,பேர் புகழுக்காக ஹஜ் செய்யாதீர்
சூஃபிகளின் ஹஜ் : - 42
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
பேர் புகழுக்காக ஹஜ் செய்யாதீர் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
عن أنس بن مالك رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وآله وسلم قال: "يأتي على الناس زمان يحج أغنياء أمتي للنزهة، وأوساطهم للتجارة، وقراؤهم للرياء والسمعة، وفقراؤهم للمسألة".
رواه: الجامع الكبير ، والديلمي، و كنز العمال
عن ابن عباس رضي الله عنهما قال: حج النبي صلى الله عليه وآله وسلم حجة الوداع ثم أخذ بحلقة باب الكعبة فقال: "يا أيها الناس ألا أخبركم بأشراط الساعة؟" وقال في أواخر الحديث: "يحج الناس إلى هذا البيت الحرام تحج ملوكهم لهواً وتنزهاً، وأغنياؤهم للتجارة، ومساكينهم للمسألة، وقراؤهم رياء وسمعة". رواه: ابن مردويه
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்பொழுது எனது உம்மத்தில் உள்ள செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் செல்வது போல் ஹஜ்ஜுக்குச் செல்வார்கள்.
அவர்களில் நடுத்தர குடும்பத்தினர் வியாபார நோக்கத்துடனும், அவர்களில் உள்ள படித்தவர்கள் பெருமைக்காகவும் பெயருக்காகவும் ஹஜ்ஜு செய்வார்கள்.
அவர்களில் உள்ள ஏழைகள் யாசகம் கேட்பதற்காக ஹஜ் செய்வார்கள்.
மற்றொரு அறிவிப்பில், "அரசர்கள் (மற்றும் அரசு அதிகாரிகள்) பொழுதுபோக்கிற்காகவும், டூர் - உல்லாச பயணம் மேற்கொள்வதற்காகவுமே ஹஜ்ஜு செய்வார்கள்" என காணப்படுகிறது.
நூல்: ஜாமிவுல் கபீர், தைலமீ, கன்ஜுல் உம்மால், இப்னு மர்தவைஹி
ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் ஜிஹாத் - போர்க்களம் செல்கிறார். அவர் அதன் மூலம் நன்மையை எதிர்பார்க்கிறார் மேலும் அதன் மூலம் பிரபல்யமும், பேரும் புகழும் அடைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்; இவர் நிலை?' என்ன என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு எந்த நன்மையும் இல்லை" என்று கூறினார்கள்.
அந்த நபித்தோழர் மூன்று முறை கேட்டும் அதே பதிலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறுதியாக நபி (ஸல் ) அவர்கள் "அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி யார் அமல் செய்தாரோ அவருடைய அமலை மட்டுமே அல்லாஹ் ஏற்கின்றான்" என்று கூறினார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத்
எனவே அல்லாஹ்விற்காக மட்டுமே ஹஜ் மற்றும் இதர நல்லறங்களை செய்ய வேண்டும்.
இறைவழிபாடுகளை முறையாக செய்து அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்க்க வேண்டும்.
இறைவழிபாடுகளுக்கான பிரதிபலன், நாம் எதிர்பார்க்கும் வகையில் நமக்கு இவ்வுலகில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம்.
இறைவழிபாடுகளை முறையாக செய்து விட்டு, யாருக்காக செய்தோமோ அவன், அதற்கான பிரதிபலனை கொடுக்க வேண்டும் என அவனிடமிருந்து எதிர்பார்ப்பதே முறையாகும்.
=-=-=-
"ஹாஜிகளிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில் நம்முடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும்.
இத்தகையவர், தன் அமலைப்பற்றி பெருமைப்படமாட்டார் " என அலீ பின் மூவ்பிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment