25. என்னைப் பற்றி





அணிந்துரை


திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் மவ்லவி, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil 
இமாம்: மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் சாந்தோம் சென்னை 


பேனாவையும், எழுத்துக்களையும், மொழிகளையும், வேத நூல்களையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

பேனா மற்றும் எழுத்துக்களின் தேவையில்லாமல் அதாவது எழுத்தறிவும் நூலறிவும் இல்லாமல் வேதத்திற்கு விளக்க உரை வழங்கிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள், இமாம்கள், வலிமார்கள், இந்த நூலாசிரியர் உடையவும் என்னுடையவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், எங்களின் மூதாதையர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸலவாத் - ஸலாம் /  சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக ஆமீன்!

மவ்லவி ஹாஃபிழ் T முஜீபுர் ரஹ்மான் ரப்பானி ஹள்ரத் அவர்கள் " இயன்றதை செய்வோம் இடைவிடாமல் செய்வோம்" எனும் நூலை எழுதி சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார். 

இந்த நூல் நம்மை நெறியோடு வாழ வழிகாட்டுகிறது;
மேலும் இந்த நூல் ஒரு மனிதன் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. 

உணர்ச்சி, கோபம், ஆசை, பயம் ஆகியவற்றை அறிவால் எப்படி எதிர்கொள்வது என்பதையும், கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது.

நீங்கள் யார்? எதற்காக வாழ்கிறீர்கள்? உங்களுடைய பொறுப்பு என்ன? என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கான பதிலாக இந்த நூல் அமைந்துள்ளது. 

எது நல்லது? எது கெட்டது? என்பதை வேறுபடுத்தி காட்டுகிறது இந்த நூல்!

பொறுமை, நேர்மை, கருணை, தன்னடக்கம், நன்றியோடு நடக்குதல் போன்ற பண்புகளை வளர்க்கின்ற நூலாக இது அமைந்துள்ளது.

சுயநலத்தோடு வாழாமல் சமூகப் பொறுப்புகளை ஏற்று பொதுநல மனிதனாக வாழ இந்த நூல் வழி காட்டுகிறது. 

வாழ்க்கை என்பது ஏதோ வாழ்ந்து செல்வது அல்ல! எப்படி வாழ்கிறோம்? எப்படி வரலாறாக மாற வேண்டும்? என்பதை உணர்வுபூர்வமாக உணர்த்தும் உன்னத நூல் இது!

நம் ஒவ்வொருவருடைய வெளிப்புற மாற்றங்களை விட உள்புற மாற்றங்கள் தான் உயர்ந்ததும், சிறந்ததும், நிலையானதும் ஆகும்; அந்த உள்புற மாற்றத்தை உருவாக்கித் தருகிறது இந்த நூல். 

நாம் செய்யும் தவறுகளை நாமே ஒப்புக் கொள்ளும் துணிச்சலையும், பிறர் மாற வேண்டும் என்பதற்கு பதிலாக நான் மாற வேண்டும் என்கிற எண்ணத்தையும்  உங்களுக்குள் இந்த நூல் விதைக்கும். 

ஏமாற்றம், தோல்வி, துக்கம், தனிமை ஆகியவற்றால் துவண்டு போய் இருப்பவர்கள் இந்த நூலை வாசித்தால் அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும். 

துன்பங்களை சாபமாக பாராமல், பாடமாகப் பார்க்க இந்த நூல் கற்றுத் தருகிறது. உங்களை ஒதுக்கி தள்ளிய நட்புகளுக்கு மத்தியில், உங்களை துணிந்து நிற்கிற, தன்னம்பிக்கை உண்டாக்குகிற நூலாக இது அமைந்துள்ளது.

அவசர முடிவுகள் எடுப்பதையும், தற்காலிக நன்மைகளை எதிர்பார்த்து செயல்படும் மனநிலையையும் இந்த நூல் மாற்றியமைக்கிறது.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் இழக்கும் பணம், பதவி, புகழ் அடைவதாக மட்டுமே இருக்கிறது; ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை இந்த நூல் அர்த்தப்படுத்துகிறது. 

நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை சரியானதா? தவறானதா? நீங்கள் எந்த மாதிரி வாழ்ந்து இருக்கிறீர்கள்? என்பதை இந்த நூல் உங்களை அடையாளப்படுத்துகிறது. 

குடும்பம், நட்பு, சமூகம் , உறவுகள் ஆகியவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும் எனவும் இந்த நூல் கற்றுத் தருகிறது.

ஆணவத்தை குறைத்து, பணிவை வளர்த்து, பிறரை இழிவாக பார்க்காமல் மனிதராக பார்க்க இந்த நூல் கற்றுத் தருகிறது.

அறிவு, ஆன்மிகம், அதிகாரம் ஆகியவற்றை எவ்வளவு பொறுப்போடு கையாள வேண்டும் என்பதை இந்த நூல் கற்றுத் தருகிறது.

