நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -2
சூஃபிகளின் ஹஜ் :28
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நபிகள் நாயகம் செய்த
ஹஜ்ஜின் செயல்முறை
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
தொடர் : 2
ஹஜ் செயல்முறை பயான் :
---------------------------------------------------
இந்நிலையில் பயணம் தொடர்ந்தது . மக்காவிற்கு அருகில் உள்ள 'வாதீ அஸ்பான்' எனும் இடத்தில் தங்கியிருந்தார்கள்.
அப்போது ஸுராகா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் குழந்தைக்கு பாடம் நடத்துவது போல் எங்களுக்கு ஹஜ் சம்பந்தமான விளக்கங்களை சொல்லிக் கொடுத்து விடுங்கள்; எங்களுக்கு ஹஜ் செய்யத் தெரியும் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதற்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் ஹஜ் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே சொல்லி கொடுத்தார்கள்.
மாதவிடாய் :
------------------------
மக்காவிற்கு அருகில் உள்ள 'ஸரஃப்' எனும் இடத்தை ஹஜ் குழுவினர் அடைந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது.
மிகவும் வருத்தத்தோடு நபிகளாரிடம் சொன்னபோது அண்ணலார், "இது அனைத்துப் பெண்களுக்கும் வளமையாக ஏற்படும் ஒன்றுதான்; கவலைப்பட வேண்டாம்" என சொல்லிவிட்டு அப்படிப்பட்டவர்கள் ஹஜ் செய்வதற்கான வழி முறைகளை முழுமையாக சொல்லிக் கொடுத்தார்கள்.
பின்னர், "யாரிடம் உள்கியா - குர்பானீ பிராணி இல்லையோ அவர்கள் மக்காவிற்குள் சென்று உம்ரா செய்துவிட்டு இஹ்ராமை கலைந்து விட வேண்டும்" என்றும் கூறினார்கள்.
'வாதீ அஜ்ரக்' என்ற இடத்தை அடைந்தபோது, "இந்த இடத்தில் மூஸா (அலை) அவர்கள் தம் காதுகளில் விரல்களை நுழைத்துக் கொண்டு சப்தமாக தல்பியா சொல்கிறார்கள்; அந்த காட்சியை நான் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்; நீங்களும் சப்தமாக தல்பியா சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.
மக்காவிற்குள் நுழைந்தனர் :
-----------------------------------------------------
பின்னர் மக்காவிற்கு மிக அருகில் 'ஜீதுவா' எனும் இடத்தில் இரவு தங்கினார்கள். மறுநாள் அதிகாலையில் குளித்துவிட்டு இமாம் ஜமாஅத்தோடு சுபுஹு தொழுகையை தொழுது முடித்தார்கள். சூரியன் உதயமாகுவதற்கு முன்பே அங்கிருந்து மக்காவிற்கு புறப்பட்டார்கள்.
அன்று துல்ஹஜ் பிறை 4 - ஞாயிற்றுக்கிழமை. அவ்வாண்டு துல் கஅதா பிறை 29 இல் முடிவுற்றது. துல் கஅத பிறை 25 சனிக்கிழமை புறப்பட்டு துல்ஹஜ் பிறை 4 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்காவிற்குள் நபிகளாரும், குழுவினரும் நுழைந்தார்கள். மதீனாவில் இருந்து மக்கா வந்தடைய 9 நாட்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நபிகளாரும் குழுவினரும் மக்காவிற்குள் லுஹா உடைய நேரத்தில் நுழைந்தார்கள்.
முதலில் உம்ரா :
------------------------------
ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு தவாஃப் செய்தார்கள். தவாஃபை முடித்ததும் மகாம இப்ராஹீமிற்கு பின்னால் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்.
பின்னர் மீண்டும் வந்து ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள்.
பிறகு பாபு ஸஃபா என்ற வாசலின் வழியாக வெளியே வந்து ஸஃபா மலை மீது ஏறி நின்று நீண்ட நேரம் தக்பீர், தஹ்மீது ஆகியன சொல்லி துஆ செய்தார்கள்.
பிறகு ஸஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஏழு முறை ஸயீ - தொங்கோட்டம் ஓடினார்கள்.
ஸயீ முடிந்த பிறகு, "உள்ஹியா இல்லாதவர்கள் இஹ்ராமை கலைந்து விடுங்கள். ஹஜ்ஜுக்கு புறப்படுவதற்கு முன்பு மீண்டும் இஹ்ராமை கட்டிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்று நான்கு நாட்கள் இஹ்ராமோடு தங்கி இருந்தார்கள்.
அந்த நான்கு நாட்களும் ஹரமில் இமாமாக இருந்து தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். கஅபாவிற்குள்ளும் சென்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.
தொடரும்.....
Comments
Post a Comment