நபிகள் நாயகம் செய்த

ஹஜ்ஜின் செயல்முறை



ஹிஜ்ரி ஒன்பதாவது வருடம் முதல் ஹஜ்  கடமையாக்கப்பட்டது.  அந்த வருடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல்வேறு அரசியல்  நெருக்கடிகள் இருந்ததால் அவ்வாண்டு அபூ பக்ர் (ரலி ) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.


முஸ்லிம்களின் முதல் ஹஜ்  :


நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு ஹஜ் மட்டுமே செய்து இருக்கிறார்கள். அந்த ஹஜ்ஜின் முழு விபரங்களும் நாம் காணலாம்.


ஹிஜ்ரி 10 துல்கஅதா பிறை 25 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மதீனாவில் இருந்து  புறப்பட்டுச் சென்று துல் ஹுலைஃபாவில் அன்று இரவு தங்கினார்கள். அந்த இரவில் தமது அனைத்து மனைவியருடனும் உடலுறவு கொண்டார்கள்.


மறுநாள் பிறை 26 ஞாயிற்றுக்கிழமை லுஹருடைய நேரத்தில் இஹ்ராம் உடுத்துவதற்காக குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்தார்கள். 


ஜிப்ரயீல் (அலை) அவர்களின் உத்தரவுக்கிணங்க கிரான் (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒரே இஹராமில் செய்யும் வகையில் ஆன) ஹஜ் செய்வதாக நிய்யத் செய்து கொண்டார்கள். 


அதேநேரம் தமது மற்ற தோழர்களை இஃப்ராத், தமத்துவு போன்ற தாம் விரும்புகிற  வகையிலான ஹஜ்ஜை மேற்கொள்ள பொது அனுமதி வழங்கினார்கள்.


லுஹர் தொழுத பிறகு இஹ்ராமுக்காக இரண்டு ரக்அத்துகள் தொழுது ஹஜ்ஜுகான நிய்யத் செய்து தல்பியாவை ஓதிக்கொண்டு வெளியே வந்தார்கள். 


தமது ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சப்தமாக  தல்பியாவை கூறினார்கள். மக்கள் அனைவரும் சப்தமாக தல்பியாவை சொன்னார்கள். 


பின்னர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அருகில் இருந்த பைய்தா எனும் மலையின் மீது ஏறி இறங்கும் சமயத்தில் தல்பியாவை அனைவரும் உரக்கமாக சொன்னார்கள். அந்த சப்தம் விண்ணை முட்டியது.


பின்னர் செல்லும் வழியில் 'வாதீ ரவ்ஹா' என்னும் இடத்தில் அஸர் தொழுகையை ஜமாஅத்தாக நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள்.


நபி (ஸல்) அவர்களின் சாமான்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் சாமான்களும் ஒரே ஒட்டகத்தில் வைத்து கட்டப்பட்டு ஓர் அடிமையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்தான் அந்த ஒட்டகத்தை இழுத்து வந்து கொண்டிருந்தார். 


'வாதீ அரஜ்' எனும் இடத்தை அடைந்தபோது அந்த  ஒட்டகம் காணாமல் போய்விட்டதாக  அடிமை கூறினார். அதனால் கோபமுற்ற அபூ பக்ர் (ரலி) அவர்கள் அவரை அடித்து விட்டார்கள். 


இதனை அறிந்த மற்ற நபி தோழர்கள் நபிகளாருக்கும் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கும் உணவு சமைத்து கொடுத்தார்கள் .


ஸஅது (ரலி) அபூ கைஸ் (ரலி) போன்றவர்கள் பயணத்திற்கு தேவையான சாமான்களை கொடுக்க முன் வந்தார்கள். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாத  நபிகளார் 'தமது ஒட்டகம் கிடைத்து விட்டதாக சொல்லிவிட்டார்கள்.


ஹஜ் செயல்முறை பயான் :


இந்நிலையில் பயணம் தொடர்ந்தது . மக்காவிற்கு அருகில் உள்ள 'வாதீ அஸ்பான்' எனும் இடத்தில் தங்கியிருந்த போது ஸுராகா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் குழந்தைக்கு பாடம் நடத்துவது போல் எங்களுக்கு ஹஜ் சம்பந்தமான விளக்கங்களை சொல்லிக் கொடுத்து விடுங்கள்; எங்களுக்கு ஹஜ் செய்யத் தெரியும் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். 


