அறிவார்ந்த நிலையில் நினைவலைகள் இல்லாத இதயம் :
சூஃபிகளின் ஹஜ்:- 17
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
அறிவார்ந்த நிலையில் நினைவலைகள் இல்லாத இதயம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் மகன்,
இமாம் பாகிர் பின் அலீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்குச்
சென்றிருந்த போது கஅபாவின் மீது தம் பார்வை விழுந்ததும் அவர்கள் மிக சப்தமாக வீரிட்டு அழுதார்கள்; நினைவிழந்து கீழே விழுந்தார்கள்.
"இங்குள்ள அனைவரின் பார்வையும், கவனமும் உங்கள் பக்கம் திரும்பி விட்டது; எனவே சப்தமாக அழவேண்டாம்" என்று அவர்களின் சீடர்களில் ஒருவர் கூறினார்.
''அல்லாஹ், என் அழுகையின் காரணமாக என்மீது அருட் பார்வையை செலுத்தக் கூடும்; அதனால் நாளை மறுமையில் நான் வெற்றி பெற வாய்ப்புண்டு" என்று கூறினார்கள்.
பின்னர் தவாஃப் செய்தார்கள். தவாஃப்பிற்குப் பிறகு மகாமு இப்றாஹீம் அருகில் நின்று தவாஃபுடைய வாஜிபான இரண்டு ரக்அத்துகளைத் தொழுதார்கள். மேலும் நஃபில் தொழுகைகளில் ஈடுபட்டார்கள்.
நஃபில் தொழுகையின் போது ஸஜ்தாவில் கண்ணீர் சிந்தியதால் அந்த இடமே நனைந்து ஈரமாகக் காணப்பட்டது.
அவர்கள் தமது சீடரிடம் கூறினார்கள். "எனக்கு அதிகமான மன வேதனையும், கவலையும் இருக்கின்றது.
சீடர், "தங்களுக்கு எந்த விஷயத்தில் மன வேதனை உண்டானது?'' என கேட்டார்.
அதற்கு அவர்கள், "யார் தன் உள்ளத்தில் அல்லாஹ்வின் மார்க்கத்தை மட்டும் நிலைபெறச் செய்திருக்கிறாரோ அவர் தன் இதயத்திலிருந்து உலகத்தை வெளியேற்றி அல்லாஹ்வை மட்டும் நிலை பெறச் செய்து விட்டார்.
ஆனால் அந்த துன்யா - உலகம் என்றால் வேறு ஒன்றுமில்லை.
நாம் சவாரி செய்து வந்த வாகனம், நாம் உடுத்தியுள்ள உடைகள், நமக்குக் கிடைத்த மனைவி, நாம் சாப்பிடும் உணவு ஆகியவைதான் துன்யா - உலகம் எனப்படுவது. இவைகளைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
இவை என் மனதில் இடம் பிடித்துள்ளது. இதுதான் என்னை வருத்தமுறச் செய்தது" என விளக்கினார்கள்.
நூல்: ரவ்ழுர் ரைய்யாஹீன்
இவர்களின் உள்ளத்தில் நான்கு பொருட்கள் மட்டுமே நினைவில் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வளவு அதிகமாக அழுது இருக்கிறார்கள்.
ஆனால் நமது இதயத்தில் நமக்குத் தெரியாதவற்றைத் தவிர அதாவது நாம் அறிந்த அனைத்தும் நமது இதயத்திற்குள் தான் வைத்திருக்கின்றோம்.
நமது இதயத்திற்குள் உள்ள பொருட்கள், பெயர்கள், வண்ணங்கள் போன்ற அனைத்தும் வெளியாகி இதயம் காலியானால்தான், காலியாக இருக்கும் இதயத்தில் இறைவன் குடியேறுவான்.
B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் - வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள்.
https://bmkmanbayee.blogspot.com/
Comments
Post a Comment