அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்
அதிரை ஆசான் மௌலானா முஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்
ஒவ்வொரு மாணவரும் துறை சார்ந்த ஒவ்வொரு கல்வியையும் ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார்கள்.
அறிவியலை இன்ன ஆசிரியரிடமும், கணக்கை இன்னா ஆசிரியரிடமும் ஆங்கிலத்தை இந்த ஆசிரியரிடமும் கற்றுக் கொண்டதாக சொல்லுவார்கள். எனக்கு ஒழுக்கத்தை கற்பித்தவர் இந்த ஆலிம் தான்!
இவர் மக்தூம் முஹம்மது லப்பை / கதீஜா பிவி தம்பதியருக்கு மகனாக தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் பிறந்தார்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் அதிராம்பட்டினம் ஸலாஹிய்யா அரபுக் கல்லூரியில் சில வருடங்களும் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில் சில வருடங்கள் என நான்கு ஜும்ராக்களை படித்தார்.
பின்னர் குடும்ப கஷ்டங்களின் காரணமாக சென்னை, பெங்களூர், ஸ்ரீரங்கப்பட்டினம் என பல்வேறு நகரங்களில் உணவகங்களில் பணி செய்தார்.
1974 களில் ஒரு நாள் சினிமா பார்த்துவிட்டு வந்து பள்ளிவாசலில் தொழுத பிறகு "இறைவா! இனி நான் சினிமா பார்க்க மாட்டேன்; தாடி எடுக்க மாட்டேன்; பீடி சிகரெட் போன்றவற்றை குடிக்க மாட்டேன்" என்று தவ்பா - பாவமன்னிப்பு கேட்டு அத்தோடு அவற்றை விட்டு விட்டார். (அவர் இன்று வரை இந்த தவறுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்.)
தந்தை ஆலிமாக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றி வந்ததால் இமாமத்தின் மீது எப்பொழுதும் இவருக்கு ஒரு மோகம் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் உணவகப் பணிகளில் இருந்து விலகி மோதினார் பணி செய்யலாம் என எண்ணி சென்னை எம்.ஜி.ஆர். நகருக்கு சென்றார்.
புதிதாக கட்டப்பட்டிருந்த கூரை பள்ளிவாசலுக்கு வெளியில் இருந்த ஒருவரிடம் பேசிய போது அவர் உங்களைப் பார்த்தால் இமாம் போல் தெரிகிறது நீங்கள் இமாமாகவே பணி செய்யுங்கள் என்று கூறினார்.
உடனே முத்தவல்லி அவர்களிடம் பேசி இமாமத் பணியில் சேர்ந்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சாதிக் பாஷா நகர் பள்ளிவாசலிலும், பல்லாவரம் மிலிட்டரி பள்ளிவாசலிலும், மந்தைவெளி ஜும்ஆ மஸ்ஜிதில் துணை இமாமாகவும் பணி செய்தார்.
மந்தைவெளியில் பணியாற்றும் பொழுது சொல்லின் செல்வர் A.K. அப்துல் காதிர் மிஸ்பாஹி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தான் 1977 ஆம் ஆண்டு பணியில் தமக்கு துணையாக சேர்த்துக் கொண்டார்.
துணை இமாமாகவும் மதரசாவையும் கவனித்து வரும் அதே நேரத்தில், சீனிவாசபுரம் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகைகளை தொழ வைத்துக் கொண்டும், இந்த மஹல்லாவின் நிக்காஹ்களை நடத்தி வைத்துக் கொண்டும் இருந்தார்.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு ராஜிக் ஃபரீத் இன்டர்நேஷனல் கம்பெனியின் உரிமையாளர் கூத்தாநல்லூர் ஜஃபர்தீன் ஹாஜியார் அவர்களின் இரண்டு மகன்களுக்கு ஓதி கொடுத்து வந்த பழக்கத்தின் அடிப்படையில் "மலேசியாவில் வேலை வாங்கித் தாருங்கள்; உணவகங்களில் நான் பணி செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே கப்பலில் டிக்கெட் எடுத்து கொடுத்தார் 1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையிலிருந்து நாகை அந்தமான் வழியாக கோலாலம்பூர் சென்றடைந்தார்.