இந்த நூல் நீங்கள் கைகளில் பிடித்திருக்கும் காகிதக் கட்டல்ல! வாழ்க்கையை வழிகாட்டும் விளக்கு. 

உங்களின் அன்றாட வாழ்வின் குழப்பங்களிலிருந்து தெளிவையும், ஒளியையும் தருகின்ற உன்னதமான நூல். வாங்கி வாசியுங்கள் வளம் பெறுவீர்! 

இவ்வளவு உன்னதமான நூலை நண்பர் சிறப்பாக எழுதி இருக்கிறார்; அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டையும், வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன்; நண்பர் அவர்கள் இதுபோன்று இன்னும் எண்ணற்ற நூல்களை எழுத வேண்டும், தமிழ் சமூகத்திற்கு வழங்க வேண்டும், மக்கள் பயனடைய வேண்டும் என்பதே எனது அவாவும் துவாவும் ஆக இருக்கிறது.

இந்த நூலை படிக்கின்ற மக்களுக்கு அல்லாஹ் தெளிவையும், உலகத்திலும் மறுமையிலும் வெற்றியையும் வழங்குவானாக ஆமீன்! 

அன்புடன் 

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் மவ்லவி, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil 
சாந்தோம் சென்னை. 
15/12/2025





======================================




ரஹமத் பதிப்பகம் வெளியிட்ட முவத்தா இமாம் மாலிக் எனும் நூலில் நான் எழுதிய அணிந்துரை :

=========°°°°°°°°°°°°°°°°°°°°==============


திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்,

மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ, M.A., M.Phil.,

இமாம்: மஸ்ஜித் தக்வா, சாந்தோம், சென்னை.


மனிதர்கள் தம் வாழ்வைத் தாமே சரி செய்துகொள்வதற்கு அழகிய அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆனை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

ஆதாரப்பூர்வமான நபிமொழி நூல்கள் தொகுக்கப்பட காரணமாக அமைந்த "நான் இரண்டை விட்டுச் செல்கிறேன்; அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறிச் சென்று விட மாட்டீர்கள்" எனும் அழகு வாக்கியத்தை உதிர்த்த உத்தம நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள், இமாம்கள், வலிமார்கள், மற்றும் ரஹ்மத் பதிப்பகத்தாரின் முன்னோர்கள், அதன் உரிமையாளர்கள், நூல்களை மொழி பெயர்த்தவர்கள், அதன் ஊழியர்கள் ஆகிய அனைவர் மீதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஸலவாத், ஸலாம் - அருளும் அமைதியும் உண்டாவதாக!

நான்கு மத்ஹபுகளில் ஒன்றின் தலைவர் : 


நான்கு மத்ஹப் இமாம்களில் இரண்டாவது இமாமாக உள்ள மாலிக் (ரஹ்) அவர்களின் மார்க்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றக்கூடியவர்கள் ஆப்பிரிக்கா, எகிப்து, ஷாம், ஏமன், சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள்.

மதீனா மாநகருக்குள் பல்வேறு நாடு நகரங்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் மக்கள் வந்து குடியேறினார்கள். அந்த வகையில் இமாம் அவர்களின் முன்னோர்களும் மதீனாவில் வந்து குடியேறினார்கள். அதனால் அறிஞர்களிடையே இவர்களுக்கு "இமாம் தாருல் ஹிஜ்ரா" என்கிற புனைபெயரும் உண்டு.

இமாம் அவர்கள் ஹிஜ்ரி 93 இல் பிறந்து ஹிஜ்ரி 179 ரபியுல் அவ்வல் பிறை 10 அன்று தம் 86ஆவது வயதில் காலமானார்கள்.

இவர்கள் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், தஸவ்வுஃப் போன்ற பல்வேறு துறை சார்ந்த கல்வியைத் தம் 21ஆம் வயதிற்குள் கற்றுத்தேறி மார்க்கத் தீர்ப்பு சொல்லும் அளவிற்கு ஞானம் பெற்றுத் திகழ்ந்தார்கள்.

தொகுக்கப்பட்டக் காரணம் : 


நபி (ஸல்) அவர்களிலிருந்து 21 ஆவது கலீஃபாவாகவும் அப்பாஸியா கலீஃபாக்களில் இரண்டாவது கலீஃபாவாகவும் உள்ள அபூ ஜஃபருல் மன்சூர் (ரஹ்) அவர்கள் ஹஜ் செய்ய வந்திருந்த போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் சொற்பொழிவில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தெளிவான ஃபிக்ஹு சட்டங்களும் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.

பின்னர் அவர்களிடம் சென்று, 'தங்களிடம் உள்ள ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மஸாயில் மார்க்கச் சட்டங்களை ஒரு நூலாகத் தொகுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்; 

மேலும் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும்படியும் அதை அமைத்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தொகுத்த நூல் தான் இந்த முவத்தா.