அதற்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் ஹஜ் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே சொல்லி கொடுத்தார்கள்.


மாதவிடாய் : 


மக்காவிற்கு அருகில் உள்ள 'ஸரஃப்' எனும் இடத்தை ஹஜ் குழுவினர் அடைந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. 


மிகவும் வருத்தத்தோடு நபிகளாரிடம் சொன்னபோது அண்ணலார், "இது அனைத்துப் பெண்களுக்கும் வளமையாக ஏற்படும் ஒன்றுதான்; கவலைப்பட வேண்டாம்" என சொல்லிவிட்டு அப்படிப்பட்டவர்கள் ஹஜ் செய்வதற்கான வழி முறைகளை முழுமையாக சொல்லிக் கொடுத்தார்கள்.


பின்னர், "யாரிடம் உள்கியா - குர்பானீ பிராணி இல்லையோ அவர்கள் மக்காவிற்குள் சென்று உம்ரா செய்துவிட்டு இஹ்ராமை கலைந்து விட வேண்டும்" என்றும் கூறினார்கள்.


'வாதீ அஜ்ரக்' என்ற இடத்தை அடைந்தபோது, "இந்த இடத்தில் மூஸா (அலை) அவர்கள் தம் காதுகளில் விரல்களை நுழைத்துக் கொண்டு சப்தமாக தல்பியா  சொல்கிறார்கள்; அந்த காட்சியை நான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களும் சப்தமாக தல்பியா சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.



மக்காவிற்குள் நுழைந்தனர் :



பின்னர் மக்காவிற்கு மிக அருகில் 'ஜீதுவா' எனும் இடத்தில் இரவு தங்கினார்கள். மறுநாள் அதிகாலையில் குளித்துவிட்டு இமாம் ஜமாஅத்தோடு சுபுஹு தொழுகையை தொழுது முடித்தார்கள். சூரியன் உதயமாகுவதற்கு முன்பே அங்கிருந்து மக்காவிற்கு புறப்பட்டார்கள்.


அன்று துல்ஹஜ் பிறை 4 -  ஞாயிற்றுக்கிழமை. அவ்வாண்டு துல் கஅதா பிறை 29 இல் முடிவுற்றது. துல் கஅத பிறை 25 சனிக்கிழமை புறப்பட்டு துல்ஹஜ் பிறை 4 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்காவிற்குள் நபிகளாரும், குழுவினரும் நுழைந்தார்கள். மதீனாவில் இருந்து மக்கா வந்தடைய 9 நாட்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னர் நபிகளாரும் குழுவினரும் மக்காவிற்குள் லுஹா உடைய நேரத்தில் நுழைந்தார்கள். 


முதலில் உம்ரா :


ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு தவாஃப் செய்தார்கள். தவாஃபை முடித்ததும் மகாம இப்ராஹீமிற்கு பின்னால் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். 


பின்னர் மீண்டும் வந்து ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். 


பிறகு பாபு ஸஃபா என்ற வாசலின் வழியாக வெளியே வந்து ஸஃபா மலை மீது ஏறி நின்று நீண்ட நேரம் தக்பீர், தஹ்மீது ஆகியன சொல்லி துஆ செய்தார்கள். 


பிறகு ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஏழு முறை ஸயீ - தொங்கோட்டம் ஓடினார்கள்.


ஸயீ முடிந்த பிறகு, "உள்ஹியா இல்லாதவர்கள் இஹ்ராமை கலைந்து விடுங்கள். ஹஜ்ஜுக்கு புறப்படுவதற்கு முன்பு மீண்டும் இஹ்ராமை கட்டிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்று நான்கு நாட்கள் இஹ்ராமோடு தங்கி இருந்தார்கள். 


அந்த நான்கு நாட்களும் ஹரமில் இமாமாக இருந்து  தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். கஅபாவிற்குள்ளும் சென்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.


துல்ஹஜ் பிறை 8 : 


பிறை எட்டு, வியாழக்கிழமை லுஹா உடைய நேரத்தில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மினாவிற்கு சென்றார்கள். 


