நபிமார்கள்
பன்முகத்திறன் பெற்ற தாவூத் நபி {அலை} அவர்கள் வரலாறு :
=================================
திருக்குர்ஆன் கூறும் நபிமார்களில் ஒருவர் நபி தாவூத் (அலை) அவர்கள் ஆவர். இவர்கள் பானூ இஸ்ரவேல சமுதாயத்தில் தோன்றிய லட்சக்கணக்கான நபிமார்களில் ஒருவர்.
மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்ட நபிமார்களில் ஒருவர் .
இவர்கள் குறித்துதங திருக்குர்ஆனில் அல்லாஹ் பத்து அத்தியாயங்களில் 16 இடங்களில் பெயரைச் சொல்லிப் பேசுகின்றான். இந்த வசனங்கள் மூலம் அவர்களின் ஆற்றலையும், திறமையையும் புரிந்து கொள்ள முடியும்.
அவை அல்பகரா, ஆலு இம்ரான், அன் நிஷா, அல் மாயிதா, அல் அன்ஆம், சூரத்துல் நம்லு, அல் இஸ்ரா, அல் அன்பியா, ஸபஃ, ஸாத் ஆகியனவாகும்.
நபி தாவூத் (அலை) அவர்கள் தம் இளம் வயதில் மிகப்பெரும் அறிவாளியாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
அதே நேரம் இவர்களின் தோற்றம் மிக ஆஜானுபவமாக இருக்காது. ஒரு வீரரை போலவும் தோற்றமளிக்க மாட்டார்கள்.
இவர் உயரம் குறைவானவர், நீலக்கண்கள் உடையவர், சுருட்டை முடிக்காரர், சிவப்பானவர், முழங்காலுக்கும் கரண்டை காலுக்கும் இடைப்பட்ட பகுதி மெலிந்து காணப்படும், சுருண்ட நீண்ட தாடி உடையவர், உள்ளம் தூய்மையானவர், அழகிய குரல் உடையவர், அழகிய பண்பாடு உடையவர்.
தாவூத் (அலை) அவர்கள் வாழ்ந்த ஃபலஸ்தீன் பகுதியில் ஜாலூத் (ஜாலியாத்) எனும் கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.
அதனால் இறைவனால் தேர்வு செய்யப்பட்டு இருந்த பானு இஸ்ரவேலர்களுக்கான தாலூத் மன்னர் ஜாலூத்தை வெல்வதற்காக தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
"எனது இராணுவத்தில் சேர்ந்து, யார் ஜாலூத்தை கொலை செய்கின்றாரோ அவருக்கு எனது ஆட்சியை வழங்குவேன்; எனது மகளைத் திருமணம் முடித்தும் வைப்பேன்" என்று கூறினார்.
போர்க்காலங்களில் இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடுவது அன்று முதல் இன்று வரை வழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம்.
எதைக் கொடுத்தாகிலும், எதை இழந்தாகிலும், ஜாலூத்தை வெள்ள வேண்டும் என்பது தாலுத்தின் எண்ணம். அதற்காகத்தான் அப்படிச் சொன்னார்.
ஜாலூத்தின் மரணம் :
ஏற்கனவே தாலூத் மன்னனும் ஜாலூத் மன்னனும் போர் செய்வதற்கென்று ஒரு நாள் குறிக்கப்பட்டு இருந்தது. அந்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
போர்க்களத்தில் இரண்டு படையினரும் அணிவகுத்து நின்றிருந்தனர். அப்பொழுது ஜாலூத், "யார் என்னோடு போர் செய்யத் தயாராக இருக்கிறார்?" என கொக்கறித்தான்.
ஆயுதம் தாக்காத வகையில் தன் உடல் முழுவதும் கவச உடைகளை அணிந்திருந்தான். அவனுடைய உடலில் எந்தப் பகுதியும் வெளியில் தெரியவில்லை கண்களைத் தவிர.
இளைஞராக இருந்த தாவூத் (அலை) அவர்கள், "உன்னோடு நான் போர்ச் செய்கிறேன்" என்று கூறினார்கள். அவன், தாவூத் (அலை) அவர்களின் தோற்றத்தை பார்த்துவிட்டு "போர் கலைகள் எதுவும் தெரியாத இந்த பொடியனோடு நாம் போர் செய்வதா? " என அவமானப்பட்டான்.
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு குறி பார்த்து அம்பு எறியவும், கவன் கட்டை மூலம் கல் எறியவும் நன்குப் பயிற்சிப் பெற்றிருந்தார்கள் .
ஜாலூத்தின் உடலில் கண்ணுக்கு மட்டுமே கவசம் இல்லாமல் இருந்தது. அவன் தன் உடல் முழுவதையும் கவச உடைகளால் மறைத்து வைத்திருந்தான்.
இந்நிலையில் தாவூத் ( அலை )அவர்கள் இந்தப் போருக்கு வரும் பொழுது ஒரு அம்பையும், ஐந்து கற்களையும் மட்டுமே கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒரு கல்லை எடுத்து குறிப் பார்த்து அவன் கண்ணில் எறிந்தார்கள். அவன் கண் குருடாகி, நிலைத் தடுமாறி கீழே விழுந்தான். அருகில் இருந்தவர்கள் அவனை சராமாறியாக வெட்டிக் கொன்றார்கள்.
மிகப்பெரும் கொடுங்கோலன், அன்றைய உலகத்தாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன் சாதாரணமான ஒரு இளைஞரால் ஒரு கல்லைக் கொண்டு தாக்கப்பட்டு, அதன் காரணமாக நிலைத்தடுமாறிய நேரத்தில் சின்னாபின்னம் ஆக்கப்பட்ட செய்தியை அறிந்த அவனது படையினர் நாலாபுரமும் தப்பித்து ஓடினர்.
மக்களை வஞ்சித்துக் கொண்டும், வதைத்து கொண்டும் இருந்த ஜாலூத்தை தாவூத் (அலை) அவர்கள் கொலை செய்ததால் பனூ இஸ்ரவேல சமுதாய மக்கள் அனைவரும் அவர் மீது பேரன்பு கொண்டார்கள்.
இப்படிப்பட்ட நிகழ்வின் காரணமாக தாவூத் ( அலை ) அவர்களுக்கு மக்களின் பேராதரவும், பேரன்பும் பெருக வேண்டும் என்பது இறைவனுடையத் திட்டம்.
ஒரு மனிதரின் மீது அன்பை ஏற்படுத்துவது அல்லாஹ்வே ஆவான். அது குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً உங்களுக்கிடையே அன்பையும் பரிவையும் அவனே உண்டாக்குகிறான். 30: 21
عَسَى اللَّهُ أَن يَجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِينَ عَادَيْتُم مِّنْهُم مَّوَدَّةً ۚ وَاللَّهُ قَدِيرٌ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ .
நீங்கள் யாரை விரோதித்துக் கொண்டீர்களோ அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே மீண்டும் அன்பை ஏற்படுத்துபவனும் அல்லாஹ்வே ஆவான். 60: 7
இந்த வசனங்களின் அடிப்படையில் நபி தாவூத் (அலை) அவர்கள் மீது மக்களுக்கு அல்லாஹ் அன்பை ஏற்படுத்தினான்.
தாவூத் (அலை) அவர்கள் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் அல்ல! ஓர் சமூகத் தலைவரின் மகனும் அல்ல! கூட்டத்தில் ஒருவர் தான்! சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து தலைவராக்கினான்.
மிகப் பெரும் கொடுங்கோலனை எதிர்ப்பதற்கான வழியை ஒவ்வொருவரும் ஒருவிதமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, நபி தாவூத் (அலை) அவர்கள் எதார்த்தமாக யோசித்து எடுத்த முடிவுதான் கவன் மூலம் கண்ணில் அடித்து வீழ்த்துவது. அதை வெற்றிகரமாகவும் நிறைவேற்றியதால் மக்களின் பேராதரவும் பேரன்பும் அவரின் மீது குவிந்தது.
தாவூத் நபி மன்னரானார் :
நபிமார்களின் வழக்கப்படி நபி தாவூத் (அலை) அவர்களும் ஆடு மேய்த்துள்ளார்கள். அவர்களோடு பிறந்தவர்கள் பத்து சகோதரர்கள் ஆவர். பத்தாவது மகன்தான் நபி தாவூத் (அலை) அவர்கள்.
தாவூத் (அலை) அவர்களின் தந்தையும் மற்றும் மூன்று மகன்களும் தாலூத் மன்னருடைய அரண்மனையில் பணிச் செய்தார்கள். அந்த வகையில் அவர்களோடு அடிக்கடி அரண்மனைகுச் சென்று வரும் வழக்கமும் அரண்மனையின் அன்றாடப் பணிகளைப் பார்வையிடும் சூழலும் அவர்களுக்கு ஏற்பட்டது.
فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ ۗ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ الْأَرْضُ وَلَٰكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ .
அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு அவர்கள் எதிரிகளைத் தோற்கடித்தனர்; தாவூத் ஜாலூத்தைக் கொன்றார்; (தாவூதுக்கு) அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் வழங்கினான்; மேலும் தான் விரும்பியவற்றை அவன் அவருக்குக் கற்றுத் தந்தான்;
மனிதர்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் அடக்கி வைக்க வில்லையானால் பூமி அழிந்து விடும்; என்றாலும், அல்லாஹ் அகிலத்தார் மீது தயாளம் உடையவன். 2: 251
நபி தாவூத் (அலை) அவர்கள் ஜாலூத்தை கொன்றதால் அல்லாஹ் மூன்று விஷயங்களை கொடுத்ததாக இந்த வசனத்தில் கூறுகின்றான் .
1. ஆட்சி அதிகாரம்
2. நபித்துவம்
3. அல்லாஹ் நாடியவற்றை கற்றுக் கொடுத்தான். (அல்லாஹ் எதையெல்லாம் கற்றுக் கொடுத்தான் என்பதை பின்னர் விரிவாகக் காண்போம்.)
மேலும் இந்த வசனத்தின் தொடர்ச்சியில் அல்லாஹ் ஓர் அரசியல் சூழ்நிலையை கூறுகிறான்.
மனிதர்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் அடக்கி வைக்கவில்லை என்றால் பூமி அழிந்துவிடும் - அதாவது வரம்பு மீறிய கொடுங்கோல் செய்கிற ஒருவனை அடக்குவதற்கு அவர்களிலிருந்து மிகச் சாதாரணமான ஒருவரை உருவாக்கி அடக்குவேன்.
எனவே அரசர்களாக இருப்பவர்கள் நீதியோடும் நேர்மையோடும் நடந்து கொள்ள வேண்டும். தவறினால் முன்னர் வாழ்ந்தத் தீய அரசர்களுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் நேரும் என்பதை எதிர்கால மக்களுக்கு சுட்டி காட்டவே அல்லாஹ் தாவூத், ஜாலூத், தாலூத் போன்றவர்களின் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறான்.
ஜாலூத்தின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதி மக்கள் சகஜமான மனநிலைக்கு வந்து அவரவர் வாழ்வை எதார்த்தமாக வாழத் தொடங்கினார்கள்.
"நாங்கள் அச்சமற்ற நிலையில் வாழக் காரணமாக இருந்த நபி தாவூத் (அலை) அவர்களுக்கு உமது மகளைத் திருமணம் செய்து வையுங்கள்" என பொதுமக்கள் தாலூத்திடம் கேட்டார்கள்.
மன்னர் தாலூத் அவர்கள் போர் நடைபெறுவதற்கு முன்பு, "ஜாலூத்தை கொல்பவருக்கு எனது மகளைத் திருமணம் செய்துத் தருகிறேன்" என்று சொன்னச் சொல் தேர்தல் வாக்குறுதி போன்று அர்த்தமற்ற சொல்லாகவே அவர் கருதினார்.
ஆனால் பொதுமக்கள் அதை நிஜமாக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் மன்னர் தாலூத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதில் இருந்து தொடர்ந்து பின்வாங்கி வந்ததால், மக்களிடையே புரட்சியும் போராட்டங்களும் வெடித்தது.
அதனால் மன்னருக்கு வேறு வழி இல்லாமல் தனது மகளை நபி தாவூத் (அலை) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆட்சியையும் நபி தாவூத் (அலை) அவர்களிடம் ஒப்படைத்தார்.
அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் :
====================================
يَا دَاوُودُ إِنَّا جَعَلْنَاكَ خَلِيفَةً فِي الْأَرْضِ
தாவூதே! பூமியில் உம்மை எமது பிரதிநிதியாக நாம் ஆக்கினோம் .38: 26 என அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அநேக அருட்கொடைகளை வழங்கி இருப்பதாக சொல்லி இருக்கின்றான். அவை என்னென்ன என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
وَشَدَدْنَا مُلْكَهُ وَآتَيْنَاهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ
1. அவருடைய ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம். 38:20
நபி தாவூத் (அலை) அவர்கள் வெற்றிகளை தொடர்ந்து குவித்துக் கொண்டே இருந்தார்கள். பல நாடுகளை வென்று அங்கே வாழும் மனித உள்ளங்களையும் ஈர்த்தார்கள். நபி தாவூத் (அலை) அவர்களின் பெயரைக் கேட்டாலே அரசர்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஏனென்றால் அவர் கொன்றது ஜாலூத்தை என்பதால்.
யூதர்கள் நபி தாவூத் (அலை) அவர்களை King David - தாவூது அரசர் என்று தான் கூறுகிறார்கள். நபி என்று அவர்கள் கூறுவதும் இல்லை; ஏற்றுக்கொள்வதும் இல்லை.
நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் இடையே 13 தலைமுறைகள் இருக்கின்றது.
இப்ராகிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூப் (அலை) ஆகிய அனைவரும் இஸ்ராயில் என அழைக்கப்படுவர்.
யாகூப் (அலை) அவர்களின் 12 பிள்ளைகள் மூலம் பல்கிப் பெருகியவர்கள் மட்டுமே 'பனூ இஸ்ராயில்' என அழைக்கப்படுகிறார்கள். இந்த 12 பேர் மூலம் உருவான யூதர்கள் அனைவரும் தனித் தனி பிரிவினராகவே இருக்கின்றனர்.
யூசுப் (அலை) அவர்களின் சந்ததியில் வருவோர் நபியாக வரவேண்டும்; யஹூதா என்பவரின் வழித்தோன்றலில் வருவோர் அரசர்களாக வரவேண்டும் என யூதர்களாக சட்டம் வகுத்திருந்தார்கள்.
இவர்களாக வகுத்துக் கொண்ட சட்டத்தை மாற்ற வேண்டும் என முடிவு செய்த இறைவன் யஹூதாவின் வழித்தோன்றலில் நபி தாவூத் (அலை) அவர்களை நபியாகவும் அரசராகவும் அனுப்பி வைத்தான்.
நெருப்பு சுடும் என மனிதன் நினைத்து இருக்கின்றான். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அது சுடவில்லை. தண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என மனிதன் நினைத்து வைத்திருக்கின்றான். நபி மூஸா (அலை) அவர்களுக்கு 12 பிளவுகளாக பிளந்து, கட்டிடம் போல் கட்டப்பட்டு, கட்டுப்படுத்தி கொடுத்தான்.
மனிதன் ஒன்றை நினைப்பான். அதற்கு நேர் மாற்றமாக இறைவன் செய்து முடிப்பான்.
அந்த வகையில்தான் நபி தாவூத் (அலை) அவர்கள் அரசராக மட்டுமே இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் அல்லாஹ் அரசராகவும் நபியாகவும் இருப்பார் என முடிவு செய்து அனுப்பி வைத்தான்.
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தை வேதமாகவும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அதை அரசரின் சட்ட நூலாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அதனால்தான் அல்லாஹ், "நபி தாவூதை நாமே அரசராக்கினோம்; நாமே நபியாகவும் ஆக்கினோம்; நாமே அவரை கலிஃபா - எனது பிரதிநிதியாகவும் ஆக்கினோம்" என சொல்லிக் காட்டுகிறான்.
நபி தாவூத் (அலை) அவர்களின் அடக்கத் தலத்த்தைப் பார்க்க நம்மை அனுமதிக்க மாட்டார்கள். அப்படியே நாம் உள்ளே சென்றாலும் நமது தொப்பியை அணிந்துச் செல்ல இயலாது. அவர்கள் வழங்கும் அப்பம் போன்ற ஒரு தொப்பியை அணிந்துச் சென்றால் மட்டுமே சாத்தியமாகும். அதிலும் நாம் முஸ்லிம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் நம்மை அனுமதிக்கவே மாட்டார்கள்.
தாவூது (அலை) அவர்கள் மீது அவர்களுக்கு அளவு கடந்த மரியாதையும் அன்பும் இருப்பதற்குக் காரணம் கொடுங்கோல் மன்னனிடம் இருந்து தம் சமுதாயத்தினரை காப்பாற்றியதுதான்.
நபி தாவூத் (அலை) அவர்கள் ஃபலஸ்தீனிலிருந்து ஈராக் வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் வென்ற பூமியில் எதையும் இழக்கவில்லை. இவ்வாறு நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வலுவான, நிலையான ஆட்சியை வழங்கினான்.
2. நபித்துவம் :
وَآتَيْنَاهُ الْحِكْمَةَ நபித்துவத்தைக் கொடுத்தோம்.
யூதர்கள் நபி தாவூத் ( அலை ) அவர்களை "நபி இல்லை" என்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் அவரை 'நபி' என்று சொல்லுகிறான்.
3.தாவூத் நபியைப் போன்று
தீர்ப்புச் சொன்ன அலீ ரலி :
=========================
وَفَصلَ الْخِطَابِ
வழக்குகளில் தீர்ப்பு கூறும் வல்லமையை அளித்தோம். 38;20
இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமானால் அலீ (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம்.
ஒரு பள்ளிவாசலில் ஒர் இளைஞர் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அலீ (ரலி) அவர்கள் அவரிடம் சென்று, "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "எனது தந்தை பத்து நபர்களோடு வியாபாரம் செய்யச் சென்றிருந்தார்; ஒன்பது நபர்கள் திரும்பி வந்து விட்டார்கள்; எனது தந்தை திரும்பி வரவில்லை ; அவர் இறந்துவிட்டதாக வந்தவர்கள் சொன்னார்கள்; அவர் இறந்தாரா? உயிரோடு இருக்கின்றாரா? அல்லது எப்படி இறந்தார்? என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது" எனக் கூறினார்.
அலி (ரலி) அவர்கள்
والله لأَحْكُمَنَّ فِيهِمْ بِحُكْمٍ مَا حَكَمَ بِه دَاوُدُ النَّبِيُّ عليه السلام
"இறைவன் மீது ஆணையாக! நபி தாவூத் (அலை) அவர்கள் தீர்ப்புச் சொன்னது போல் இவரின் விஷயத்தில் நான் தீர்ப்புச் சொல்லுவேன்" என்று கூறினார்கள்.
அந்த ஒன்பது நபரையும் அழைத்து பள்ளிவாசலின் பல்வேறுப் பகுதிகளில் தனித்தனியாக அமர வைத்துக் கொண்டார்கள்.
தன்னோடு ஐந்து நபர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று விசாரித்தார்கள்.
அப்பொழுது தன்னோடு அழைத்துச் சென்றவர்களிடம், "நான் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லும் போது நீங்களும் சேர்ந்து சப்தமாக தக்பீர் சொல்ல வேண்டும்" என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள் .
முதல் நபரிடம் சென்று, "உனது ஊர் எது? உனது பெயர் என்ன? உனது தந்தையின் பெயர் என்ன? இறந்தவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவர் எங்கு இறந்தார்? எதன் காரணமாக இறந்தார்? அவரை எங்குப் புதைத்தீர்கள்? யார் ஜனாஸா தொழ வைத்தது? யார் அவரைக் குளிப்பாட்டியது? யார் யார் குழிக்குள் இறங்கியது? என்பதுப் போன்று கேள்வி கேட்டார்கள்.
அவர், உண்மையோ பொய்யோ ஏதோ ஒரு பதிலைச் சொன்னார்.
ஒரு கட்டத்தில் அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறினார்கள். உடன் இருந்தவர்களும் சேர்ந்தார் போல் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள்.
பின்னர் இரண்டாமவரிடம் சென்று இதைப் போன்று கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள். அவரும் உண்மையோ பொய்யோ ஏதோ ஒரு பதிலைச் சொல்லிக்கொண்டே வந்தார். அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறினார்கள். உடன் வந்திருந்தவர்களும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள் .
இந்தக் காட்சியைப் பார்த்த மற்ற ஏழு நபர்களும் அரண்டுப் போனார்கள். "இருவரும் உண்மையை சொல்லிவிட்டார்கள் போல் தெரிகிறது" என நினைத்துக் கொண்டார்கள் .
மூன்றாமவரிடம் சென்றதும் அவர், "நான் அவரை கொலை செய்யவில்லை; நான் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்; அவர்தான் காலைப் பிடித்தார்; இவர் கையைப் பிடித்தார்; இன்னவர் கழுத்தைப் பிடித்தார்" என்று உண்மையை சொல்லிவிட்டார். பிறகு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டது.
நூல்: பிஹாருல் அன்வார், அல் காஃபீ
நபி தாவூத் (அலை) அவர்கள் 'கொண்டக்க மண்டக்க' என வித்தியாசமான முறையில் வித்தியாசமான கேள்விகளைக் கேட்டு உரியவரிடம் இருந்து சரியான பதிலை வரச் செய்து விடுவார்கள். அவ்வாறுதான் அலீ (ரலி) அவர்களும் வரச் செய்துள்ளார்கள்.
4. வேதம் அருளப்பட்டவர்
=======================
ۖ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا
தாவூத் (அலை) அவர்களுக்கு நாம் ஸபூர் வேதத்தை கொடுத்தோம். 17:55
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வேதத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் இடம்பெற்றுள்ளது எனக் கேட்டால் அதற்கு அல்லாஹ் கூறுகிறான்.
وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِن بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ
நிச்சயமாக திக்ரு செய்யும் என் அடியார்கள் இந்த பூமிக்கு உரிமையாளர்கள் ஆவர் என்று தவ்ராத்துக்குப் பின்னர் ஸபூர் வேதத்திலும் நாம் குறிப்பிட்டு இருக்கின்றோம். 21: 105
அல்லாஹ்வை திக்ரு செய்யும் வழிமுறைகளும், அந்த திக்ருகளை என்ன வகையான ராகங்களில் செய்ய வேண்டும் என்கிற வழிமுறைகளும், பல்வேறு வகையான திக்ருடைய வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒரு சில அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் தத்துவங்களும் அதில் இடம்பெற்று இருந்தது.
அதில் ஒரு தத்துவம் தான்
أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُون
நல்லவர்கள் தான் இந்த பூமிக்கு ஆட்சியாளர்களாக வருவார்கள் என்பது.
நபி தாவூத் (அலை) அவர்கள் ஜபூர் வேதத்தை அதிகமாக ஓதும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
எந்த அளவிற்கு என்றால் வெளியூர் பயணங்களுக்குப் புறப்படும் போது தமது பணியாளர்கள் குதிரைகளையும் சாரட் வண்டிகளையும் தயார் செய்து முடிப்பதற்குள் ஒருமுறை முழு தவ்ராத்தையும் ஓதி முடித்து விடுவார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத் (அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர்) ஆகிய இறைவேதங்களை ஓதுவது
லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார்
செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும்.
வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி முடித்து விடுவார்.
தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார். நூல்: புகாரி 4713
5. இரும்பை இளக்கும் ஆற்றல்:
==================== ===========
وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ * أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ} [سبأ 10 - 11]
தாவூத் நபி அவர்களுக்கு நாம் இரும்பை இளக்கிக் கொடுத்தோம் ; ஆளுயர போர்க் கவசங்களை உருவாக்குவீராக! அதன் வளையங்களை ஒரே அமைப்பில் செய்வீராக! 34: 10, 11.
அதாவது நபி தாவூத் ( அலை ) அவர்கள் நெருப்பின் தேவையின்றி தம் கரங்களாலேயே இரும்பை வளைத்தும் கூர்மையாக்கியும் தான் விரும்பும் ஆயுதங்களை செய்யும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள்.
وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَّكُمْ لِتُحْصِنَكُم مِّن بَأْسِكُمْ ۖ فَهَلْ أَنتُمْ شَاكِرُونَ﴾[ سورة الأنبياء: 80]
நீங்கள் யுத்தம் செய்யும்போது உங்களைக் காப்பதற்கான கவச உடைகளை செய்யும் தொழிலை (தாவூதுக்கு) நாம் கற்றுத் தந்தோம்; அதற்கு நீங்கள் நன்றி செலுத்துவோராக இருப்பீர்களா? 21: 80
ஜாலூத் மன்னன் அதிகமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு அனைவரையும் மிரட்டிப் பணிய வைத்தான். மற்றவர்களிடம் ஆயுதங்கள் இல்லாததால் அச்சப்பட்டு பின் வாங்கினார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்கள் அரசராக பதவி ஏற்றப் பிறகு அதிகமான ஆயுதங்களைச் செய்து ஓர் சுதேசியாக - சொந்த நாட்டில் தேவையான அளவிற்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து தன்னிறைவுக் கண்டார்கள்.
அதனால் பக்கத்து நாட்டினர் அஞ்சினார்கள்; தாமாகவே முன்வந்து கப்பம் கட்டினார்கள்; நாடு விரிவடைந்து கொண்டே சென்றது.
6. இதயத்தைப் பிசையும் ராகம் :
===============================
நபி தாவூத் (அலை) அவர்கள் ஓதுகிற ஸபூர் வேதத்தின் அமைப்பு இசை மற்றும் ராகத்தோடு கூடிய வகையில் இருக்கும்.
அவர்கள் ஓதத் தொடங்கினால் பறவைகளும் மலைகளும் கூட அவரோடு இணைந்து ஹம்மிங் - முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.
சில சமயங்களில் மலைகளும் பறவைகளும் சப்தமாக கோரஸ் - சேர்ந்து ஓதிக் கொண்டிருக்கும். அது குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ وَٱلطَّيْرَ مَحْشُورَةً ۖ كُلٌّ لَّهُۥٓ أَوَّابٌ
நிச்சயமாக அவருக்கு மலைகளை நாம் கட்டுப்படச் செய்தோம்; அவை மாலையிலும் காலையில் அவருடன் தஸ்பீஹ் செய்யும்.
பறவைகளும் அணி திரண்டவைகளாக (தஸ்பீஹ் செய்யும்; ) அவருடைய (தஸ்பீஹைச் செவியேற்று) அவை அனைத்தும் அல்லாஹ்விடம் மீளக்கூடியவையாக இருந்தன. 38: 18,19.
7. பறவைகளோடு பேசும் ஆற்றல் :
===============================
وَوَرِثَ سُلَيْمَٰنُ دَاوُۥدَ ۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ ۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ
சுலைமான் தாவூதுக்கு வாரிசாக வந்தார்; அவர், "மக்களே! பறவையின் மொழியை நாம் கற்றுத் தரப்பட்டு இருக்கின்றோம்; எல்லா வகையான வளங்களும் நமக்கு தரப்பட்டிருக்கின்றன; நிச்சயமாக இது தெளிவான அருளாகும்" என்று கூறினார். 27 : 16
மேலும் தாவூத் (அலை) அவர்களுக்கு பறவைகளோடு பேசவும் தெரியும். அதைத்தான் இந்த வசனத்தில் அல்லாஹ்
عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ
"நாங்கள் இருவரும் பறவையின் மொழியை (இறைவனால்) கற்றுத் தரப்பட்டு இருக்கிறோம்" என்று கூறுகின்றான்.
"நபி தாவூத் (அலை) அவர்களுக்கு இருந்த இந்த ஆற்றலுக்குத் தான் நபி சுலைமான் (அலை) அவர்களும் வாரிசாக ஆனார்கள்" என்றும் இந்த வசனம் குறிப்பிடுகின்றது.
எனவே சுலைமான் (அலை) அவர்களுக்குத் தான் பறவைகளின் மொழி தெரியும் என்று நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இல்லை..... சுலைமான் (அலை) அவர்களுக்கு முன்னரே நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் பறவைகளின் மொழி தெரியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி தாவூத் (அலை) அவர்களோடு பறவைகள் பேசுவதையும் பாடுவதையும், மலைகள் பேசுவதையும் பாடுவதையும், "நான் வழங்கிய ஆற்றல்" என்று அல்லாஹ் கூறுகின்றான்.
8.தாவூத் (அலை) அவர்களின் தனித்துவமான இபாதத் :
===============================
وَاذْكُرْ عَبْدَنَا دَاوُودَ ذَا الْأَيْدِ ۖ إِنَّهُ أَوَّابٌ﴾
நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக! அவர் சக்தி உடையவர்; அப்படி இருந்தும் நிச்சயமாக அவர் (ஒவ்வொரு காரியத்திலும்) அல்லாஹ்விடம் (அடிபணிந்து) மீள்பவராகவே இருந்தார். 38:17
தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாட்டினுடைய அரசராக இருந்தார்; அவருக்கு எவ்வளவு பணிச்சுமைகள் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் .
மேலும் அவர் அந்த நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். தினம் தினம் அவருக்கு எவ்வளவு வழக்குகள் வரும் அதில் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதற்கு தன் நேரத்தை எப்படி செலவிட்டிருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்.