இந்த நூல் தொகுக்கப்பட்ட பிறகு அதனைப் படித்துப் பார்த்துவிட்டு "கஅபாவில் இந்த நூலைத் தொங்க விட வேண்டும்; அதில் உள்ளவாறு அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என நான் உத்தரவிடுகிறேன்; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்" என கலீஃபா மன்சூர் அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், "அமீருல் முஃமினீன் அவர்களே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள்; நபித்தோழர்கள் மார்க்கத்தின் பிரிவுச் சட்டங்களில் கருத்து வேறுபாடு கொண்டு இருக்கிறார்கள்; அவர்களெல்லாம் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார்கள்; 

அதனால் இப்பொழுது எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும்" என்று கூறியதும் அதை அப்படியே கலீஃபா மன்சூர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

(நூல்: ஹுல்யதுல் அவ்லியா)

முவத்தா நூல் குறித்த புதுமையான செய்திகள் :


இந்த நூலில் 1891 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இது முவத்தா இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கணக்கீட்டின்படி ஆனதாகும். இவை அனைத்தும் 376 அறிவிப்பாளர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 105 பேர் ஸஹாபாக்கள் ஆவர். அதாவது 105 ஸஹாபாக்களிடத்திலிருந்து நேரடியாக ஹதீஸ்களைப் பெற்றிருக்கிறார்கள். 60 பேர் தாபியீன்கள் ஆவர்.

மர்ஃபூவு - நபி (ஸல்) அவர்களுடன் இணைக்கப்பட்ட செய்தி / அதாவது நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்கள் இந்த நூலில் 600 ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மவ்கூஃப் - நபித்தோழருடன் முடிந்த செய்திகள் / அதாவது நபித் தோழர்கள் கூறிய கருத்துகள் 613 ஹதீஸ்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்தூஉ - தாபிவுகளுடன் துண்டிக்கப்பட்ட செய்தி, அறிவிப்பாளர் தொடர் இடை முறிவு ஏற்பட்ட 285 ஹதீஸ்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

முர்ஸல் - நபித்தோழரின் பெயரைக் குறிப்பிடாமல் தாபிஉ நேரடியாக "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அறிவிக்கும் ஹதீஸ்கள் 222 இடம்பெற்றுள்ளன. ஆக மொத்தம் 1720 ஹதீஸ்கள் இந் நூலில் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்கள் : 


புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களுக்கு அடுத்து ஆகத் தலைசிறந்த நூல் முவத்தா என அனைத்து ஹதீஸ்கலை வல்லுநர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்த நூலை மதீனாவில் இருந்த எழுபது மார்க்கச் சட்ட வல்லுநர்களிடம் வழங்கி சரிபார்க்கும்படி கூறினேன்; அவர்கள் அனைவரும், 'இது அனைவரும் பின்பற்றி நடக்க ஏற்ற வழியில் அமைந்த நூல் முவத்தா" எனக் கூறினார்கள்: அதனால் இதற்கு முவத்தா - பின்பற்றி நடக்கத்தக்க வழி எனப் பெயரிட்டேன்" என்று கூறுகிறார்கள்.

இந்த நூலைத் தம் 38 ஆம் வயதில் தொகுக்கத் தொடங்கி 48 ஆம் வயதில் தொகுத்து முடித்ததாக ( ஹிஜ்ரி 131 142 ) சொல்லப்படுகிறது.

அல் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் நாற்பது நாள்கள் தங்கியிருந்து முவத்தா நூலைப் படித்துப், புரிந்துகொண்ட பிறகு பிரதி எடுத்துக் கொண்டார்கள்.

அப்பொழுது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் "நான் நாற்பது வருடங்களாகச் சிறுகச் சிறுக சேர்த்து, அவற்றைப் பல்வேறு திருத்தங்கள் செய்து முழுமைப்படுத்தியதைத் தாங்கள் நாற்பது நாள்களில் புரிந்து கொண்டீர்கள்" என்று கூறி சிரித்தார்கள்.

"ஸஹீஹான ஹதீஸ்களை உள்ளடக்கிய நூலை முதன் முதலில் இயற்றியவர் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்" என ஹதீஸ் கலை வல்லுநர் இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) அவர்கள் (கி.பி. 1181 - 1245 காலகட்டத்தில்) கூறியபோது அவருடைய கருத்தைப் பலரும் விமர்சித்து, "இல்லை! முதன் முதலில் ஸஹீஹான ஹதீஸ்களை இயற்றியவர் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள்" எனக் கூறினார்கள்.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் குறித்து வினவப்பட்டபோது. "நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களை அறிந்தவர்களில் அவர்களைவிட வேறு யார் இருக்கிறார்?" எனக் கூறியுள்ளார்கள்.

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; பூமியில் உள்ள நூல்களில் அல்லாஹ்வின் வேதத்திற்கு அடுத்து ஆதாரப்பூர்வமான நூல் முவத்தா.