ஏற்கனவே இஹ்ராமிலிருந்து வெளிவந்திருந்த அனைவரும் அன்றைய தினம் பகலில் இஹ்ராம் அணிந்து கொண்டு நபிகளாரோடு புறப்பட்டார்கள்.


மினாவில் லுஹரிலிருந்து மறுநாள் ஃபஜர் வரை ஐந்து நேர தொழுகை கஸர் செய்து  தொழுதார்கள். 


பிறை 9 அன்று காலை சூரியன் உதயமான பிறகு மினாவில் இருந்து அரஃபாவிற்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கே அரஃபாவில் இன்று மஸ்ஜிதே நமிரா உள்ள இடத்தில் நபிகளாருக்கு கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள். பின்னர் ஜவால் - சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு லுஹருடைய நேரத்தில் தமது 'கஸ்வா' எனும் ஒட்டகத்தில் ஏறிச் சென்று 'பத்னே உர்னா' எனும் இடத்தில் உலகப் பிரசித்தி பெற்ற குத்பா - பேருரை நிகழ்த்தினார்கள்.


பேருரைக்குப் பிறகு பிலால் (ரலி) அவர்களை உரக்கமாக தக்பீர் சொல்லிச் சொன்னார்கள். அரஃபா மைதானம் அதிரும் அளவிற்கு அனைவரும் தக்பீர் கூறினார்கள். 


பின்னர் லுஹர், அஸர் ஆகிய இரண்டு நேர தொழுகைகளையும் லுஹர் நேரத்திலேயே ஜம்மு செய்து தொழ வைத்தார்கள். 


தொழுத பிறகு அரஃபா மைதானத்திற்கு வந்து மங்ரிப் நேரம் வரை ஒட்டகத்தின் மீது இருந்தவாரே துஆ செய்து கொண்டிருந்தார்கள். 


இதற்கிடையில் நபிகளாருக்கு பால் வழங்கப்பட்டது. அதை அனைவரும் பார்க்கும் வகையில் நபிகளார் பால் குடித்தார்கள். அதனால் அன்று நபிகளார் நோன்பு நோற்கவில்லை என அனைவரும் தெரிந்து கொண்டார்கள்.


மேலும் அன்றைய தினம் நஜ்திலிருந்து ஒரு குழுவினர் நேராக அரஃபாவில் வந்து கலந்து கொண்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "ஹஜ் என்றால் என்ன?" என்று வினவியதற்கு, "ஹஜ் என்பது அரஃபாவில் தங்குவதாகும் ; யார் துல்ஹஜ் பிறை 10 அன்று லுஹருக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்து விடுவாரோ அவரது ஹஜ் நிறைவேறி விடும்" எனக் கூறினார்கள்.


அரஃபா உடைய நாளில் மங்ரிப் நேரம் வரை நபி (ஸல்) அவர்கள் தம் உம்மத்தினருக்காக தொடர்ந்து துஆ செய்து கொண்டே இருந்தார்கள். அப்பொழுது அல்லாஹ், "அநியாயக்காரர்களை மட்டும் நான் மன்னிக்க மாட்டேன்" என்று கூறினான்.  உடனே நபி (ஸல்) அவர்கள், "இறைவா! அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு உன் புறத்திலிருந்து common session - நஷ்ட ஈடு வழங்கி விடு; அதே நேரம் அநியாயம் செய்தவர்களையும் மன்னித்துவிடு" என்று கூறினார்கள். அதையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். 


மேலும் அன்றைய தினம் தான் 'அல் யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்' என் வசனம் அருளப்பட்டது.


முஸ்தலிஃபா புறப்பாடு  : 


சூரியன் மறைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் மங்ரிப் உடைய நேரத்தில் அங்கே மங்ரிபை தொழாமல் முஸ்தலிஃபாவிற்கு புறப்பட்டார்கள்.


நபி (ஸல்) அவர்கள் சென்ற கஸ்வா ஒட்டகத்தின் மீது ஒட்டகத் தொட்டி எனும் அம்பாரி இருந்தது. அதில் முன் பகுதியில் நபிகளாரும் பின்பகுதியில் வளர்ப்பு மகனின் மகன் பேரன் உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.