அங்கே ஜாலான் எனும் ஏரியாவில் இஸ்மாயில் ரெஸ்டாரண்ட் இன்னும் உணவகத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார்.
அப்பொழுது சம்பாதித்த பணத்தை வைத்து தாயாரின் அறிவுரையின் பேரில் மல்லிப்பட்டினத்தில் வீட்டை கட்டினார்.
சென்னை பட்டினம் பாக்கம்:
==============================
பின்னர் 1984 ஆம் ஆண்டு சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் இமாமாக சேவையாற்ற இணைந்தார்.
இந்த நேரத்தில் இந்தப் பகுதியில் 600 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன.
இந்தப் பள்ளிவாசலில் நடைபெற்ற மக்தப் மதரஸா முஹம்மதியா எனும் மதரஸாவிற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வருவார்கள்.
அவர்களுடைய கல்வி தகுதிக்கு ஏற்ப வகுப்புகளை பிரித்து ஹள்ரத் அவர்களும் ஜகரியா பாய் என்கிற மோதினார் ஆகிய இருவர் மட்டுமே பாடங்களை நடத்தி வந்தார்கள்.
இவர் இந்த மஹல்லாவில் தம் முதுமை வரை சுமார் 32 ஆண்டுகள் பணியாற்றினார்; அந்த காலகட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இவரிடம் குர்ஆன் ஷரீஃப் ஓதி முடித்தார்கள்.
அதேபோல் நன்கு ஓதிய திறமையான மாணவர்களில் முஹம்மது அலி மன்பயீ, ஷம்சுதீன் காஸிமி, மவ்லவீ அப்துர் ரஹ்மான், தமீமுல் அன்சாரி காஷிஃபி, மவ்லவீ, முஹம்மது இப்ராஹிம், மவ்லவீ ஹிதாயத்துல்லாஹ், மவ்லவீ, முஹம்மது அப்பாஸ் போன்ற பல மாணவர்களை ஆலிமாகவும் உருவாக்கினார்.
1986 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை சக்ராப்பள்ளியில் தமிழ்நாடு அளவில் பேச்சுப்போட்டி நடைபெற்றது; அதில் ஹள்ரத் அவர்கள் தம் மாணவர்களை தயார் செய்து அழைத்துச் சென்று முதல் பரிசு பெற்று மாநில அளவில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறே மறு வருடமும் மாநில அளவில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்தார்கள்.
இவர் கட்டிய பள்ளிவாசல்கள்
=============================
1984 ஆம் ஆண்டு இவர் இந்த பள்ளிவாசலில் இணையும் பொழுது மிகச் சிறியதாக இருந்தது.
அதாவது ஆறு ஸஃப்புகளில் 60 பேர் தொழகளாம் . ஹள்ரத் அவர்கள் வந்த பிறகு உள் பள்ளிவாசலின் முன் பகுதியில் நான்கு சப்புகளை அதிகப்படுத்தி கட்டினார்கள்; உஸ்மான் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் மிஹ்ராபை முற்படுத்தியது போல் இவர்களும் முற்படுத்தினார்கள்.
இதை இன்றும் இந்தப் பள்ளிவாசலில் காணலாம்; பள்ளிவாசலின் முதல் ஆறு ஸஃப்புகளுக்கு மேலாக தண்டவாளம் போன்ற இரும்புகள் போடப்பட்டு கட்டைகள் அடுக்கப்பட்டு தளம் போடப்பட்டிருக்கும்.
இதன் முற்பகுதியில் இன்று இருப்பது போன்ற சிமெண்ட் தளம் இருக்கும்.