மேலும் அவர் ஒரு நபியாகவும் ரஸூலாகவும் இருந்தார். மக்களுக்கு நல்ல அறிவுரைகளை சொல்ல வேண்டிய கடமையும், கெட்டவற்றை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது. அதனால் நபித்துவப் பணிகளில் தினம் தினம் எவ்வளவு நேரத்தை ஒதுக்கி செயல்பட்டு இருப்பார் என்பதையும் நீங்கள் ஆராய்ந்துப் பாருங்கள்.
மேலும் இவர்கள் அரசராக இருந்தாலும் அரசாங்கத்திலிருந்து சம்பளம் எதையும் பெறவில்லை. அதனால் தம் செலவினங்களுக்காக போர் கவசங்கள், போர் ஆயுதங்கள், இரும்பு சார்ந்த தளவாடங்கள் அனைத்தையும் செய்து, அவற்றை விற்பனைச் செய்து, அதன் மூலம் வரும் வருவாயில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் செலவளித்துக் கொண்டார்கள்.
أبي هريرة رضى الله عنه عن النبي ﷺ قال: كان داود عليه السلام لا يأكل إلا من عمل يده رواه البخاري.
"அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி தாவூத் (அலை) அவர்கள் தம் கைகளால் உழைத்து சாப்பிடும் வளக்கம் உடையவர்களாக இருந்தார்கள்" என்று பெருமையாகக் கூறுகிறார்கள். நூல் : புகாரி
இப்படி பல்வேறு காரியங்களில் தினம் தினம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் அவை அனைத்தையும் மிகச் சரியாகவே செய்து கொண்டும் இருந்தார்கள்.
அதே நேரம் அல்லாஹ்வை வணங்குவதற்கு என்றும் மிகப்பெரிய அளவிலான நேரத்தை ஒதுக்கி அல்லாஹுவை வணங்கி வந்தார்கள்.
நாம் ஓர் அரசு அதிகாரியாக, கணவராக, அதேநேரம் சுயதொழில் செய்கிறவராக, விவசாயமோ கால்நடைகளோ பராமரிப்பவராக என பல்வேறு காரியங்களில் அன்றாட வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் அல்லாஹ்வை முறையாக முழுமையாக வணங்கி வழிபடுவதற்கு நேரத்தை ஒதுக்கி இருக்கின்றோமா என்று நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்தால் அல்லாஹ்வை வணங்குவதற்கும் பள்ளிவாசலுக்கு செல்வதற்கும் நேரம் இல்லை என்று சாதாரணமாக சொல்லி வருகின்றோம் .
நாம் என்ன தாவூத் (அலை) அவர்களை விட பிசியான - பணிச்சுமை உள்ள மனிதர்களா?
"தாவூத் (அலை) அவர்கள் இவ்வளவு பணிச் சுமைகளுக்கு இடையே என்னை வணங்குவதில் சிறு குறை வைக்கவில்லை" என்று அல்லாஹ் பெருமையாக கூறுகிறான். எனவே நாமும் கூட அல்லாஹ்வை வணங்குவதில் ஓர் நிறைவைக் காண வேண்டும்.
"தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இரும்பை இளக்கிக் கொடுத்தது போல் எனக்கும் கொடுத்தால் நானும் அவனை வணங்குவேன்" என்று நீங்கள் சிந்திப்பது எனக்குத் தெரிகிறது.
"நீங்கள் அல்லாஹ்வை முழுமையாக, முறையாக, அதிகமாக வணங்கி வந்தால் உங்களுக்கும் இது போன்ற ஆற்றல்களை அல்லாஹ் வழங்குவான்" என்பதில் சந்தேகம் இல்லை.
وَعَنْ عبدِاللَّهِ بنِ عَمْرو بنِ العَاصِ، رَضيَ اللَّه عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: أَحَبُّ الصَّلاةِ إِلَى اللَّهِ صَلاةُ دَاوُدَ، وَأَحبُّ الصيامِ إِلَى اللَّهِ صِيامُ دَاوُدَ، كانَ يَنَامُ نِصْفَ اللَّيْل وَيَقُومُ ثُلُثَهُ ويَنَامُ سُدُسَهُ وَيصومُ يَومًا وَيُفطِرُ يَومًا متفقٌ عليه.
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை நபி தாவூத் (அலை) அவர்களின் தொழுகை ஆகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்.
அவர்கள் பாதி இரவு வரை உறங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் எழுந்து நின்று தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள்.
மேலும் ஒரு நாள் நோன்பு நேற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்.
நூல்: புகாரி , முஸ்லிம் .
ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பையும் இரவில் தொழும் முறையையும் தம் வாழ்நாள் முழுவதும் நடைமுறைப்படுத்தினார்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதை விட வருடத்தில் பாதி நாளான 183 நாள் தொடர்ந்து நோன்பு தோற்றுவிட்டால் எஞ்சியிருக்கும் பாதி நாட்கள் நன்றாக இருக்குமே என்று சிலர் கூறுகிறார்கள்.
இப்படி செய்தால் ஒருவகையான மெயின் செட் - மன நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். நமக்கெல்லாம் கூட மதிய நேரத்தில் வடை கஞ்சி நினைவு வராது. நோன்பு துறக்கும் நேரத்தில் தான் வடை நினைவு வரும்.
நபி தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதால் நேற்று சாப்பிட்ட நேரத்தில் இன்று நோன்பாளியாக இருப்பார்கள். அதனால் நஃப்ஸ் - மனதை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள இயலும். அதே நேரம் உடலையும் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள இயலும்.
இவ்வாறு நோற்கப்படும் நோன்பை தான் நபி (ஸல்) அவர்கள் சிறந்த நோன்பு என்று சொல்லுகிறார்கள். அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) போன்றவர்களுக்கு நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
தாவூத் நபி குறித்து குர்ஆன் கூறும் சிறப்புச் செய்தி :
====================================
நபி தாவூத் (அலை) அவர்கள் அரசு சார்ந்த வேலைகளைப் பார்ப்பதற்கு என ஒரு நாளையும், தீர்ப்பு சொல்வதற்காக ஒரு நாளையும், இறைவனை வணங்கி வழிபடுவதற்காக ஒரு நாளையும் ஒதுக்கிக் கொண்டு தன் வாழ்வை அமைத்திருந்தார்கள்.
தன் இறைவனை வணங்குவதற்காக ஒதுக்கியிருந்த அந்த நாளில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் தமது மிஹ்ராபில் அல்லாஹ்வை மனமுருக திக்ரு - தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.
மிஹ்ராப் - என்றால் சண்டை செய்யும் இடம் என்று பொருள். அதாவது ஷைத்தானுடன் மனதளவில் சண்டை செய்யும் இடம்.
இவ்வாறு மனம் உருக இறைவனை தியானம் செய்து கொண்டிருந்த போது யாரோ சிலர் சுவர் ஏறி குதித்த சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் திடுக்க முற்றார்கள்.
அதே நேரத்தில் தமது படையினருக்கும் எதிரி படையினருக்கும் இடையே ஃபலஸ்தீன் அருகில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் ஏதேனும் எதிரிகள் வந்து விட்டார்களோ என்கிற அச்சம் உண்டானது.
அல்லது இறைவனை வணங்குவதற்காக ஒதுக்கி இருந்த நேரத்தை யாரோ வந்து அபகரிக்கப் பார்க்கிறார்களே என்கிற வெறுப்பில் தன் உடலை சிலிர்த்து கொண்டார்கள்.
இந்நிலையில் வந்திருந்த இருவரில் ஒருவர், "நீங்கள் பயப்பட வேண்டாம்; நாங்கள் இருவரும் ஒரு வழக்கு விஷயமாகப் பேச வந்திருக்கிறோம்; நீங்கள் எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்குங்கள்" என்று கேட்டுக்கொண்டனர்.
வந்திருந்தவரில் ஒருவர், "நானும் இவரும் உடன் பிறந்த சகோதரர்கள்; என் சகோதரருக்கு 99 பெட்டை ஆடுகள் இருக்கின்றது. அவர் அதை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். என்னிடம் ஒரே ஒரு பெட்டை ஆடு தான் இருக்கின்றது. அதை வைத்து நான் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றேன்.
99 ஆடுகளை வைத்திருக்கும் எனது சகோதரர், 'நீ வைத்திருக்கும் ஒரு ஆட்டையும் என்னிடம் கொடுத்துவிடு; அதன் மூலம் பல்வேறு வகைகளில் பிஸ்னஸ் - வியாபாரம் செய்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவேன்; அதில் உனக்கும் ஒரு பங்கைத் தருவேன்' என்றெல்லாம் என்னிடம் பேசி, என்னை மயக்கி என்னிடம் இருந்த ஒரு ஆட்டையும் அவர் பெற்றுக் கொள்ளப்பார்க்கிறார்; எனவே இது விஷயத்தில் நல்ல தீர்ப்பு நீங்கள் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
நபி தாவூத் (அலை) அவர்கள் தம் இறைவனை மனம் உருகத் திக்ரு செய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்கள் இருவரும் இடையில் நுழைந்து இறைவனை வணங்குவதை கெடுத்து விட்டதால், எதையேனும் சொல்லி அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு தீர்ப்பைக் கூறினார்கள்.
அதாவது பிரதிவாதியின் கருத்தைக் கேட்காமலேயே " 99 ஆடுகளை வைத்திருப்பவர் உன்னிடம் உள்ள ஒரு ஆட்டை கேட்பது தவறுதான்" என்று தீர்ப்பளித்து இருவரையும் வெளியேற்றி விட்டார்கள்.
அவர்கள் இருவரும் வெளியே சென்ற பிறகு " அல்லாஹ் இருவரை அனுப்பி நம்மை சோதித்து இருக்கின்றான்; அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே தீர்ப்பளித்து தவறு செய்து விட்டோம்" என்பதை உணர்ந்தார்கள்.
மேலும் சுவர் ஏறி குதித்து வந்திருக்கும் இருவரும், "தம்மை கொலை செய்யத்தான் வந்திருக்கிறார்கள்" என நினைத்தும் தவறு செய்து விட்டோம்" என்பதையும் உணர்ந்தார்கள்.
"தீர்ப்புச் சொல்லும் போது உணர்ச்சிவசப்படக்கூடாது; அவசரப்படக்கூடாது" என்று இறைவன் சொல்லி இருந்த கட்டளையை மீறி விட்டோம் என்பதையும் உணர்ந்தார்.
இவ்வாறான தவறுகளை உணர்ந்த தாவூத் (அலை) அவர்கள், அவ்விருவர் குறித்து தாம் தவறாக கற்பனை செய்ததற்காகவும், பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலே தீர்ப்பு சொன்னதற்காகவும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்டார்கள்.
அல்லாஹ்வும் நபி தாவூத் (அலை) அவர்களை மன்னித்து விட்டதாக உடனே சொன்னான். இறை மன்னிப்பு கிடைத்து விட்டதற்காக உடனே ஸஜிதாவில் விழுந்து மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்கள் தான் செய்த தவறை உடனுக்குடன் விளங்கி மன்னிப்பு கேட்டதால் அல்லாஹ் அவரை மன்னித்தான்.
நபி தாவூத் (அலை) அவர்கள், 'பிரதிவாதியின் வாதத்தை கேட்காமல் தீர்ப்பு சொன்னதையும், சுவர் ஏறி குதித்து வந்தவர்கள் குறித்து தவறாக நினைத்ததையும் அவசர அவசரமாக தீர்ப்பு சொன்னதையும்' வைத்து மனிதர்களே நீங்கள் நபி தாவூத் (அலை) அவர்களை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நபி தாவூத் (அலை) அவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்; எனது ஆதரவு எப்பொழுதும் அவருக்கு உண்டு " எனச் சொல்லி நபி தாவூத் (அலை) அவர்களை அல்லாஹ் கண்ணியப் படுத்துகிறான்.
நபி தாவூத் (அலை) அவர்கள் பல்வேறு பணிகளுக்கு இடையே முறையாக, சரியாக அல்லாஹ்வை வணங்கி வந்தது போல் நாமும் அல்லாஹ்வை வணங்கி வழிபட வேண்டும்.
நபி தாவூத் (அலை) அவர்கள் உடனே சுய நினைவிற்கு வந்து "தான் செய்த தவறையும் உடனே அறிந்து அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்டது போல்" நாமும் எல்லா நேரங்களிலும் சுய உணர்வோடும், விழிப்போடும் இருந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் இந்த வரலாறு நமக்கு சொல்லிக் காட்டுகின்றது.
இந்த வரலாற்றைக் குறித்து அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.
وَهَلْ أَتَاكَ نَبَأُ الْخَصْمِ إِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ (21) إِذْ دَخَلُوا عَلَىٰ دَاوُودَ فَفَزِعَ مِنْهُمْ ۖ قَالُوا لَا تَخَفْ ۖ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍ فَاحْكُم بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَا إِلَىٰ سَوَاءِ الصِّرَاطِ (22) إِنَّ هَٰذَا أَخِي لَهُ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً وَلِيَ نَعْجَةٌ وَاحِدَةٌ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِي فِي الْخِطَابِ (23) قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِ ۖ وَإِنَّ كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ ۩ (24) فَغَفَرْنَا لَهُ ذَٰلِكَ ۖ وَإِنَّ لَهُ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَآبٍ
நபியே! அந்த வழக்குகளின் செய்தி உம்மிடம் வந்ததா? அப்போது அவர்கள் அவர் தொழுமிடத்திற்கு வந்துவிட்டார்கள்.
22. தாவூது இருக்குமிடத்திற்கு அவர்கள் வந்தபோது, (முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் வந்த) அவர்களைப் பார்த்து அவர் திடுக்கமடைந்தார்; "நீர் பயப்பட வேண்டாம்! நாங்கள் இரு வழக்காளிகள்தாம்; எங்களில் ஒருவர் மற்றவருக்கு அநீதமிழைத்துவிட்டார்; ஆதலால், எங்களிடையே நீர் நல்ல தீர்ப்பு வழங்குவீராக! அநீதமிழைத்துவிட வேண்டாம்; எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள்.
23. "நிச்சயமாக இவர் என் சகோதரர்; இவருக்குத் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் சொந்தமாக உள்ளன; எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது: அவர் என்னிடம் அந்த ஓர் ஆட்டையும் எனக்குத் தந்துவிடு என்று கேட்கிறார்; பேச்சிலேயே அவர் என்னை மடக்குகிறார்" என்று ஒருவர் கூறினார்.
24. (அதைச் செவியுற்ற தாவூத்) "தனக்குரிய ஆடுகளுடன் உனது ஆட்டையும் கேட்பதன் மூலம் (உன் சகோதரர்) உனக்கு அநியாயம் செய்துவிட்டார்: ( பார்ட்னர் ) பங்காளிகளில் அதிகமானோர் இப்படித்தான் சிலர், சிலருக்கு அநீதி இழைப்பவர்களாகவே இருக்கிறார்கள்; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர (அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்:) ஆனால், அத்தகையவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே ஆவர்:" என்று (தாவூத்) கூறினார்;
(தாவூத் இவ்வாறு தீர்ப்பளித்ததும் அவர்கள் சென்றுவிட்டார்கள்; பின்னர் பிரதிவாதியின் வாதத்தைக் கேட்காமல் தான் தீர்ப்பு வழங்கியது குறித்து அவர் வருந்தினார்; தொழுமிடத்திற்கு முன்னறிவிப்பில்லாமல் அவர்கள் எப்படி வந்தார்கள் என்றும் யோசிக்கலானார்; தீர்ப்பு வழங்கும்போது உணர்ச்சிவசப்படக் கூடாது என்ற நமது ஆணையை அவர் மீறுகிறாரா என்று) நாம் அவரைச் சோதிக்கவே செய்தோம் என்பதைத் தாவூத் விளங்கிக் கொண்டார்;
எனவே, தன்னைப் படைத்தாள்பவனிடம் மன்னிப்புக் கேட்டார்; ருகூஉவில் அவர் விழுந்தார்; (அல்லாஹ்விடம்) அவர் மீண்டார். 38: 21- 24
சாபமும் சனிக்கிழமையும் :
===========================
அல்லாஹ் யூதர்களிடம் கூறினான். வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாள் புனித நாள். அது எந்த நாள் என நீங்கள் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்; அந்த நாட்களில் அதிகமாக
நீங்கள் இறைவனை வணங்கி வழிப்படுங்கள்; அந்த நாளில் நீங்கள் செய்யும் துஆ - பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்" எனக் கூறினான்.
அல்லாஹ் ஆறு நாட்களில் உலகத்தைப் படைத்து முடித்தான். ஏழாவது நாளான சனிக்கிழமையில் அல்லாஹ் ஓய்வு எடுத்துக் கொண்டான்.
எனவே அந்த நாளையே நாம் புனித நாளாக ஆக்கிக் கொள்வோம் என கருதிய யூதர்கள் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் அந்த நாளையே புனித நாளாக ஆக்கி அங்கீகரித்துக் கொண்டான்.
கிறிஸ்தவர்களிடமும் அல்லாஹ் இவ்வாறு தான் கூறினான். அவர்கள் " அல்லாஹ் உலகத்தைப் படைக்கத் தொடங்கிய நாள் ஞாயிற்றுக் கிழமை. எனவே அந்த நாள்தான் புனித நாளாக இருக்கக்கூடும் என எண்ணிய அவர்கள் ஞாயிற்றுக் கிழமையைப் புனித நாளாக ஆக்கிக் கொண்டார்கள்.
ஆனால் நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் அல்லாஹ் புனித நாளை கண்டுபிடிக்கும் படி சொல்லவில்லை. "புனித நாள் வெள்ளிக்கிழமை தான்! அந்த நாளில் நீங்கள் என்னை வணங்கி வழிபடுங்கள்; அந்த நாளில் நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும்" எனக் கூறினான் .
அவர்களுக்கெல்லாம் கண்டுபிடிக்கச் சொல்லியும், தேர்ந்தெடுக்கச் சொல்லியும் அவர்கள் தேர்ந்தெடுத்ததை அல்லாஹ் அங்கீகரித்தும் கொண்டான் . ஆனால் நமக்கு மட்டுமே அல்லாஹ்வே தேர்வுச் செய்து கொடுத்தான்.
இப்படி , யூதர்கள் தேர்வுச் செய்து கொண்ட சனிக்கிழமை அன்று, அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இறைவனை வணங்கி வழிபட்டு மட்டுமே வர வேண்டும்.
எந்த அளவிற்கு என்றால் இன்று இஸ்ரேலில் உள்ள 15 மாடி கட்டிடத்தின் லிஃப்ட்டில் ஏறினால் அனைத்து மாடியிலும் லிஃப்ட் தானாகவே நின்றுச் செல்லும். லிஃப்டின் பொத்தானை அழுத்துவதும் கூட வேலை என சொல்லுகிறார்கள்.
புனித நாளான சனிக்கிழமை அன்று பள்ளிவாசலில் அமர்ந்து இறைவனை வணங்கி வழிபட்டு மட்டுமே வரவேண்டிய அந்த நாளில் எகிஃப்திற்கும் மதியன் நகரத்திற்கும் இடைப்பட்ட கடற்கரை கிராமமான அய்லா நகரத்தின் கடற்கரையில் மீன்கள் கரையோரமாக துள்ளி குதித்து விளையாடியது.
அரிய வகை மீன்களும், உயர்ரக மீன்களும் கடலோரத்தில் காணப்பட்டதால் அதைப் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
அதற்காக அவர்கள் ஓர் உத்தியை உபயோகித்தார்கள். சனிக்கிழமை அன்று மீன் பிடிப்பது தான் தவறு. எனவே வெள்ளிக்கிழமை காலையில் வலையை விரித்து விட்டு வந்து விடுவோம்; ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்று எடுத்து வந்து விடுவோம் என யூகித்து அவ்வாறே செய்தார்கள்.
மற்றும் சிலர் வலை விரிப்பதற்கு பகரமாக கடற்கரையில் குழியை வெட்டி அந்த குழிக்குள் மீன் வந்து விழுவது போல் ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று மீன்களை அள்ளி வந்து வியாபாரம் செய்து பெரும் லாபத்தைப் பார்த்தார்கள்.
யூதர்கள் தம் உத்தியைப் பயன்படுத்தி அல்லாஹ்வின் உத்தரவை உதாசீனப்படுத்தியதால் அல்லாஹ் அவர்களில் இளைஞர்களை குரங்குகளாகவும், முதியவர்களைப் பன்றிகளாகவும் மாற்றினான் .
இளைஞர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டிய முதியவர்கள், புத்திமதி சொல்லாமல் இளைஞர்களையும் அழைத்துச் சென்று தவறு செய்ய வைத்த காரணத்தால் முதியவர்கள் மிகவும் கேவலமான பன்றி உருவத்திலும், ஒன்றுமறியாத இளைஞர்கள் குரங்குகளைப் போன்றும் உரு மாற்றப்பட்டார்கள்" என தஃப்ஸீர் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
உருவம் மாற்றப்பட்டதை கண்டு வெட்கப்பட்ட யூதர்கள் மூன்று நாட்கள் தமது இல்லங்களிலேயே முடங்கிக் கிடந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் மூன்றாம் நாளில் அழிக்கப்பட்டார்கள்.
இதற்கு முன்பெல்லாம் அல்லாஹ், குற்றம் செய்தவர்களையும், அந்த ஊரையும் சேர்த்து துவசம் செய்வதுதான் வழக்கம்.
ஆனால் இவர்கள் விஷயத்தில் ஊரை விட்டு விட்டு ஊராரை மட்டும் துவசம் செய்தான்.
அதிலும் சனிக்கிழமை அன்று மீன் பிடிக்காத நல்லவர்களை அல்லாஹ் ஒன்றும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட விபரங்கள் 7: 163 - 168 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் காண்க 2:65, 4:47, 154, 7:163 , 16:124.
எனவே அல்லாஹ்வின் உத்தரவுகளை உதாசீனப்படுத்தாதீர். ஏற்று நடங்கள் ஏற்றம் பெறுவீர்.
ஊரை அழிக்கவில்லை :
========================
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِن بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَىٰ بَصَائِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (43)
முன் சென்ற தலைமுறையினரை நாம் அழித்த பின் மூஸா (அலை) அவர்களுக்கு வேதத்தை நாம் வழங்கினோம்....., 28 : 43
மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு வாழ்ந்தவர்கள் தான் நபி தாவூத் (அலை) அவர்கள்.
மூஸா (அலை) அவர்கள் காலத்திற்கு முன்பு பல சமூக மக்களையும், அவர்கள் வாழ்ந்த ஊர்களையும் தலைக்கீழாக புரட்டிப் போட்டும், கல் மாறி பொழிந்தும், தண்ணீர் மழை பொழிந்தும் ஊர்களும் ஊரார்களும் அழிக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சமூகங்கள் அழிக்கப்பட்டது.
ஆனால் மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு தாவூத் (அலை) அவர்களின் சமூகத்தைத் தவிர வேறு எந்த சமுதாயத்தினரையும் அல்லாஹ் அழிக்கவில்லை. அதை மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.
عن أبي سعيد الخدري قال : ما أهلك الله قوما بعذاب من السماء ولا من الأرض بعدما أنزلت التوراة على وجه الأرض ، غير القرية التي مسخوا قردة ، ألم تر أن الله يقول : ( ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى ) . رواه ابن أبي حاتم ،
அபூ ஸஈதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தவ்ராத் வேதம் அருளப்பட்ட பிறகு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் தண்டனைகள் அருளப்பட்டு எந்த சமுதாயத்தினரும் அழிக்கப்படவில்லை. குரங்குகளாக மாற்றப்பட்ட கிராமத்தினரைத் தவிர.
நூல்: இப்னு அபீஹாத்திம்
நபி தாவூத் (அலை) அவர்களை யூதர்கள் நபியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அரசராக மட்டுமே ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ஆயிரம் மனைவியர் இருந்ததாகவும், இதுபோன்ற இன்னும் பல அசிங்கமான ஆபாசமான கட்டுக் கதைகளையும் அவர்கள் மீது இட்டுக்கட்டி எழுதி இருக்கிறார்கள்.
எனவே நபி தாவூது (அலை) அவர்கள் குறித்து திருக்குர்ஆனும் இஸ்லாமும் எதைச் சொல்லி இருக்கின்றதோ அதை மட்டும் நம்புங்கள். நீங்கள் அருவருப்பாக கருதும் செய்திகள் ஏதேனும் நபி தாவூத் ( அலை ) அவர்கள் குறித்து கேள்விப்பட்டால் நம்பாதீர்கள்.
நபி ஆதம் (அலை) அவர்கள் நபி தாவூத் ( அலை ) அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளை ஆலமுல் அர்வாஹில் இருக்கும் போது வழங்கிய நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நன்குத் தெரியும். எனவே தாவூத் (அலை) அவர்கள் நூறு வருடங்கள் வாழ்ந்தார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்கள் நல்ல அரசராக, நல்ல நீதிபதியாக, சிறந்த நபியாக, நல்ல கணவராக, நல்ல மனிதராக என தனக்கு வழங்கப்பட்ட அனைத்து ரோல் - வாழ்வியல் வழிகாட்டுதலிலும் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்டினார்கள்.
அதை அல்லாஹ் கூறுகிறான்;
نِعْمَ الْعَبْدُ ۖ إِنَّهُ أَوَّابٌ
நிச்சயமாக அவர் ஒரு நல்ல அடியார்; நிச்சயமாக அவர் எப்போதும் (அல்லாஹ்விடம்) மீளக்கூடியவராகவே இருந்தார். 38:30
எனவே நாமும் நபி தாவூத் (அலை) அவர்கள் போல் நமது நேரத்தை திட்டமிட்டு செயல்பட்டு வந்தால் நாமும் கூட அல்லாஹ்விற்கு நெருங்கிய அடியானாக ஆகலாம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
3. ஷைஹுல் அன்பியா
நூஹ் (அலை) அவர்கள்
-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
"நேற்றைய வரலாறுகளைத் தெரியாத சமுதாயமும், நிகழ்கால நிதர்சனங்களைப் புரிந்துக் கொள்ளாத சமுதாயமும், எதிர்காலத் திட்டமிடலை அறியாதச் சமுதாயமும் முன்னேற சாத்தியமே இல்லை" என்று சொல்லுவார்கள்.
அந்த வகையில் நமது நபிமார்களுடைய வரலாற்றை அறியாதவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஏன் ஒரு முறை கூட திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் படித்தவர்கள் ஒரு சிலர் மட்டும்தான்!
வரலாறுகளை மக்களுக்குச் சொல்வதால் ஏற்படுகிற நன்மை என்ன என்பது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ﴾ [الأعراف: 176]
நபியே நீர் உண்மையான சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வீராக அவர்கள் சிந்தித்து உணரலாம்! 7: 176
لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُولِي الْأَلْبَابِ ۗ سورة يوسف: 111
அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கின்றது. 12 : 111
لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ الفرقان٣٢
உமது இதயத்தை பலப்படுத்துவதற்காக (இவ்வாறு வரலாறுகளை நாம் கூறுகின்றோம்.) 25:32
எனவே நபிமார்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புகள் குறித்த வரலாறுகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென மேற்கண்ட வசனங்கள் நம்மை வலியுறுத்துகின்றது.
திருக்குர்ஆனில் எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து நபிமார்கள் குறித்த வரலாற்றையும் விரிவாகப் பேசவில்லை.
திருக்குர்ஆனில் 25 நபிமார்களுடைய பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
அதில் துல்கிஃப்லு, அல் யஸவு அலைஹிஸ் ஸலாம் போன்ற நபிமார்களுடைய பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் குறித்த எந்த வரலாற்று நிகழ்வுகளும் திருக்குர்ஆனில் இல்லை.
அதேநேரம் மூஸா (அலை) அவர்கள் குறித்து 136 வசனங்களுக்கு மேலாகவும், இப்ராஹிம் (அலை) அவர்கள் குறித்து 69 வசனங்களுக்கு மேலாகவும், ஆதம் (அலை) இப்லீஸ் குறித்து 25 வசனங்களுக்கு மேலாகவும் அல்லாஹ் விரிவாகப் பேசி இருக்கின்றான். சிலரை சுருக்கமாகவும் பேசி இருக்கின்றான்.
அந்த வகையில் நபி நூஹ் (அலை) அவர்கள் குறித்து 43 இடங்களுக்கும் மேலாக அல்லாஹ் விரிவாகவே பேசி இருப்பதைக் காண முடிகின்றது.
நூஹ் (அலை) அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் தெற்கு ஈராக்கில் கூஃபா நகரை மையமாகக் கொண்டு அப்பகுதியில் வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆதம் (அலை) அவர்களில் இருந்து ஒன்பதாவது தலைமுறையாகத் தோன்றியவர்தான் நூஹ் (அலை) அவர்கள்.
நூஹ் பின் லாமக் பின் மத்தூஷலக் பின் கனூக் (அவரே இத்ரீஸ்) பின் யர்த் பின் மஹ்லாயீல் பின் கைனன் பின் அனூஷ் பின் ஷீஸ் பின் ஆதம் (அலை) ஆவார்.
ஷைஹுல் அன்பியா என அழைக்கப்படுவது ஏன்? :
நபி நூஹ் (அலை) அவர்களுக்கும் ஆதம் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்டக் காலம் ஆயிரம் வருடங்கள் இருந்தது. அதை ஒரு நபிமொழி உறுதிப்படுத்துகிறது.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஆதம் நபியாக இருந்தாரா?" என்று வினவினார். “ஆம்!" என்று பதிலளித்தார்கள். அவருக்கும் நூஹ் (அலை) அவர்களுக்கு இடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?" என்று வினவினார். 'பத்து நூற்றாண்டுகள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்னது அஹ்மத்
நபி ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு வந்ததிலிருந்து நபி நூஹ் (அலை) அவர்கள் வரை இடைப்பட்ட காலத்தில் ஷீத் நபி போன்ற பல நபிமார்கள் இருந்தார்கள்.
இவர்கள் காலத்தில் வாழ்க்கைச் சாதனங்கள் குறித்துதான் வஹியாக இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டது.
அதாவது விவசாயம் செய்கிற முறை, ஆடு மாடு வளர்ப்பு முறை, வீடு கட்டும் முறை, திருமணம் செய்து கொள்ளும் முறை போன்ற அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியமான வாழ்வியல் வழிகாட்டுதல்கள் மட்டுமே இறைவன் புறத்திலிருந்து வஹீ அருளப்பட்டு வந்தது.
இணை வைக்காதே, சிலைகளை வணங்காதே, ஒரே இறைவனை வணங்கு என்பது போன்ற வஹியெல்லாம் இவர்கள் காலத்தில் தேவையில்லாமல் இருந்தது.
அனைவரும் அவர்களுக்கான வழிப்பாட்டு முறையை முறையாக செய்து வந்தார்கள். அதுவும் இறைவன் புறத்திலிருந்து இபாதத் - வழிபாட்டு முறை என எதுவும் வரையறுத்து வழங்கப்படவில்லை என்று அநேக அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள்.
நபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில்தான் ஷரீஅத் சட்டம் என்ற ஒன்றே உருவானது. இவர்கள் காலத்தில் தான் சிலை வணக்கம், ஓரிரை கோட்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு, இணை வைத்தல் போன்ற அனாச்சாரங்கள் உருவானது. அவற்றுக்கு எதிராக அல்லாஹ் வஹீ அருளினான்.
ஒரு நபி செய்ய வேண்டிய முறையான வேலையை முதன் முதலில் செய்தவர் நபி நூஹ் (அலை) அவர்கள்தாம்! அதனால் தான் ஷைஹுல் அன்பியா - நபிமார்களின் தலைவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.
'நூஹ்' எனும் சொல்லுக்கு அழுதல், ஒப்பாரி வைத்தல், தேம்பித் தேம்பி அழுதல் என்று பொருள். இந்தப் பொருளுக்கு ஏற்றவாறே நபி நூஹ் (அலை) அவர்கள் தம் சமூக மக்கள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடத்தில் அழுதழுது பிரார்த்தனைச் செய்தார்கள்.
ஒரு ஹதீஸில் காணப்படுகிறது. அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூஹ் (அலை) அவர்கள், ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் தவிர ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
நூல்: இப்னுமாஜா.
இவ்வளவு தொழுதும், நோன்பு நோற்றும் அந்த மக்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்களாக திருந்தாதவரை அல்லாஹ் உதவிகள் செய்ய மாட்டான் அல்லவா?
நூஹ் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் திருந்தாததினால் அவர்களின் முடிவை அவர்களே தேடிக்கொண்டார்கள்.
ஷரீஅத்தின் தோற்றம் :
ஆதம் (அலை) அவர்கள் ஒட்டுமொத்த மனித இனமும் முதன் முதலில் உருவாகக் காரணமாக இருந்தார்கள்.
நபி நூஹ் (அலை) அவர்கள் இரண்டாவதுத் தந்தை என்று வரலாற்று அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள். ஏனென்றால் வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு இவர்களைக் கொண்டுதான் மீண்டும் மனித இனம் பல்கிப் பெருகியது.
நபி நூஹ் (அலை) அவர்கள் குறித்து திருக்குர்ஆனில் அனேக வசனங்கள் இருக்கின்றது. அவற்றில் அவர்கள் செய்த அழைப்புப் பணி, அவர்களின் குடும்பம், கப்பல் கட்டிய தொழில்நுட்பம் - Marine engineering வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு வாழ்ந்த முறை, இறுதி வஸியத் ஆகியன குறித்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவற்றைக் குறித்து விரிவாகக் காண்போம்.
فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا ؛ العنكبوت: 14
(நூஹ் அலை) அவர்கள் தம் சமுதாயத்தினருக்கு மத்தியில் ஐம்பது ஆண்டுகள் குறைவாக ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள். 29 : 14
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக மட்டும் 950 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது. அதே நேரம் மொத்தத்தில் 1100 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
நூஹ் (அலை) அவர்களின் 270 வது வயதில் நபித்துவம் அருளப்பட்டது. 480 ஆண்டுகள் வெள்ளப் பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்தார்கள் வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு 350 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஆக மொத்தம் ஆயிரத்து நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
போதும் போதும் என்கிற அளவிற்கு வாழ்ந்து இருக்கிறார்கள். தஃவா - அழைப்புப் பணி அலுத்துப் போகும் அளவிற்கு செய்திருக்கிறார்கள்.
நமது ஊம்மத்தினரின் வயது அறுபதுக்கும் எழுபதிற்கும் இடையில் தான் என்பது நாம் அறிந்ததே!
ரூஹுல் மஆனீ எனும் திருக்குர்ஆன் விரிவுரையின் ஆசிரியர் ஆலூஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் நூஹ் (அலை) அவர்களிடம் இப்படிக் கேட்டார்.
நீங்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து இருக்கிறீர்களே அது எப்படி இருக்கின்றது?
நூஹ் (அலை) அவர்கள் "ஒரு வீட்டின் முன்புற வாசல் வழியே நுழைந்து பின்புற வாசல் வழியே சென்றதுப் போல் இருக்கின்றது"என்று கூறினார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நூஹ் (அலை) அவர்களுக்கு உலக வாழ்க்கை அலுத்துப் போகவில்லை. இன்னும் வாழ வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது. உலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது மன நிறைவைத் தராது. மறுமையில் தான் மன நிறைவும் நிம்மதியும் கிடைக்கும்.
வெறுப்பின் உச்சம் :
நபி நூஹ் (அலை) அவர்கள் குறித்து திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் திருக்குர்ஆனில் 71 வது அத்தியாயம் 'நூஹ்' எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தில் 28 வசனங்கள் உள்ளது. இந்த அத்தியாயம் முழுவதிலும் நபி நூஹ் (அலை) அவர்கள் குறித்து மட்டுமே பேசப்பட்டுள்ளது .
திருக்குர்ஆனில் இப்ராஹிம், யூனுஸ் போன்ற அத்தியாயங்கள் உள்ளது. ஆனால் அந்த அத்தியாயங்களில் வெவ்வேறு நபிமார்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. நூஹ் அத்தியாயத்தில் அப்படி அல்ல !
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلا وَنَهَارًا
فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلاَّ فِرَارً
وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا
என்னை படைத்தாள்பவனே! நிச்சயமாக என் சமூகத்தாரை நான் இரவிலும் பகலிலும் சத்தியத்தின் பக்கம் அழைத்தேன்.
எனது அழைப்பு அவர்களுக்கு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க வில்லை.
அவர்களுக்கு நீ மன்னிப்பு வழங்குவதற்காக நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் தங்களின் விரல்களை அவர்களின் காதுகளில் திணித்து கொண்டார்கள்; தம் ஆடைகளால் முக்காடு போட்டுக் கொண்டார்கள்; (என் பேச்சை) பிடிவாதமாகக் (கேட்க) மறுத்தார்கள்; மிகப்பெரிய அளவு ஆணவம் கொண்டு அலைந்தார்கள்......71:4-28
நபி நூஹ் (அலை) அவர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே வெறுப்பின் உச்சத்தை அடைந்த போது, "இறைவா! இறை மறுப்பாளர்களில் ஒருவரைக் கூட பூமியில் நீ விட்டு வைக்காதே !
நிச்சயமாக நீ அவ்வாறு விட்டு வைத்தால் உன் மற்ற அடியார்களை அவர்கள் கெடுத்து விடுவார்கள். மேலும் பாவிகளையும், இறை மறுப்பாளர்களையுமே தவிர வேறு யாரையும் பெற்றெடுக்க மாட்டார்கள் .
இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், இறை நம்பிக்கை கொண்டவர்களான என் வீட்டில் நுழைந்தவர்களுக்கும், பிற இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும் நீ அதிகமாகாமல் இருப்பாயாக! 71:26-28.
இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள். நபிமார்களில் சிலர் சாந்தமாகவும் இருந்திருக்கிறார்கள் . சிலர் ஒருவரையும் விட்டு வைக்காதே என்றும் கேட்டும் இருக்கிறார்கள்.
இரண்டாம் வகையைச் சேர்ந்த நூஹ் (அலை) அவர்கள் பல நூறு வருடங்கள் சொல்லியும் அவர்கள் கேட்காததால், இவ்வாறு பிரார்த்தனைச் செய்து அந்த சமூகத்தை அளித்தார்கள்.
அதாவது முஸ்லிம்களும் உலக உயிரினங்களும் ஒரு கப்பலில் ஏறி தப்பிப்பது இறைவனின் திட்டம். அதற்கு அல்லாஹ் ஒரு திட்டத்தை முழுமையாக வகுத்து தந்தான்.
அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஸனூபர் எனும் பைன் மரத்தை நட்டு நூறு வருடங்கள் அதை வளர்த்தார்கள். அதே காலகட்டத்தில் தச்சு வேலையை தொழிலாகச் செய்து தச்சு வேலையை முழுமையாகக் கற்றுக் கொண்டார்கள்.
பின்னர் கப்பல் செய்ய வேண்டிய காலம் நெருங்கியதும் மரங்களை அறுத்து பலகைகளாக வைத்துக் கொண்டு கப்பல் கட்டுமானப் பணியை தொடங்கினார்கள்.
கப்பலின் நீளம் 1200 மூலம். அதன் அகலம் 600 மூலமாக இருந்தது எனவும், 2000 மூலம் நீளம் 100 மூலம் அகலமாக இருந்தது எனவும், அதன் உயரம் 30 முழம் இருந்ததாகவும் பல்வேறு அறிவிப்புகள் காணப்படுகிறது. இப்படி பிரம்மாண்டமான கப்பலை கட்டி முடித்தார்கள்.
நூஹ் நபியின் குடும்பம் :
நூஹ் (அலை) அவர்களுக்கு இரண்டு மனைவியர் இருந்தார்கள். 1. முஃமினா. இவருக்கு ஸாம், ஹாம், யாஃபிஸ் என மூன்று ஆண் மக்கள் இருந்தார்கள்.
இந்த மனைவியும் இவருடைய பிள்ளைகளும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தீனுல் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு வலு சேர்த்தார்கள்.
மற்றொரு மனைவி வாஙிலா அல்லது வாலிஹா . இவருக்கு கன்ஆன் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த மனைவியும் இவருக்குப் பிறந்த மகனும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இல்லாமல் எதிரணியினரோடு சேர்ந்து கொண்டு செயல்பட்டார்கள். இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பேசுகின்றான்.
ضَرَبَ اللَّهُ مَثَلاً لِلَّذِينَ كَفَرُوا امْرَأَةَ نُوحٍ وَامْرَأَةَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ».. (التحريم: 10).
நூஹின் மனைவியையும், லூத்தின் மனைவியையும் இறை மறுப்பாளர்களுக்கு உவமையாக அல்லாஹ் கூறுகிறான்; அவர்கள் நமது நல்லடியார்களின் இரண்டு அடியார்களுக்குக் கீழ் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் நம் நல்லடியார்களை ஏமாற்றினார்கள்;
ஆனால் இந்த நல்லடியார்களால் தமது மனைவியரை விட்டும் அல்லாஹ்வின் தண்டனை எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை; "நரகத்தில் நுழைப்பவர்களுடன் நீங்களும் நுழையுங்கள்" என்று அந்த மனைவியரிடம் கூறப்பட்டது. 66:10
நூஹ் (அலை) அவர்கள் மகன் கன்ஆன் குறித்து அல்லாஹ் பேசுவதைப் பாருங்கள்.
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் புறப்பட்ட போது 80 நபர்கள் ஏறிக் கொண்டார்கள். அதில் நூஹ் (அலை) அவர்களின் மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் அடங்குவர். கன்ஆன் கப்பலில் ஏற மறுத்தார்.
وَنَادَىٰ نُوحٌ ٱبۡنَهُۥ وَكَانَ فِي مَعۡزِلٖ يَٰبُنَيَّ ٱرۡكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلۡكَٰفِرِينَ (42) قَالَ سَـَٔاوِيٓ إِلَىٰ جَبَلٖ يَعۡصِمُنِي مِنَ ٱلۡمَآءِۚ قَالَ لَا عَاصِمَ ٱلۡيَوۡمَ مِنۡ أَمۡرِ ٱللَّهِ إِلَّا مَن رَّحِمَۚ وَحَالَ بَيۡنَهُمَا ٱلۡمَوۡجُ فَكَانَ مِنَ ٱلۡمُغۡرَقِينَ
அப்போது நூஹ் தன் மகனை அழைத்தார்; அவன் (கப்பலில் ஏறாது) விலகி நின்றான்;
"என் அருமை மகனே! எங்களோடு (கப்பலில்) ஏறிக்கொள் இறைமறுப்பாளர்களுடன் நீ ஆகிவிட வேண்டாம்" என்று கூவி அழைத்தார்.
43. (அதற்கு மகன்) "வெள்ளத்திலிருந்து என்னைப் பாதுகாக்கும் மலையின் உச்சியில் நான் விரைவில் ஏறிக்கொள்வேன்" என்று கூறினான்:
(உடனே தந்தை நூஹ் (அலை) அவர்கள்) "அல்லாஹ் அருள் செய்துவிட்டவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவனுடைய ஆணையிலிருந்து இன்று பாதுகாப்புக் கிடையாது" என்று (தந்தை) கூறினார்; (பேசிக் கொண்டிருக்கும் போதே) அலை அவ்விருவருக்கிடையே குறுக்கிட்டது; (அம்மகன்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டான்.
وَنَادَىٰ نُوحٞ رَّبَّهُۥ فَقَالَ رَبِّ إِنَّ ٱبۡنِي مِنۡ أَهۡلِي وَإِنَّ وَعۡدَكَ ٱلۡحَقُّ وَأَنتَ أَحۡكَمُ ٱلۡحَٰكِمِينَ (45) قَالَ يَٰنُوحُ إِنَّهُۥ لَيۡسَ مِنۡ أَهۡلِكَۖ إِنَّهُۥ عَمَلٌ غَيۡرُ صَٰلِحٖۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۖ إِنِّيٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلۡجَٰهِلِينَ (46)
45. நூஹ் (அலை) அவர்கள் தன்னைப் படைத்தாள்பவனை அழைத்து "என்னைப் படைத்தாள்பவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவனே! நிச்சயமாக (என் குடும்பத்தைக் காப்பாற்றுவதாக) நீ அளித்த வாக்கு உண்மையானதாகும்; தீர்ப்பு வழங்குபவர்களில் மிகச் சரியாகத் தீர்ப்பு வழங்குபவன் நீ; (அவ்வாறிருக்க என் மகன் அழிந்து போனானே!)" என்று கேட்டார்.
46. (அதற்கு அல்லாஹ்) "நூஹே! நிச்சயமாக அவன் (இறைநம்பிக்கையுள்ள) உன் குடும்பத்தைச் சார்ந்தவனல்லன்; நிச்சயமாக அவன் முறையில்லாத செயல்களை செய்தவன்; உமக்கு உறுதியாகத் தெரியாததைப் பற்றி நீர் என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதோரில் ஆகிவிடுவதை விட்டும் உனக்கு நான் அறிவுரை கூறுகிறேன்" என்று (அல்லாஹ்) கூறினான்.
அதாவது ஈமான் இல்லாதவன் உன் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல என்கிற கருத்தை அல்லாஹ் இங்கு வலியுறுத்தி கூறுகிறான்.
மேலும் காஃபீர் - இறை மறுப்பாளனாக உள்ள ஒருவருக்காக அல்லாஹ்விடம் பேசுவது முறையல்ல எனவும் சுட்டிக் காட்டுகிறான்.
மகன் குறித்த முழுமையான தகவல் எதுவும் தெரியாமல் அறியாமையில் பேசக்கூடாது எனவும் அல்லாஹ் எச்சரித்தான்.
அல்லாஹ்வின் மேற்கண்ட எச்சரிக்கையான வார்த்தைகளை கேட்டதும் நபி நூஹ் (அலை) அவர்கள் உடனே மன்னிப்பு கேட்டார்கள்.
قَالَ رَبِّ إِنِّيٓ أَعُوذُ بِكَ أَنۡ أَسۡـَٔلَكَ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞۖ وَإِلَّا تَغۡفِرۡ لِي وَتَرۡحَمۡنِيٓ أَكُن مِّنَ ٱلۡخَٰسِرِينَ
47. "என்னைப் படைத்தாள்பவனே! எனக்கு உறுதியாகத் தெரியாததைப் பற்றி உன்னிடம் நான் கேட்பதை விட்டும் உன்னைக் கொண்டே பாதுகாப்புக் கேட்கிறேன்; நீ என்னை மன்னித்து, கருணை காட்ட வில்லையானால் பேரிழப்படைந்வர்களில் நானும் ஆகி விடுவேன் என்று (நூஹ்) கூறினார். 11:42-47
பின்னர் அல்லாஹ் நபி நூஹ் (அலை) அவர்களை மன்னித்தான்.
காகமும் புறாவும் :
முதன் முதலில் கப்பலில் ஏறிய பறவை பச்சைக்கிளி ஆகும். உயிரினங்களுள் கடைசியாக ஏறியது கழுதையாகும். அத்துடன் இப்லீஸ் அக்கழுதையின் வாலைப் பிடித்துக்கொண்டு ஏறிக்கொண்டான்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.
பெருவெள்ளத்தில் கப்பல் ஆறு மாத காலம் பயணித்து இறுதியில் ஜுதி எனும் மலை மீது ஒதுங்கி நின்றது. இதை அல்லாஹ் கூறுகிறான்.وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ அக்கப்பல் ஜுதி என்ற மலையில் நிலை கொண்டது. 11:44
கப்பலில் இருந்த நூஹ் (அலை) அவர்கள் பூமியில் தண்ணீர் குறைந்து விட்டதா கீழே இறங்க முடியாத அளவிற்கு தண்ணீர் நிறைந்துள்ளதா என்பதை அறிந்து வர காகத்தை அனுப்பி வைத்தார்கள்.
அது நேராகச் சென்று செத்துக் கிடந்த விலங்கின் மீது அமர்ந்து அதை சாப்பிட்டு விட்டு ரொம்ப நேரம் கழித்து ஓடோடி வந்தது. அதன் கால்களில் அசுத்தம் ஒட்டி இருந்ததைப் பார்த்த நூஹ் (அலை) அவர்கள் தூர விலகிச் செல் என சத்தம் போட்டார்கள். மேலும் நூஹ் நபியவர்கள், அதன் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்துமாறு அதற்கு எதிராகப் பிரார்த்தனை செய்துவிட்டார்கள். எனவேதான் அது மனிதர்களின் வீடுகளில் ஒன்றுவதில்லை.
அன்றிலிருந்து இன்று வரை உலக மக்கள் அனைவரும் காகத்தை ஒரு பீடையாகவும், முஸீபத்தாகவும் பார்த்து வருகிறார்கள். அதை தமக்கு அருகில் அண்டி வாழ்வதை யாரும் விரும்புவதில்லை. விரட்டியே வருகிறார்கள்.
அடுத்ததாகப் புறாவை அனுப்பி வைத்தார்கள். அது நேராகச் சென்று சேர் போன்று இருந்த கெட்டியான களிமண்ணில் அமர்ந்தது. களிமண் அதன் கால்களில் ஒட்டிக்கொண்டது.
அருகில் இருந்த ஜைத்தூன் மர வேரை தன் அழகினால் கவ்விக் கொண்டு நூஹ் (அலை) அவர்களிடம் வந்து நின்றது .
நூஹ் (அலை) அவர்கள் அந்த புறாவைப் பார்த்த போது ஜைத்தூன் மர வேறு புறாவின் கழுத்தைச் சுற்றி பூ மாலை போல் காட்சியளித்தது.
அதனைப் பார்த்த நூஹ் (அலை) அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அதன் கால்களில் இருந்த களிமண் தண்ணீர் வடிந்துவிட்ட அடையாளத்தைக் காட்டியது.
மேலும் அது சுமந்து வந்த வேர் பரகத் பொருந்திய ஜைத்தூன் மர வேர். அதனால் அந்த புறாவிற்காக பரகத் வேண்டி துஆ செய்து கொண்டார்கள். அந்த துஆவை இன்றும் பார்க்க முடிகிறது.
ஏழை, பணக்காரர்கள் என அனைத்து வகை மனிதர்களும் புறாவை சந்தோஷமாக வளர்த்து வருகிறார்கள். ஏழைகள் தான் வளர்க்க வேண்டும்; செல்வந்தர்கள் தான் வளர்க்க வேண்டும் என்கிற பாகுபாடு புறா வளர்ப்பில் இல்லை.
அஹமது ஷவ்கீ எனும் உலக பிரசித்திப் பெற்ற கவிஞர் கூறுகிறார். புறா முதன் முதலில் தன் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டதால் உலகில் யாரை கண்ணியப்படுத்த வேண்டுமானாலும் அவர் கழுத்தில் மாலை போடுவார்கள். அது பூமாலையாக இருந்தாலும் பொன்னாடையாக இருந்தாலும் சரிதான்!
ஒருவரை கண்ணியப்படுத்துவதற்காக கழுத்தில் அணிவிக்கப்படும் வழக்கத்தை புறா முதன் முதலில் உருவாக்கித் தந்த சுன்னத் வழிமுறையாகும்.
பின்னர் நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் இருந்து இறங்கினார்கள். அந்த மக்களிடம் நீண்ட நெடுங்காலம் இருந்து இஸ்லாமிய நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தினார்கள்.
மீண்டும் உலகம் மனிதர்கள், அழகிய பூக்கள் , செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், சப்தங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டது.
நூஹ் (அலை) அவர்கள் முதன் முதலில் இறங்கி தங்கிய ஊருக்கு ஸமானீன் - என பெயரிட்டார்கள்.
ஷிர்க் - இணை வைத்தல்
எப்படித் தோன்றியது?
தம் மக்களிடம் (அவர்கள்) "உங்கள் கடவுள்களை நீங்கள் (வழிபடுவதை) நிறுத்தாதீர்கள்; வத்து, ஸுவாஉ, யஃகூஸ், யஊக். நஸ்ர் ஆகிய (கடவுள்களை) விட்டுவிடாதீர்கள்" என்று கூறுகிறார்கள். 71:23
அதாவது நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நல்லோர்களின் பெயர்களே இவை. அவர்களெல்லாம் இறந்துபோன பின்னர், ஷைத்தான் அவர்களுடைய சமுதாய மக்களிடம் வந்து, "இறந்துவிட்ட உமது முன்னோர்கள் அமர்ந்திருந்த சபைகளில் நீங்கள் அவர்களின் (நினைவாகச்) சிலைகளை நிறுவுங்கள். அவற்றிற்கு அ(ப்பெரிய)வர்களின் பெயர்களைச் சூட்டுங்கள்" என்று தூண்டினான்.
எனவே, அம்மக்கள் அவ்வாறே செய்தனர். பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் அவருடைய சிலையை வைத்து நினைவு கூருங்கள் என்று கூறி அச்சிலைகளையும் செய்து கொடுத்தான். அதை அவர்கள் வாங்கி தம் வீடுகளில் வைத்துக் கொண்டார்கள்.
ஆனால், அவர்கள் அவற்றை வழிபடவில்லை. அவர்கள் இறந்துப் போகின்ற வரை நிலைமை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குப் பின்னர், அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் நான்கைந்து தலைமுறை கடந்து வந்த மக்கள் அச்சிலைகளை வழிபடத் தொடங்கிவிட்டனர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்ட இறைவசனத்திற்கு விளக்க மளித்துள்ளார்கள்.
அதாவது மனித இனம் தோன்றிய சுமார் 2200 வருடங்களுக்குப் பிறகு மனித இனம் பல்வேறு நாகரீகமான வளர்ச்சியையும் சுயமாக சிந்தித்துச் செயல்படும் நிலைகளையும் அடைந்திருந்தது.
அப்பொழுது மனிதன், காலம் சென்ற தம் முன்னோர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவர்களை ஓவியமாகவும், சிலைகளாகவும் வடிவமைத்தான்.
பொதுவாகவே மனிதன் முதன் முதலில் எழுதத் தொடங்கிய எழுத்துமுறை, பறவைகள் விலங்குகள், செடி கொடிகள் ஆகியவற்றை வரைவதன் மூலம் ஓர் எழுத்து முறையை கண்டுபிடித்து இருந்தான்.
அதன் தொடர்ச்சியாகத்தான் தம் முன்னோர்களை படமாக வரைந்தும், சிலைகளாக வடித்தும் வீட்டில் வைத்தான். அவர்களைப் பார்ப்பதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும், வீட்டை விட்டும் வெளியே செல்லும் பொழுது அவர்களிடம் பேசுவதும், வீட்டிற்குள் வந்ததும் அந்த உருவங்களை பார்ப்பதும், அவர்களுக்கு நன்றி சொல்வதுமாக தொடங்கிய அணுகுமுறை, ஐந்தாறு தலைமுறைகளுக்குப் பிறகு வழிப்படும் நிலையை நோக்கி நகர்ந்தது.
அறுவடை நாட்களில் அவர்களை வணங்குவது, திருமணம் போன்ற வைபவங்களின் போது அவர்களை வணங்குவது என ஷிர்க் - இணை வைத்தல் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து ஓவியங்கள், சிலைகள் என ஒட்டுமொத்த மனித சமூகத்தாரின் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள் இருந்தது. அதுமட்டுமின்றி ஊர் தலைவர்களின் சிலைகளும் இருந்தது.
மேலும் அவை அல்லாஹ்விற்கு மாற்றாகவோ அல்லாஹுவிற்கு துணையாகவோ இருப்பதாக சிலர் தாம் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை முதன்மைப்படுத்தி பேசியும் விவாதித்தும் வந்தார்கள்.
அதனால் அந்த மக்களிடையே தாம் வைத்திருக்கும் முன்னோர்களின் படமும், சிலையும் தான் உயர்ந்தது என ஒவ்வொருவரும் பேசி வந்ததால் ஒரே சமூகமாக வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவுகளும், பிணக்குகளும் , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வும், கடந்த கால தலைவரின் சந்ததியினர், நிகழ்கால தலைவர்களின் சந்ததியினர் என்ற பாகுபாடும் ஏற்பட்டது.
இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் பெரும் இணை வைத்தலில் சென்று முடிந்து விடும் என எண்ணிய நூஹ் (அலை) அவர்கள் அந்த ஓவியங்களுக்கும், சிலைகளுக்கும், சிந்தனைகளுக்கும் எதிராகக் களமாட இறங்கினார்கள்.
வீட்டிற்கு நான்கு ஐந்து தெய்வங்கள் என்றால் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்க்க இயலாது என்பதைப் புரிந்து கொண்ட நூஹ் (அலை) அவர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள்.
நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாய மக்களை ஏகத்துவக் கொள்கையை நோக்கிப் பலவாறாக அழைத்தார்கள். இரவும் பகலும், இரகசியமாகவும் பகிரங்கமாகவும், ஆசையூட்டியும், அச்சமூட்டியும் அவர்களை ஓரிறைவனை நோக்கி அழைத்தார்கள். இவற்றில் எதுவும் அம்மக்களிடம் எடுபடவில்லை. அவர் அம்மக்களிடம் வெற்றிகாண முடியவில்லை. மாறாக, அவர்களுள் பலர் தம்முடைய வழிகேட்டிலும் அழிச்சாட்டியத்திலும் நீடித்திருந்தனர்.
நூஹ் (அலை) அவர்கள் தான் அனுபவிக்கும் தவ்ஹீத் எனும் ஓரிரை கோட்பாடு மூலம் யாருக்கும் அடிமையாக இல்லாமல், யாருக்கும் கட்டுப்பட்டு இல்லாமல் மனிதர் என்ற வகையில் சமமாக, சகோதரத்துவத்தோடு இருக்கும் நற் சூழலை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தவ்ஹீத் பிரச்சாரத்தை முதன் முதலில் வீரியத்தோடு தொடங்கினார்கள்.
ஓரிறைக் கோட்பாடு மூலமாக, தான் அனுபவிக்கும் அனைத்து வகை நல்லவற்றையும் என் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு ஷிர்க் - இணை வைத்தலை எதிர்த்து தவ்ஹீத் ஓரிறை கோட்பாட்டின் பக்கம் மக்களை அழைத்தார்கள்.
அப்பொழுதுதான் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து எதிர்த்தார்கள். அதாவது நேற்று வரை எனது முன்னோர்கள் தான் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் என்று பேசிப் பிரிந்து வாழ்ந்து வந்த மக்கள், நூஹ் (அலை) அவர்களை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து வந்தார்கள்.
நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை, அறிவு ஆகியனக் குறித்து விரிவாக எடுத்துப் பேசினார்கள். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஷிர்க் - இணை வைத்தல் என்பதை நீங்கள் இப்படி விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்து நடந்து வருகிறார்கள். அந்த பெண்ணிடம், "இவர் யார்?" என்று கேட்கப்படுகிறது.