"மாலிக் இமாம் அவர்கள் 700க்கும் மேற்பட்ட இரவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டு வந்தார்கள்" என தஃதீருல் அனாம் ஃபீ தஃப்ஸீரில் அஹ்லாம் எனும் நூலாசிரியர் கூறுகிறார்.

சிறந்த கல்வியாளர்: 


மதீனாவில் ஒரு பெண், வேறொரு பெண்ணின் ஜனாஸாவைக் குளிப்பாட்ட சென்று இருந்தாள், அந்தப் பெண் ஜனாஸாவின் சில உறுப்புகளைப் பார்த்துவிட்டு, "இவள் பெரிய விபச்சாரியாக இருந்திருக்கிறாள்" எனப் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னாள். இவ்வாறு சொல்லிக் கொண்டு தன்னிரு கைகளையும் ஜனாஸாவின் மீது வைத்துக் கழுவுவதற்குத் தயாரானாள். சிலர் தண்ணீரை ஊற்றினார்கள்.

ஜனாஸாவைக் கழுவுவதற்காக வைத்த கைகள் ஜனாஸாவில் ஒட்டிக் கொண்டன. அதை எந்த திசையிலும் நகர்த்த இயலவில்லை. கையை அகற்றவும் இயலவில்லை. ஜனாஸா குளிப்பாட்டும் பெண்ணும், அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தடுமாறினார்கள். பின்னர் ஊரில் இருந்த பலரிடம் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்கப்பட்டது.

அன்று மதீனாவில் இருந்த ஆலிம்கள், அறிஞர்கள், ஜோதிடர்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் என அனைவரிடமும் அவ்விஷயத்தைச் சொல்லி பரிகாரம் கேட்கப்பட்டது. யாரும் அதற்கான சரியான பரிகாரத்தைச் சொல்லவில்லை.

இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அன்று மாலை மதீனா வந்தடைந்திருந்தார்கள். அவர்களிடம் இந்த விஷயம் சொல்லப்பட்டது.

அப்பொழுது இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், சற்றும் தாமதிக்காமல் 'குளிப்பாட்டும் பெண்ணுக்கு அவதூறு சொன்ன குற்றத்திற்காக எண்பது கசையடி கொடுங்கள்; பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்" என்று கூறினார்கள்.

காலையிலிருந்து மாலை வரை பெண் ஜனாஸாவின் மீது இருந்த குளிப்பாட்டும் பெண்ணின் கைகள் அப்படியேதான் இருந்தன. அவை அகற்றப்படவே இல்லை. அந்தக் கைகள் அப்படியே இருந்த நிலையில் எண்பது கசையடி வழங்கப்பட்டது. பின்னர் அவளின் கைகள் பிரிந்து விட்டன.

இஸ்லாத்தில் ஓர் ஆணையோ, பெண்ணையோ விபச்சாரி என்று அவதூறு சொன்னால் எண்பது கசையடி கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகும். அந்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு அந்த ஜனாஸாவைக் குளிப்பாட்டிய பெண் பாதுகாக்கப்பட்டாள்.

(நூல்: அல் இன்ஸாப் - மீஸானுல் குப்ரா)

எனவே பிறரைக் குறை சொல்ல நினைப்பவர்கள், குறை சொல்கிறவர்கள், குறை சொல்ல யோசிப்பவர்கள் அனைவரும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்.

அதே நேரம் அன்றைய தினம் மதீனாவில் இருந்த அறிஞர்களில் எவரும் தீர்வு சொல்லுகிற அளவிற்குப் போதிய ஞானம் இல்லாத நிலையில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவையும் ஆற்றலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறித்து : 


இந்த நூலில் தொழுகையின் நேரங்கள் எனும் தலைப்பின் கீழ் அமைந்த முதல் 28 ஹதீஸ்களையும், கலைச்சொல் விளக்கம் வரை உள்ள அனைத்துப் பக்கங்களையும் பார்வையிட்டேன். மௌலவி M. முஹம்மது யூசுப் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள் அரபு மொழி ஹதீஸ்களின் சுவை குறையாமல் தமிழில் மொழிபெயர்த்து இருக்கின்றார்.

"மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை" என்று சொல்வது போல், "இவர் மொழிபெயர்ப்பை இப்படிச் செய்ய வேண்டும்" என சொல்லிக் கொடுக்கிற அளவில் அவர் இல்லை; அவர் மொழிபெயர்ப்புச் செய்வதில் அழகிய முன்மாதிரி உள்ளவர்களில் ஒருவர் அல்லாஹ் அவருடைய திறனை மேலும் மேம்படுத்தட்டும்; ஆமீன்!!

‌ அருள் வளம் பெற்ற ரஹ்மத் பதிப்பகம் :


திருக்குர்ஆன் தஃப்ஸீர் மற்றும் ஆறு நபிமொழித் தொகுப்பு நூல்கள், நபிகள் நாயகத்தின் வரலாறு உட்பட பல கிரந்தங்களை வியாபார நோக்கமின்றி வழங்கிய ரஹ்மத் பதிப்பக உரிமையாளருக்கு ஒவ்வொரு தமிழ் பேசும் முஸ்லிமும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளார்கள்.