இந்த முற்பகுதியை கட்டும் பொழுதே இடது பக்கம் மதரஸாவையும் வெளிப்பள்ளி வாசலையும் சேர்த்தே கட்டி முடிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு மீண்டும் பள்ளிவாசலின் வலது புறத்தில் உளூ செய்வதற்கென்றும் கிப்லாபுரத்தில் சிறுநீர் கழிப்பதற்கென்றும் கட்டிடம் கட்டப்பட்டது.
2000 மாவது ஆண்டுக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு எதிர் புறத்தில் பள்ளிவாசல் அளவிற்கு பெண்கள் மதரஸா ஒன்றை நிறுவினார். இவை அனைத்தும் இன்றும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
பின்னர் கல்பாக்கம் புதுப்பட்டினம் அருகே கருமாரிப்பாக்கம் எனும் ஊரில் ஒரு பள்ளிவாசலை கட்டினார். இந்த ஊர் மக்கள் அன்று பீடி சுருட்டும் தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். இன்றும் இந்தப் பள்ளிவாசல் பொலிவுடன் காணப்படுகிறது.
இந்தப் பள்ளிவாசலை கட்டி கொடுத்த செல்வந்தரை ஒரு நாள் ஹள்ரத் அவர்கள் இந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.
தாம் வருவதை முன்கூட்டியே சொல்லாததால் (செல்வந்தர் சொல்ல வேண்டாம் என சொன்னதால்) ரேஷன் அரிசியில் உணவும், புளிச்ச கீரையும், அப்பளம், கருவாடு ஆகியன மட்டுமே வைத்து பரிமாறினார்.
அந்த செல்வந்தர் அதை எப்பொழுதும் சாப்பிடுவதைவிட அதிகமாகவே சாப்பிட்டு "மிக ருசியாக இருக்கின்றது ; இதற்கு முன் இது போன்று நான் சாப்பிட்டதே இல்லை" என்று சொன்னாராம்.
நான் பணி செய்யும் மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசலை 1997 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 2002இல் கட்டி முடிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை எந்த மாற்றமும் செய்யாமல் மராமத்து பணிகளை மட்டுமே செய்து வருகின்றது இன்றைய நிர்வாகம். அந்த அளவு நேர்த்தியாகவும் உறுதியாகவும் கட்டப்பட்டுள்ளது.
ரெட் ஹில்ஸ் நாறவாரி குப்பம் எனும் பகுதியில் மஸ்ஜிதே இலாஹி என்னும் பெயரில் ஒரு பள்ளிவாசல், இலாஹி இலவச மருத்துவமனை, ஸ்கூல் என கட்டினார். இவை இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
2016 ஆம் ஆண்டு முதுமையின் காரணமாகவும், பிள்ளைகளை தம் சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் கட்டி கொடுத்ததின் காரணமாகவும் பிள்ளைகளோடு இருக்க சொந்த ஊருக்கே சென்று விட்டார்.
கடந்த ஒன்பது வருடங்களாக அதிராம்பட்டினம் கடற்கரை பள்ளிவாசலில் திறம்பட மதரசாவை நடத்திக்கொண்டு இருக்கின்றார். அந்தப் பகுதி மக்களால் நல்லாசிரியர் விருது பெற்று சிறப்பாக இருந்து வருகிறார்.
81 வயதை கடந்து இறைப்பணி ஆற்றி வரும் இவர் நீண்ட ஆயுளோடும் நோய் நொடியின்றி வாழ அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.
சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு நிகழ்வு
======================================
1970 களுக்கு முன்பு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா மதரஸாவில் மதியமும் இரவும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுதான் மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும் என்ற நிலை இருந்தது.
இவர் அப்துல் வஹ்ஹாப் என்பவருடைய வீட்டில் சாப்பிட்டு வந்தார்.
பின்னர் இவர் சென்னை சீனிவாசபுரம் பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றி வரும் வேளையில் ஒரு நாள் நன்றி உணர்வோடு நீடூர் அப்துல் வஹாப் அவர்களின் இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.
அந்த வீட்டாரிடம் தன்னை முழுமையாக அறிமுகப்படுத்திய பிறகும் அந்த வீட்டார் இவரை நம்பவில்லை.
