அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்

சூஃபிகளின் ஹஜ் :-16
~•~•~•~•~•~•~•~•~•~•~•

அள்ள அள்ள குறையாத 
அட்சய பாத்திரம்..
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

அபூ அப்துர் ரஹ்மான் சுபீஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் ஹஜ் செய்வதற்காக சென்று கொண்டிருக்கும்போது வழியில் பாக்தாதை அடைந்தேன். 

அப்போது சூஃபித் தனத்தின் மதமதப்பு என் மண்டையில் ஏறி இருந்தது . அதாவது உறுதியான எகீன் -  நம்பிக்கையும், கடுமையான முயற்சி -  முஜாஹதாவும், அல்லாஹ் அல்லாதவற்றை முதுகுக்கு பின்னால் தூக்கி எறிவது போன்ற செயல்களை  அனாயசமாக செய்து சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் என்னில் உண்டாகி இருந்தது.

நான் நாற்பது நாட்கள் வரை ஒன்றும் உண்ணவில்லை. பருகவில்லை. ஹள்ரத் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களின் சமூகத்திற்கு செல்லவுமில்லை.

நான் எப்பொழுதும் உலூவுடனேயே இருப்பேன். இதே நிலையில் பக்தாதிலிருந்து புறப்பட்டு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தேன். 

அங்கே ஒரு கிணற்றில் ஒரு மான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கும் கடுமையான தாகம் மேலிட்டது. 

நான் கிணற்றடிக்குச் சென்றதும் மான் என்னைக் கண்டு ஓடியது. மான்  குடிக்கும்போது தரை மட்டத்தில் இருந்த கிணற்றுத் தண்ணீர், நான் சென்றதும் கீழே ஆழத்தில் இறங்கி விட்டது. 

இதைக் கண்டு நான் முன்னேறிச் சென்றேன். மேலும் அல்லாஹ்விடம் "இறைவா! உன்னிடம் எனது மதிப்பு ஒரு மானுக்குச் சமமாக கூட இல்லையா?" எனக் கேட்டேன். 

எனக்குப் பின்புறத்திலிருந்து ஓர் அசரீரி சப்தம் வந்தது. அதில் "நாம் உன்னை பரிசோதித்தோம்; ஆனால் நீங்கள் பொறுமையாக இருக்க வில்லை. (பேசி விட்டீர்; குற்றங்குறை கூற ஆரம்பித்து விட்டீர்;) சென்று தண்ணீரைப் பருகுங்கள்.  

மான் வாளியும் கயிறும் இல்லாமல் வந்தது. உங்களிடமோ வாளியும் கயிறும் இருந்தது'' எனச் சொல்லப்பட்டது.

நான் கிணற்றடிக்குச் சென்றேன். தண்ணீர் நிரம்பி வழிந்தது. நான் வேண்டிய அளவு குடித்துக் கொண்டேன். என் பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டேன். உலூவும் செய்து கொண்டேன். 

பின்னர் நான் என் பயணத்தை தொடங்கினேன். வழி நெடுகிலும் குடித்தேன்; குளித்தேன்; உளூ செய்தேன்; பிறருக்கும் வழங்கினேன்; ஆனால் அந்தத் தண்ணீர் தீரவே இல்லை. 

இவ்வாறே நான் மதீனா தய்யிபாவையும் சென்றடைந்து; அதற்குப் பிறகு ஹஜ்ஜையும் முடித்துக் கொண்டு பக்தாதுடைய ஜாமிஆ மஸ்ஜிதிற்கு‌ திரும்பி வந்த போது ஹள்ரத் ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களின் பார்வை என் மீது விழுந்தது. 

உடனே அவர்கள், "நீர் சிறிது பொறுத்திருந்தால் இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலடியில் தண்ணீர் பெருக்கெடுத்தது போன்று உமது பாதங்களுக்கு அடியிலிருந்து தண்ணீர்  வெளிப்பட்டிருக்கும்'' என்று கூறினார்கள்.

நூல் : ஃபுதூஹாதுல் மக்கியா , துர்ருல் மன்சூர் 

எனவே ஹாஜிகள் சற்று பொறுமையாக இருந்தால் இறைவனின் உதவி கிடைக்கும். 

B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் -  வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள். 

https://bmkmanbayee.blogspot.com/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்