அதற்கு அவள், "இவர் எனது கணவர்" என்று சொன்னால் நாம் அதை ஏற்றுக் கொள்வோம்; சந்தோஷப்படுவோம் .
அதே நேரம் அந்தப் பெண், "இவரும் என் கணவர்" என்று சொன்னால் நாம் அதை எதிர்ப்போம்; அவளைக் கண்டு கோபம் கொள்வோம். இவ்வாறு தான் ஷிர்க் - இணை வைத்தலும் .
நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள், "நாங்கள் முதன் முதலில் வரைந்த எங்களின் முன்னோர்களும் கடவுள்கள்தான்! அல்லாஹ்வும் கடவுள்தான்!" என்று சொல்லுகிறார்கள்; அந்தப் பெண்ணை போல! அதைத்தான் நூஹ் (அலை) அவர்கள் எதிர்த்தார்கள்.
வெள்ளப் பிரளயம் :
வெள்ளம் பெருகி வருவது குறித்து அல்லாஹ், "வானத்திலிருந்தும் மழை பொழிய வேண்டும்; பூமியிலிருந்தும் ஊற்றெடுத்து அவை வெளிப்பட வேண்டும்" என உத்தரவிட்டான்.
அப்படி பெருவெள்ளம் வெளிப்பட்டால் எவ்வளவு கோரத்தாண்டவம் ஆடி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்;
فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُّنْهَمِرٍ
وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍۢ قَدْ قُدِرَ
கன மழை பொழிய நாம் வானத்தின் கதவுகளைத் திறந்தோம்; ஊற்றுகளை பூமியிலிருந்து நாம் பீறிட்டு ஓடச் செய்தோம்; ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு காரியத்துக்காக (இரு) தண்ணீரும் ஒன்று சேர்ந்தன. 54:11,12
பெருவெள்ளத்தில் கப்பல் சென்று கொண்டிருந்த காலமெல்லாம் மழை பெய்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அல்லாஹ் மழையை நிறுத்திவிட்டான். பின்னர்
وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ (44
"பூமியே உனது தண்ணீரை நீ உறிஞ்சி கொள்! வானமே நீ மழை பொழிவதை நிறுத்திக் கொள்!" என்று இறைவனால் கூறப்பட்டது; தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டது; அளிக்கும் காரியம் முடிக்கப்பட்டது; (அக்கப்பல்) ஜூதி என்ற மலையில் நிலை கொண்டது; "அநியாயம் செய்த மக்களுக்கு இறையருள் தூரம் தான்" எனக் கூறப்பட்டது. 11:44
இந்த வசனத்தில் 19 இலக்கிய வகைகள் இடம்பெற்றுள்ளது. திருக்குர்ஆன் இலக்கியம் நிறைந்த ஓர் வேதம். இவ்வேதத்தில் உள்ள இலக்கிய நயங்களைப் பார்த்து இஸ்லாத்தில் இணைந்தவர்கள் அநேகம் உண்டு.
قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِّنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ (48)
(தண்ணீர் வடிந்த பிறகு) "நூஹே! உமக்கும் உம்மோடு உள்ள சமுதாயத்தாருக்கும் எமது ஸலாமும் பரக்கத்தும் ஏற்பட்ட நிலையில் நீர் கப்பலில் இருந்து இறங்குவீராக" என்று (அல்லாஹ்வால்) கூறப்பட்டது; உமக்குப் பின்னால் ஒரு சமுதாயம் (தோன்றும்;) அவர்களுக்கு நாம் சுகமான வாழ்க்கை தருவோம்; அவர்களும் பாவம் செய்தால் நம்மிடம் இருந்து வதைக்கும் வேதனை அவர்களையும் வந்தடையும்.11:48
ஜுதி மலையின் மீது ஒதுங்கிய கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இப்பொழுதும் அது பாதுகாப்பாக இருக்கின்றது. அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்;
وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ
அக்கப்பலை இறைச் சான்றாக நாம் இன்னமும் விட்டு வைத்திருக்கின்றோம்; அதைப் பார்த்து உபதேசம் பெறுபவர் எவரேனும் இருக்கிறாரா?
பிரசவ நெருக்கத்தில் இருக்கும் பெண்கள், கீழ்காணும் இந்த வசனத்தை ஓதிக் கொண்டிருந்தால் சுகப்பிரசவம் ஏற்படும் என திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
اهْبِطْ بِسَلَامٍ مِّنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِّمَّن مَّعَكَ
(குழந்தையே!) உனக்கும் உன்னோடு உள்ள சமுதாயத்தாருக்கும் எனது ஸலாமும் பரக்கத்தும் ஏற்பட்ட நிலையில் நீர் (வயிற்றிலிருந்து) இறங்குவீராக" என்பது பொருளாகும். எனவே இந்த வசனத்தை ஓதி வரலாம்.
இறுதி வஸியத் :
قال الإمام أحمد: حدثنا سليمان بن حرب، حدثنا حماد بن زيد، عن الصقعب بن زهير، عن زيد بن أسلم قال حماد: أظنه عن عطاء بن يسار عن عبد الله بن عمرو قال: كنا عند رسول الله ﷺ، قال: إن نبى الله نوحًا عليه السلام لما حضرته الوفاة قال لابنه: إنى قاص عليك الوصية: آمرك باثنتين، وأنهاك عن اثنتين، آمرك بلا إله إلا الله فإن السماوات السبع والأرضين السبع لو وضعت فى كفة، ووضعت لا إله إلا إله فى كفة، رجحت بهن لا إله إلا الله. ولو أن السماوات السبع، والأرضين السبع كن حلقة مبهمة فضمتهن لا إله إلا الله، وسبحان الله وبحمده، فإن بها صلات كل شيء، وبها يرزق الخلق، وأنهاك عن الشرك والكبر".
நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் இருந்து பூமியில் இறங்கிய பிறகு நீண்ட நெடுங்காலம் தம் மக்களோடு வாழ்ந்தார்கள். இறுதியில் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அருகில் இருந்த தம் மக்கள் அனைவரையும் அழைத்து இறுதி உபதேசம் செய்தார்கள். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம் அப்பொழுது அவர்கள் கூறினார்கள். நூஹ் (அலை) அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிய போது தன் பிள்ளைகளை அழைத்து, "நான் உங்களுக்கு இறுதி உபதேசம் செய்கின்றேன்; அதில் இரண்டு விஷயங்களை செய்யும் படியும், இரண்டு விஷயங்களை செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கின்றேன்.
செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று. நீங்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு" என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருங்கள். இது ஏழு வானம் மற்றும் ஏழு பூமியை ஒரு தட்டிலும், "லாயிலாஹ இல்லல்லாஹு" எனும் சொல்லை ஒரு தட்டிலும் வைக்கப்பட்டால், "லாயிலாஹ இல்லல்லாஹ்" எனும் சொல் வைக்கப்பட்டுள்ள தட்டு தான் மேலோங்கி இருக்கும்.
மேலும் "லாயிலாஹ இல்லல்லாஹு" எனும் சொல்லையே ஏழு வானம் மற்றும் பூமியில் உள்ளவைகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. நம் அனைவரையும் இணைக்கும் ஒரே சொல் இதுதான் !
மேலும் "சுபஹானல்லாஹி வபிஹம்திஹி" எனும் சொல்லை சொல்லி வாருங்கள். இந்த சொல்தான் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் தொழுகை - வழிபாட்டு முறையாகும். இதைக் கொண்டே அனைத்து படைப்புகளுக்கும் ரிஸ்க் - உணவு - வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது.
இரண்டு விஷயங்களை செய்யக்கூடாது என்று நான் தடுத்தேன் அல்லவா! அது, 'ஷிர்க்' - இணை வைத்தலும் 'பெருமை' கொள்ளலும் ஆகும் இவற்றை விட்டும் விலகி வாழுங்கள்.
நூல்: முஸ்னது அஹ்மத்
தெற்கு ஜோர்டானில் கர்க் எனும் நகரின் மேற்குப் பகுதியில் அவர்களின் அடக்க தளம் அமைந்துள்ளது.
கி.பி.1250 களுக்கு முன்பிருந்தே இந்த அடக்கத்தளம் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. மம்லூக்கி அரசர்கள் இந்த இடத்தில் முதல் முதலாக கட்டிடமாக கட்டி இருக்கின்றார்கள்.
மேலும் கஃபாவிற்கு வெளிப்புறத்தில் ஹரம் ஷரீஃபின் ஏதோ ஒரு இடத்தில் அவர்களின் அடக்க தளம் இருப்பதாகவும் ஒரு கூற்று உள்ளது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
அரபுகளின் ஆரம்ப நபி
ஹூத் (அலை) அவர்கள் :
-_-_-_-_-_-_-_-_--_-_-_-_-_-_-_-_-_-_-
ஆத் இன மக்கள் உம்மானுக்கும் ஹளரமவ்த் எனும் இடத்திற்கும் இடையே யமன் நாட்டின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள 'முதல்லா' என்ற பகுதியில் வாழ்ந்தார்கள். இரம் நகர ஆதுகள் என்றும் முதலாம் ஆதுவாசிகள் என்றும் இவர்களை வரலாறு அடையாளப்படுத்தி இருக்கின்றது.
இவர்களிடத்தில் ஹூத் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். இவர்களின் வமிசாவழி இப்படி சொல்லப்படுகிறது.
ஹூத் பின் அப்துல்லாஹ் பின் ரபாஹ் பின் அல் ஜாரூத் பின் ஆத் பின் அவ்ஸ் பின் இரம் பின் சாம் பின் நூஹ் (அலை) என இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஹூத் எனும் சொல் ஹதா எனும் சொல்லிலிருந்து பிறந்தது. இதன் பொருள் 'நேர்வழி காட்டக் கூடியவர்'. இவர் அரபுகளின் முதல் நபி ஆவார்.
عن أبى ذر الغفارى قال أنه سمع النبى محمد يقول فى ذكر الأنبياء والمرسلين: "منهم أربعة من العرب: هود، وصالح، وشعيب، ونبيك يا أبا ذر". رواه :صحيح ابن حبان ،
அபூ தர்ருல் கிஃபாரி (ரலி) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். நபிமார்களில் நான்கு பேர் அரபியர்கள் ஆவர். ஹூத், ஸாலிஹ் , ஷுஐப் , மற்றும் உம்முடைய நபி அபூதரே!
நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த சில சமுதாயத்தினர் பூர்வீக அரபியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
அன்னை ஹாஜரா அம்மையார் அவர்கள் மக்காவில் வாழ்ந்த போது ஜுர்ஹும் சமுதாயத்தவரிடம் இருந்து அரபு மொழியை கற்றுக் கொண்டார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் தம் தாயாரிடம் இருந்து அரபு மொழியை கற்றுக் கொண்டதால் அவர்களின் தாய் மொழியாக அரபு மொழி ஆனது. மேலும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தம் மொழியை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் பேசி செம்மொழியாக ஆக்கினார்கள்.
'ஆத்' என ஏன் பெயர் வந்தது?
--------------------------------------------------
இவர்களின் உருவம் மிகப்பெரியது; இவர்கள் வாழ்ந்த வீடுகள் அதைவிடவும் பெரியது; இவர்கள் மிக வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; இவர்கள் பொருளாதாரத்தில் ஆக முன்னேறிய மக்களாக வாழ்ந்தார்கள்.
இவர்களைப் பார்க்கின்ற எவரும், "இவர்கள் இந்த உலகத்தில் இல்லாமல் போய்விடுவார்களா?" என எவரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த சமுதாய மக்கள் இன்று உலகத்தில் இல்லவே இல்லை.
'ஆத்' எனும் அரபுச் சொல்லுக்கு 'பழையபடி அதே இடத்தை அடைதல்' , மீளுதல் என்று பொருள்.
பொதுவாகவே மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்று திருக்குர்ஆன் சொல்லும். திருக்குர்ஆன் சொல்வது போலும், ஆத் எனும் சொல்லுக்கான பொருளைப் போலும் அவர்கள் فَجَعَلْنَاهُمْ غُثَاءً ۚஅவர்களை நாம் (அழித்துக்) குப்பைக் கூலங்களைப் போன்று ஆக்கினோம். 23:41 அதாவது மீண்டும் மண்ணாகவே ஆக்கிவிட்டோம் என்று கூறுகின்றான்.
ஹூத் (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஆத் கூட்டத்தினரை திருக்குர்ஆன் முதலாம் ஆத் கூட்டத்தினர் என வர்ணிக்கின்றது.
இரண்டாவது ஆத் கூட்டத்தினர் என்பவர்கள் சமூத் கூட்டத்தினரை குறிக்கும் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆத் கூட்டத்தினர் குறித்து சூரத்துல் அஃராஃப், ஹூத், முஃமின் , ஷுஅராவு, அஹ்காஃப், ஃபுஸ்ஸிலத், அந்தாரியாத், அல் கமர், அல் ஹாக்கா, அல் ஃபஜ்ர் ஆகிய பத்து அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ إِرَمَ ذَاتِ الْعِمَادِ الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلادِ وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
"நபியே! உம்மை படைத்தாள்பவன் ஆது சமூகத்தாரை என்ன செய்தான் என்று நீர் பார்த்தீரா? (89:6 ) என்று அல்லாஹ் சொல்வதை கேட்டதும் ஆது கூட்டத்தினரை என்ன செய்தான் என்பது குறித்து அல்லாஹ் சொல்லப் போகிறான் என்று பார்த்தால் அது குறித்து பேசாமல்; அவர்களுக்கு, தான் வழங்கிய அருட்கொடைகளைப் பட்டியலிடுகிறான்.
அவர்கள் 'இரம்' வாசிகள் ; உயரமான தூண்கள் கொண்ட (கட்டடங்களை எழுப்பியவர்கள்); ஊர் உலகங்களில் அவர்களைப் போன்ற உயரம் கொண்டவர்கள் படைக்கப்படவில்லை " (89:7,8.) என்று கூறுகிறான்.
ஹூத் (அலை) அவர்கள் வரலாற்றில் நாம் ஐந்து விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.1. ஆத் கூட்டத்தினர் வாழ்ந்த இடங்கள், வசித்த வீடுகள் குறித்து. 2. இவர்கள் உடல் அமைப்பு மற்றும் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள்.3. இவர்களோடு வாழ்ந்த ஹூத் அலை குறித்து. 4. ஆத் கூட்டத்தினருக்கும் ஹூத் (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் அதன் முடிவுகள். 5. ஆத் கூட்டத்தினர் எப்படி அழிக்கப்பட்டார்கள்? என்பது குறித்து. வாருங்கள் இது சம்பந்தமாக விரிவாகக் காண்போம்.
வாழ்ந்தப் பகுதி :
உம்மானுக்கும் ஹளரமவ்திற்கும் இடையில் யேமனில் முஅல்லா, ஷிஹ்ர், அல் அஹ்காஃப் என்று பல்வேறு பெயர்களால் சொல்லப்படுகின்ற இடத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் அன்றே உம்மானில் இருந்து இராக்கு வரை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
"மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான்; ஆரம்பத்தில் வேட்டையாடி வாழ்ந்தான்; நிர்வாணமாக வாழ்ந்தான்; ஒன்றும் அறியாதவனாக இருந்தான்; கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி பெற்று முழுமையான அறிவையும் ஆற்றலையும் பெற்று மனிதன் இன்று வாழ்கிறான்" என்று சொல்லுகிறார்கள்.
ஆனால் இதுவெல்லாம் உண்மை அல்ல! நாகரீகத்தின் ஆக உயர்ந்த நிலையில் இந்த மக்கள் வாழ்ந்ததாக திருக்குர்ஆனும் நபி மொழிகளும் சாட்சி சொல்கிறது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் வாழ்ந்து மறைந்த 700 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சமுதாய மக்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரான நிக்கோலஸ் என்பவர் நாசா ஆராய்ச்சி நிறுவனத்தினரை அணுகி, உம்மான் மற்றும் ஹளரமவ்த் இடங்களுக்கு இடையே உள்ள நிலப்பரப்பை சாட்டிலைட் மூலம் படம் எடுத்துத் தர வேண்டும்; எடுக்கப்பட்ட படங்களைச் சார்ந்த ஆய்வறிக்கையையும் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் அவர்கள் அந்த நிலப்பரப்பை ஆய்வு செய்தபோது 12 மீட்டர் நிலத்திற்குக் கீழ் இந்த நகரம் கட்டுக்கோப்பாக இருக்கிறது என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆனால் இந்த நிலப்பரப்பை அகழ்வாராய்ச்சி செய்யும் வகையில் இன்னும் இந்த நிலப்பரப்பை தோண்டவில்லை. முறையான அகழ்வாராய்ச்சி நடைபெறவில்லை.
ஆத் கூட்டத்தினரின் உடல் அமைப்பு:
தமிழ் இதிகாசங்கள், இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றில் அரக்கர்கள் குறித்து கூறப்பட்டுள்ளதை நாம் அறிவோம். தீபாவளியன்று நரகாசுரனை அழிப்பதற்காகவே நெருப்பும் பட்டாசும் வைத்து கொண்டாடப்படுவதையும் நாம் அறிவோம். நரகாசுரன் அவ்வளவு உயரமாக இருந்ததாக தமிழ் இலக்கியங்கள் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அது போன்று தான் ஆது கூட்டத்தினர் 120 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களில் ஆகக் குள்ளமானவர் 60 அடி இருப்பார் எனக் கூறப்படுகிறது. இவர்களின் தோற்றம் பயத்தை உண்டு பண்ணும் வகையில் இருக்கும்.
இவர்கள் சாப்பிடுவதற்கு நமது ஊரில் உள்ள கொய்யாப்பழம், ஆரஞ்சு பழம், ஆப்பிள் பழம் போன்ற பருமனில் (சைஸில்) இருந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் அவர்களுக்காக விவசாயம் செய்யப்பட்டு வந்திருக்கும்.
ஆனால் அவர்களின் உயரத்திற்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அல்லாஹ் வளமாக படைத்திருந்தான். அவர்களின் நலனில் அல்லாஹ் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டான்.
ஆத் கூட்டத்தினரைப் போல் பயங்கரமான உருவத்திலும், உயரத்திலும் நபி ஹூது (அலை) அவர்கள் இல்லை. அனைவரும் திரும்பிப் பார்க்கும் படியான அழகுத் தோற்றத்திலும், ஆது கூட்டத்தில் ஒருவர் என்று சொல்லுகிற அளவிற்கு நடுநிலையான உயரத்திலும் ஹூது (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்களின் உடல் முழுவதும் முடி அதிகமாகக் காணப்பட்டது.
நபி (ஸல்) அவர்களைப் போல் சிறு பிராயத்திலிருந்தே அந்த மக்களோடு ஒன்றி வாழாமல் ஒதுங்கி வாழ்ந்தார்கள்.
அவர்கள் வழிபடும் சிலைகளை இவர் வழிப்படவில்லை. தனித்திருந்து ஆன்மீகத்தில் உச்சநிலையை அடைய முயற்சி செய்து வந்தார்கள். அனைத்து நபிமார்களைப் போலவே இவருக்கும் 40 ஆவது வயதில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ அருளப்பட்டு நபியாக ஆனார்கள்.
ஹூத் (அலை) அவர்கள் குறித்து திருக்குர்ஆனில் பத்து சூராக்களில் திரும்பத் திரும்ப அல்லாஹ் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நமக்கு ஹூத் (அலை) அவர்கள் குறித்த வரலாற்றை அல்லாஹ் ஏன் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்?
ஆத் சமுதாய மக்கள் செய்த குற்றங்களைப் போன்றே நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாமும் செய்து வருகின்றோம் ; அது தொடருமானால் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனைகள் நமக்கும் வழங்கப்படும் என்பதை எச்சரிக்கவே திரும்பத் திரும்ப சொல்லப்படுவதாக இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆதம் (அலை) மற்றும் அவர்களின் சமுதாய மக்கள் இருந்த உயரம் போலவே ஆத் சமுதாய மக்களும் உயரமாக இருந்தார்கள். ஏறத்தாழ ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் ஹூத் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முறை அல்லாஹ் உயரமான மனிதர்களைப் படைத்து அவர்கள் குறித்த வரலாற்றையும் திருக்குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கின்றான்.
ஹூத் (அலை) அவர்கள் 760 வருடங்கள் வாழ்ந்தார்கள் அதில் 720 வருடம் நபியாக மட்டுமே சேவையாற்றினார்கள். அவர்களின் மனைவிப் பெயர் உர்வா என்றும் மீஸாபா என்றும் கூறப்படுகிறது.
வணங்காமல் வளமாக வாழ்ந்தவர்கள்:
ஹளரமவ்த் என்றால் மரணம் வந்துவிட்டது என்று பொருள். நபி ஹூத் (அலை) அவர்கள் இங்கு தான் மரணித்தார்கள். இங்குதான் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அரபு வகை உணவு மந்தி. இதனை இந்தப் பகுதி மக்கள் மிகச் சுவையாக சமைப்பார்கள். அவற்றை அவர்கள் மண்ணுக்கு அடியில் வைத்து தான் சமைப்பார்கள். மண்ணாகப் போன மக்களின் சந்ததியினர் இன்று உணவைக் கூட மண்ணுக்கு அடியில் வைத்துதான் சமைக்கிறார்கள்.
அல் அஹ்காஃப் - மணல், மலைப் போல் குவிந்து கிடக்கும் பகுதி என்று பொருள். அல் அஹ்காஃப் எனும் இந்தப் பள்ளத்தாக்கு மிக மோசமானது.
யர்ஹீஸ் எனும் கிணற்றில் முஷ்ரிக்குகள் - இணைவைப்பாளர்கள் தள்ளப்பட்டு அழிக்கப்பட்டார்கள். அந்தக் கிணறு இருக்கும் பகுதியும் ஹளரமவ்த் ஏரியாதான்; எனவே இந்தப் பகுதிகளைக் கடந்துச் செல்வோர் விரைந்து கடந்துச் செல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
அவர்களின் தொழில் :
பெரும் பெரும் அணைகளை கட்டி அவற்றிலிருந்து பல வாய்க்கால்களை வெட்டி மிகப்பெரிய அளவில் விவசாயம் செய்தார்கள். மண்பாண்டங்களை தமக்காகவும் செய்து கொண்டார்கள். பானைகளை செய்து விற்பனையும் செய்தார்கள்.
நவமணிகளான மாணிக்கம், மரகதம், நவரத்தினம், கோமேதகம், வைரம் போன்ற பல்வேறு கல் வியாபாரங்களையும் மிகப்பெரிய அளவில் செய்தார்கள்.
இவர்களில் ஒருவர் தன் காலினால் கருங்கல் போன்ற வலிமையான பாறையை ஓங்கி மிதித்தால் அதில் அவருடைய பாதம் பதிந்துவிடும். அதே நேரம் அந்த மிகப்பெரிய கல்லின் பாதிப் பகுதி பூமிக்கு உள்ளே சென்று விடும்.
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلادِ
இவர்களைப் போன்று உலகத்தில் வேறு யாரும் படைக்கப்படவில்லை 89:8
அல்லாஹ் சொல்வது போல் அவர்கள் மிக வலிமையானவர்களாக படைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களுக்கு முன்னும் இவர்களுக்குப் பின்னும் இவர்களைப் போன்று யாரும் படைக்கப்படவில்லை.
நம்மில் ஒருவர் ஆஜானுபவமாக இருந்தால் பெருமை கொள்கிறார்; வித்யாசமாக நடந்துக் கொள்கிறார். அப்படி என்றால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என யோசித்துப் பாருங்கள்.
இவர்கள் ஆணவத்தின் உச்சத்தில் வாழ்ந்தார்கள். இவர்களைப் போன்று பெருமை கொண்டவர்கள் உலகத்தில் யாரும் இல்லை.
மிக உயரமான இவர்கள் தமக்கான வீடுகளை மாளிகைப் போல் கட்டிக் கொண்டதாக வரலாறு சொல்லிக் காட்டுகிறது.
மிக உயரமான மலைகளில் இருந்து உயரமான கற்களைக் கொண்டு வந்து அதில் ஒரே தூணாகச் செய்வார்கள்.
பின்னர் வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையானக் கற்களை செதுக்கிக் கொண்டு மாளிகைகளைப் போல் வீடுகளை கட்டி வாழ்ந்தார்கள்.
அந்த வீட்டை அழகுப்படுத்த வெள்ளி, தங்கம் மற்றும் வைர வைடூரியங்களைக் கொண்டு வீட்டை அலங்கரித்தார்கள். தம் வீடுகளில் பல்வேறு அழகுச் சாதனங்களையும், நினைவுச் சின்னங்களையும் செய்து வைத்தார்கள்.
அவர்களில் ஆள் ஒருவர் ஒரு ஒட்டகத்தை ஒரு நேரத்திற்குச் சாப்பிட்டு விடுவார். அல்லாஹ் அவர்களுக்கு ஒட்டக இனப்பெருக்கத்தை அவ்வளவு அதிகமாக வழங்கி இருந்தான்.
உருவ வழிபாடு :
நூஹ் (அலை) அவர்கள் மரணித்ததில் இருந்து 700 ஆண்டுகளுக்குப் பிறகு ஹூத் (அலை) அவர்கள் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள்! தம் நாற்பதாவது வயதில் நபித்துவத்தை பெற்று ஆது சமூக மக்களிடையே மிக நீண்ட வருடங்கள் நபித்துவப் பணியை மேற்கொண்டு இருந்தார்கள்.
வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு ஹூத் (அலை) அவர்களின் உச்சகட்ட பிரச்சாரம் ஏற்பட்ட காலம் வரை இடைப்பட்ட காலத்தில் எவரும் மரணித்ததே இல்லை. அதாவது சுமார் 700 ஆண்டுகள் யாரும் மரணிக்கவே இல்லை; உயிர்களை வாங்கும் இஜ்ராயீல் (அலை) அவர்கள் இந்தப் பக்கம் வரவே இல்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதனால் அவர்கள் ஆணவம், பெருமை, அழிச்சாட்டியம் ஆகியவற்றின் மொத்த குத்தகைதாரர்களாக வாழ்ந்தார்கள்.
இவர்கள் ஸத்து, ஸமூத், ஹர்ரா ஆகிய மூன்று தெய்வங்களை வணங்கி வழிபட்டு வந்தார்கள். மிகப்பெரிய கோவில்களையும் அதில் பூஜை - புனஸ்காரங்களையும், படையல் - கும்பாபிஷேகங்களையும் நடத்தி வந்தார்கள்.
இவர்களின் அரசன் ஜல்ஜான் என்பவன் இருந்தான். அவன் தன் அரசவையில் அவன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும்போது அவனுடைய மந்திரிகளும் அரசவை ஊழியர்களும் பொதுமக்களும் இருந்தார்கள்.
இந்த நிலையில் ஹூத் (அலை) அவர்கள் அரசவைக்குள் நுழைந்து "ஆது மக்களே!" என அழைத்தார்கள்.
அரசனும், மந்திரியும், அரசு ஊழியர்களும், "யார் தம்மை பெயர் சொல்லி அழைப்பது?" எனத் திரும்பிப் பார்த்தார்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட பெரிய மனிதர்களை ஊரில் எவரும் இதுவரை பெயர்ச் சொல்லி அழைத்ததே இல்லை.
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً ۖ
ஆது கூட்டத்தினர் பூமியில் வரைமுறை இல்லாமல் பெருமை அடித்தார்கள்; "எங்களை விட சக்தி மிக்கவர் யார் இருக்கிறார்?" என்று கேட்டார்கள்;
அவர்களுக்கு அல்லாஹ் பதில் கூறுகிறான்;
أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً ۖ وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ
நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட சக்தி வாய்ந்தவனாக இருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நமது ஆதாரங்களை மறுத்தவர்களாகவே இருந்தார்கள்.41: 15
பின்னர் ஹூத் (அலை) அவர்கள் அந்த சபையோர் முன்னிலையில்,
قَالَ يَا قَوْم اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ اعراف ٦٥
என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்; உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரிவன் வேறு யாருமில்லை; நீங்கள் இறையச்சம் கொள்ள மாட்டீர்களா?" என்று கேட்டார். 7:65
"ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" எனும் சொல் நமக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். இதையே ஒரு கோவிலுக்குள் சென்று சொல்லிப் பாருங்கள்; அதன் வலிமையை நீங்கள் உணர்வீர்கள். ஆம்! அவர்கள் உங்களை அடித்துத் துன்புறுத்தி துவசம் செய்து விடுவார்கள்.
ஹூத் (அலை) அவர்கள் அரசவையில் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த கூட்டத்தில் சிலர்,
قَالَ الْمَلأُ الَّذِينَ كَفَرُواْ مِن قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي سَفَاهَةٍ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكَاذِبِينَ
அவர் சமூகத்தாரில் இறைவனை நிராகரித்த ஒரு பிரிவினர், "நிச்சயமாக நீர் அறியாமையில் இருப்பதாக நாங்கள் நினைக்கின்றோம்; மேலும் நிச்சயமாக நீர் பொய்யுரைப்பவர்களில் இருக்கின்றீர் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு ஹூத் (அலை) அவர்கள்,
قَالَ يَا قَوْمِ لَيْسَ بِي سَفَاهَةٌ وَلَكِنِّي رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
என் சமூகத்தாரே! அறியாமை என்னிடம் இல்லை; எனினும் நான் அகிலத்தைப் படைத்தாள்பவனின் தூதுவராக இருக்கிறேன்.
