள் அனைவரும் உருது ஆசிரியரிடம் பாடம் படித்தார்கள். அந்த வகுப்பில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு உருது விளங்காததால் அந்தப் பாடமும் விளங்காமல் இருந்தது.
விளங்காதப் பாடத்தை தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த மாணவர்கள் அனைவரும் என்னிடத்தில் வந்து படித்துக் கொள்ள வேண்டும் என ஹள்ரத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த வகையில் நான் ஹிதாயத்துந் நஹ்வு ஓதி கொடுத்தேன். ஒரு பாடத்திற்கு 15 ரூபாய் என இரண்டு பாடங்களுக்காக எனக்கு மாதம் 30 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் காரணமாக எனது பொருளாதாரப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
அதனால் எப்பொழுதும் ஹள்ரத் அவர்கள் மீது நான் பேரன்பு கொண்டிருந்தேன்.
நான் ஹள்ரத் அவர்களிடம் நேரடியாக எந்த பாடமும் படிக்கவில்லை. ஹள்ரத் அவர்கள் பெரியப் பாடங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தார்கள். ஹள்ரத் அவர்கள் பாகியாத்தில் இருந்த காலத்தில் நான் இரண்டு வருடம் ஓதினேன்.
பின்னர் ஹள்ரத் அவர்கள் கேரளா மற்றும் காயல்பட்டினங்களுக்குச் சென்று ஓதி கொடுத்தார்கள் .
ஹள்ரத் அவர்கள் பாகியத்தில் இருந்த காலத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தொப்பிகளை வரவைத்து வெள்ளிக்கிழமைகளில் என்னை விற்று வரும்படி சொல்லுவார்கள். நான் விற்று வந்து பணத்தை கொடுப்பேன். அதிலிருந்து ஹள்ரத் அவர்கள் எனக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள்.
ஹள்ரத் அவர்கள் தமது சொந்த ஊரான உத்தம பாளையத்திற்கு சென்று வரும் பொழுதெல்லாம் ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு போன்றவைகளை கொண்டு வந்து வேலூரில் சில கடைகளுக்கு விற்பனை செய்வார்கள். அந்த பொருட்களை கொண்டுச் சென்று கொடுப்பது பணம் வசூலித்து வருவது போன்ற பணிகளையும் சில சமயங்களில் செய்வேன் அதற்காகவும் ஹள்ரத் அவர்கள் எனக்கு சிறிது பணம் தருவார்கள்.
இப்படி பாகியாத்தில் நான் ஓதும் காலத்தில் என் பொருளாதாரப் பிரச்சினைகளை நீக்கி முழுமையாக ஓதுவதின் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார்கள்.
எனவே எனக்கு கிப்லா ஹள்ரத் அவர்கள் மீது எப்பொழுதும் அலாதி பிரியம் இருந்தது.
நான் ஓதி முடித்ததும் கிப்லா ஹள்ரத் அவர்கள், "நீங்கள் ராஜகிரி காஸிமியா மதரஸாவிற்குச் சென்று ஓதிக்கொடுங்கள்; அது நான் ஓதிய மதரஸா; நீங்கள் பைலாவி எல்லாம் ஓதி கொடுப்பீர்கள்" என்று கூறினார்கள்.
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பைலாவியை ஓதி கொடுத்திருக்கிறேன் அது அவர்களின் துஆ தான்!


Comments
Post a Comment