சுவையான உணவு என எது தீர்மானிக்கிறது?உடலா? உணவா?

சூஃபிகளின் ஹஜ் :- 14
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

சுவையான உணவு என 
எது தீர்மானிக்கிறது?
உடலா? உணவா?
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

இறைநேசர் ஸயீத் பின் அபீ அருப்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்‌. ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் ஒருமுறை ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்தான்.

வழியில் ஓர் இடத்தில் தங்கியிருந்த போது வேலையாட்களிடம், "காலை உணவை கொண்டு வாருங்கள்" என கூறினான்.  

தனது மெய் காப்பாளரிடம் "இப் பகுதியில் வாழும் எவரேனும் ஒரு மனிதன் இருந்தால்  அழைத்து வந்து என்னுடன் சாப்பிடச்சொல்!  அவனிடம் இப்பகுதியின் நிலை குறித்து விசாரித்துக் கொள்வோம்" என கூறினான். 

உடனே மெய் காப்பாளன் மலைகள், காடுகள் என பல மைல் தூரம் சுற்றித்திரிந்து  பார்த்தபோது ஒரு கிராமப்புற மனிதர்  இரண்டு போர்வைகளைப் போர்த்தியவராக படுத்துறங்கிக் கொண்டிருந்தார். 

அவரைக் காலால் எட்டி உதைத்து தூக்கத்திலிருந்து எழுப்பி, "என்னுடன் வா! உன்னை அமீர் அழைத்து வரச் சொன்னார்" என்றான். 

கிராமப்புற மனிதர் வந்ததும் ஹஜ்ஜாஜ் அவரிடம் "கைகளைக் கழுவிக்கொண்டு வந்து என்னுடன் சாப்பிடு" என்றான்.

கிராமத்தார் :-  
உன்னை விட உயர்ந்தவன் எனக்கு விருந்திருக்கு அழைத்து இருக்கின்றான். 

ஹஜ்ஜாஜ் :-  அவன் யார்? 

கிராமத்தார் :-  
அல்லாஹ் என்னை நோன்பு நோற்குமாறு அழைத்து இருக்கின்றான்.

ஹஜ்ஜாஜ் :- 
இவ்வளவு கடுமையான வெப்பத்தில் நோன்பு நோற்று இருக்கின்றாயா?

கிராமத்தார் :-
ஆம்! இன்றைய வெப்பத்தை விட மஹ்ஷர் மைதானத்தில் உண்டாகும் வெப்பத்தை நினைத்தும், நரக நெருப்பின் வெப்பத்தை நினைத்தும் இன்று நோன்பு நோற்றுள்ளேன்!

ஹஜ்ஜாஜ் :- 
இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் சாப்பிட்டுக் கொள்! நாளை நோன்பு வைத்துக்கொள்!

கிராமத்தார் :-
நான் நாளை வரை உயிர் வாழ்வேன் என்பதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொன்டால் நான் நோன்பை முறித்து உங்களோடு உண்ணுகிறேன்.

ஹஜ்ஜாஜ் :- 
இந்த விஷயத்தில் யார்தான் பொறுப்பேற்க முடியும்?

கிராமத்தார் :-
அப்படியென்றால் ரொக்கமாகக் கிடைப்பதை கடன் மீதா விட்டு விடுவது? அதுவும் அந்தக் கடனுக்கு நீர் பொறுப்பேற்கவும் தயாரில்லை.

{இன்று உயிரோடு இருக்கின்றேன்; நோன்பும் நோற்று இருக்கிறேன்; இன்று கிடைத்த இந்த நாளை நான் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது எனக்கான நஷ்டம் இல்லையா? }

ஹஜ்ஜாஜ் :- இந்த உணவு அறுசுவையுடையது.

கிராமத்தார் :- ஓர் கவிதையைப் படித்துக் கொண்டே எழுந்துச் சென்றார்.

நீரும் இதனை 
ருசியானதாக ஆக்கவில்லை! 

உன் சமையல்காரனும் 
ருசியானதாக ஆக்கவில்லை.  

உடல் சுகம்தான் 
ருசியானதாக  ஆக்கி இருகின்றது.

எனக்கு உடல் நலமில்லை என்றால்  
எந்த உணவும் ருசியாக இருக்காது. 

உடல் ஆரோக்கியமாக இருந்தால் 
எந்த உணவும் சுவையாகவே தெரியும்.

கிராமத்தாரின் கவிதைகளை கேட்டதும் ஹஜ்ஜாஜ் மௌனமானான்.

ஹஜ்ஜாஜ், இஹ்ராம் கட்டி இருந்ததால் கிராமத்தாரின் தலை தப்பியது என்றே அனேக எழுத்தாளர்கள் கூறுகிறார்கள்.

நூல்: ரவ்ழுர் ரைய்யாஹீன் 

காலமெல்லாம் குற்றம் செய்து கொண்டிருக்கக் கூடியவர்களையே குற்றம் செய்யாமல் தடுப்பதுதான் ஹஜ். 

எனவே அனைவரும் ஹஜ் செய்ய நிய்யத்து வையுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்