أُبَلِّغُكُمْ رِسَالاتِ رَبِّي وَأَنَاْ لَكُمْ نَاصِحٌ أَمِينٌ
என்னை படைத்தாள்பவனின் தூது செய்திகளை உங்களிடம் எடுத்துரைக்கின்றேன்; நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய நல்லுபதேசி ஆவேன்" என்று கூறினார்.7:67,68
நபி ஹூத் (அலை) அவர்கள் இவ்வாறு பிரச்சாரம் செய்ததும் ஜனாஹத் என்பவர் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். அது! ஹூத் (அலை) அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
பின்னர் இறை மறுப்பாளர்களில் ஒருவர், "இவரை போய் நபி என்று நம்புகிறீர்களா? இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான்! நாம் சாப்பிடுவதையே இவரும் சாப்பிடுகிறார்; நம்மைப் போலவே இவரும் குடிக்கின்றார்; இதுவரை நம்மில் யாரும் மரணிக்கவே இல்லை; நமக்கு மரணம் வரப்போவதுமில்லை; நம்மில் தினம் தினம் ஆயிரம் பேர் பிறக்கிறார்கள்; அப்படி இருக்க நாம் எப்படி மரணிப்போம்" என ஒருவர் கேட்டார்.
இதைக் கேட்டதும் ஈமான் கொண்ட சிலர் மீண்டும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.
மேலும் ஒரு இறை மறுப்பாளர், "இந்த ஹூத்! மறு உலகம் இருப்பதாகவும், மரணத்திற்குப் பிறகு மண் மனிதனைத் தின்று மக்கச் செய்துவிடும் எனவும், கப்ரில் கேள்வி கணக்குகள் விசாரிக்கப்படும் எனவும், சொர்க்கம் நரகம் இருப்பதாகவும் கூறுகிறார்; இதையெல்லாம் நம்பும்படியாகவா இருக்கின்றது?" என்று கேட்டார்.
அவ்வளவுதான் அங்கிருந்த ஆணவக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹூத் (அலை) அவர்களை கடுமையாகத் தாக்கினார்கள். அதனால் அவர்கள் சுய நினைவு இழந்து விட்டார்கள். பின்னர் ஈமான் கொண்ட சிலர் அவரை தூக்கிச் சென்று அவரது வீட்டில் கிடத்தினார்கள்.
சுய நினைவு திரும்பி, உடல் வலுப்பெற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு அதே சபையினரிடம் வந்து, " பூமியில் அல்லாஹ் உங்களை தன் பிரதிநிதியாக ஆக்கி இருக்கின்றான்; விசாலமான வசதிகளை வழங்கி இருக்கின்றான்; எவரும் நினைத்துப் பார்த்திராத வளங்களை உங்களுக்கு வாரி வழங்கி இருக்கின்றான்; அவனை நீங்கள் வணங்கி வழிபட்டு வந்தால் வெற்றி பெறுவீர்கள்" என்று மீண்டும் முழக்கமிட்டார்கள்.
يَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى الَّذِي فَطَرَنِي ۚ أَفَلَا تَعْقِلُونَ - وَيَا قَوْمِ اسْتَغْفِرُواْ رَبَّكُمْ ثُمَّ تُوبُواْ إِلَيْهِ
(மேலும்) என் சமூகத்தாரே! இந்த இறை போதனைக்காக உங்களிடம் கூலி எதையும் நான் கேட்கவில்லை; என் கூலி என்னை படைத்தவனிடமே அன்றி இல்லை; நீங்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டாமா?
என் சமூகத்தாரே! உங்களை படைத்தாள்பவனிடம் நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்; அவன் பக்கமே மீளுங்கள்;" என்று கூறினார். 11:51,52
நபி ஹூத் (அலை) அவர்கள் மேற்கண்டவாறு கூறியதும் அந்த மக்கள் மீண்டும் அடித்துத் துன்புறுத்தினார்கள். இப்பொழுது அடி கொஞ்சம் பலமாகவே இருந்தது. நபி ஹூத் (அலை) அவர்கள் மரணத்தின் வாசலை தொட்டிருந்தார்கள்.
பின்னர் அவரின் ஆதரவாளர்கள் வீட்டில் சென்று கிடத்தினார்கள். சில தினங்களில் நினைவு திரும்பியதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ வந்தது.
"நபியே! இப்பொழுதே எழுந்துச் சென்று உம் மக்களை எச்சரிக்கை செய்வீராக!" என்று அல்லாஹ் கூறினான்.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; "நபிமார்களின் நிலை மிகவும் மோசமானது; எப்படி என்றால் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் அவர்களுக்கு ஓய்வே இல்லை; நபியே! கடலில் நீந்துபவனுக்கு ஓய்வு கிடையாது; அதுபோலத்தான்!"
நூல்: முஸ்னது அஹ்மத்
கடலில் நீந்துகின்றவன் இரவிலும் பகலிலும் எல்லா நேரத்திலும் நீந்திக் கொண்டே தான் இருக்க வேண்டும். அவனுக்கு வேறு வழி இல்லை.
தரையில் செல்கிறவன் நிழலில் அமரலாம்; ஒரு வண்டியில் லிஃப்ட் கேட்டுச் செல்லலாம்; ஆனால் கடலில் நீந்துகிறவனுக்கு நீந்துவதைத் தவிர வேறு வழி இல்லை; அதுபோலத்தான் நபிமார்களின் பணி!
அல்லாஹ்வின் உத்தரவை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்ட ஹூத் (அலை) அவர்கள் மீண்டும் தம் சமூகத்தாரிடம் சென்று தஃவா - அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். அவர்கள் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை.
பொறுமை இழந்த பூமான் நபி ஹூத் (அலை) அவர்கள், தம் சமூகத்தினருக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் கையேந்தினார்கள்.
கடுமையான பஞ்சம் :
அந்த மக்களிடையே நீண்ட காலம் இறைபணியை மேற்கொண்ட இறைத் தூதராகிய ஹூத் (அலை) அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்; உண்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் ஒப்புக்கொண்டான்.
அந்த ஊரில் மூன்று ஆண்டுகள் கடுமையான பஞ்சம் நிலவியது. மிருகங்கள் செத்து மடிந்தன; விவசாயம் மறந்து போகும் அளவிற்கு வறட்சி நீடித்தது; குளம், ஏரி, வாய்க்கால், ஆறு போன்ற அனைத்து நீர் நிலைகளும் வற்றியது; நிலத்தடியில் இருந்து அவ்வளவு எளிதாக தண்ணீரை எடுக்க இயலவில்லை; இந்நிலையில் அவ்வூரில் வசித்த மனிதர்களுக்கு தாகம் அதிகரித்தது.
மிக உயரமான, அகலமான உடல் அமைப்புக் கொண்ட அவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டுமானால் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என யோசித்துப் பாருங்கள்.
ஹூத் (அலை) அவர்கள்;
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ
என் சமூகத்தாரே! உங்களைப் படைத்தாள்பவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்; அவன் பக்கமே (தவ்பா செய்து) மீளுங்கள்; அவன் உங்களுக்கு தொடராக மழை பொழியச் செய்வான்; உங்கள் சக்தியை விட மேலும் சக்தியை அதிகரித்துத் தருவான்; நீங்கள் பாவங்கள் செய்தவர்களாக புறக்கணித்துச் செல்ல வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
பஞ்சம் ஏற்பட்டால் தவ்பா செய்ய வேண்டும் எனவும், வறுமை ஏற்பட்டால் இஸ்திங்ஃபார் - பாவமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவார்கள்.
இங்கே இந்த சமுதாய மக்களுக்கு இரண்டும் ஏற்பட்டு இருப்பதால் அல்லாஹ் தவ்பாவையும் இஸ்திங்ஃபாரையும் செய்யச் சொல்கிறான்.
ஹூத் (அலை) அவர்களின் உபதேசத்தை கேட்டதும்,
قَالُوا يَا هُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِي آلِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ
ஹூதே! நீர் உமது வாதத்திற்கான எந்த ஆதாரத்தையும், (அற்புதத்தையும்) எம்மிடம் கொண்டு வரவில்லை; உம் பேச்சைக் கேட்டு எங்கள் தெய்வங்களை நாங்கள் விடுபவர்களும் அல்லர்; உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களும் அல்லர்;" என்று அவர்கள் கூறினார்கள்.
நீண்ட காலம் வாழ்ந்த ஹூத் (அலை) அவர்கள் எந்த முஃஜிஸா - அற்புதத்தையும் அந்த மக்களிடம் செய்து காட்டவில்லை எனவும், அற்புதங்களை நிகழ்தாமலும் நபிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனவும் இந்த வசனம் சொல்லிக் காட்டுகின்றது.
பின்னரும் அவர்கள் ஹூத் (அலை) அவர்களை கடுமையாக தாக்கினார்கள். மீண்டும் அவருடைய ஆதரவாளர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்று கிடத்தினார்கள்.
பின்னர் மயக்கம் தெளிந்ததும் அல்லாஹ்விடம், "இறைவா! இவர்களின் மூடத்தனத்திற்கு முன்னால் நான் செயலிழந்து நிற்கின்றேன்; அவர்களின் அறியாமை என்னை நிலைகுலையச் செய்கிறது; என்னால் அவர்களை சகித்துக் கொள்ள இயலவில்லை; நீ ஏதாகிலும் செய்!" என்று தூஆ - பிரார்த்தனைச் செய்தார்கள்.
உடனே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து, "ஹூதே! உமக்கு அதிகமான சக்தி வழங்கப்பட்டு விட்டது; உமக்கு (உயர்ந்த) சப்தத்தையும், (அவர்களுக்கு இடி முழக்கம் மூலம் உயர்ந்த) சப்தத்தினாலான அழிவையும் வழங்கி விட்டோம்;
எனவே நீங்கள் அச்சப்படாமல் சென்று அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுங்கள்" என்று கூறினார்.
ஹூத் (அலை) அவர்கள் மீண்டும் அவர்களின் சபைக்குச் சென்று உயர்ந்த குரலில் அழைப்பு கொடுத்த போது அவர்களில் ஒருவர் , " நாங்கள் திட்டியும், அடித்துத் துன்புறுத்தியும், கேவலப்படுத்தியும் மீண்டும் மீண்டும் நீர் வருகிறீர் என்றால், "எங்களின் தெய்வம் உமக்கு ஏதோ செய்து விட்டது; உமக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது; அதனால் தான் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றீர்" என்று கூறினார்கள்.
விரும்பிக் கேட்ட வேதனை :
"மேலும் இறைவனின் வேதனை வந்துவிடும் என அடிக்கடி சொல்லி எங்களைப் பூச்சாண்டி காட்டுகிறீரே! அந்த வேதனையை வரச்சொல்" என அவர்களாக தம் வாய் மூலம் வரவேற்றார்கள்.
எதை அவர்கள் பேசக்கூடாது என்று ஹூத் (அலை) அவர்கள் நினைத்திருந்தார்களோ அதையே அவர்கள் பேசி விட்டார்கள்.
உடனே ஹூத் (அலை) அவர்கள், அல்லாஹ் எதையும் செய்ய மாட்டான் என்கிற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது; இனி இவர்களை விட்டு வைத்தால் சரியாக வராது என்கிற எண்ணத்தோடு அங்கிருந்துப் புறப்பட்டு 'வாதீ நூஹ் ' எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கே நீண்ட நேரம் அமர்ந்திருந்து தம் சமுதாயத்தினர் குறித்து நீண்ட நேரம் யோசித்தார்கள். தண்ணீர் பருகி தன் கோபத்தையும் தன் தாகத்தையும் தனித்து கொண்டார்கள்.
பின்னர் அல்லாஹ்விடத்தில் நிதானமாக துஆ செய்தார்கள். "இறைவா! உன் மீது இவர்களுக்கு நல்லெண்ணம் கிடையாது; நீ இவர்களை எதுவும் செய்யமாட்டாய் என்கிற தைரியம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது; நானும் ஏழு நூறு வருடங்கள் இவர்களுக்காக தஃவா அழைப்புப் பணி செய்துவிட்டேன்; மூன்று வருடம் நீ பஞ்சத்தை வழங்கினாய்; ஆனாலும் இவர்கள் ஈமான் கொள்ளவில்லை; எனவே இவர்களுக்கு நீ இதுவரை யாருக்கும் வழங்கியிராத தண்டனையை வழங்கு.
நபி ஹூத் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்து முடித்ததும் அல்லாஹ் அதை ஒப்புக்கொண்டான்.
உடனே அல்லாஹ், "நபியே! நீங்களும் உங்களோடு ஈமான் கொண்டவர்களும் இந்த மலையின் மீது ஏறிக் கொள்ளுங்கள்;" எனக் கூறினான்.
ஹூத் (அலை) அவர்கள், ஈமான் கொண்ட நான்கு ஆயிரம் நபர்களை அழைத்துக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டார்கள்.
ஒருவார காலமாக ஹூது நபியவும் அவரின் ஆதரவாளர்களும் ஊருக்குள் இல்லாததை உணர்ந்த அரசனும் ஊர் பெரிய மனிதர்களும் கொஞ்சம் அச்சப்பட்டார்கள்.
ஊர் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இவர்களில் இருந்து ஒரு குழுவினர் மக்காவிற்குச் சென்று கஃபா இருக்கும் இடத்தில் உள்ள மணல்மேட்டை தவாஃப் செய்துவிட்டு அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைச் செய்வார்கள்; அவர்களுடைய தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து வைப்பான்; இது அவர்களின் வளமையாக இருந்தது.
இப்பொழுது அவர்களுக்கு இதை நாம் செய்தால் என்ன என்கிற எண்ணம் மேலிட்டு ஆலோசனைச் செய்தார்கள்.
தங்களில் உள்ள நல்ல பத்து மனிதர்களைத் தேர்வு செய்து மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். மக்காவில் அமாலிக் எனும் சமுதாய மக்களின் தலைவராக முஆவியா பின் பக்ர் என்பவர் இருந்தார். இவருடைய தாய் (ஜல்கத்தா) ஆத் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே அந்த வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையே உறவு முறை இருந்தது.
பத்து நபர்களும் முஆவியா அவர்களின் விருந்தினராக தங்கி உண்டு மகிழ்ந்து, குடித்து கும்மாளம் அடித்து தன்னை மறந்துக் கிடந்தார்கள். உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் தாராளமாகக் கிடைத்ததால் 'சோறு கிடைத்த இடமே சொர்க்கம்' என இருந்து விட்டார்கள்; எதற்காக வந்தோம் என்பதையே மறந்து விட்டார்கள்.
முஆவியா அவர்கள் வந்திருந்த உறவினர்களுக்கு தாராளமாக உபச்சாரங்கள் செய்தாலும் இவர்கள் வந்த நோக்கம் நிறைவேறவில்லையே என்ற வருத்தத்தோடு இருந்தார். ஆத் சமூக மக்கள் தாகத்தோடும் பசியோடும் இருக்கிறார்களே என வருத்தப்பட்டார்.
"நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்" என நேரடியாகச் சொல்ல மனம் இல்லாமல், தன் அடிமைப் பெண்கள் அவர்களுக்கு எதிரே இரவில் ஆடும் போது பாடல் வழியே அவர்களுக்கு அப்பெண்கள் நினைவுறுத்தும் படியான கவிதையை எழுதி கொடுத்து பாடச் செய்தார்.
உடனே அவர்கள் தாம் வந்த வேலையை உணர்ந்து அனைவரும் கஃபாவிற்குச் சென்றார்கள். தவாஃப் செய்துவிட்டு கைல் பின் இத்ர் என்பவர் பிரார்த்தனைச் செய்தார்கள்.
கார்முகிலில் கடும் தண்டனை :
உடனே வெண்முகில் (வெள்ளை மேகம்) செம்முகில் (சிவப்பு மேகம்) கார்முகில் (கருமேகம்) என்ற மூன்று மேகங்கள் உருவாகி அவர்கள் எதிரே காட்சியளித்தது.
பிறகு வானத்திலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. உம் சமுதாயத்திற்காக இந்த மேகங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" அப்போது கைல் , " நான் கருமேகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்; ஏனென்றால் அதுதான் அதிக மழையை கொடுக்கும்" என்று கூறினார்.
மழைத்தரும் மேகமா இது?
ஆத் கூட்டத்தினர் வாழ்ந்த பகுதியில் முஹீஸ் என்ற பள்ளத்தாக்கில் இருந்து கருமேகம் புறப்பட்டு வந்தது.
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
தங்களின் பள்ளத்தாக்குகளை நோக்கி மேகங்கள் திரண்டு வருவதை அவர்கள் கண்டபோது, "இது எங்களுக்கு மழை தரும் மேகம்" என்று கூறினார்கள்; "இல்லை! நீங்கள் விரைவாக எதைத் தேடினீர்களோ அதுதான் இது! அது ஒரு சுழல் காற்று; அதில் வதைக்கும் வேதனை உள்ளது" (என்றும் ஹூத் கூறினார்.) 46:24
மஹ்த் எனும் பெண் மேகம் வருவதைப் பார்த்ததும் அதன் உண்மை நிலையை விளங்கிக் கொண்டு, கத்தி கூச்சலிட்டாள்; மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டாள்; சிறிது நேரம் கழித்து அவள் தெளிவடைந்ததும் மக்கள் அவரிடம், "மஹ்தே! நீ எதைக் கண்டாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், "அதில் தீப்பொறியை கண்டேன்; அதனை மனிதர்கள் முன்னால் இழுத்துச் செல்கின்றனர்" என்று கூறினாள். அப்பொழுதுதான் அவர்கள் லேசாக அச்சப்பட்டார்கள்.
புதன்கிழமை அன்று வந்த மேகம் அந்த ஊரை சூழ்ந்து இருந்தது. ஆனால் மழை பொழியவில்லை. லேசாகக் குளிர்ந்தக் காற்று அவர்கள் மீது வீசியது. இதுவரை வெப்பக் காற்று வீசி வந்த இடத்தில் குளிர்ந்தக் காற்று அவர்களை மகிழ்வித்தது.
லேசாக வீசியக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அதாவது பத்து கிலோமீட்டர், இருபது கிலோ மீட்டர், முப்பது கிலோ மீட்டர் என காற்றின் வேகம் கூடிக் கொண்டே போனது.
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا
இறுதியாக அவர்கள் மீது இந்தக் காற்று "ஏழு இரவுகள் எட்டு பகல்கள் அக்காற்றை அவர்கள் மீது அல்லாஹ் தொடர்ந்து வீசச் செய்தான்; 69:7"
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துச் சென்ற காற்று ஒரு கட்டத்தில் இன்னும் பூமியில் பெயரிடப்படாத அளவினால் ஆன பெருங்காற்று வீசியது. காற்றின் வேகத்தைப் பொறுத்து அதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள் அதைப் பாருங்கள்.
காற்று வீசும் வேகம்
பொருத்து பெயர்கள்:
6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று.
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்'.
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்'.
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று'.
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று'.
100 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று'.
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயல்காற்று'.
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக்காற்று'.
காற்று எங்களுக்கு தண்டனையா?
ஹூத் (அலை) அவர்கள் தம் மக்களிடம், "அல்லாஹ் உங்களுக்கு காற்றின் மூலம் தண்டனை வழங்க நாடி இருக்கிறான் என்று சொன்னபோது அவர்கள் கேளியாகச் சிரித்தார்கள். இவ்வளவு பெரிய உருவத்தோடு இருக்கக்கூடிய எங்களைக் காற்று என்ன செய்துவிடும்" என்று நகைத்தார்கள்.
இப்பொழுது சுழலும் சூறாவளி காற்று அவர்கள் மீது தொடர்ந்து வீசி வந்ததால் செய்வதறியாது திணறினார்கள்.
தமது பெண்களையும், குழந்தைகளையும், வீட்டுக்குள் வைத்து தாழிட்டார்கள். மலை போன்று உயரமான தாழிட்ட தமது வீடுகளுக்கு எதிரே அனைவரும் கைகோர்த்து நின்றார்கள். கைகோர்த்து நின்றால் அனைவரையும் இந்தக் காற்றால் தூக்க இயலாது என்று நம்பினார்கள்.
இவர்கள் கைகோர்த்து நிற்கும் பொழுது அவர்களின் ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், உயரமான மரங்கள் அனைத்தும் அவர்கள் கண் எதிரே பரந்தன; பந்தாடப்பட்டன.
அவர்களின் வீட்டு கதவுகளுக்கு கீழால் உள்ள துவாரத்தின் வழியாக காற்று நுழைந்து, வீட்டில் இருந்த அனைவரையும் வெளியே இழுத்து வந்து, அவர்கள் கண்ணெதிரே தம் குடும்பத்தாரின் உடலில் இருந்து தலையைப் பிடுங்கி வீசியது. காற்று அவர்களின் உடலை மட்டும் சுழற்றி பூமியில் வீசியது;
அந்தப் பிரேதங்களின் மீது மணல் கொட்டப்பட்டது; இதையும் அவர்கள் பார்த்தார்கள்.
பின்னர் நின்றிருந்தவர்களையும் மரம் பிடுங்கப்படுவது போல் பிடுங்கி தலை வேறு முண்டம் வேறாக வீசி எறியப்பட்டார்கள்.
சிலர் தம் முழங்கால் வரை பள்ளம் பறித்து நின்றிருந்தார்கள். அப்படி நின்று கொண்டால் காற்று நம்மை எதுவும் செய்யாது என்று நினைத்திருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மீது அல்லாஹ் மணலைக் கொண்டு வந்து கொட்டி, அப்படியே அவர்களை புதைத்து விட்டான்.
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ
فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
فَهَلْ تَرَى لَهُم مِّن بَاقِيَةٍ
ஆது சமூகத்தார் கடும் புயல் காற்றால் அளிக்கப்பட்டார்கள்;
அவர்கள் வேரோடு சாய்ந்து விட்ட பேரீத்தம் மரங்களின் அடிபாகங்களைப் போன்று சடலங்கலாக அந்த சமூகத்தினர் வீழ்ந்து கிடந்தார்கள்;
நபியே! அவர்களில் (இறக்காமல்) மிஞ்சி இருப்பவர்களில் எவரையும் நீர் இப்போது பார்த்தீரா? 69:7,8.
ஆது சமூக மக்களில் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியில் கொண்டு வந்து அல்லாஹ் புதைத்தான். ஆனால் அந்த வீடுகளை அல்லாஹ் விட்டு வைத்திருக்கின்றான். அவை இன்றும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக இருக்கின்றது என்பதை முன்பே நான் குறிப்பிட்டு இருந்தேன். அது குறித்து அல்லாஹ் கூறுகிறான்.
تُدَمِّرُ كُلَّ شَيْءٍ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا لا يُرَى إِلاَّ مَسَاكِنُهُمْ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ
அந்தக் காற்று தன்னைப் படைத்தாள்பவனின் கட்டளைக்கிணங்க எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கியது; வீடுகளைத் தவிர வேறு மனிதர்கள் எவரும் காணப்படாதவாறு அவர்களின் காலைப்பொழுது விடிந்தது; பாவிகளான சமூகத்தாருக்கு இவ்வாறு நாம் தண்டனை தருவோம். 46:25
காற்று குறித்து நபிகள் நாயகம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தென்றல் காற்றின் மூலம் நான் உதவி செய்யப்பட்டுள்ளேன்; ஆத் கூட்டத்தினர் புயல் காற்றின் மூலம் அழிக்கப்பட்டார்கள். நூல்: புகாரி
காற்று கொஞ்சம் அதிகமாக வீசினால் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழ ஆரம்பித்து விடுவார்கள்; அல்லாஹ்விடத்தில் அழுது நீண்ட நேரம் பிரார்த்தனைச் செய்வார்கள்; அந்த காற்று நிற்கின்ற வரை பள்ளிவாசலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. எனவே காற்றை சாதாரணமாக நினைத்து விடாதீர். ஒரு ஹதீஸைப் பாருங்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருப்பதாவது; நபி (ஸல்) அவர்கள், காற்று வேகமாக வீசினால்,
"இறைவா! இதன் நன்மையையும், இதிலுள்ள நன்மையையும், இது அனுப்பப்பட்டதின் நன்மையையும் நான் உன்னிடம் கேட்கிறேன்; இதன் தீமையையும், இதிலுள்ள தீமையையும், இது அனுப்பப்பட்ட தீமையையும்விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்" என்று கூறுவார்கள்.
வானத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிடும்; வீட்டிற்கு வெளியே செல்வார்கள்; உள்ளே நுழைவார்கள்; முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருப்பார்கள் ; மழை பெய்துவிட்டால் அவர்களை விட்டும் அக்கவலை அகன்று விடும். நூல்: முஸ்லிம்
மற்றொரு ஹதீஸில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! பொதுவாக மக்கள், கார்மேகத்தைக் கண்டால் அதன் மூலம் (நல்ல) மழை பெய்யும் என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தாங்கள் கண்டால், உம் முகத்தில் ஒருவிதக் கவலைத் தொற்றிக் கொள்வது ஏன்?" என்று நான் கேட்டேன்.
"ஆயிஷா! அதில் தண்டனை இருக்குமோ என்பதுதான் என்னை அமைதியாக இருக்கவிடுவதில்லை. ஏனென்றால், ஹூத் உடைய சமுதாயத்தினர் காற்றால் வேதனை செய்யப்பட்டார்கள்.
அந்தச் சமுதாயம் அவர்களுக்கு இறங்கிய தண்டனையைப் பார்த்து, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கப்போகிறது" என்று கூறினார்கள். (ஆனால், அவர்களுக்கு அது தண்டனையாக இருந்தது; அதனால்தான்...) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி, அபூதாவூத்.
புயலுக்குப் பின் பூகம்பம் :
புயல் ஓய்ந்த பிறகு ஹூத் (அலை) அவர்களும், முஸ்லிம்களும் ஊருக்குள் வந்துப் பார்த்தார்கள். ஊர் முழுவதும் அஹ்காஃப் - மணல் மேடாகக் காட்சியளித்தது. அங்கே ஒரு ஊர் இருந்ததற்கான எந்த தடையமும் இல்லாமல் காணப்பட்டது.
இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஹூத் (அலை) அவர்கள் , இந்த மக்கள் அழிவதற்கு நாம் அவசரப்பட்டு பிரார்த்தனை செய்து விட்டோமோ என சிறிதளவு வருத்தப்பட்டார்கள்.
மன்னர் ஜல்ஜான் உட்பட ஒரு சிலர் மட்டும் உயிரோடு இருந்தார்கள். அவர்களிடம் ஹூத் (அலை) அவர்கள் " இப்பொழுதாகிலும் நீ ஈமான் கொள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் "ஈமான் கொண்டால் என்ன கிடைக்கும்?" என்று கேட்டான். ஹூத் (அலை) அவர்கள், "நீ சொர்க்கம் செல்வாய்" என்று கூறினார்கள்.
"என் மனைவியும், பிள்ளைகளும், என் உறவினரும் நரகத்தில் இருக்க, நான் மட்டும் சொர்க்கம் சென்று என்ன செய்யப் போகிறேன்; நானும் இப்படியே இருந்து விடுகிறேன்; என்னை விட்டுவிடு" எனக் கூறினான்.
ஹூத் (அலை) அவர்கள் மனம் ஆறுதல் அடைந்தார்கள். இவ்வளவு அழிவு ஏற்பட்டும், அதைக் கண்ணாரக் கண்டும், தானே அனுபவித்தும் கூட ஈமான் கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை என்றால் இப்படிப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதில் எந்த பயனும் இல்லை" என எண்ணி தன்னை தேற்றிக் கொண்டார்கள். ஜல்ஜானின் பேச்சு புயலுக்குப்பின் பூகம்பம் ஏற்பட்டது போன்று நபி ஹூத் (அலை) அவர்கள் உணர்ந்தார்கள்.
ஆது மகன் ஷத்தாது கட்டிய சொர்க்கம்:
ஆது சமுதாய மக்கள் அழிந்த பிறகு ஹூத் (அலை) அவர்கள் ஐம்பது வருடங்கள் வாழ்ந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் ஆது மக்களின் அரசனாக ஷத்தாத் என்பவன் இருந்தான். இவனும் சிலைகளை வணங்கி வந்தான்.
அப்பொழுது ஹூத் (அலை) அவர்கள் அவனிடம் ஏகத்துவத்தைப் போதித்தார்கள்.
"உங்களது உருவமற்ற இறைவனை வணங்கினால் எனக்கு என்னக் கிடைக்கும்?" எனக் கேட்டான்.
ஹுத் (அலை) அவர்கள், "சொர்க்கம் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
அதற்கு அவன், "அந்த சொர்க்கம் எப்படி இருக்கும்?" எனக் கேட்டான்.
ஹூத் (அலை) அவர்கள், அது! தங்கத்தாலும், முத்துக்களாலும் , வைர வைடூரியங்களாலும், வெள்ளிகளாலும் உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது" என்று கூறினார்கள்.
உடனே அவன் அவ்வளவு அழகான சொர்க்கத்தை நானே கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு
தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்கள் அனைவரிடமும் ஓர் சுற்றறிக்கை அனுப்பினான். அதில் "தங்களிடம் உள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், வெள்ளி ஆகிய விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் உடனே அனுப்பி வையுங்கள்" என்று இருந்தது.
அவன் தன் 600 ஆவது வயதில் சொர்க்கத்தைக் கட்டத் தொடங்கி 900 ஆவது வயதில் கட்டி முடித்தான்.