ஹதீஸ்களை அழகு தமிழில், எளிய நடையில் நாம் வாசிக்கும் போது நபி (ஸல்) அவர்களே தமிழ் மொழியில் பேசுவது போன்ற உணர்வைப் பெறுகிறோம்.

இஸ்லாம் இந்தத் தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு கடந்த 1500 வருடங்களில் யாரும் செய்திடாத ஒரு சேவையை முஸ்தபா அண்ணன் அவர்கள் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ் அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் சிறந்த பகரத்தை வழங்கிடுவானாக! ஆமீன்!

மேலும் இப்பொழுதும், இதுவரையிலும் மொழிபெயர்ப்புப் பணியிலும், மொழிபெயர்ப்பு அலுவலகத்திலும் பணியாற்றிய அனைவருக்கும் அல்லாஹ் தன் புறத்திலிருந்து அருள்வளத்தை இவ்வுலகிலும் மறு உலகிலும் குறைவின்றி வழங்கிடுவானாக! ஆமீன்!!


மவ்லவீ B.M.கலீலுர் ரஹ்மான் மன்பயீ, M.A., M.Phil.,

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்.






=====================================



இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் அறிவுரைகள் எனும் நூலுக்கு நான் எழுதிய ஓர் அணிந்துரை 

தோரணவாயில்......



திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ, M A , M. Phil 

=====================================


அழகிய அறிவுரைகள் அனைத்தையும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர் வாயிலாகவே வெளிபடுத்தி வரும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

அறிவுரைகள் அனைத்தும் அழகிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அவ்வாறான அழகிய அறிவுரையை எளிமையாக சொல்லியும் அதை அப்படியே வாழ்ந்தும் காட்டிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

"இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் அறிவுரைகள்" எனும் நூலை மவ்லவீ, S. மதார்ஷா ஃபாஜில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்; அந்த நூலை பார்வையிட்டேன். 

பொதுவாகவே இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் அறிவுரை எல்லா காலத்து மக்களுக்கும் தேவையானதாகவே அமைந்திருக்கிறது.

பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு மனிதரின் அறிவுரை பத்து நூற்றாண்டுகள் கடந்தும் பழமை அடையாமல் புதிதாகவும், இன்று வாழும் மக்களுக்கு மிக மிக அவசியமானதாகவும் இருக்கிறது என்றால் அவர்களின் சிந்தனைகளும், எழுத்துக்களும் எவ்வளவு முற்போக்குத்தனமாக சிந்தித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

கி. பி. 1111 - 1058 காலகட்டத்தில் பிறந்து 53 வயதே வாழ்ந்த இமாம் அவர்கள் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நூலும் அறிவுச் சுரங்கம். 

அந்தச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு நூல்தான் தங்கள் கரங்களில் தவழ்கிறது.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள குர்ராஸான் எனும் நகரம் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆதாரப்பூர்வமான ஆறு நபி மொழி நூல்களில் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ , நஸாயீ ஆகிய ஐந்து நூல்களை தொகுத்தவர்கள் குர்ராசான் ஈன்ற அறிஞர்கள் தாம். 

அவர்களின் வரிசையில் உளவியலின் தந்தை, அறிவுலக மேதை என உலகம் கொண்டாடும் இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் பிறந்ததும் இதே ஊரில் தான்.

இந்த ஊருக்கு எனது ஆன்மீகத் தந்தை P.S.P. ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹள்ரத் அவர்கள் இரண்டு முறை இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை ஸியாரத் செய்ய சென்று இருந்தார்கள். 

சென்றிருந்த இரண்டு முறையும், ஒர் இரவு அதன் வளாகத்தில் படுத்து இருந்து விட்டு மறுநாள்தான் மற்ற இடங்களுக்குச் சென்றதாக என்னிடம் கூறினார்கள்.

"ஏன் தங்கினீர்கள்? அங்கு தங்குவதால் ஏதேனும் பயன் இருக்கிறதா?" என்று கேட்டேன். அதற்கு ஹள்ரத் அவர்கள், "நான் இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் நூல்களை பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில்  ஓதிக் கொடுத்து வருகிறேன்; அவர்களின் இருப்பிடத்திற்கு வந்த நான் உடனே திரும்புவது மரியாதையாக இருக்காது; அவர்களின் தர்பாரில் சிறிது நேரம் தங்கி இருந்துச் செல்வது அவர்களுக்கு நான் அளிக்கும் மரியாதையாக கருதினேன்; அதனால் நான் அங்கு தங்கி இருந்தேன்" என்று கூறினார்கள்.