முஸ்தலிஃபாவிற்கு செல்லும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது. ஒட்டகத்திலிருந்து இறங்கி சிறுநீர் கழித்தார்கள். 


பின்னர் (வளர்ப்பு மகனின் மகன்) பேரன் உஸாமா (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் ஊற்ற, நபிகளார் உளூ செய்து கொண்டார்கள். மங்ரிப் தொழுகையைப் பற்றி உஸாமா (ரலி) அவர்கள் நினைவுறுத்தியும் எங்கும் தொழாமல் முஸ்தலிஃபவிற்கு வந்து அடைந்தார்கள்.


பின்னர் மங்ரிபையும் இஷாவையும் கஸர் செய்து தொழ வைத்தார்கள். அனைவரும் தொழுதார்கள். 


"பெண்கள், குழந்தைகள், வயதான பலவீனமானவர்கள் ஆகியோரில் விரும்புவோர் மினாவிற்கு சென்று தமது கூடாரங்களில் தங்கிக் கொள்ளலாம்" என சொல்லி அனுப்பி வைத்தார்கள். 


ஆனால் நபி (ஸல்) அவர்கள் அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து உம்மத்தினருக்காக துஆ செய்து கொண்டே இருந்தார்கள்.


சுபுஹுடையா ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜரை தொழுதுவிட்டு சூரிய உதயத்திற்கு முன்னரே மினாவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள்.  உஸாமா (ரலி) அவர்கள் தாம் நடந்து வருவதாக சொல்லிவிட்டார்கள். 


அதனால் இளைஞர் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி)  அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்கு பின்னால் அமர்ந்து கொண்டார்கள்.  செல்கிற வழியில் முஸ்தலிஃபா எல்லைக்குள் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி)  அவர்கள் தம்மிருவருக்காகவும் ஷைத்தானுக்கு கல்லடிக்க கற்களை பொறுக்கி கொண்டார்கள்.


செல்லும் வழி நெடுகிலும் ஆண்களும், பெண்களும் நபிகளாரிடத்தில் ஹஜ் சம்பந்தமான சட்டங்களை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நபிகளாரும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே சென்றார்கள்.


மீனா செல்லும் வழியில் 'வாதீ முஹஸ்ஸிர்' எனும் பள்ளத்தாக்கு வந்தது. இந்த இடத்தில் தான் அப்ரஹாவின் யானைப்படை  அல்லாஹுவால் அளிக்கப்பட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தை விரைவாக கடந்துச் சென்றார்கள்.


ஜமரத்துல் அகபா: 


நபி (ஸல்) அவர்கள் மினாவை  சென்றடைந்ததும்  ஜவால் - சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த பிறகு ஜமரத்துல் அகபா -  பெரிய ஷைத்தானிற்கு மட்டும் கல் அடித்தார்கள். இங்கே கல் அடிக்கும் வரை தல்பியாவை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கல்லடித்த பிறகு தல்பியாவை நிறுத்தி விட்டார்கள். 


பின்னர் மினாவில் தமது தங்கும் இடத்திற்கு வந்து நீண்ட நேரம் உபதேசம் செய்தார்கள். பின்னர் குர்பானீ கொடுக்கும் இடத்திற்குச் சென்று 63 ஒட்டகங்களை தமது கைகளால் அறுத்தார்கள். மீத ஒட்டகங்களில் 37 லை அலீ (ரலி) அவர்கள் அறுத்து பலியிட்டார்கள். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் 100 ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். 


தமக்கான ஒரு குர்பானி போக மீதமுள்ள 99 குருபானிகளும் முழு உம்மத்தினருக்கு வழங்கப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஒவ்வொரு குர்பானீ ஒட்டகத்தில் இருந்தும் சிறிதளவு இறைச்சியை எடுத்து வந்து சமைத்து அதன் சால்னாவை தமக்கு வழங்கும்படி அலீ (ரலி) அவர்களிடம் நபிகளார் கூறினார்கள். அதைப்போல் அவர்கள் செய்தும் கொடுத்தார்கள். அதனால் அனைத்து ஒட்டகங்களிலிருந்தும் தாம் சாப்பிட்டது போலும் அதன் பரக்கத்தை தான் அனுபவித்தது போலும் ஆனது. 