அதற்கான திறப்பு விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்றிருந்த உலக மக்கள் அனைவரையும் அதற்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
திரளான மக்களுக்கு நடுவில் மக்களை விலக்கிக் கொண்டு சொர்க்க வாசலை நோக்கி ஷத்தாத் வந்தான்.
அவன் கட்டிய சொர்க்கத்திற்கு வெளியே இருந்த பூங்காவில் பொன் நிற மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே சொர்க்கத்திற்குள் மயில்கள் , குயில்கள், அன்னப்பறவைகள் , முயல்கள் என பலவற்றை கொண்டு சொர்க்கம் அழகுப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த சொர்க்கத்தில் பொன் மான் மேய்ந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று எண்ணி அதை பிடிக்க விரட்டிச் சென்றான். அவனுடன் சிப்பாய் வீரர்களும், பொதுமக்களும் உடன் சென்றார்கள்.
வெகு தூரம் சென்ற பிறகு அந்தப் பொன் மான் தன் இறக்கைகளால் பறக்கத் தொடங்கியது. அது பறந்துச் சென்று விட்டது. அதை விரட்டிச் சென்ற இவர்களால் பிடிக்க இயலவில்லை.
அப்பொழுது அவர்கள் தன் உணர்வு பெற்று தான் எங்கே இருக்கின்றோம் என சுற்றி பார்த்தார்கள். அந்த இடத்தில் பயமுறுத்தும் தோற்றத்தில் ஒருவர் நின்றிருந்தார்.
அவர், "பூமியில் சொர்க்கத்தைக் கட்டினால் மரணமே ஏற்படாதா? இறைவனுடைய நினைவு உனக்கு உண்டாகாதா?" என்று கேட்டார்.
அதற்கு ஷத்தாது, "நீ யார்?" என்று கேட்டான்.
"நான்தான் இஜ்ராயில்! உனது உயிரை பறிக்க வந்திருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு ஒரு சப்தமிட்டார். அவ்வளவுதான் அங்கிருந்து அனைவரும் மரணித்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் இப்படியும் காணப்படுகின்றது.
அவன் கட்டிய சொர்க்த்தைத் திறப்பு விழா செய்ய அதன் வாசலுக்கு வந்த ஷத்தாத், தன் வலது காலை சொர்க்க வாசல் நிலைக்கு நெருக்கத்தில் வைத்து இடது காலை தூக்கும் அந்த இடவெளி நேரத்தில் அவன் உயிர் வாங்கப்பட்டது. அவன் சொர்க்கத்திற்குள் நுழையாமலே இறந்தும் சொர்க்கத்திற்கு வெளியே விழுந்தான்.
பிற்காலத்தில் அப்துல்லாஹ் பின் குலாஃபா என்பவர், காணாமல் போன தன் ஒட்டகங்களைத் தேடிக்கொண்டு காட்டில் சுற்றியபோது இந்த நகரத்தை கண்டு பிடித்தார். அதை முஆவியா (ரலி) அவர்களிடம் அறிவித்ததாக ஒரு செய்தி இருக்கின்றது.
கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள், அந்நகரம் குறித்து கேள்விப்பட்டதும், "அது! ஆது மகன் ஷத்தாது கட்டிய சொர்க்கமாக இருக்கலாம்" என கூறினார்கள்.
இப்படியும் ஒரு செய்தி காணப்படுகின்றது;
அல்லாஹ் "இஜ்ராயீலே! நீங்கள் எப்போதாவது எவர் மீதாவது இரக்கம் கொண்டிருக்கிறீரா ?" என்று கேட்டான்.
அதற்கு அவர்கள்,"ஆம்! ஒரு முறை கடலில் கப்பல் ஒன்று கவிழ்ந்துப் போனது; அதில் இருந்த அத்தனை பேரின் உயிரையும் நான் தான் கைப்பற்றினேன்.
உடைந்தக் கப்பலில் ஒரு கர்ப்பிணிப் பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து இருந்தாள். அதை சிறிய மரத்துண்டில் வைத்து நீந்தி கொண்டிருந்தாள்.
அச்சமயம் உனது உத்தரவுக்கிணங்க ஒரு மீனை கடிக்கச் செய்து அதன் மூலம் அந்தத் தாயின் உயிரையும் என்னையே நீ கைப்பற்றச் செய்தாய்! அது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது" எனக் கூறினார்.
இதைப் போன்று வேறு ஏதேனும் சம்பவங்களை நீ சந்தித்து இருக்கிறாயா?" என அல்லாஹ் மீண்டும் கேட்டான்.
அதற்கு இஜ்ராயீல் (அலை) அவர்கள், "இறைவா! ஷத்தாத் 300 வருடங்களாக பார்த்துப் பார்த்து சொர்க்கத்தைக் காட்டினான்; அவன் உள்ளே நுழைவதற்கு முன்பு அவன் உயிரை கைப்பற்றச் சொல்லி விட்டாய்; அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ், "இஜ்ராயீலே! அன்று தாயில்லாமல் கடலில் தத்தளித்த அந்த ஆண் குழந்தைதான் இந்த ஷத்தாது" என்று கூறினான். அதனை கேட்டதும் இஜ்ராயீல் (அலை) அவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்/ தஃப்ஸீர் குர்துபீ
இதை ஒரு தகவலாக உங்களுக்கு நான் சொல்லுகிறேன். இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல! ஆனாலும் ஆத் மகன் ஷத்தாத் சொர்க்கத்தைக் கட்டியது உண்மை! அந்த சொர்க்கத்தின் வர்ணனையும், கட்டிட அமைப்பும் எப்படிப்பட்டது என்பதில் தான் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஏனென்றால் அதை கட்டியவர்கள் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை அல்லவா? இப்படித்தான் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஹூத் (அலை) அவர்களின் மரணம் :
ஹூத் (அலை) அவர்கள் தம் 760 ஆவது வயதில் இருக்கும்போது இஜ்ராயீல் (அலை) அவர்கள் வந்து உயிரை எடுக்க அனுமதி கேட்டார்கள்.
பொதுவாகவே நபிமார்கள் நன்மைகளை அதிகமாக செய்து வைத்திருப்பதாலும், தன் ஹபீபை சந்திப்பதில் பேராவல் கொண்டிருப்பதாலும் அனுமதித்தார்கள்.
"ஹளரமவ்த் எனும் இடத்தில் மரணித்தார்கள். அவர்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களின் அடக்க தளத்தில் ரஜப் பிறை 21 அன்று அப்பகுதியில் வாழும் மக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய அளவில் ஸியாரத்து செய்து வருகிறார்கள்" என ஆங்கில திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் யூசுப் அலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுதான் அவர்களின் அடக்க தளம் என்பதற்கு இதுவே சாட்சி. அதாவது தலைமுறை தலைமுறையாக, வழி வழியாக வந்த மக்கள் அந்தத் தேதியில் அதே இடத்தில் காலம் காலமாக ஒன்று சேர்ந்து வருகிறார்கள் என்பது அடையாளமும், ஆதாரமும் ஆகும்.
பொதுவாகவே நபிமார்களுக்கு மரண நேரம் நெருங்கும்பொழுது நபிமார்களில் பெரும்பாலானவர்கள் மக்காவை நோக்கியோ, ஃபலஸ்தினை நோக்கியோ வந்து விடுவார்கள். இறுதி காலத்தை அங்கேயே கழித்து அங்கேயே மரணித்து விடுவார்கள். அவர்கள் மக்கா ஹரம் ஷரீஃபுடைய வளாகத்திலும், ஃபலஸ்தீன் குதுஸ் வலாகத்திலும் அடக்கம் செய்யப்பட்டு விடுவார்கள்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கே பல்லாயிரக்கணக்கான நபிமார்களின் அடக்கத்தலம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
எனவே தவ்ஹீத் ஓரிறை கோட்பாட்டில் உறுதியாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதில் காம்ப்ரமைஸ் - நடுநிலை வகிக்க கூடாது.
=========÷===========================
ஆதம் (அலை) வாழ்வியலில்
ஆன்மிக நெறிகள் :
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு பூமியில் 18000 உயிரினங்கள் மிகப்பெரிய தோற்றத்தில் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் ஜின். அதன் சந்ததியில் வந்தவன் தான் இப்லீஸ்.
சுமார் 6,36,000 ஆண்டுகள் இப்லீஸ் இறைவனை வணங்கி வந்தான். அதனால் அனைத்து வானவர்களும் அவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள். வானவர்கள் அனைவருக்கும் அவன் பேராசனாக இருந்தான்.
இந்நிலையில் தான் இறைவன் தன் கலீஃபா - பிரதிநிதியாக ஆதம் (அலை) அவர்களை படைக்க வேண்டும் என உத்தேசித்து வானவர்களை அழைத்தான்.
"வானவர்களே! ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை மண்ணினால் உருவாக்க வேண்டும்; அதற்காக பூமியில் உள்ள மிருதுவான, கெட்டியான, கருப்பு மற்றும் மஞ்சள் நிற மண்ணைக் கொண்டு வந்து தண்ணீர் விட்டு பிசைந்து மனித உருவத்தில் உருவாக்க வேண்டும்; அதை விரைந்து செய்து முடியுங்கள்.
அவர் படைக்கப்பட்டு உயிர் பெற்று எழுந்து அமர்ந்ததும் அவருக்கு நீங்கள் ஸஜிதா - மரியாதை செலுத்த வேண்டும்" என்று கூறினான்.
இச்செய்தி இப்லீஸை சென்றடைந்தது. அவன் மிகவும் கவலைப்பட்டான். வானவர்களை ஆதம் (அலை) அவர்களுக்கு எதிராகத் தூண்டினான்.
ஆதம் (அலை) அவர்களின் படைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று பெரும் முயற்சி செய்தான்.
ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை செய்ய தேவையான மண்ணை இஸ்ராயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்தார்கள். மீகாயில் (அலை) அவர்கள் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள்.
அவற்றைக் கொண்டு ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பொதுவான மலக்குமார்கள் செய்து வைத்தார்கள்.
இஜ்ராயீல் (அலை) அவர்கள் அதன் மீது நெருப்பு - உஷ்ணத்தை பொழிந்தார்கள். பின்னர் இஸ்ராஃபீல் (அலை) அவர்கள் காற்று வீசச் செய்து அதை ஆற வைத்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அந்த உருவ தோற்றத்தின் மீது நூர் ஒளியையும் பொலிவையும் அழகையும் தூவினார்கள்.
வின்னர் அதன் மீது சுமார் 2000 வருடங்கள் மழை பொழிந்தது. அதில் அந்த மண் உறுதி தன்மையை பெற்றது.
வானவர்கள் ஆதம் (அலை) அவர்களின் உடல் அமைப்பை சிறப்பாக செய்திருந்தாலும் முகத்தை செவ்வையாக செய்து முடிக்கவில்லை. அவர்களுக்கு செய்ய தெரியவில்லை என்றே சொல்லலாம்.
"இறைவா! நாங்கள் மிகவும் சிரமப்பட்டு ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை செய்தோம். ஆனால் அவரின் முகத்தை லட்சணமாக உருவாக்க இயலவில்லை" என்று கூறினார்கள்.
"மனிதனைப் படைப்பதில் உங்களுக்கு தான் உடன்பாடு இல்லையே; நீங்கள் எப்படி அவனை அழகு தோற்றத்தில் உருவாக்குவீர்கள்; சரி சென்று வாருங்கள் அவனை நானே உருவாக்குகிறேன்" என்று சொல்லிவிட்டு கழுத்து வரை இருந்த உருவ அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு தலை பாகத்தை இறைவன் தனியாக எடுத்து வைத்து விட்டான். அதாவது வெறும் முண்டமாக உடல் இருந்தது.
அதன் மீது இறைவன் தொடர்ந்து மழையை பொழிய செய்தான் அது மேலும் வலுப்பெற்றது.
அதே நேரம் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதி மனிதர் வரை உள்ள அனைத்து ஆன்மாக்களையும் படைத்து ஆலமுல் அருவாஹ் எனும் ஆன்மாக்கள் மட்டும் வாழும் தளத்தில் விட்டிருந்தான்.
இது ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பே நடந்ததது.
ஆதம் (அலை) அவர்களின் தோற்றம் பொம்மையாகவே இருந்த 70 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அல்லாஹ் தலை பாகத்தை அழகு தோற்றத்தில் செய்து முடித்தான். பின்னர் ஆதமின் உடலில் ஆதமின் ஆன்மாவை நுழையுமாறு கூறினான்.
அது உள்ளே நுழைந்துப் பார்த்தது. உள்புறம் இருட்டாக இருந்ததால் பயந்து போய் வெளியே வந்துவிட்டது. பின்னர் அல்லாஹ் அந்த ரூஹ் ஆன்மாவைப் பெற்று தானே உள்ளே புகுத்தினான். அது நவ துவாரங்கள் வழியாக உள்ளே சென்று வெளியே வந்தது.
அது எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் இரத்தம், சதை, எலும்பு ஆகியன உருவானது. அன்று அவர்களின் உயரம் 60 அடியாக இருந்தது.
செல்லப்பிள்ளை இப்லீஸ்
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்பு வரை இப்லீஸ் இந்த அண்டத்தில் செல்ல பிள்ளையாக இருந்தான்.
அவனையும் தாண்டிய ஒரு இனத்தை இறைவன் படைக்கப் போவதாக சொன்ன பிறகு அதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஜீரணிக்க இயலவில்லை.
இறைவன் நம்மை தானே கலீஃபா - பிரதிநிதியாக உருவாக்க வேண்டும்? நம்மை விட்டுவிட்டு வேறு ஒருவரை உருவாக்குகிறானே என்று பொறாமை பட்டு, மனிதனை படைப்பதில் குளறுபடிகளை உண்டு பண்ண நினைத்து வானவர்களிடம், மனிதனைப் பற்றி தவறாக எடுத்துச் சொன்னான்.
ஏனென்றால் வானவர்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை. சொன்ன வேலையை மட்டுமே செய்வார்கள். ஆனால் இப்லீஸிற்கு சிந்திக்கும் திறன் இருந்தது. அதனால் அவன் மனித இனத்தைக் குறித்து தவறாக சொன்னான். அதையும் வானவர்கள் நம்பினார்கள்.
பின்னர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதை விரும்பாத இப்லீஸ் அவரை எதிர்த்தான். அவர் குறித்து இறைவன் கூறிய கூற்றையும் எதிர்த்தான்.
அதனால் இப்லீஸிற்கு பொறாமை ஏற்பட்டது. தான் இருக்க வேண்டிய இடத்தில் மனிதன் வந்து விட்டானே என்கிற கடுப்பில் மனித இனத்தையே வெறுத்தான்.
அவர்களை இறைவனுக்கு எதிராக செயல்பட தூண்ட வேண்டும் என்று எண்ணி இன்றுவரை செயல்பட்டு வருகிறான் . அவனுக்கு நண்பனாகி விடாதீர்கள்.........
கலீஃபா - பிரதிநிதி என்பது ஒரு பதவி :
===================================
இறைவன் படைத்தப் பேரண்டத்தில் பல கோடிக்கணக்கான உயிரினங்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான். அவற்றில் யாருக்கும் கலிஃபா என்கிற பதவியை கொடுக்கவில்லை; மனிதனைத் தவிர.
ஆனால் முதல் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே சுமார் 18,000 உயிரினங்கள் படைக்கப்பட்டு இருந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றது.
(ஒரே சாயலில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரு உயிராகவே எண்ணப்பட்டுள்ளது. உதாரணமாக கொக்கு. இவை பல நூறு வடிவங்களில் இருக்கின்றன.)
அறிவியல் ஒரு படி மேலேச் சென்று மனிதன் உருவாகுவதற்கு முன்பே இருந்த உயிரினங்கள் என பல லட்ச உயிரினங்களை குறிப்பிடுகின்றது.
எனவே மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே இருந்த எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஒரு பதவி முதல் மனிதன் படைக்கப்பட்டதும் அவனுக்கு கொடுத்து அல்லாஹ் அலங்கரித்த போது அதை அன்றிருந்த ஒரே அறிவுள்ள ஜீவன் இப்லீஸ் கடுமையாக எதிர்த்தான்.
எனவே முதல் மனிதர் தோன்றிய உடனேயே பதவி சண்டை வந்துவிட்டது. அந்தச் சண்டையில் மனிதனுக்கு பதவி கிடைத்து வெற்றி வாய்ப்பை பெற்று விட்டார்.
"மனிதனுக்கும் இபிலீஷ் ஆகிய எனக்கும் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோ அதே விஷயத்தைக் கொண்டு இந்த மனித இனத்தை நான் துண்டாடுகிறேன்" என்று சத்தியம் செய்து இருக்கிறான்.
மேலும் மனிதர்களுக்கிடையே பதவி மோகங்களை உண்டாக்கி வருகிறான். அதைப் புரிந்து கொள்ளாத மனிதன் பதவிக்காக கொலை செய்யவும் எதையும் செய்யவும் தயாராகிறான்.
கலீஃபா என்பது ஒரு பதவி. இன்றும் ஆன்மீகப் பாட்டையில் பயணிக்கும் தரீக்காவினர் தம் கைதேர்ந்த சீடர்களுக்கு 'கலீஃபா' எனும் அந்தஸ்தை கொடுத்து கௌரவிப்பது வழக்கம்.
கடந்த 1450 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் எவ்வளவோ இஸ்லாமியர்கள் பெரும் பதவிகளை வகித்திருந்தாலும் நான்கு கலீஃபாகளின் பதவியே இன்றும் இஸ்லாமியர்களால் முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. அதுவே உயர்ந்த பதவியாகவும் மதிப்பிடப்படுகிறது.
ஆன்மீகப் பாட்டையில் பயணித்து கலீஃபாவாக ஆக முயற்சி செய்யுங்கள்.
எங்க அம்மா மாதிரி
யாரும் சமைக்க முடியாது :
===========================
இந்த சொல்லாடலை சொல்லாத மனிதர்கள் யாருமே இல்லை.
ஒவ்வொருவரும் முதன் முதலில் தாயின் கைவண்ணத்தில் சமைக்கப்பட்ட உணவை சுவைத்து சாப்பிட்டதாலும், அந்த முதல் சுவை நாவில் ஒட்டிக்கொண்டதாலும், நெஞ்சில் நினைவுகளாக நீடித்திருப்பதாலும் எல்லோரும் இவ்வாறு சொல்லுகிறார்கள்.
இவ்வாறு சொல்வதற்கு காரணம் தாய் பாசமா? அல்லது தாயின் கைவண்ணத்தில் உருவான உணவு தானா என்கிற கேள்விக்கு விடை சொல்ல முடியாதவர்களாகவே இன்றும் ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள்.
இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று ஒரு தகவலைக் கூறுகிறேன் கேளுங்கள்.
உலகத்தில் தாய், தந்தை இல்லாத மனிதர்கள் என்று சொன்னால், அது ஆதம் - ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களே ஆவார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது, முதன் முதலில் சொர்க்கத்தில் சுவைத்த கனிகளை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை மேலிட்டது.
ஆனால், அற்பமான இந்த ஆசையை அல்லாஹ்விடத்தில் சொல்ல வெட்கப்பட்டார்கள். அவர்களின் உள்ளத்தில் இந்த ஆசை நீண்ட நாட்கள் குடி கொண்டிருந்தது.
மரணப் படுக்கை, முதுமை, நோய் போன்ற காரணங்களால் அவதியுற்று வந்த ஆதம் (அலை) அவர்களின் ஆன்மாவை கைப்பற்றுவதற்காக அல்லாஹ் வானவர்களின் குழுவை அனுப்பி வைத்தான்.
இஸ்ராஃபீல் (அலை) அவர்களைத் தவிர முதன்மையான மூன்று வானவர்களும் மற்றும் சில வானவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வீட்டிற்குள் வந்தார்கள். வரும்பொழுது சொர்கத்துக் கனிகள் பலவற்றை கொண்டு வந்திருந்தார்கள்.
அப்பொழுது வீட்டிற்குள் இருந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஹவ்வா (அலை) அவர்கள் என அனைவரையும் வெளியே இருக்கும் படி செய்துவிட்டு, ஷீத் (அலை) அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மனம் கமலும் சொர்க்கத்து கனிகளை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அறுத்து சின்னச் சின்ன துண்டுகளாக எடுத்து அவற்றை ஆதம் (அலை) அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள்.
அதை அவர்கள் சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போலவும், எந்த சிரமங்களும் இல்லாமல் சொர்க்கத்தில் சுற்றித் திரிவது போலவும் உணர்ந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் அந்த நாள் நிலையை அடைந்தது.
முதலில் பார்த்தது, முதலில் சுவைத்தது, முதலில் பேசியது, முதலில் வியந்தது போன்ற பழைய நினைவுகளை மனம் அசை போட்டது. அவர்களின் உடல் வானவர்கள் இடையே இருந்தாலும், உள்ளம் வானுலகை வட்டமிட்டு கொண்டிருந்தது.
அச்சமயம் இஜ்ராயீல் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு மலரை ஆதம் (அலை) அவர்களின் கைகளில் கொடுத்து நுகரச் சொன்னார்கள்.
ஆதம் (அலை) அவர்களும் நுகர்ந்தார்கள். அந்த வாசனை மிகவும் இன்பகரமாக இருந்தது. அதை தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் இயற்கை எய்தினார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நம் வாழ்வில் முதன் முதலில் அனுபவித்த முதல் பயணம், முதல் உணர்வு, முதல் உணவு போன்றவை நம் இதயத்தை விட்டும் நீங்காது.
அந்த வகையில் தான் ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் சொர்க்கத்தில் சுவைத்த கனிகளை இறுதி காலங்களில் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறான்.
ஆனால், நம்மில் அதிகமானவர்களுக்கு தம் இறுதி காலத்தில் தாயின் கைகளால் உணவருந்த வேண்டுமென ஆசைப்பட்டாலும் அன்று தாய் இருக்கு மாட்டாள். நமது ஆசை நிறைவேறாமலே கழிந்து விடும்.
அந்த வகையில் ஆதம் (அலை) அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம்.
உங்களில் யார் யார் தாயைப் பெற்று இருக்கிறார்களோ அவர்கள், அடிக்கடி அவளின் கரங்களால் சாப்பிடுங்கள்.
அவளுக்கு நீங்கள் சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் சந்தோஷமாக இருக்காது.
சாப்பிடும் போதெல்லாம் "உன் சமையல் மாதிரி வராதும்மா" என்று சொல்லி அவளை ஆனந்தப் படுத்துங்கள்.
*பூமியில் தோன்றிய முதல் பெண் புர்காவில் இருந்தார்?*
ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பூமியின் 2000 வருடங்களுக்கு மேலாக படைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் கிடந்தது. அந்த தோற்றத்தை தினம் தினம் வானவர்களும், இப்லீஸ் இனத்தைச் சேர்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஹவ்வா (அலை) அவர்கள் படைக்கப்பட்ட போதும் படைக்கப்பட்ட பிறகும் அல்லாஹ்வைத் தவிர சொர்க்கத்தில் வேறு யாரும் பார்க்கவில்லை.
ஆம்! ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருமே இல்லாத சொர்க்கத்திற்குள் தனியாக , மறைவாகப் படைக்கப்பட்டார்கள். அப்பொழுது அவரது கணவர் உடன் இருந்தார்.
அந்நியனான ஷைத்தான் ஒருமுறைதான் ஹவ்வாவை திரையின்றிப் பார்த்தான். அத்துடன் ஆதம் ஹவ்வா (அலை) இருவரும் சொர்க்கத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
பெண்கள் பர்தா - திரைக்குள் இருக்க வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அப்படித்தான் அல்லாஹ் திரை மறைவில் அதாவது சொர்க்கத்தில் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.
ஒரு கவிஞர் பாடுகிறார்.
ஆதமை அல்லாஹ் திரையின்றி படைத்தான்.
ஹவ்வாவை திரைக்குள் வைத்து படைத்தான்.
அல்லாஹ்வும் கூட திரைக்குள் தான் இருக்கின்றான்.
ஆமாம்! அவனை யாரும் பார்த்ததில்லையே!
அவன் தன்னை யாருக்கும் காட்டியதும் இல்லையே!
அப்படி என்றால் அவனும் திரைக்குள் தானே இருக்கிறான்?.....
ஆதம் (அலை) அவர்களின்
இறுதி உபதேசம்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
ஆதம் (அலை) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது மகன் ஷீத் (அலை) அவர்களை அழைத்து கூறினார்கள்.
மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களை மறந்து விடாதே!
அவர்களின் பெயர் தாங்கிய ஸலவாத்தை தினமும் ஓதிக் கொண்டிரு!
அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திரு!
அவர்களின் மீது ஈமான் - நம்பிக்கை கொண்டிரு!
அவர்களால்தான் என் சந்ததியினர் அனைவருக்கும் மறுமை நாளில் பாவமன்னிப்பு கிடைக்கும்.!
அவர்கள்தான் இறுதி நபி! அவர்கள் என் சந்ததியிலிருந்து தோன்றுவார்கள்!
அவர்கள் அனைத்து மனித ஆன்மாக்களின் தந்தை!
நான் அவர்களுடைய உடலின் தந்தை மட்டுமே!
நூல் : தஸவ்வுஃப் ரஹ்மானீ
இரண்டு பெண்களிடம்
இப்லீஸ் தோன்றினான்.
=============÷÷÷÷÷÷==
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு பெண்களிடம் இப்லீஸ் தோன்றினான். அதில் ஒருவரிடம் இப்லீஸ் வெற்றி பெற்றான். மற்றொருவரிடம் தோல்வியுற்றான்.
ஹவ்வா (அலை) அவர்களைச் சந்தித்து, "இந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நிரந்தரமாக சொர்க்கத்தில் தங்கி விடலாம்" என்ற ஆசை வார்த்தையை சொன்ன போது அதை அவர் நம்பி அவன் சொற்படி நடந்து கொண்டார். அதனால் அவர் மிகப் பெரும் நஷ்டத்தை அடைந்தார்.
மற்றொரு சமயம் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிட அழைத்துச் சென்ற போது ஹாஜரா அம்மையாரிடம் ஷைத்தான் தோன்றி, "உங்கள் கணவர் நீங்கள் பெற்றெடுத்து, ஆசை ஆசையாய் வளர்த்த மகனை அறுத்து பலியிட அழைத்துச் செல்கிறார்; நீங்கள் கேட்க மாட்டீர்களா?" என்று தூண்டினான்.
ஹாஜரா அம்மா அவர்கள் "நீ யார் என்று எனக்குத் தெரியும் தூரப்போ - அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்று சொல்லி அவனை விரட்டினார்கள்.
ஹவ்வா (அலை) அவர்களை விட ஹாஜரா (அலை) அவர்கள் சிறந்தவர்கள் என்று நீங்கள் கருதி விடாதீர்கள்.
ஹாஜரா (அலை) அவர்கள் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாலே வெற்றி பெற்றார்கள்.
ஆதம் - ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் வரலாற்றுச் சிந்தனைகள் உங்களின் உள்ளத்தை பக்குவப்படுத்தவே எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.
உங்கள் உள்ளத்தை
சரி செய்து கொள்ளுங்கள் :
===========================
ஆன்மீக வாழ்வை வாழ முயற்சிப்பவர்கள் மனதை அடக்கி ஆளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இல்லையென்றால் உள்ளம் உடல் மீது ஆதிக்கம் செலுத்தும். உடல் உள்ளத்திற்கு அடிபணிந்து நடக்கும். இந்நிலையில் இருப்பவர்கள் ஆன்மீக வழியில் தொடர்ந்து பயணிக்க இயலாது.
எனவே உறுதியான உள்ளத்தை பெற்றிட வேண்டும். அதற்காக இறைவழிபாடுகளும் திக்ருகளும் மேற்கொள்ள வேண்டும்.
நிலையான, தூய்மையான உள்ளத்தைப் பெறுகிறவர் மறைவான விஷயங்களை அறிவார்.
மேலும் உறுதியான உள்ளத்தைப் பெற்றவரின் பார்வை சிங்கத்தின் மீது பட்டால், அது அடி பணிந்திட வேண்டும்.
ஒரு வியாதி உள்ளவரின் மீது பட்டால், அவர் குணமாகிட வேண்டும்.
வானத்தின் பக்கம் பார்த்தால், மழை பொழிந்திட வேண்டும்.
தவறான வழியில் செல்கிறவனை பார்த்தால் அவன் நேர்வழி பெற்றிட வேண்டும்.
ஒருவரின் உள்ளத்தை பார்த்து அவரின் குறைகளை நீக்கிட வேண்டும்.
இந்த நிலையை அடைய உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்த வேண்டும்.
அதேசமயம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
எனவே ஆன்மீகத்தில் உச்சநிலையை அடைய வேண்டுமானால், உலகத்தின் மீதுள்ள பற்றை விட்டொழிக்க வேண்டும்.
ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
حب الدنيا رأس كل خطيئة
ஹசன் பஸரீ (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை நேசிப்பது, மற்ற அனைத்து குற்றங்களை விடவும் முதன்மையான குற்றமாகக் கருதப்படுகிறது. நூல் : பைஹகி
ترك الدنيا راس كل عباده
உலக ஆசையை துறப்பது, அனைத்து இறைவழிபாடுகளிலும் முதன்மையானது.