ஏனென்றால் இந்த வீட்டார் ரமலான் மாதத்தில் ஜகாத் தொகையினை கணக்கிட்டு கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
அவ்வப்பொழுது வரும் ஏழைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் பணம் கேட்டு வந்திருக்கிறார்; அதை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றவர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவர் செய்தி கேட்டுக் கொண்டிருந்த டேப் ரெக்கார்டர் - ரேடியோவை காணவில்லை. வந்தவர் எடுத்துச் சென்று விட்டார்.
இந்த அசம்பாவிதத்திற்கு பிறகு தான் ஹள்ரத் அவர்கள் அங்கே சென்றார்கள். அவர்கள் இவரை நம்பவே இல்லை; பின்னர் பல பழைய நினைவுகளை சொன்ன போதுதான் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அவர் வழமையாக எந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவாரோ அதே இடத்தில் அமர வைத்து கோலி அறுத்து, நெய் சோறு ஆக்கி பரிமாறி இருக்கிறார்கள்.
ஹள்ரத் அவர்கள் சாப்பிட்டுவிட்டு அ. க. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களுடைய தர்ஜுமாவை அன்பளிப்பாக வழங்கிவிட்டு வந்திருக்கிறார்.
இப்பொழுதும் உணவிட்ட அனைவருக்கும் தினம் தினம் துஆ செய்து கொண்டு இருக்கிறார்.
நாமெல்லாம் பிறையைப் பார்த்து நோன்பு நோற்போம்; இவர் ஒவ்வொரு மாதப் பிறையையும் பார்த்து புதிய குர்ஆனை ஓதத் தொடங்குவார்; ஆம்! ஒவ்வொரு மாதமும் ஒரு குர்ஆனை ஓதி முடித்து தமக்கு உணவளித்த உத்தமர்களுக்கும், தனக்காக உதவி செய்தவர்களுக்கும் துஆ செய்து கொண்டிருக்கிறார்.
இந்தச் செய்தியை இவரிடமிருந்து நான் கேட்டதும் எனக்கு PSP. ஜைய்னுல் ஆபிதீன் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள்.
ஆம்! அவர்கள் தினம் தினம் காலையில் தம் அவ்ராதுகளை ஓதிவிட்டு துஆ செய்வதாக சொன்னது நினைவுக்கு வந்தது.
இவர் இத்தனை பள்ளிவாசல்கள் கட்டியதற்கும், பல மாணவ மாணவிகளின் கல்வி உதவித்தொகை மிகப் பெரிய அளவில் வழங்கியதற்கும், திருமணம், நோய் நொடிகள், புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலீடு போன்ற பல வழிகளில் பலருக்கு உதவி செய்திருக்கிறார்.
மேற்கண்ட உதவிகளை செய்வதற்கு துணையாகவும், காரணமாகவும் இருந்த செல்வந்தருக்கு இன்றும் அவர் நன்றி உணர்வோடு துஆ செய்து வருகிறார். செல்வந்தருக்கும் ஹள்ரத் அவர்களுக்கும் நாம் துஆ செய்வோம்.
சண்டையும் சமாதானமும்
==========================
எனக்கும் ஹல்ரத் அவர்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாகம், பொதுமக்கள், ஆலிம்கள், மார்க்க விஷயங்கள் போன்ற பல்வேறு விஷயங்களில் விவாதம் ஏற்பட்டு மிகப்பெரிய வாய் தகராறில் சென்று முடியும்.
இதனை அருகில் இருந்து பார்ப்பவர்கள், "இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விட்டது; இனி இவர்கள் வாழ்நாளில் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்" என்று எண்ணுவார்கள்;
சிலர் இருவரும் பிரிந்து விட வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள்.