மேலும் PSP ஹள்ரத் அவர்கள் கூறினார்கள். இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை ஸியாரத் செய்ய வந்திருந்த மக்களிடம் அவர்களின் அடக்கத் தளத்தில் நின்று கொண்டு அவர்கள் குறித்த சிறப்பான பல செய்திகளை  நான் பேசினேன். அவற்றில் இருந்து  இரண்டு கருத்துகளை நினைவுபடுத்துகிறேன்" என்று சொல்லிவிட்டு என்னிடம் கூறினார்கள்.

1. அல்லாஹ் சிலவற்றை சிலவற்றில் மறைத்து வைத்திருக்கின்றான். எத்தனையோ வணக்க வழிபாடுகள் நாம் செய்தாலும் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தி நம் மீது உண்டாகும். அது எந்த அமல் என்பது மறைக்கப்ப்பட்டுள்ளது. 

இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் வஃபாத்தான பின்பு அவர்களைக் கனவில் கண்ட ஒருவர், "அல்லாஹ் உங்களின் எந்த செயலைக் கொண்டு பொருந்திக் கொண்டான்" என்று கேட்டார். 

அதற்கு அவர்கள், "நான் ஒருமுறை பேனாவைக் கொண்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அதில் உள்ள மையை உறிஞ்சுவதற்காக ஒரு ஈ வந்து அமர்ந்தது. நான் அந்த ஈ தானாக பறந்து போகும் வரை அந்தப் பேனாவை சற்றும் அசைக்காமல்  வைத்திருந்தேன். இதனால் அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொண்டான்" என்று கூறினார்கள்.

2. ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "ஒரு மனிதன் தன்னையும் தன் நாயனையும் அறிவதற்கு துணை செய்யும் அறிவே உண்மையான அறிவு. இந்த அறிவு பெருமையை உண்டாக்காது. பணிவையும், அடக்கத்தையும் உருவாக்கும்".  இவ்வாறு ஹள்ரத் அவர்கள் பேசினார்கள்.

பைத்துல் முகத்தஸில் இமாம் கஸ்ஸாலீ ரஹ்:

=========================

பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து கிழக்குப் புறத்தில் பாபுர் ரஹ்மா என்றொரு பகுதி இருக்கிறது. 

இந்த இடத்தில்தான் நபி சுலைமான் (அலை) அவர்கள் தொடர்ந்து இபாதத் செய்து வந்தார்கள். இங்கு நின்ற வண்ணம் தொழுத போது தான் அவர்கள் மரணித்தார்கள். 

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸை வென்றெடுத்த போது "இந்த இடத்தை மூடி வையுங்கள்" என்று சொன்னார்கள். இன்று வரை அது மூடப்பட்டே இருக்கிறது. பிற்காலத்தில் ஈஸா (அலை) அவர்கள் இந்த வாசல் வழியாகவே பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்குள் நுழைவார்கள்.

மரியம் (அலை) அவர்களின் தாயார் ஹன்னா பின்த் யாகூத் அவர்களின் அடக்க தளம் இங்குதான் இருக்கின்றது.

மேலும் இந்த வாசலின் வெளிப்புறம் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), உபாதத் பின் ஸாமித் (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களின் அடக்கத்தளமும் உள்ளது.

இவ்வளவு புகழ்பெற்ற இடத்தில்தான் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ரமலான் மாதத்தில் இஃதிகாப் இருப்பார்கள். மேலும் இங்கு இஃதிகாஃப் இருக்கும் காலங்களில் இஹ்யா உலூமித்தீன் நூலை 16 வருடங்கள் இந்த இடத்தில் இருந்து எழுதினார்கள். 

அவர்கள் இங்கு தங்கி இருக்கும் காலங்களில் இவர்களிடம் பல்லாயிரக்கணக்கானோர் வந்து பாடம் படித்துச் சென்றார்கள்.

ஹிஜ்ரி 490 - கி.பி. 1096 காலகட்டத்தில் இமாம் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இந்த இடத்தில் அவர்களின் பரக்கத்தை நாடி தொடர்ந்து மதரஸா நடைபெற தொடங்கிவிட்டது. அது அல் மதரஸதுல் கஸ்ஸாலிய்யா எனும் பெயரில் இன்றும் இயங்கி வருகிறது. 

இங்கே இஹ்யா உலூமித்தீன் நூலின் மிகப்பழைய கையேட்டுப் பிரதி ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

19/02/2020 அன்று 11:35 மணி அளவில் நான் பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்குள் சென்று இருந்தேன். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் பாடசாலையையும் சென்று பார்த்தேன். அவர்களின் கைகளால் எழுதப்பட்ட இஹ்யா உலூமித்தீன் நூலையும் பார்வையிட்டேன். அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.

வாழும்போதும் இறந்த பிறகும் எல்லோரின் இதயங்களிலும் இடம் பிடித்திருக்கும் இமாம் கஸ்ஸாலீ ( ரஹ் ) அவர்கள் குறித்து மவ்லவீ மதார்ஷா ஹள்ரத் அவர்கள் எழுதிய இந்த நூலை நான் வாசித்தேன் .