நூல்: தந்கிரதுல் முத்தகீன்
الدنيا جيفة طلابها كلاب
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 'உலகம்' பிணத்திற்குச் சமமானது. அதைத் தேடுவோர் நாய்கள் ஆவர்.
நூல் : அபு நயீம்
طالب الدنيا مخنث وطالب المولى مذكر
உலகை தேடுகிறவன் பெட்டையன் ஆவான். அல்லாஹ்வை தேடுகிறவன் ஆண் மகனாவான்.
நூல்: தந்கிரதுல் முத்தகீன்
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல் பூமியில் வாழ்ந்தாலும் அதன் மீதுள்ள பற்று உள்ளத்தில் ஒட்டாமல் வாழ்ந்திடுவோம்.
சூஃபியாக்கள் கூறுகிறார்கள். "ஒரு முறை உள்ளத்தினுள் உலகத்தின் மீதான பற்று வந்துவிட்டால், அது விலகிச் செல்ல நாற்பது இரவுகள் ஆகும்.
நூல் : மிஸ்பாஹுல் ஹயாத் & அஸ்ராரே ரஹ்மானீ
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
முதல் மனிதனும்
நான்கு வகை மனிதர்களும் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
மனித இனத்தின் தோற்றம் பற்றி மனிதனைப் படைத்தவன் சொல்வதை ஏற்பதுதான் சரியான தீர்வாகும்.
முதல் மனிதனின் வரலாறு நிச்சயமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது.
எனவே, வேத வழிகாட்டல் இல்லாவிட்டால் மனித இனத்தின் தோற்றம் குறித்து வெறும் யூகங்களை மட்டுமே செய்ய முடியும்.
முதல் மனிதன் குறித்து குர்ஆன் :
=÷=÷=÷=÷=÷=÷÷÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்;
அவன் உங்கள் அனைவரையும் ஒரே மனிதரில் இருந்து படைத்தான்;
அந்த ஒரு மனிதரில் இருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;
பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;
ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;
உங்களுக்கிடையே நீங்கள் யார் பெயர் சொல்லி (உதவி) கேட்பீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த பந்த உறவுகளை (முறிப்பதையும்) அஞ்சிக் கொள்ளுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கின்றான். 4: 1
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரே ஆண், பெண்ணிலிருந்தே படைத்தள்ளோம்;
நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களைப் பல கிளைகளாகவும், குடும்பங்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம்;
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களே அல்லாஹ்விடம் அதிக கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர்;
நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும், (யாவற்றையும்) தெரிந்தவனும் ஆவான். 49: 13
இரண்டு வசனங்களின் கருத்து:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷÷
ஆதம் அலை அவர்களை அல்லாஹ் தன் கைகளால் படைத்தான்.
ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்.
ஆதம் ஹவ்வா என்ற ஆண் பெண்ணிலிருந்து ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்வே படைக்கின்றான்.
ஆதம் (அலை) அவர்களின் குடும்பம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஆதம் (அலை) அவர்கள் 930 வருடங்கள் வாழ்ந்தார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் 931 வருடங்கள் வாழ்ந்தார்கள்.
அந்த இல்லற வாழ்வில் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை ஒன்று என கர்ப்பமுற்று 120 சூலில் 220 குழந்தைகளை ஹவ்வா (அலை) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.
முதல் சூலில் பிறந்த குழந்தை காபில் / கலிமா. இரண்டாவது சூலில் பிறந்த குழந்தை ஹாபில் / லபூதா. மூன்றாவது சூலில் பிறந்தவர் ஷீத் (அலை) அவர்கள்.
கடைசி சூலில் பிறந்த குழந்தை அப்துல் முகீஸ் / உம்முல் முகீஸ்.
காபில் விவசாயம் செய்து வந்தார். ஹாபில் கால்நடை பண்ணை வைத்திருந்தார். இந்நிலையில் ஹாபில் காபிலை கொலை செய்தார்.
காபிலோடு பிறந்த கலிமாவை வேறு யாரும் திருமணம் செய்து கொண்டார்களா? அல்லது திருமணம் செய்யாமலே வாழ்ந்தாரா என்பது குறித்த எந்த தகவலும் வரலாற்றில் காணப்படவில்லை.
ஆதம் (அலை) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் பிள்ளைகள் மூலம் பேரன் பேத்திகள் என நான்கு லட்சம் பேர் பிறந்திருந்தார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் இறப்பதற்கு முன்பு காபிலை தவிர வேறு யாரும் மரணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு வகை மனித இனம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
மங்கோலிய இனம் (Mongoloids)
காக்கேசியஸ் இனம் (Caucasoid)
நீக்ரோ இனம் (Negroids)
ஹோமோ லாங்கி ( Homo Longi)
இதைத்தான் திருக்குர்ஆன்
وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا
"நீங்கள் ஒருவர் ஒருவரை அறிந்து கொள்வதற்காக உங்களை பல கிளைகளாகவும், குடும்பங்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம்" என்று கூறுகிறது.
கிடைக்குள் வரும் ஆடுகளில் தன் தாயை அறிந்து குட்டிகள் அதன் மடுவில் வாயை வைப்பது போல மனிதனும் ஒரு மனிதனின் தோற்றத்தை பார்த்து இவன் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொள்கிறான்.
இப்படி அறிந்து கொள்வதற்காகத்தான் இறைவன் மனித இனத்தை நான்கு வகைகளாக பிரித்து வைத்திருக்கின்றான்.
நூஹ் (அலை) அவர்கள் காலத்திற்கு முன்பாக மனித இனம் ஆறு வகைகளாக இருந்தது.
பின்னர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு அதில் இரண்டு இனங்களை இறைவன் இல்லாமல் ஆக்கிவிட்டான்.
இப்பொழுதுள்ள 800 கோடி மக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தால், அவர்கள் அனைவரையும் நான்கு இரத்த வகைகளில் மட்டுமே பிரித்து காண முடியும்.
ஆதம் (அலை) அவர்கள் 60 முழம் இருந்திருந்தால் அவர்களின் உயரத்திற்கு எவ்வளவு பெரிய அபா தைக்க வேண்டும் என நினைத்து தைக்கப்பட்ட ஒரு ஆடை தான் நீங்கள் காண்பது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆதி மனிதர்
ஆதம் (அலை) அவர்கள் வரலாறு
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
அல்லாஹ் வானத்திலும், ஆகாயத்திலும், தரையிலும், கடலிலும் பலக் கோடி உயிரினங்களைப் படைத்திருக்கின்றான். அவன் படைத்தப் படைப்புகளில் ஆகச் சிறந்தது மனித இனம்.
ஆதம் (அலை) அவர்கள் மனித வரலாற்றின் தொடக்கமானவர். மனித வாழ்வையும், அவனுக்குத் தேவையான வாழ்வாதாரங்களையும் கற்பித்த முதல் மனிதர். இன்றைய மனிதர்கள் அனைவரின் ஆற்றல்களுக்கும் மூலமுதல் காரணமாக இருந்தவர்.
மனிதனே சிறந்தவன் எனும் கோட்பாட்டை உறுதி செய்தவர்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِىٓ ءَادَمَ
ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியமானவர்களாக ஆக்கி இருக்கிறோம் (17:70) என்று இறைவன் சொல்லுகிற அளவிற்கு தன் சந்ததிகளை சரியான வழியில் உருவாக்கியவர்.
ஆதம் (அலை) அவர்களை படைப்பதில் அல்லாஹ் பேரன்பும் பெரும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தான். அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆன் முழுவதிலும் 25 முறை நபி ஆதம் (அலை) அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசியிருக்கின்றான்.
நான்கு சிறப்புகள் :
====================
மனிதர்களில் யாருக்கும் வழங்கப்படாத நான்கு சிறப்புகளை ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
1. خَلَقْتُ بِيَدَيَّ ۖ
நான் அவரை எனது கரங்களால் படைத்தேன் (38:75) என்கின்றான்.
அல்லாஹ் ஒன்றைப் படைப்பதற்கு அல்லாஹ்வே ஈடுபட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அல்லாஹ் மற்றொரு இடத்தில் சொல்லுவான்.
إِنَّما أَمْرُهُ إِذا أَرادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ.
அல்லாஹ் ஒன்றை படைக்க நாடினால் அவன் சொல்வதெல்லாம் 'குன்' - ஆகுக என்பதுதான் அது ஆகிவிடும். 36 : 82
அப்படி ஆகச் சொன்னவைகள் தாம் இன்று நாம் காணும் வானம், பூமி, கோள்கள், மரம், மலைகள் என அனைத்தும்.
அண்டத்தில் உள்ள அனைத்தையும் 'ஆகு!' எனும் சொல்லால் படைத்த அல்லாஹ், ஆதமை (அலை) அவர்களை மட்டும் தன் கரத்தால் படைத்திருக்கின்றான். எனவே ஆதம் அலை அவர்களின் கண்ணியத்தையும் சிறப்பையும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ الْعَالِينَ
ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜிதா செய்ய மறுத்த இப்லீஸிடம் அல்லாஹ், "இப்லீஸே! என் கரத்தால் படைத்த ஆதமிற்கு நீ ஸஜிதா செய்ய மறுப்பது ஏன்?" (38: 75) என்று கேட்டான்.
"ஸஜிதாவை ஏன் மறுத்தாய்?" என்று அல்லாஹ் கேட்கவில்லை; "என் கரத்தால் படைத்தவரை நீ ஏன் ஸஜிதா செய்யவில்லை" என்றே அல்லாஹ் இங்கு கேட்டிருக்கின்றான்.
இப்லீசே! உன்னை நான் என் கரத்தால் படைக்கவில்லை, நீ மலக்குமார்களுக்கு கூட உஸ்தாத் - ஆசிரியனாக இருக்கலாம்; உனக்கு வேறு வகையில் மதிப்பும், மரியாதையும் இருக்கலாம்; ஆனால் ஆதமை என் கருத்தால் படைத்தேன்; என் கரம் எவ்வளவு பாக்கியம் நிறைந்தது என்பதை நீ உணரவில்லையே!
அல்லாஹ்வின் கரம் எப்படி இருக்கும்? எனும் சிந்தனைகளுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் குறித்து நமக்கு எப்படி கற்பித்தார்களோ அப்படியே நாம் ஏற்றுக் கொள்வோம்.
2. وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي
எனது ரூஹ் - உயிரிலிருந்து கொஞ்சத்தை அவரில் ஊதினேன் (15: 29) என்று சொல்கிறான்.
உலகில் உள்ள மற்ற மனிதர்கள் மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் அல்லாஹ் சென்று தன் ரூஹை ஆன்மாவை நேரடியாக ஊதுவதில்லை. தாயின் கருவறையில் தானாகவே அனைத்தும் உருவாகிக் கொள்ளும் வகையில் அவற்றை அல்லாஹ் அமைத்துவிட்டான்.
ரூஹ் - ஆன்மா என்றால் உடலை இயக்கும் மூலப் பொருள். உடல் முழுவதும் பரவி இருப்பது ஆன்மா தான். ஆதமின் மூச்சுக்காற்றில் நான் இருக்கின்றேன் என்கிறான் அல்லாஹ்.
கடந்த கால வரலாறு என்பது நமது நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கையை அழகுப்படுத்தும்; அதற்காகத்தான் நாம் வரலாறுகளை படிக்கின்றோம்; கேட்கின்றோம். ஆய்வாளர்கள் வரலாறுகளை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ் ஆராய்வை அரசு செய்து கொண்டே இருக்கின்றது. தமிழர்களின் வரலாறை தேடி தானே கீழடி ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது?
3. فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ
வானவர்கள் அனைவரையும் ஆதமுக்கு ஸஜிதா செய்ய வைத்தேன். 15 : 30
மலக்குமார்கள் சாதாரணமானவர்கள் அல்ல! அவர்கள் தான் உலகத்தை இயக்குகிறவர்கள். மனிதனுக்கு வாழ்வை கொடுப்பவர்களும், மரணத்தை கொடுப்பவர்களும் , இரணத்தை கொடுப்பவர்களும் அவர்கள்தாம்!
அல்லாஹ்விற்கு எதிராக எவரேனும் எதையேனும் செய்தால் அவர்களோடு போராடுவது, போர் செய்வது உட்பட உலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் தேர்ந்தெடுத்த படைப்பு வானவர்கள்.
அல்லாஹ்விற்கும் நபிமார்களுக்கும் இடையே தூதுவர்களாக இருந்து வேதங்களையும், ஞானங்களையும் கொண்டு வந்து சேர்த்தவர்கள் வானவர்கள்தாம்!
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் மிஅராஜிற்கு சென்று இருந்த போது ஒரு வானத்தில் சில வானவர்களைப் பார்த்தேன். அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களின் உருவ அமைப்பில் சரிப்பாதி மேல் பகுதி பனிக்கட்டியாகவும், கீழ்பகுதி நெருப்பாகவும் இருந்தது.
பனிக்கட்டி, நெருப்பை அணைக்கவில்லை. நெருப்பு, பனிக்கட்டியை உருக்கவில்லை. இந்த நிலையில் இருந்த இறைவனின் படைப்பைப் பார்த்து நான் வியந்துப் போனேன். அதேநேரம் நான் அல்லாஹ்வின் வல்லமையையும் புரிந்து கொண்டேன்.
நூல் : முஸ்னது அஹ்மத்
"மனிதர்கள் உட்பட உலகம் மற்றும் உலகில் உள்ள அனைத்து செயல்பாட்டிற்கும் காரணமான வானவர்களை ஜிப்ரயீல் உட்பட அனைவரையும் நான் ஆதமிற்கு ஸஜிதா செய்ய வைத்தேன்" என அல்லாஹ் சொல்கிறான்.
4. وَعَلَّمَ آدَمَ الأَسْمَاء كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاء هَؤُلاء إِن كُنتُمْ صَادِقِينَ
(உலகத்தில் உள்ள) அனைத்துப் பொருட்களைக் குறித்த செய்திகளையும் கற்பித்த (ஆசிரியனாக) நான் இருந்தேன். 2 : 31
நம் ஒவ்வொருவருக்கும் யாரோ ஒருவர் ஆசிரியராக இருக்கின்றார். ஆனால் ஆதம் (அலை) அவர்களுக்கு ஆசிரியராக அல்லாஹ்வே இருக்கின்றான். இது எவ்வளவு உயர்ந்த நிலை என்பதை நினைத்துப் பாருங்கள்.
உலகத்தில் உள்ள எல்லா பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் ஆதம் அலை அவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தான். அதனால் ஆதம் (அலை) அவர்கள், உலகில் உள்ள படைப்புகள் குறித்த ஆய்விற்கு செல்லாமல் தம் அன்றாட வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வது எனும் நிலையை நோக்கி நகர்ந்தார்கள்.
இது சாதாரணமான நிலை அல்ல! உலகில் உள்ள ஒரு பொருளின் பெயர் நமக்கு தெரியவில்லை என்றால் அதை நாம் எப்படி மற்றவர்களுக்கு சொல்ல முடியும்! அதன் வடிவத்தை அதன் நிறத்தை அதன் தன்மையை அதன் பயனை விவரிப்பதற்கு நாம் கை கால்களை ஆட்டி சைகை மூலமாகத்தான் காட்ட வேண்டும். அப்படி காட்டினாலும் அதை எதிரில் இருப்பவர் சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. எனவே அதன் பெயர்களை கண்டறிவதிலேயே காலம் சென்று விடும்.
இன்று அறிவியலாளர்கள் புதிதாக புயல் உருவாகும் போது அதற்கு ஒரு பெயரை வைக்கிறார்கள். வானவியலாளர்கள் புதிதாக ஒரு நட்சத்திரத்தையோ துணைக்கோள்களையோ கண்டறிந்தால் அதற்கு முதலில் பெயர்களை தான் சூட்டுகிறார்கள். அது எவ்வளவு பாரதூரமான காரியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்து பொருட்களின் பெயர்களையும் மிக எளிமையாக கற்றுக் கொடுத்து விட்டான். இது ஆதம் (அலை) அவர்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் கிடைத்த மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று.
மனிதன் ஒரு பொருளை மிக எளிதில் உருவாக்கி விடுகிறான் ஆனால் அதற்குப் பொருத்தமான பெயரைச் சூட்டுவதில் அவனுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் ஒரு மொழியில் உள்ள பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியில் சொல்வது எளிதானது அல்ல!
கம்ப்யூட்டர் எனும் வேற்று மொழிச் சொல்லுக்கு தமிழில் கணினி என பெயர் வைத்திருக்கிறார்கள். கணினி எனும் சொல்லை ஏதோ ஒரு நிமிடத்தில் உருவாக்கி விடவில்லை. மணவை முஸ்தபா போன்ற எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து பல நாட்கள் யோசித்து இறுதியாக அறிவித்த சொல் தான் கணினி.
ஆனால் இன்று நாம் அதனை எளிதாக கம்ப்யூட்டர் என்றும் கணினி என்றும் சொல்லிச் செல்கிறோம்.
இன்றும் கூட மனிதன் ஒரு பொருளை முதலில் உருவாக்கி விட்டு அதற்கு பெயரைச் சூட்டுகிறான். நமக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நாம் என்ன பெயர் சூட்டலாம் என பல மாதங்கள் யோசித்து இருக்கிறோம்.
இதைத்தான் அல்லாஹ் " ஆதமிற்கு பெயர் சொற்களை நாமே ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுத்தோம்" என்கின்றான்.
மேற்கண்ட நான்கு விஷயங்களும் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய விசேஷ சிறப்புகள் ஆகும் என இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முதல் மனிதரின் படைப்பு நிலை :
=================================
அல்லாஹ் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் எனக்கு விருப்பமான ஒரு இனத்தைப் படைக்கப் போகின்றேன்; நீங்கள் பூமிக்குச் சென்று பூமியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்ணை எடுத்து வாருங்கள்" என்று கூறினான்.
வரலாற்று ஆய்வாளர் இபுன் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
قال السدي : بعث الله تعالى جبريل عليه السلام إلى الأرض ليأتيه بطائفة منها ، فقالت الأرض إني أعوذ بالله منك أن تنقص مني ، فرجع جبريل ولم يأخذ وقال : يا رب إنها عاذت بك ، فبعث ميكائيل ، فاستعاذت فرجع ، فبعث ملك الموت فعاذت منه بالله ، فقال : وأنا أعوذ بالله أن أخالف أمره ، فأخذ من وجه الأرض فخلط الحمراء والسوداء والبيضاء ، فلذلك اختلفت ألوان بني آدم ، ثم عجنها بالماء العذب والملح والمر ، فلذا اختلفت أخلاقهم فقال الله تعالى لملك الموت : رحم جبريل وميكائيل الأرض ولم ترحمها ، لا جرم أجعل أرواح من أخلق من هذا الطين بيدك .
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பூமியின் ஒரு பகுதிக்கு வந்து மண்ணை எடுப்பதற்காக பூமியின் மீது கையை வைத்தார்கள்.
அப்பொழுது பூமி சொன்னது ;
فقالت الأرض إني أعوذ بالله منك أن تنقص مني
"உங்களிடமிருந்து எனக்கு பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்; எண்ணில் இருந்து மண்ணை எடுத்து விடாதீர்!" என்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி வந்து விட்டார்கள்.
அனைத்தையும் அறிந்த அல்லாஹ் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டே "மண்ணைக் கொண்டு வந்து விட்டீரா?" எனக் கேட்டான்.
"இறைவா! உன்னைக் கொண்டு பூமி பாதுகாவல் தேடியது; மண்ணை எடுக்காதே என்றும் சொன்னது; எனவே நான் எடுக்கவில்லை; வந்து விட்டேன்" என்று ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்.
இரண்டாவதாக அல்லாஹ் மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அப்பொழுதும் பூமி அவ்வாறே சொன்னது. எனவே மீகாயீல் (அலை) அவர்களும் திரும்ப வந்து விட்டார்கள்.
மூன்றாவதாக இஜ்ராயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். பூமிக்கு வந்து மண்ணை எடுக்க கைகளை பூமியின் மீது வைத்தார்கள் அப்பொழுது பூமி வழமை போல் பாதுகாவல் தேடியது.
இஜ்ராயீல் (அலை) அவர்கள்
وأنا أعوذ بالله أن أخالف أمره ،
"நானும் அல்லாஹ்விடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்; அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டு இருக்கின்றான்; நான் மண்ணை அள்ளாமல் சென்றால் அவனுக்கு மாறு செய்தவனாக ஆகிவிடுவேன்" என சொல்லிக்கொண்டே பூமியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மண்ணை அள்ளிச் சென்று அல்லாஹ்விடம் வழங்கினார்கள்.
பூமியின் மேற்பரப்பில் இருந்த மண் கருப்பாகவும், சிவப்பாகவும், வெள்ளையாகவும் பல்வேறு கலப்படமான நிறங்களில் காணப்பட்டது. அதனால்தான் ஆதமுடைய சந்ததியினர் பல்வேறு நிறங்களில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் அந்த மண்ணில் மதுரமான நீரையும், உப்பு நீரையும், உவர்ப்பு நீரையும் கலந்து குழைத்து உருவாக்கினான். அதனால்தான் மனிதர்களின் குணங்கள் வெவ்வேறாக இருக்கின்றது.
அல்லாஹ் இஜ்ராயீல் (அலை) அவர்களிடம் கூறினான்; "ஜிப்ரயீலும் மீகாயிலும் பூமியின் மீது பரிதாபப்பட்டு திரும்பி வந்து விட்டார்கள். இஜ்ராயீலே! நீங்கள் பூமியின் மீது இறக்கப்படவில்லை.
அதனால் இந்த மண்ணில் இருந்து நான் யாரைப் படைக்கின்றேனோ அவர்களின் ஆன்மாவை உமது கைகளால் வெளியேற்றுங்கள்" எனக் கூறினான்.
அதாவது மண்ணால் படைக்கப்பட்ட மனிதனின் உயிரை , மண் எடுத்துக் கொடுத்தவரே கைப்பற்ற வேண்டும் என்ற பொறுப்பை இஜ்ராயீல் (அலை) அவர்கள் வசமே அல்லாஹ் வழங்கினான்.
உயிர் எடுக்கும்
வானவரின் பரிதாப நிலை :
=============================
முன்பெல்லாம் நபிமார்கள் மற்றும் நல்லவர்களிடம் இஜ்ராயீல் (அலை) அவர்கள் உயிரை எடுக்கச் செல்லும் போது அவர்களிடம் பேசி இருந்து விட்டு அவர்களின் அனுமதியோடு உயிரை பெற்று வருவார்கள். அது அன்று வழக்கமாக இருந்தது. அப்படி நடந்த இரண்டு நிகழ்ச்சியை கேளுங்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். (உயிரை எடுக்க போவதாக) வானவர் வந்து சொன்ன போது, மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் கண் வெளியே வந்து தொங்கியது.
உடனே அந்த வானவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று "மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாயே" என்று கூறினார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், "நீர் அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் வைக்கச் சொல்வீராக! (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு"என்று சொல்வீராக" என்றான்.
(அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் (சென்று மாட்டை இருவருக்கும் நடுவில் நிறுத்திக் கொண்டு கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடித்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள்.
இறைவன் "மரணம்தான்" என்று பதிலளித்தான்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியென்றால், இப்போதே (என் உயிரை எடுத்துக்கொள்)" என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக, அங்கிருந்து கல்லெறி தூரத்தில் தமது அடக்கத்தலம் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (இதை எடுத்துரைத்தபோது), "நான் அந்த இடத்தில் இருந்தால் செம்மணற் குன்றின் கீழே சாலையோரத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்" என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி, முஸ்லிம்.
மூஸா (அலை) அவர்களின் உயிரை எடுக்க சென்று இருந்த போது இஜ்ராயீல் (அலை) அவர்களுக்கு இவ்வாறான அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
عن ابن عباس، قال: لما أراد الله، عز وجل، يقبض روح خليله إبراهيم عليه السلام، هبط إليه ملك الموت، فقال له إبراهيم: رأيت خليلا يقبض روح خليله؟ قال: فعرج ملك الموت إلى ربه عز وجل، ثم عاد إليه، فقال له: يا إبراهيم، ورأيت خليلا يكره لقاء خليله؟ قال: فاقبض روحي الساعة.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் உயிரை கைப்பற்ற அல்லாஹ் நாடிய போது மலகுல் மவ்த் அவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
மலகுல் மவ்த் : இப்ராஹிம் (அலை) அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்...
இப்ராஹீம் அலை : மலகுல் மவ்த் அவர்களே!
வ அலைக்கும் ஸலாம்.
மலகுல் மவ்த்: நான் உங்களின் உயிரை எடுக்க வந்திருக்கின்றேன்.
இப்ராஹீம் அலை: ஒரு நண்பருடைய உயிரை ஒரு நண்பர் எடுப்பாரா?
மலகுல் மவ்த்: அவர்கள் இறைவனிடம் சென்றார்கள். விபரத்தைச் சொன்னார்கள். மீண்டும் இப்ராஹிம் (அலை) அவரிடம் வந்து, "ஒரு நண்பரை சந்திக்க ஒரு நண்பர் வெறுப்பாரா?" என்று கேட்டார்கள். உடனே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் "எனது உயிரை எடுத்துச் செல்லுங்கள்" எனக் கூறிவிட்டார்கள்.
நூல் : பிதாயா வந் நிஹாயா
உயிர் எடுக்கும் போது அவர்களிடம் பேசுவதாலும் அவர்களின் அனுமதியை கேட்பதாலும் ஏற்படுகின்ற இடையூறுகளை கருத்தில் கொண்டு அல்லாஹ் இஜ்ராயீல் (அலை) அவர்களிடம், "இனி நீங்கள் ரகசியமாகவே உயிரை பறித்து விடுங்கள்" என சொல்லிவிட்டான். அன்றிலிருந்து ரகசியமாகவே உயிர் எடுக்கப்பட்டு வருகிறது.
உங்களின் உயிரைப் பறிக்க உங்களிடம் இஜ்ராயீல் (அலை) அவர்கள் வந்து அனுமதி கேட்டால் என்ன சொல்லி இருப்பீர்? .......
உடலுக்குள் உயிர் செல்லும் போது.....
==================================
மீண்டும் நாம் ஆதம் (அலை) அவர்களின் வரலாற்றுக்குள் வருவோம்....
அல்லாஹ் தன் ரூஹை ஆதம் (அலை) அவர்களின் தலையில் ஊதியதும் அது கீழ் நோக்கி வந்தது. ரூஹ் கண்ணை அடைந்த போது ஆதம் (அலை) அவர்கள் தம்மிரு கண்களால் ரூஹைப் பார்த்தார்கள்.
பின்னர் உயிர் பெற்ற கண்கள் வழியாக சொர்க்கத்தின் கனிகளைப் பார்த்தார்கள்.
பின்னர் அந்த ரூஹ் கீழ்நோக்கி வரும்போது வயிற்றை வந்தடைந்தது. அப்பொழுது வயிறு அந்தக் கனியை சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டது.
அப்பொழுதே அந்தக் கனியை பறிப்பதற்காக எழுந்திரிக்க முயற்சித்தார்கள். ஆனால் ரூஹ் கால் முழுமைக்கும் சென்று அடையாததால் எழுந்திருக்க முடியவில்லை.
இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில்
وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
மனிதன் அவசரக்காரனாக படைக்கப்பட்டு இருக்கின்றான் ( 17:11) எனச் சொல்லுகிறான்.
பின்னர் ரூஹ் உடல் முழுவதையும் சென்றடைந்து முடிந்தது. ஆதம் (அலை) அவர்களின் இதயம் ஒரு வகையாக ஒளிர்ந்தது. அதனால் தும்மினார்கள். தும்மியதும் "அல்ஹம்துலில்லாஹ்!" எனக் கூறினார்கள்.
எனவே ஆதம் (அலை) அவர்கள், முதன் முதலில் பேசிய வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே" எனும் சொல்லாகும்.
நம் அனைத்து நிலைகளிலும் இந்த வார்த்தையை அல்லாஹ் பேசச் செய்வானாக! ஆமீன்!!
ஆதம் (அலை) அவர்களின் புகழ் மொழியைக் கேட்டதும் அல்லாஹ் "யர்ஹமுக ரப்புக யா ஆதம் - ஆதமே உமது இறைவன் உமக்கு அருள் செய்வானாக" என்று கூறினார்கள்.
இன்று தும்மலை கேட்கின்ற ஒவ்வொருவரும் அல்லாஹ் சொன்ன வார்த்தையான "யர்ஹமுகல்லாஹ் " என்பதையே சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
தும்மலும் புகழ் மொழியும் :
============================
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு வேண்டுமென்றே தும்மலை வரவைத்து தும்முவார்கள். அல்ஹம்துலில்லாஹ் என சப்தமாக கூறுவார்கள்.
அதற்குப் பதிலாக நபி (ஸல்) அவர்கள், "யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!" என துஆச் செய்வார்கள் அந்த துஆ நம் வாழ்நாளிற்கு போதுமானது என எண்ணி இவ்வாறு செய்வார்கள்.
அப்படி சிலர் செய்த போது நபி (ஸல்) அவர்கள், "யஹ்தீகல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டட்டும்" என பிரார்த்தித்தார்கள். அந்த வகையில் பலருக்கு ஹிதாயத் கிடைத்தது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ : الْحَمْدُ لِلَّهِ ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ : يَرْحَمُكَ اللَّهُ ، فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ فَلْيَقُلْ : يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ . رواه البخاري
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தும்மினால் அதைக் கேட்பவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என சொல்லட்டும் .
