சூஃபிகள் கூறும் ஹஜ்ஜின் ரகசியங்கள்

சூஃபிகளின் ஹஜ் :- 33
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

சூஃபிகள் கூறும் 
ஹஜ்ஜின் ரகசியங்கள்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

ஹஜ்ஜுடைய ஒவ்வொரு செயலிலும் பல நுட்பமான விஷயங்கள் மறைந்திருக்கின்றது. அவை அனைத்தையும் நாம் அறிய இயலாது. 

ஆனால் சூஃபிகளும் ஞானிகளும் தாம் அறிந்த சில தகவல்களை நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அல்லாஹ்விற்கும் அடியானுக்குமான தொடர்பை ஏற்படுத்தித் தருவது வணக்க வழிபாடுகள்தாம். 

அந்த வகையில் தொழுகை முதல் ஜகாத் வரை பல இறைவழிபாடுகள் மூலம் அவனை நெருங்க முயற்சிகளை மேற்கொண்டோம். 

அதன் தொடர்ச்சியாக தான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய பிறகு நமக்கு விருப்பமான அனைத்தையும் விட்டுவிட்டோம். 

நமக்கு விருப்பமானவற்றை பார்ப்பதை விட்டும் நம் முகங்களை திருப்பிக் கொண்டும் இறைவனின் முகத்தை முன்னோக்கியும் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம். 

நாடு நகரம் இல்லாமல், ஒரு பற்றற்ற அலங்கோல நிலையில், சுற்றக்கூடிய தன் அடியானை காண அல்லாஹ் ஆசைப்பட்டான். அதற்காக ஹஜ் பயணத்தை ஏற்படுத்தினான். 

இந்தப் பாதை அன்று முதல் இன்று வரை பூக்கள் நிறைந்தது அல்ல! முற்கள் நிறைந்தது. 

இந்தப் பயணத்தில் எந்த வகையான சிரமங்கள் ஏற்பட்டாலும் அதை அவனுக்காக பொறுத்துக் கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான்.

ஹஜ் பயணம்:
°°°°°°°°°°°°°°°°°°°°°

ஹஜ் பயணம், மரணமும் - அதற்குப் பிறகு நிகழும்  காட்சிகளையும் நினைவுப் படுத்துகிறது. 

ஹஜ்ஜுக்காக மனிதன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது  உற்றார், உறவினர், நண்பர்கள், வீடு வாசல், ஊர், தேசம் ஆகிய அனைத்தையும் முற்றிலும் துறந்து, வேறு நாட்டிற்குச் செல்வது, மறுவுலக பயணத்தை மேற் கொள்வதை நினைவுப் படுத்துகிறது. 

தனது மனம் லயித்துப்போயிருந்த வீடு, வாசல், தோட்டந்துரவு, நண்பர்களின் தோழமை ஆகிய  அனைத்திலிருந்தும் விடுபட்டு ஹஜ்ஜுக்குச் செல்லும் போது மேற்கூறிய அனைத்தையும் விட்டுவிட்டு முழுமையாக நாம் பிரிந்து விடுகிறோம்.

இது, மரணத்தின் போது எல்லாவற்றையும் விட்டுப் பிரிந்து செல்லுவதைப் போன்று உள்ளது.

இன்று தற்காலிகமாக இவற்றை விட்டுப் பிரிந்து செல்வது போன்றே, வெகு விரைவில் மரணம் வரவிருக்கிறது; அப்பொழுது நிரந்தரமாக அப்பொருள்களை விட்டுச் செல்லவேண்டி இருக்கும்" என்பதை ஹஜ்ஜுடைய பயணம் நமக்கு நினைவு படுத்துகிறது.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்