சண்டை , காலையில் நடந்தால் நாங்கள் இருவரும் மாலையில் சேர்ந்து பேசிக் கொள்வோம்; சண்டை மாலையில் நடந்தால் நாங்கள் இருவரும் ரெட் ஹில்ஸ் - இலாஹி பள்ளிவாசலுக்கோ, கருமாரிப்பாக்கம் பள்ளிவாசலுக்கோ செல்கிற வழியில் நல்ல ஹோட்டலில் உட்கார்ந்து நன்கு சாப்பிடுவோம்.
இதை காணும் எங்கள் ஆட்டோக்காரர், "நேற்று இருவரும் அப்படி சண்டை போட்டுக் கொண்டீர்களே! இன்று இருவரும் இவ்வளவு ஓட்டி உரசி கொள்கிறீர்களே எப்படி?" என்று கேட்பார்.
அதற்கு ஹல்ரத் அவர்கள் "எங்களுக்கு என்ன குடும்பத் தகராறா? நாங்கள் சண்டை போட்டுக் கொண்டோம்? உலகலாவிய விஷயங்களில் கருத்து முரண்பாடு ஏற்படுவது வழக்கம்தானே! அது உமக்கு சண்டை போட்டு கொண்டது போல் தெறிந்திருக்கிறது; நாங்கள் இருவரும் விவாதம் தான் செய்தோம்" என்று சொல்லுவார்.
அவர், "உங்க விவகாரமே வேண்டாம்" என்று ஒதுங்கிக் கொள்வார்.
|
|
|
நேற்றைய தொடர்ச்சி
சுல்தான் பாயை எடு
====================
ஹள்ரத் அவர்களிடம் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் குர்ஆன் ஷரீஃபை ஓதி முடித்து இருந்தார்கள்; அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது?
மதரசாவில் அவர்கள் படித்துக் கொடுக்கும் இடத்திற்கு அருகே ஒன்று அல்லது இரண்டு குச்சிகளை வைத்திருப்பார்; அதற்கு பெயர் 'சுல்தான் பாய்'.
சமயங்களில் அந்த குச்சியை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்திருப்பார்; "டேய் அமீன்! நீ போய் சுல்தான் பாய எடுத்துகிட்டு வா" என்று சொல்லுவார்.
சுல்தான் பாய் மீது மாணவர்களுக்கு ஒரு அச்சம் இருந்தாலும் அந்த குச்சிக்கு 'சுல்தான் பாய்' என்று பெயர் வைத்ததால் மாணவ மாணவியர் சொல்லி சொல்லி, பேசி பேசி சிரித்து கொள்வார்கள்.
(இந்தக் கட்டுரை இரண்டு நாட்களாக தொடராக வருவதை படித்த பல மாணவ மாணவியரும் என்னிடம் சுல்தான் பாயை பற்றி தான் அதிகமாக பேசினார்கள்.)
பெரும்பாலும் எவரையும் அடிக்காமலே அதைக் காட்டியே அனைவரையும் படிக்க வைத்து விடுவார். அதனால்தான் அனேக மாணவ மாணவியர் திருக்குர்ஆனை முழுமையாக படித்து முடித்தார்கள்.
சென்னை பட்டினம் பக்கத்தில் தான் இப்படி இதற்கு சுல்தான் பாய் என்று சொல்லிக் கொண்டிருந்தார் என்று பார்த்தால், இப்பொழுது அதிராம்பட்டினத்தில் பணியாற்றுகிற இடத்திலும் கூட சுல்தான் பாய் பெயர் பிரபலியம் ஆகிருக்கின்றது.
முதுமையில் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது காலாக ஒரு கைத்தடி தேவைப்படுவது போலவே ஆசிரியராக இருக்கும் அனைவருக்கும் ஒரு கைத்தடி இருப்பது அவசியம் என்பது எனது கருத்து.
முதுமையில் இருப்பவரிடம் உள்ள கைத்தடி அவரின் வழித் துணைக்கு உதவியாக இருக்கும்.
ஆசிரியரிடம் உள்ள கைத்தடி மாணவர்களின் வாழ்க்கைக்கு வழித் துணையாக இருக்கும்.
Comments
Post a Comment