பின்னர் ஸஹாபாக்களிடம் தாங்கள் வேண்டிய அளவு இந்த ஒட்டகங்களில் இருந்து எடுத்து சமைத்து சாப்பிடுங்கள் என பொது அறிவிப்புச் செய்தார்கள். 


பின்னர் தமது மனைவியர் சார்பாக ஒரு மாட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்கள். 


குர்பானி கொடுத்த பிறகு மஃமர் (ரலி) மற்றும் கர்ராஷ் (ரலி) ஆகிய இருவரும் நபிகளாருக்கு தலை முடியை முழுமையாக மழித்து, மொட்டை அடித்தார்கள். மீசையை கத்தரித்து, தாடியை ஒதுக்கி நகங்களை வெட்டினார்கள். நகமும், முடியும் அனைத்து ஸஹாபாக்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. அதைத் தோழர்கள் பரக்கத்திற்காக வைத்துக் கொண்டார்கள்.


பின்னர் இஹ்ராமை கலைந்து விட்டு, தமக்கான ஆடைகளை அணிந்து கொண்டார்கள். நறுமணம் பூசிக் கொண்டார்கள். அதிகமான நபித் தோழர்கள் அங்கே கூடி ஹஜ் சம்பந்தமான மஸாயில்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.


துல் ஹஜ் பிறை 10 அன்று பெரிய ஷைத்தானுக்கு கல் அடித்தல், குர்பானி கொடுக்குதல், மொட்டை அடித்தல், தவாஃபே ஜியாரா செய்தல் ஆகிய நான்கு பணிகளை மேற் சொன்ன வரிசை முறைப்படியே நபி (ஸல்) அவர்கள் செய்து முடித்தார்கள்.


மேற்கண்ட நான்கு அமல்களில் சிலவற்றை நபித்தோழர்கள் முன் பின் செய்தார்கள். அவை பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


தவாஃப் ஜியாரா :  


நபி (ஸல்) அவர்கள் லுஹர் உடைய நேரத்தில் தவாஃப் ஸியாரவை செய்வதற்காக மக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். வழியிலோ அல்லது ஹரம் ஷரீஃபிலோ அல்லது மீண்டும் மினாவிற்கு வந்த பிறகோ லுஹரைத் தொழுதார்கள்.


மக்கா முகர்ரமாவில் தவாஃபே ஸியாரவை நபி (ஸல்) அவர்கள் முடித்துக் கொண்டு ஸஃபா மர்வாவிற்கு இடையே தொங்கோட்டம் ஓடினார்கள்.


பின்னர் மினாவிற்கு வந்து தமது கூடாரத்தில் தங்கி இருந்தார்கள். மூன்று நாட்களும் பல்வேறு சட்டங்களை பொதுமக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அந்த உபதேசத்தின் போது, "நான் இனி உங்களை சந்திக்காமல் போய்விடக்கூடும்" எனும் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார்கள். 


அந்த மூன்று நாட்களிலும் ஜவால் -  உச்சியில் இருந்து சூரியன் சாய்ந்த பிறகு மூன்று ஷைத்தான்களுக்கும் கல் அடித்தார்கள்.


துல்ஹஜ் பிறை 13 செவ்வாய்க்கிழமை அன்று ஜவாலுக்கு பிறகு ஷைத்தானுக்கு கல் அடித்து முடித்தார்கள்.


மக்கா முகர்ரமாவிற்கு செல்லும் வழியில் மஹஸ்ஸப் - கைஃப் பனீகினானா - பத்ஹா - மஅப்தா - என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்  இடத்தில் கூடாரமடித்து நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள். இங்கு தான் லுஹரிலிருந்து இஷா வரை அனைத்து நேர தொழுகைகளையும் தொழுதார்கள்.


பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் குடும்பத்தினர் மூன்று வருடங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம், இந்த இடம் தான். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடங்கள் தங்கி இருந்தார்கள். ஆனால் இன்று முடி சூடா மன்னனராக இந்த இடத்தில் தங்கி  இருந்தார்கள். 


அப்பொழுதுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "நான் உம்ரா செய்யாமலே ஹஜ் செய்து இருக்கிறேன், நான் என்ன செய்வது?" என்று கேட்டதற்கு உம்முடைய சகோதரரை தன்ஈம் அழைத்துச் சென்று, இஹ்ராம் கட்டி வந்து ஒர் உம்ரா செய்யுங்கள்" எனக் கூறினார்கள். அவ்வாறே ஆயிஷா அம்மா அவர்கள் ஒரு உம்ராவை செய்து முடித்தார்கள்.


துல்ஹஜ் பிறை 14 அன்று காலை சுபுஹு தொழுகையை ஹரம் ஷரீஃபில் தொழுதுவிட்டு கஅபத்துல்லாவிற்கு உள்ளும் சென்று துஆ செய்த பிறகு மதீனாவை நோக்கி பயணித்தார்கள்.  


துல்ஹஜ் பிறை 18 ஞாயிற்றுக்கிழமை 'கதீர்கம்' என்ற இடத்தில் தங்கி நீண்டதொரு பிரசங்கம் செய்தார்கள். அன்று துல் ஹுலைஃபாவை இரவில் அடைந்தார்கள். அங்கு தங்கியிருந்து விட்டு சுபுஹு தொழுத பிறகு மஃரஸ் என்னும் இடத்தின் வழியாக மதீனாவிற்குள் நுழையும் போது ,


ائِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدٌونَ


நாங்கள் தவ்பா செய்தவர்களாக, உன்னை வணங்கியவர்களாக, எங்கள் படைத்தாள்பனாகிய உன்னை புகழ்ந்தவர்களாக திரும்புகிறோம்" என்னும் துஆவை ஓதிக்கொண்டு மதீனாவிற்குள் நுழைந்தார்கள்.


துல் கஅதா பிறை 25-இல் புறப்பட்டு துல்ஹஜ் பிறை 19 இல் மதீனாவிற்குள் நுழைந்து விட்டார்கள். இடைப்பட்ட நாட்கள் 24 நாட்களாகும்.


அமீருல் ஹஜ் :


நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்த பிறகு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ்வை சென்றடைந்தார்கள். 


பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்த கலீஃபா அபூ பக்ர் (ரலி) அவர்கள் முதலாம் வருடம் ஹஜ் செய்ய இயலவில்லை அதனால் அமீருல் ஹஜ் ஆக உமர் (ரலி) அவர்களை நியமித்து அனுப்பி வைத்தார்கள். இரண்டாம் வருடம் அபூ பக்ர் (ரலி) அவர்களே ஹஜ்ஜுக்கு சென்று மக்களை வழிநடத்தினார்கள்.


அபூ பக்ர் (ரலி) அவர்கள் மரணித்த பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆனார்கள். அவ்வருடம் அவர்களால் ஹஜ் செய்ய இயலவில்லை. அதனால் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.


பின்னர் தொடர்ந்து பத்து வருடங்கள் தாமே அமீருல் ஹஜ்ஜாக இருந்து உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய வைத்தார்கள். 


தமது இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் அன்றிருந்த அனைவரையும் அழைத்துச் சென்று ஹஜ் செய்ய வைத்தார்கள்.


பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றார்கள்.  முதல் வருடம் அவர்களால் ஹஜ் செய்ய இயலவில்லை. தமக்குப் பகரமாக  அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து அனுப்பி வைத்தார்கள்.


பின்னர் ஹிஜ்ரி 25 முதல் ஹிஜ்ரி 34 வரை தாமே அமீருல் ஹஜ்ஜாக இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஹஜ் செய்ய வைத்தார்கள்.


இறுதி வருடம் தாம் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை அமீருல் ஹஜ் - ஹஜ்ஜின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.


பின்னர் கலீஃபாவாக பொறுப்பேற்ற அலீ (ரலி) அவர்கள் ஜமல், ஸிஃப்பீன் போன்ற யுத்த நடவடிக்கைகளால், அவர்களால் ஹஜ்ஜு செய்யவே இயலாமல் போனது.


இதுதான் நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் வழிமுறைகளாகும்.


மேற்கண்ட அனைத்துத் தகவல்களும் ஆதாரப்பூர்வமான கிரந்தங்களில் இருந்து தொகுத்து எழுதப்பட்டதாகும். இதில் சந்தேகத்திற்கிடமான எந்தத் தகவலும் இல்லை.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்