குர்பானி
சூஃபிகளின் ஹஜ் : - 38
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
குர்பானீ :
=÷=÷=÷=÷==÷
இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை அறுத்து பலியிடுவது போல் தொடர்ந்து மூன்று நாட்கள் கனவு கண்டதால், அதை நனவாக்கிட தம் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அழைத்துச் சென்று முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது.
அல்லாஹ்விற்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் ஆக உயர்ந்த தியாகம்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தம் மகனின் உயிரை அல்லாஹ்விற்காக அர்ப்பணித்திட நினைத்ததை நீங்கள் குறைவாக மதித்து விடாதீர்.
ஏனென்றால் இப்ராஹீம் (அலை) அவர்கள் பல குழந்தைகளுக்கு ஒரு தகப்பன் இல்லை. ஒரே குழந்தைக்கு, மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தவமிருந்து பெற்ற குழந்தைக்கு தகப்பனாக விளங்கியவர்.
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையை அறுத்து பலியிட அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆணை வந்த போது இப்ராஹீம் (அலை) அவர்கள் அதை அல்லாஹ்விற்காக செய்திட முனைந்தார்கள்.
அச்சமயத்தில் அவர்கள் தம் மகனை அறுத்து பழியிட முனைந்த போது, தன் உயிரையும் தன் மகனின் உயிரையும் சேர்த்தே அல்லாஹ்விற்கு அர்ப்பணித்திட முனைந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
ஒவ்வொரு மனிதனும் ஒரு உயிரைதான் தியாகம் செய்ய முடியும். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டும் இரண்டு உயிர்களை இறைவனுக்காக தியாகம் செய்ய முனைந்த சூழல் உலகத்தில் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை என்பதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையை எழுதக்கூடிய கலீலுர் ரஹ்மான் ஆகிய எனது தந்தை இமாமாகவும், முஅத்தினாகவும் பணியாற்றியவர். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். 27 வயதில் எனக்கு நேர் இளையவர் மாரடைப்பால் மரணித்து விட்டார்.
இவருடைய மரணத்திற்கு பிறகு எனது தந்தை 13 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அந்த ஒவ்வொரு நாளிலும் இறந்த தன் மகனை நினைக்காத நேரமில்லை. அவனுக்காக தினம் தினம் யாசீனும் மாதத்திற்கு ஒரு முறை திருக்குர்ஆனும் ஓதி ஈசால் ஸவாப் செய்து கொண்டே இருந்தார்.
உயிரோடு இருக்கிற எங்களை விட , இறந்து போன அவனை நினைத்து கொண்டு இருந்தது தான் அதிகம்.
மூன்று பிள்ளைகளைப் பெற்ற ஒரு தந்தையின் நிலையே இதுவென்றால் நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரே குழந்தையை பெற்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று அவர் நிலையில் நீங்கள் இருந்து, உணர்வுபூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.
இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இந்த சூழல் உதவும்.
ஹஜ்ஜின் போது குர்பானி கொடுப்பது, தன் உயிரையே அல்லாஹ்விற்காக கொடுக்க வேண்டும் என்பதுதான் உண்மையான நோக்கம்.
ஆனால் அல்லாஹ் அதை மனித உயிராக எதிர்பாராமல் வேறு ஒரு பிராணியின் உயிராக அதை நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். அல்லாஹ் தன் விசேஷ அன்பினாலும், கருணையினாளும் அதை மாற்றி அமைத்திருக்கிறான்.
வேறு ஒரு உயிரை இறைவனுக்காக அர்ப்பணிப்பதால் மனிதர்களுக்கும், நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றமானதாக அது அமைந்திருக்கிறது.
நமது உயிரை கேட்டிருக்க வேண்டிய இறைவன், அந்த இடத்தில் ஒரு பலிப் பிராணியை கொடுக்க வைத்து சமன் செய்து விட்டான்.
உங்களின் உயிரை உங்களிடம் கேட்காமல் விட்டுவிட்ட இறைவனை நீங்கள் எப்படி அஞ்சி வணங்க வேண்டுமோ அப்படி அஞ்சி, வணங்கி வழிபடுங்கள்.
இணை வைக்காமல் அவனை வணங்குவதும், அவன் நினைவில் தொடர்ந்து திளைத்திருப்பதும் மட்டுமே உங்கள் இறைவன் உங்களுக்கு உங்கள் உயிரை பிச்சை போட்டதற்கு நீங்கள் காட்டும் உண்மையான நன்றி விசுவாசமாக அமையும்.
கல்லடித்தல் :
°°°°°°°°°°°°°°°°°°°°
மினாவில் ஷைத்தானுக்கு கல்லடிக்க செல்லுகிற ஹாஜிகள் இறைவன் மீது தம் முழு அன்பையும் செலுத்தியதால் பைத்தியம் முற்றிப்போனவரை போல் காணப்படுவார்கள். அன்பு அளவு கடந்து போகுமானால் அது பைத்தியம் தானே!
அந்த வகையில் ஹாஜிகள் அனைவரும் இறைவன் மீது பைத்தியம் பிடித்தவர்கள் போல் இருக்கும் அந்த தருணத்தில் தம் பணிகளில் யாரேனும் குறுக்கிட்டால் அவர்களை கல்லால் அடித்து துன்புறுத்துவது போன்று தான் ஹாஜிகள் ஷைத்தானை கல்லால் அடிக்கிறார்கள்.
நானும் இப்பொழுது
அவனை அடித்து
துன்புறுத்திவிட்டு வந்திருக்கின்றேன்.
இவ்வருடம் ஹஜ் செய்த அனைத்து ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அல்லாஹ் குறைவின்றி முழுமையாக ஒப்புக் கொள்வானாக! ஆமீன்!
ஆமீன் சொல்லி விட்டீர்களா ?
வாசித்து சென்று விட்டீர்களா?
Comments
Post a Comment