இந்த நூல் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம். ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய முதல் உதவி  பெட்டகம்.

அழகு தமிழில், எளிய நடையில், எல்லோரையும் ஈர்க்கும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. வாங்கி வாசியுங்கள்; பிறருக்கும் வாசிக்க வாங்கி வழங்குங்கள். 

எல்லாம் வல்ல இறைவன் மதார்ஷா ஆலிம் அவர்களிடம் இருந்து இந்த நூலை ஏற்றுக் கொள்வானாக! இதன் கருத்துக்களை படிக்கின்ற யாவருக்கும் அதை பின்பற்றி நடக்கும் வாய்ப்புகளை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக! 

இந்த அழகு நூலை எழுதிய மதார்ஷா ஆலிம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளையும், நோய்நொடி இல்லா வாழ்வையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக!ஆமீன்!!


அன்புடன் 


கலீலுர் ரஹ்மான் 

21/09/2024 -

பதிவேற்ற நாள் : 11/1/2025




•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••





வாசிப்பில் என் அனுபவம் :

===========================

பொதுவாகவே அரபுக் கல்லூரிகள் அனைத்திலும் நூலகங்கள் இருக்கும். நான் படித்த முதல் அரபுக் கல்லூரியான பெரம்பலூர் இர்ஷாதுல் ஊலூமில் அன்று (1988) நூலகம் இல்லை. ஏனென்றால் அதற்கு முதல் வருடத்தில் தான் இந்த மதரஸாவே தொடங்கப்பட்டது. 

ஆனாலும் மவ்லவி காதர் முகையித்தீன் காஸிமி ஹள்ரத் அவர்கள் திருக்குர்ஆன் கூறும் குகை வாசிகளின் வரலாறு, யூசுப் (அலை) அவர்களின் வரலாறு ஆகியவற்றை  பாடங்களின் போது தொடராக சொல்லி வருவார்கள். அது பசுமரத்து ஆணி போல் இன்றும் இதயத்தில் பதிந்து இருக்கிறது. 

அதுதான் நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், வரலாறுகளை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உண்டாக்கியது என்று சொன்னால் மிகையல்ல!

பின்னர் நான் கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள ஃபைஜுல் பாகியாத் மதரஸாவில் பயின்றேன். அங்கு சிறிய அளவிலான ஒரு நூலகம் இருந்தது. 

வெள்ளி இரவு தோறும் லஜ்னா - சொற்பயிற்சி மன்றம் நடைபெறும். அதில் ஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக பேசி பயிற்சி எடுக்க வேண்டும். 

மன்றத்தில் பேசுவதற்காக வரலாறு மற்றும் பல செய்திகள் தேவைப்பட்டது. அதற்காக அங்கு தான் நான் முதன் முதலில் நூல்களை வாசித்தேன். 

உத்தமபாளையம் அப்துல் காதர் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய, "பாத்திமா ரலி அவர்களின் வரலாறு" அடங்கிய நூலை அங்கு தான் முதன் முதலாக படித்து முடித்தேன். 

பின்னர் நான் கோட்டகுப்பம் ஜாமிஆ ரப்பானியா அரபுக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்தேன். மதரஸாவிற்கு எதிரிலேயே ஓர் இஸ்லாமிய நூலகம் இருக்கிறது. 

அங்கும் கூட மன்றத்தில் பேச வேண்டுமே என்பதற்காக உத்தமபாளையம் எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய தஃப்ஸீர் ஹமீத் நூல்களில் சில பாகங்களை முழுமையாக படித்து முடித்தேன்.

அதில் நான் படித்து ருசித்தவைகளையும் பல்வேறு வரலாற்று சம்பவங்களையும்  ஒரு நோட் புத்தகத்தில் தனியாக எழுதி வைத்துக் கொண்டேன்.

எனது தங்கை ஃபரிதா அவர்களுக்கு பணம் கொடுத்து சில வரலாறுகளை எழுதச் சொல்லி இருந்தேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அந்த நோட் புத்தகங்கள் அனைத்தும் இன்றும் என்னிடம் இருக்கிறது. இன்றும் பயான் செய்வதற்கு முன் அவற்றையும்  பார்வையிடுவது வழக்கம்.

இவ்வாறு இந்த நூலகத்திலிருந்து பல்வேறு நூல்களை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன். இங்குதான் முதன்முதலாக நூலகம் சென்றும் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. 

இந்த மதரஸாவில் எனக்கு மிஷ்காத் பாடம் நடத்திய ஸர்தார் ஹஜ்ரத் அவர்கள் அவர். மிஷ்காத்தில் என்னைக் கவர்ந்த ஹதீஸ்களை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து ஒரு நோட் புத்தகத்தில் தனியாக வைத்திருந்தேன். இன்றும் அவை என்னிடம் இருக்கின்றது.

முத்தாரம், கல்கண்டு போன்ற வார பத்திரிகைகளையும் நூலகத்தில் வாசிப்பேன். அதில் பயானிற்கு பயன்படும்படியான செய்திகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் எழுதி வைத்துக் கொள்வேன்.

ஹஸன் அவர்கள் எழுதிய சிந்துநதிக் கரையினிலே! மேற்கு வானம் , மஹ்ஜபீன் போன்ற பல இஸ்லாமிய நாவல்களை படிக்கும் பழக்கம் இங்கு தான் ஏற்பட்டது. மவ்லவி, அப்துல் ஸமது நத்வி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய "நீங்கள் கேட்டவை" புத்தகம் முழுவதையும் வாசித்திருக்கிறேன்.

பின்னர் நான் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா கல்லூரியில் ஒரு வருடம் பயின்றேன். இங்கு மதரசாவில் ஒரு நூலகம் இருந்தது. அதைப்போல் நெய்வாசலில் ஒரு நூலகம் இருந்தது. 

இங்கு படிக்கும் போது தான் முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் வரலாறுகள் கவிதைகள் அறிவியல் சார்ந்த நூல்கள் என படிக்கத் தொடங்கினேன். 

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் சாண்டில்யனின் இந்திரகுமாரி மோகினி வனம்,  ரா.கி.ரங்கராஜனின் படகு வீடு போன்ற 500க்கும் மேற்பட்ட பக்கங்கள் நிறைந்த நூல்களை சில நாட்களில் வாசித்து விடுவேன். 

மவ்லவீ முஹம்மது இஸ்மாயில் பாகவி ஹள்ரத் அவர்கள், "பிற மனிதர்கள் எழுதிய புத்தகங்களையும் வாசியுங்கள் அதிலும் பல்வேறு நல்ல கருத்துக்கள் இருக்கின்றது" என்று சொல்லி என்னைப் போன்றவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இங்குதான் பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும், பல மதத்தவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் வாசித்தேன்.

பின்னர் லால்பேட்டை மன்பவுல் அன்வாரில் பயின்றேன். அறிவுச்சுடர், முஹத்திஸ் அல்லாமா அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின் புகாரி வாசிக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. 

வாசிக்கப்படும் ஹதீஸ்களுக்கு பின்னணியில் உள்ள வரலாறுகளை விரிவாக எடுத்துச் சொல்லுவார்கள். அவற்றை மெய் மறந்து கேட்பேன் அனைத்தையும் எனது நோட் புத்தகத்தில் பதிவு செய்து கொள்வேன். அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறை சார்ந்த வரலாற்றில் அதிக கவனம் ஈர்க்கச் செய்தார்கள். 

அவர்களின் சொற்பொழிவில் நபிமார்கள், நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் ஆகிய மூவரின் வரலாற்றைத் தவிர வேறு எதுவும் இடம்பெற்று இருக்காது. 

ஒன்றை விளக்க ஒரு செய்தி மற்றொன்றை விளக்க மற்றொரு செய்தி என சங்கிலித் தொடராக பல செய்திகளை சொல்லிவிட்டு மீண்டும் முதல் செய்திக்கு வந்து, அதை சொல்லி முடிக்கும் ஸ்டைலும் அவர்களின் முகதோரனையும் விவரித்து விட முடியாத அழகு. அருமை. 

இங்கும் கூட மெயின் ரோடு அருகே ஒரு லைப்ரரி இருந்தது. இந்த லைபரரில் இருந்து டிராகுலா , சாண்டில்யனின் மூங்கில் கோட்டை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன். 

நான் சென்னைக்கு பணிபுரிய வந்ததும் நான் சேவையாற்றும் பள்ளிவாசலுக்கு அருகே ஆர். எ. புரம் கிளை நூலகத்தில் பணம் கட்டி சேர்ந்து தினம் பல மணி நேரம் படித்து வந்தேன். 

நாவல்கள் படிப்பதில் எனக்கு மிகுந்த பேராற்வம் இருந்தது. நாவல்களை விலை கொடுத்து வாங்கி படிப்பதற்கான வசதிகள் இல்லாததால் பழைய புத்தகக் கடைகளில் கிலோ கணக்கில் புத்தகங்களை வாங்கி வந்து படித்துவிட்டு மீண்டும் கொண்டுச் சென்று கொடுத்துவிட்டு வேறு புத்தகங்களை வாங்கி வந்து படிப்பேன். 

இப்படி தொடர்ந்து படித்து வருவதை கண்ட எனது நண்பர் ஜுபைர் மிஸ்பாகி அவர்கள் ஒருநாள் "நீ எழுதலாமே மாப்ள!" என்று சொன்னார். 

அதேநேரம் எனது மற்றொரு நண்பர் முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் அவ்வப்பொழுது மாத இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதி வருவார். அதை என்னிடம் காட்டுவார். நானும் அந்த இதழ்களை படித்துவிட்டு அவரைப் போன்று எழுத தொடங்கினேன். 

இன்று 42 புத்தகங்களை எழுதி இருக்கிறேன். இவை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்