இதனைக் கேட்கும் சகோதரர்கள், தம் சகோதரருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' என்று சொல்லட்டும்.
இந்த வார்த்தையை கேட்பவர் 'யஹ்தீகுமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலகும் - அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பானாக! என்று சொல்லட்டும். நூல்: புகாரி
வானவர்களின் வாழ்த்து :
=========================
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ طُولُهُ سِتُّونَ ذِرَاعًا فَلَمَّا خَلَقَهُ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ النَّفَرِ مِنْ الْمَلائِكَةِ جُلُوسٌ فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ فَقَالَ السَّلامُ عَلَيْكُمْ فَقَالُوا السَّلامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآن". رواه البخاري ومسلم
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் எழுந்துச் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள்.
அதற்கு வானவர்கள், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி - ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள்.
ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன”.
நூல் : புகாரி, முஸ்லிம்
பின்னர் ஆதம் (அலை) அவர்கள் "இறைவா! இது எனக்கான காணிக்கை சரிதான்! எனது சந்ததிகளுக்குமா? அவர்கள் எங்கே?" என கேட்டார்கள்.
அப்பொழுது அல்லாஹ் தன் இரு கைகளையும் மூடி வைத்திருந்தான். ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ், "என் இரு கைகளில் ஒன்றை தொடுங்கள்" என கூறினான்.
ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் வலது கரத்தைத் தொட்டார்கள். (அல்லாஹ்வின் இரண்டு கரங்களும் வலக்கரம் தான்!)
அப்பொழுது அல்லாஹ் மூடி வைத்திருந்த தன் கரத்தைத் திறந்தான். அங்கே கடைசி மனிதர் வரை அனைத்து மனிதர்களும் இருந்தார்கள்.
அல்லாஹ் மனிதனை தன் கைகளால் படைத்து, தன் கைக்குள்ளாகவே வைத்திருந்தான்.
சில ஹதீஸ்களில் ஆதம் (அலை) அவர்களின் முதுகு தண்டில் இருந்து வெளிப்படுத்தினான் என்றும் காணப்படுகிறது.
வெளிப்படுத்தப்பட்ட மனிதர்கள் அனைவரின் வாயில் வெளிச்சம் காணப்பட்டது என ஒரு நபி மொழியிலும், கண்களில் வெளிச்சம் காணப்பட்டது என ஒரு நபி மொழியிலும், இதயத்தில் வெளிச்சம் காணப்பட்டது என ஒரு நபி மொழியிலும் பார்க்க முடிகிறது.
பிள்ளைகளின் மீது பேரன்பு
கொண்டவர் ஆதம் அலை :
=============================
அல்லாஹ்வின் கைகளுக்குள் இருந்த, அல்லாஹ்வின் கரங்களால் சுமக்கப்பட்ட அனைத்து மனிதர்களின் கண்களிலும் ஒரு பிரகாஷம் காணப்பட்டது. அதில் ஒரு மனிதரின் கண்ணில் இருந்து மட்டும் பிரகாஷம் அதிகமாக வெளிப்பட்டது.
"இறைவா! இவர் யார்? ஆதம் (அலை) அவர்கள் விசாரித்தார்கள்.
"இவர் உமது சந்ததியில் வரும் தாவூத் (அலை) ஆவார்" என அல்லாஹ் கூறினான்.
"இறைவா! இவர் எவ்வளவு காலம் வாழ்வார்?" என ஆதம் (அலை) அவர்கள் கேட்டதற்கு அல்லாஹ், "இவர் அறுபது ஆண்டுகள் வாழ்வார்" என பதில் கூறினான்.
"இறைவா! இவ்வளவு அழகான என் மகனுக்கு குறைந்த ஆயுளா?" என நமக்காக அல்லாஹ்விடம் அன்றே ஆதம் (அலை) அவர்கள் பேசினார்கள்.
மேலும் கூறினார்கள். "இறைவா! எனக்கு நீ எவ்வளவு காலம் ஆயுளை நீடித்து கொடுத்து இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு
"ஆயிரம் ஆண்டுகள்" என அல்லாஹ் பதில் கூறினான்.
ஆதம் (அலை) அவர்கள் "இறைவா! என்னிடமிருந்து நாற்பது வருடங்களை எடுத்து அவருக்கு வழங்கி விடு" எனக் கூறினார். அவ்வாறே வழங்கப்பட்டு விட்டதாக அல்லாஹ் வாக்களித்தான். நூல்: புகாரி
மண்ணுக்கேற்ற மனிதனின் ரகம் :
================================
மனிதனைப் படைக்க இறைவன் பயன்படுத்திய மண் கருப்பாக சிவப்பாக மற்றும் பல்வேறு வண்ணங்களில் காணப்பட்டது. மேலும் அந்த மண் இறுகிப்போய் கடினமாகவும் இளகிய நிலையிலும் இருந்தது.
இப்படிப்பட்ட மண்ணினால் மனிதன் படைக்கப்பட்டதால் சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும், சிலர் மா நிறமாகவும், சிலர் இளகிய குணம் கொண்டவர்களாகவும், சிலர் கடுமையான குணம் கொண்டவர்களாகவும் மண்ணுக்கேற்றார் போல் மனிதர்கள் இருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் .
மனிதர்களில் ஏற்றத்தாழ்வு ஏன்?
===============================
في رواية فرأى فيهم الضعيف والغني والفقير والذليل والمبتلى والصحيح . فقال له آدم : يا رب ، ما هذا ؟ ألا سويت بينهم ! قال : أردت أن أشكر
மற்றொரு அறிவிப்பில் காணப்படுகிறது. அல்லாஹ்வின் கைகளில் இருந்த சில மனிதர்கள் ஏழையாகவும், செல்வந்தர்களாகவும், பலவீனமானவர்களாகவும், பல்வேறு நோய் நொடிகளில் சோதிக்கப்பட்டவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், அற்பமானவர்களாகவும் காணப்பட்டார்கள்.
அப்பொழுது ஆதம் (அலை) அவர்கள், "இறைவா! இது என்ன கோலம்! என் சந்ததியினர் அனைவரையும் நீ ஒரே மாதிரியாக (சமமாகப்) படைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், "எனக்கு யார் நன்றி செலுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே இவ்வாறு படைத்திருக்கிறேன்" எனக் கூறினான்.
நூல்: பிதாயா வந்நிஹாயா
மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்து அல்லாஹ் இவ்வாறு திருக்குர்ஆனில் கூறுகிறான்.
أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ ۚ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا ۗ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
"உம்மைப் படைத்தாள்பவனின் அருளை (இவர் இவருக்குத்தான் கிடைக்க வேண்டுமென) இவர்கள் பங்கு வைக்கிறார்களா? உலக வாழ்வில், அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களிடையே நாம் பங்கு வைத்துத் தருகிறோம்;
அவர்களில் சிலர் சிலரிடம் வேலை வாங்கிக் கொள்வதற்காக, அவர்களில் (சிலரைச்) சிலரைவிட தரத்தில் உயர்ந்தவர்களாக நாம் ஆக்கியிருக்கிறோம்: உம்மைப் படைத்தாள்பவனின் அருள்தான் அவர்கள் சேகரித்து வைத்திருப்ப வற்றைவிடச் சிறந்ததாகும். 43 : 32
எனவே மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இருப்பது நியாயமானது தான் என இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.
படிக்காத பலர் பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கின்றார்கள். நன்கு படித்து, பல டிகிரிகள் பெற்று, பல கோல்ட் மெடல்களை பெற்றவர்கள், எதார்த்தமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். நாம் இவ்விருவரையும் அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம்.
எனவே ஒரு மனிதனின் தனிப்பட்ட முயற்சியால், உழைப்பால் கிடைப்பது அல்ல! செல்வமும் புகழும்; அது இறைவன் தருவது.
இமாம் ஷாஃபியீ (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள். மிகச்சிறந்த அறிவாளி ஏழையாக வாழ்கிறான்; ஆனால் படிக்காதவன், முட்டாளாக இருப்பவன் வாழ்க்கை மிகச் செழிப்பாக இருக்கிறது.
இதுவெல்லாம் அல்லாஹ்வின் ஆற்றலும் வல்லமையும் ஆகும். ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அவன் முயற்சியால் அல்ல! அல்லாஹ்வின் அருளால் மட்டுமே ஆகும்.
தம்மிடம் உள்ள ஒன்று தமக்கு பிரச்சனை, நோவினை என்று எதுவும் தரவில்லை என்றால், (கண் நன்றாக இருக்கின்றது கிட்னி நன்றாக இருக்கின்றது) அவை அனைத்திற்கும் அல்லாஹ்விற்கு நன்றி பாராட்டுவதே ஆக உயர்ந்த குணம்.
எனவே அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் வழங்கிய அனைத்திற்கும் நன்றி செலுத்துங்கள்!.
சொர்க்கத்தில் ஆதம் (அலை) அவர்கள் :
=====================================
عن جابر رضي الله عنه قال: قيل: يا رسول الله أينام أهل الجنة؟ قال: لا النوم أخو الموت، وأهل الجنة لا يموتون ولا ينامون. أخرجه البزار والطبراني وابن مردويه والبيهقي
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உறங்குவார்களா?" எனக் கேட்கப்பட்டது
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர்கள், "உறங்க மாட்டார்கள்; உறக்கம் மரணத்தின் தோழன்; எனவே சொர்க்கவாசிகள் எப்பொழுதும் மரணிக்க மாட்டார்கள்; உறங்கவும் மாட்டார்கள்" என கூறினார்கள்.
நூல் : தப்ரானீ, பைஹகீ,
عن ابن مسعود وناس من الصحابة قالوا : لما سكن آدم الجنة كان يمشي فيها وحشا، ليس له زوج يسكن إليها، فنام نومة، [ ص: 279 ] فاستيقظ فإذا عند رأسه امرأة قاعدة خلقها الله من ضلعه، فسألها ما أنت؟ قالت : امرأة، قال : ولم خلقت؟ قالت : تسكن إلي . قالت له الملائكة ينظرون ما بلغ علمه : ما اسمها يا آدم؟ قال : حواء، قالوا : لم سميت حواء؟ قال : لأنها خلقت من حي . فقال الله يا آدم اسكن أنت وزوجك الجنة . أخرجه ابن جرير ، وابن أبي حاتم ، والبيهقي ، وابن عساكر
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுவதாவது; ஆதம் (அலை) அவர்கள் உருவான இடமே சொர்க்கம் என்பதால் சொர்க்கத்தை நடந்தே சுற்றிப் பார்த்துவிட்டு களைப்பில் உறங்கினார்கள். அச்சமயம் அவர்களுக்கு மனைவியும் இல்லை.
ஆதம் (அலை) அவர்கள் விழித்துப் பார்த்த போது, தம் விலாவில் இருந்து அல்லாஹ் படைத்தப் பெண் தன் தலைமாட்டில் அமர்ந்திருந்ததைப் பார்த்தார்கள்.
அந்தப் பெண்ணிடம் "நீ என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு "நான் ஒரு பெண்" என்று அவர்கள் கூறினார்கள்.
ஆதம் (அலை) அவர்கள், "நீ ஏன் படைக்கப்பட்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண், "நீங்கள் என்னிடத்தில் தங்கி அமைதி பெற வேண்டும் என்பதற்காக" என பதில் கூறினார்கள்.
வானவர்கள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு கூட்டமாக ஆதம் (அலை) அவர்களிடம் சென்று அவரின் கல்வி ஞானம் எந்த அளவு இருக்கிறது என்பதை சோதிக்க விரும்பினார்கள்.
"ஆதமே! அந்தப் பெண்ணின் பெயர் என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், 'ஹவ்வா' என்று கூறினார்கள்.
வானவர்கள், "ஏன் ஹவ்வா என பெயர் சூட்டப்பட்டது?" என கேட்டார்கள்.
ஆதம் (அலை) அவர்கள், "எனது உயிரி - அணுவில் இருந்து படைக்கப்பட்டதால் அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது" எனக் கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ் "ஆதமே! நீரும் உமது மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்" எனச் சொல்லி அனுப்பி வைத்தான். நூல் : பைஹகீ.
எனவே ஆதம் ஹவ்வா (அலை) போன்று ஒவ்வொரு தம்பதியரும் சந்தோசமாக வாழ வேண்டும்.
கணவன் மனைவிக்கு இடையே ஈகோ இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.
கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ அதிகமாக ஆதிக்கம் செலுத்தினால் அங்கே இல்லற வாழ்வு சிறக்காது. கசந்துப் போய்விடும்.
ஒருவரிடம் மற்றொருவர் கேட்டாராம்.
நீங்கள் பேயை பார்த்து இருக்கிறீர்களா?
என்ன அப்படி சொல்லி விட்டீர்; நான் 15 வருடங்களாக பேயோடு தானே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
ஒரு மனிதனுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கண் குளிர்ச்சியாகவே - அதாவது அவரவர் விரும்புவது போலவே நடந்து கொள்ள வேண்டும்.
விரோதம் மற்றும் குரோதங்களோடு இருந்தால் அது நரகமாக ஆகிவிடும்.
திரை மறைவில் உருவான
ஹவ்வா அலை :
============================
ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பூமியின் 2000 வருடங்களுக்கு மேலாக படைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும் கிடந்தது. அந்த தோற்றத்தை தினம் தினம் வானவர்களும், இப்லீஸ் இனத்தைச் சேர்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஹவ்வா (அலை) அவர்கள் படைக்கப்பட்ட போதும் படைக்கப்பட்ட பிறகும் அல்லாஹ்வைத் தவிர சொர்க்கத்தில் வேறு யாரும் பார்க்கவில்லை.
ஆம்! ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருமே இல்லாத சொர்க்கத்திற்குள் தனியாக , மறைவாகப் படைக்கப்பட்டார்கள். அப்பொழுது அவரது கணவர் உடன் இருந்தார்.
அந்நியனான ஷைத்தான் ஒருமுறைதான் ஹவ்வாவை திரையின்றிப் பார்த்தான். அத்துடன் ஆதம் ஹவ்வா (அலை) இருவரும் சொர்க்கத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
பெண்கள் பர்தா - திரைக்குள் இருக்க வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அப்படித்தான் அல்லாஹ் திரை மறைவில் அதாவது சொர்க்கத்தில் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.
ஆதம் நபியும் மூஸா நபியும்
செய்த விவாதம் :
==============================
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (தடுக்கப்பட்ட கனியை சாப்பிட்ட பாவத்தின் காரணத்தால்) எங்களை அல்லாஹ் (சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கி) இழப்புக்குள்ளாக்கி விட்டீர்களே; மேலும் சொர்க்கத்திலிருந்தும் எங்களை வெளியேற்றி விட்டீர்களே” என்று கூறினார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "மூஸாவே! அல்லாஹ் தங்களுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன், தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காகான தவ்ராத் வேதத்தை நான் படைக்கப்படுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே) எழுதிவிட்டான்.
(இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? ( நான் படைக்கப்படுவதற்கு முன்பே இறைவன் என் விதியை எழுதிவிட்டபோது அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்) என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) "மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்" என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புகாரி : 6614
எனவே ஆதம் (அலை) அவர்கள் அறிவிலும், அழகிலும் சிறந்தவர்கள் ஆவர்.
நல்ல நாள் :
============
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: خير يوم طلعت عليه الشمس، يوم الجمعة، فيه خلق آدم، وفيه أدخل الجنة، وفيه أخرج منها اخرجه صحيح مسلم
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . சூரியன் உதயமாகும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆ உடைய நாளாகும். ஏனென்றால் அந்த நாளில்தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதே நாளில்தான் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அதே நாளில்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள்.
நூல் : முஸ்லிம்
எனவே ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழைந்த நாள் எப்படி சிறந்ததாக நாம் கருதுகிறோமோ அதுபோலவே அவர்கள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வெளியேற்றப்பட்ட நாளும் நல்ல நாள் தான்.
ஏனென்றால் அதன் காரணமாகவே மனிதர்கள் படைக்கப்பட்டார்கள். உலகம் பல்கலைக்கழகமாக மாறியது. அவர்கள் பூமிக்கு வராவிட்டால் பூமி இவ்வளவு செழிப்பாகவும் சிறப்பாகும் ஆகியிருக்காது.
அதனால்தான் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திற்கு சென்ற நாளும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாளும் சமமானது என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பூமியில் ஆதம் அலை :
=======================
பூமிக்கு வந்த ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் விவசாயம் மற்றும் இரும்புச் சார்ந்த தொழிலை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் கற்றுக் கொடுத்தான்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் முறையையும், வாழ்வாதாரத் தேவைகளைப் பெறுகிற விதத்தையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.
ஆதம் (அலை) அவர்கள் அன்றைய இந்தியாவின் இலங்கையில் இறங்கினார்கள். அன்று இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து இருந்தது. பின்னர் தான் கண்டங்களில் பிளவு ஏற்பட்டு கடல் உள்ளே நுழைந்ததாக வரலாறு சொல்லிக் காட்டுகிறது.
இன்றும் ஆதம் (அலை) அவர்களின் கால் தடம் இலங்கையில் ஆதம் மலை எனும் ஒரு மலையில் பதிந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
ஹவ்வா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா - (பாட்டி) எனும் நகரில் இறங்கி இருந்தார்கள்.
ஆதம் (அலை) அவர்கள், தாம் செய்த தவறுக்காக இறைவனிடம் இருநூறு வருடங்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.
இறுதியாக ஒரு நாள்
رب أسألك بحق محمد لما غفرت لي،
என்னைப் படைத்தால்பவனே! நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் உன்னிடம் நான் வேண்டுகிறேன்; எனது பாவங்களை மன்னித்துவிடு" என்று கூறினார்கள்.
நூல் : ஹாகிம், தப்ரானீ
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لما اقترف آدم الخطيئة قال: يا رب أسألك بحق محمد لما غفرت لي. قال وكيف عرفت محمدا؟ قال: لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا: لا إله إلا الله محمد رسول الله. فقلت: إنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك. قال: صدقت يا آدم، ولولا محمد ما خلقتك» . رواه الحاكم والطبراني
அல்லாஹ் கேட்டான் ஆதமே! முஹம்மதை உமக்கு எப்படித் தெரியும்?
"இறைவா! நீ என்னை உனது கரங்களால் படைத்தாய்! உனது உயிரை என்னில் ஊதினாய்! அப்பொழுது என் தலையை தூக்கிப் பார்த்தேன்; உனது அர்ஷுக்கு மேலாக "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹி" என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.
நீ உனது பெயரோடு வேறு யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டாய்; அப்படி சேர்த்துக் கொள்வதாக இருந்தால் அவர் உனது படைப்புகளில் உனக்குப் பிரியமானவராகத்தான் இருப்பார் என்று நான் விளங்கிக் கொண்டேன்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ், "ஆதமே! உண்மையை உரைத்தீர்; முஹம்மதை படைக்க வேண்டும் என்ற திட்டம் எனக்கு இல்லை என்றால், உங்களை நான் படைத்திருக்க மாட்டேன்.
நூல் : ஹாகிம், தப்ரானி (இந்த ஹதீஸை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.)
நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி ஆதம் (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கேட்டதால் அல்லாஹ் அவரை மன்னித்தான்.
யாருடைய பெயரைச் சொல்லி ஆதம் (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கேட்டார்களோ அந்த பெயருக்குச் சொந்தக்காரர் தான் நமது உம்மத்தினரின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் . அந்த உம்மத்தில் நாம் பிறந்திருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று.
மறுப்பும் மறதியும் :
====================
ஒரு நாள் இஜ்ராயீல் (அலை) அவர்கள் வானவர்கள் புடைச்சூழ ஆதம் (அலை) அவர்களின் உயிரை எடுத்துச் செல்ல வந்திருந்தார்கள்.
ஆதம் (அலை) அவர்கள், "என்ன விஷயமாக இங்கே வந்திருக்கிறீர்?" என இஜ்ராயீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு இஜ்ராயீல் (அலை) அவர்கள், "தங்களின் உயிரை எடுத்து வரும்படி அல்லாஹ் சொல்லி அனுப்பினான்" எனக் கூறினார்கள்.
உடனே ஆதம் அலை அவர்கள், "960 வருடங்கள் தானே ஆகிறது; எனக்கு இன்னும் நாற்பது வருடங்கள் பாக்கி இருக்கின்றனவே அதற்குள் வந்து விட்டீர்களே!" என்று கேட்டார்கள் .
அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள், "உங்கள் ஆயுளில் இருந்து நாற்பது வருடங்களை உங்கள் மகனார் தாவூத் (அலை) அவர்களுக்கு கொடுத்து விட்டீர்களே!" என்று நினைவுறுத்திய போது, "இல்லை இல்லை நான் கொடுக்கவில்லை" என்று மறுத்தார்கள்.
அல்லாஹ்வும் "சரி நாற்பது வருடங்கள் வாழட்டும்!" என அனுமதித்தான்.
"எனவே ஆதம் (அலை) அவர்கள் தான் பேசிய வார்த்தைகளை மறந்து விட்டதாலும், அல்லது மறுத்து விட்டதாலும் அதே குணம் மனிதர்கள் இடத்திலும் காணப்படுகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதம் அலை அவர்களின் மரணம் :
=================================
உலகத்தில் தாய், தந்தை இல்லாத மனிதர்கள் என்று சொன்னால், அது ஆதம் - ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களே ஆவார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வரும்போது ஹஜருல் அஸ்வத் கல்லை பூமிக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இன்று அந்தக் கல் கஅபாவின் மூலையில் வைக்கப்பட்டதால் உலக மக்கள் அனைவரும் அதனை முத்தமிட்டு வருகிறார்கள். நமக்கும் ஆதம் (அலை) அவர்களுக்கும் அந்த கல் வாயிலாக ஓர் தொடர்பு ஏற்பட்டு வருகிறது.
ஆதம் (அலை) அவர்கள் பூமியில் வாழ்ந்த இறுதி பதினொரு நாட்கள் நோயில் பிடிக்கப்பட்டிருந்தார்கள். அந்த மரண தருவாயில் இருந்த போது, முதன் முதலில் சொர்க்கத்தில் சுவைத்த கனிகளை சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டார்கள் .
ஆனால், அற்பமான இந்த ஆசையை அல்லாஹ்விடத்தில் சொல்ல வெட்கப்பட்டார்கள். அவர்களின் உள்ளத்தில் இந்த ஆசை நீண்ட நாட்கள் குடி கொண்டிருந்தது.
மேலும் சொர்க்கத்திலிருந்து வரும்போது சொர்க்கக் கனிகளின் விதைகளை கொண்டு வந்து விவசாயம் செய்திருந்தார்கள். அந்த கனிகளைப் பறித்து வரும்படி தம் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினார்கள்.
பிள்ளைகளும் அந்தக் கனிகளை பறிப்பதற்கு சென்று கொண்டிருந்த போதுதான் வானவர்களில் ஒரு கூட்டத்தினர் வந்தார்கள்.
கனிகளைப் பறிக்கச் சென்ற பிள்ளைகளை வானவர்கள் உடன் அழைத்து வந்து விட்டார்கள்.
மரணப் படுக்கை, முதுமை, நோய் போன்ற காரணங்களால் அவதியுற்று வந்த ஆதம் (அலை) அவர்களின் ஆன்மாவை கைப்பற்றுவதற்காக அல்லாஹ் இஜ்ராயீல் (அலை) அவர்கள் உட்பட வானவர்களின் குழுவை அனுப்பி வைத்தான்.
இஸ்ராஃபீல் (அலை) அவர்களைத் தவிர முதன்மையான மூன்று வானவர்களும் மற்றும் சில வானவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வீட்டிற்குள் வந்தார்கள். வரும்பொழுது சொர்கத்துக் கனிகள் பலவற்றை கொண்டு வந்திருந்தார்கள்.
அப்பொழுது வீட்டிற்குள் இருந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஹவ்வா (அலை) அவர்கள் என அனைவரையும் வெளியே இருக்கும் படி செய்துவிட்டு, ஷீத் (அலை) அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மனம் கமலும் சொர்க்கத்துக் கனிகளை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அறுத்துச் சின்னச் சின்ன துண்டுகளாக எடுத்து அவற்றை ஆதம் (அலை) அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள்.
அதை அவர்கள் சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போலவும், எந்த சிரமங்களும் இல்லாமல் சொர்க்கத்தில் சுற்றித் திரிவது போலவும் உணர்ந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் அந்த நாள் நிலையை அடைந்தது.
முதலில் பார்த்தது, முதலில் சுவைத்தது, முதலில் பேசியது, முதலில் வியந்தது போன்ற பழைய நினைவுகளை மனம் அசைப் போட்டது. அவர்களின் உடல் வானவர்கள் இடையே இருந்தாலும், உள்ளம் வானுலகை வட்டமிட்டு கொண்டிருந்தது.
அச்சமயம் இஜ்ராயீல் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு மலரை ஆதம் (அலை) அவர்களின் கைகளில் கொடுத்து நுகரச் சொன்னார்கள்.
ஆதம் (அலை) அவர்களும் நுகர்ந்தார்கள். அந்த வாசனை மிகவும் இன்பகரமாக இருந்தது. அதை தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் இயற்கை எய்தினார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நம் வாழ்வில் முதன் முதலில் அனுபவித்த முதல் பயணம், முதல் உணர்வு, முதல் உணவு போன்றவை நம் இதயத்தை விட்டும் நீங்காது.
அந்த வகையில் தான் ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் சொர்க்கத்தில் சுவைத்த கனிகளை இறுதிக் காலங்களில் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறான்.
ஜனாஸா தொழுகை:
=======================
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களின் மகனான ஷீத் (அலை) அவர்களை ஜனாஸா தொழ வைக்கச் சொன்னார்கள். ஷீத் (அலை) அவர்கள், "ஜிப்ரயிலே! நீங்கள் தொழ வையுங்கள்" எனச் சொன்னார்கள்.
ஜிப்ரயீல் (அலை) அவர்கள், "நீங்கள் தான் ஆதம் நபியின் மகன்! முறைப்படி நீங்கள்தான் தொழ வைக்க வேண்டும்" என்று சொல்லி தொழுகை முறைகளை கற்றுக் கொடுத்தார்கள்.
அல்லாமா இப்னு அஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஷீத் அலை அவர்கள் 30 தக்பீர்கள் சொல்லி தொழ வைத்தார்கள்.
நமது ஜனாஸாக்களில் நான்கு தக்பீர்களை மட்டுமே சொல்கிறோம். ஆதம் (அலை) அவர்களின் தொழுகையில் 26 தக்பீர்கள் அதிகபட்சமாக சொல்லப்பட்டது. அது, அவர்களின் கண்ணியம், மரியாதை, புகழ் ஆகியவற்றின் உயர்ந்த நிலையைக் குறிக்கிறது.
ஷீத் (அலை) அவர்கள் தொழ வைக்க முதல் மூன்று வானவர்களும் மற்றும் பல வானவர்களும் ஆதம் (அலை) அவர்களின் குடும்பத்தினரான நான்கு லட்சம் பேரும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டார்கள். பின்னர் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
நூல் : அல் காமில் ஃபித் தாரீக்
ஆதம் (அலை) அவர்களின்
இறுதி உபதேசம் :
===========================
ஆதம் (அலை) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது மகன் ஷீத் (அலை) அவர்களை அழைத்து கூறினார்கள்.
மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களை மறந்து விடாதே!
அவர்களின் பெயர் தாங்கிய ஸலவாத்தை தினமும் ஓதிக் கொண்டிரு!
அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திரு!
அவர்களின் மீது ஈமான் - நம்பிக்கை கொண்டிரு!
அவர்களால்தான் என் சந்ததியினர் அனைவருக்கும் மறுமை நாளில் பாவமன்னிப்பு கிடைக்கும்.!
அவர்கள்தான் இறுதி நபி! அவர்கள் என் சந்ததியிலிருந்து தோன்றுவார்கள்!
அவர்கள் அனைத்து மனித ஆன்மாக்களின் தந்தை!
நான் அவர்களுடைய உடலின் தந்தை மட்டுமே! நூல் : தஸவ்வுஃப் ரஹ்மானீ
இந்த வரலாற்றின் படிப்பினை :
===============================
1. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். எனவே அனைத்து தருணங்களிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
2. ஆதம் அலை அவர்களுக்கு மறதி ஏற்பட்டதால் அவர்களின் சந்ததியினரான நமக்கும் மறதி ஏற்படுவது இயற்கையானதே! ஆனாலும் அதை தவிர்ப்பதற்கு
يا الله يا مهيم
யா அல்லாஹ் யா முஹைமின் என தினமும் ஃபஜர் தொழுகைக்குப் பிறகு 113 முறை ஓதிக்கொள்ள வேண்டும்.
இதை ஓதுவதற்கு முன்னும் ஓதியப் பின்னும் 13 முறை ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும். இதை ஓதுவதால் நினைவாற்றல் பெருகும் அதே நேரம் மறதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
3. اللَّهمَّ اجعَل أوسعَ رزقِكَ عليَّ عندَ كِبَر سنِّي وانقِطاعِ عُمُري
இறைவா! வயது முதிர்ந்த நிலையில், வாழ்நாளின் இறுதியில் நான் இருக்கும்போது எனக்கு விசாலமான ரிஜ்க் - வாழ்வாதாரங்களை வழங்குவாயாக! என்று கேட்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.
நூல் : தப்ரானீ





Comments
Post a Comment