தவாஃப்

சூஃபிகளின் ஹஜ் : - 39
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

தவாஃப் :
=÷=÷=÷=÷=÷

கஅபாவை தவாஃப் செய்வது, அல்லாஹ்வின் அர்ஷை வானவர்கள் சுற்றி வருவதை நினைவுபடுத்துகிறது.

அல்லாஹ் தன் அருளால் யாருக்கு அதிகமான தவாஃப் செய்யும் வாய்ப்பை வழங்கினானோ அவரே மிக்க மேலானவர். 

குர்ஜ் பின் விப்ராஹ் (ரஹ்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா சென்றிருந்த ஒவ்வொரு நாளின்  பகலில், எழுபது தவாஃப்களும் இரவில் எழுபது தவாஃப்களும் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். 

இதன் தூரத்தைக் கணக்கிட்டால், ஏறத்தாழ முப்பது மைல் தினமும் நடந்தது போன்று ஆகும். 

மேலும் ஒவ்வொரு தவாஃபிற்குப் பிறகும் இரண்டு ரகஅத்  தவாஃபுடைய தொழுகை தொழுததால் 280 ரக்அத்துகள் ஆயிற்று. 

 நூல் : இஹ்யா உலூமிதீன் 

இவர்களைப் போன்று  நாமும் மறுமையின் நிரந்தரமான வாழ்விற்காக அதிகமாக தவாஃப் மற்றும் இதர அமல்கள் செய்ய வேண்டும்.

ஸஃபா & மர்வா தொங்கோட்டம் :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஸஃபா & மர்வாவிற்கு இடையே ஓடுவது, மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் மனிதர்கள் இங்கும் அங்கும் ஓடும் காட்சியை ஒத்திருக்கிறது.

ஸயீ எனும் அமல் ஹாஜரா அம்மையார் அவர்களை நினைவுபடுத்தும் ஓரு செயல்.

ஹாஜரா அம்மையார் அவர்கள் சமீப காலத்தில் முஸ்லிமாக ஆகி, குழந்தை பெற்றதால் பலவீனமான உடல் அமைப்போடு இருந்தாலும், ஈமான் -  இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இன்றைய கஅபா இருக்கும் இடத்தில், மனித நடமாட்டம் இல்லாத காட்டில், தனியாக விட்டு விட்டு எதுவும் பேசாமல் சென்றபோது, அன்னை ஹாஜரா அம்மையார் அவர்கள், "இங்கே விட்டுச் செல்லும்படி இறைவன் சொன்னானா?" என்று கேட்டார்கள். 

"ஆம்!" என இப்ராஹிம் (அலை) அவர்கள் தலை அசைத்தார்கள். 

"இறைவனின் உத்தரவு இதுதான் என்றால் அதை நான் ஒப்புகொள்கிறேன்" என பொறுமையாக இருந்து இறை உத்தரவை ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணை, ஒரு பச்சை உடம்பு காரியை,  தனிமையில் கிடத்தப்பட்ட தாயை போற்றும் வகையில் அல்லாஹ் அவர்கள் செய்த தவாஃப் -  சுற்றுதலை நமக்கு ஸயீ எனும் பெயரில் கடமையாக்கி இருக்கின்றான்.

அவர்களின் தவாஃபை அதாவது ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடிய அன்னை ஹாஜராவின் கால்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களின் காலடியில் தண்ணீரை பெருக்கெடுத்து ஓடச் செய்தான்.

அன்னை ஹாஜரா செய்தது ஒரு தியாகம் என்றால், மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் செய்ததும் தியாகம்தான். 

அந்த தியாகத்தை போற்றும் வகையில்தான் அன்னை ஹாஜரா ஓடியதற்கான credit - கூலியை மகன் காலடியில் ஜம்ஜம் தண்ணீராக அல்லாஹ் வழங்கினான்.

தாயைக் கொண்டு மகனுக்கும், மகனைக் கொண்டு தாயிகும் அல்லாஹ் ஈடு இணை இல்லாத உபகாரம் மற்றும் கண்ணியத்தை, உயர்வான அந்தஸ்தை வழங்கி  இருக்கிறான்.

ஸஃபா மர்வாவிற்கு இடையில் முதன் முதலில் ஸயீ செய்தவர் அன்னை ஹாஜரா அவர்களே ஆவர்.

அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீர் வேண்டும், உணவு வேண்டும் வாழ்க்கைக்கான வசதிகள் வேண்டும் என்கிற தேவையை முன்னிறுத்தி இரண்டு மலைகளுக்கு இடையே ஓடி முடித்த பிறகு அவர்களுக்கான தேவையை அல்லாஹ் நிறைவேற்றி கொடுத்தான். 

அது போலவே இன்றும்  அவ்வாறான வாழ்வியல்  தேவைகளை எதிர்பார்த்து ஸஃபா மர்வாவில் ஓடுகிறவர்களுக்கு  அல்லாஹ் முழுமையாக வழங்குகிறான்.

நீர்வளம், நிலவளம் போன்ற வாழ்வியல் வசதி இல்லாத நிலப்பரப்பு அது! 

காற்றைத் தவிர வாழ்வதற்கான எந்த வசதியும் இல்லாத பூமி அது! 

இப்ராஹிம் (அலை) அவர்கள் தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை, பச்சிளம் குழந்தையை நிர்க்கதியாக விட்டு விட்டுச் செல்லும் அளவிற்கு தவறானவர் அல்ல!

இப்ராஹிம் (அலை) அவர்கள் சாதாரண மனிதர்களை போன்று இல்லாமல், வணக்கசாலியாகவும், இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடியவராகவும் இருந்ததால் இறை உத்தரவுக்கு கட்டுப்பட்டார்கள். 

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டும் அவ்விருவரோடு தங்கியிருந்தால் அன்னை ஹாஜரா அவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களை  நம்பி அமைதி காத்திருப்பார்கள். 

அதனால் தண்ணீர் விசாலமாக கிடைத்திருக்காது. இப்ராஹிம் நபி அவர்கள் விசாலமான உணவுக்கு பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்கள். 

அதனால் இன்று எல்லா வகையிலும் மக்காவாசிகளும் ஹாஜிகளாகிய நாமும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்போம். 

இப்ராஹிம் (அலை) மற்றும் அன்னை ஹாஜராவின் எகீன் -  இறைநம்பிக்கை தான் இன்று நம்மை மக்காவில் சுகபோகமாக இருக்கச் செய்கிறது.

இறை நம்பிக்கை அற்றவர்களுக்கும், இறை நம்பிக்கையை அலட்சியமாக நினைப்போருக்கும் இதுதான் முதல் பாடம்.

இறை நம்பிக்கையை அதிகப்படுத்தி கொள்வதற்கு தான் ஸயீ எனும் இந்த அமலை ஒட்டுமொத்த மனித இனத்தின் மீதும் இறைவன் கடமையாக்கி இருக்கின்றான்.

சோதனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் உண்டாகும். 

அவற்றிலிருந்து நம்மையும், நம் சந்ததியினரையும் முழுமையாக வெளியேற்றி வளமாக வாழ எகீன் -  இறைநம்பிக்கை ஒன்றுதான் முழுமையான தீர்வு. 

அதைத்தான் இந்த அமல் நமக்கு போதிக்கிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்