அரஃபா நம்மை நாமே அறியும் இடம்
சூஃபிகளின் ஹஜ் :- 35
~•~•~•~•~•~•~•~•~•~•~•~
அரஃபா -
நம்மை நாமே அறியும் இடம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
அரஃபா பெருவெளியில் மக்கள் ஒன்று கூடி இருப்பது மஹ்ஷர் மைதானத்தை நினைவுபடுத்துகிறது.
சூரிய வெப்பம், தண்ணீர் இல்லாத நிலை, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் மஹ்ஷரில் இருப்பது போன்றே அரஃபா மைதானத்திலும் மக்கள் இருக்கிறார்கள்.
அல்லாஹ் தன்னை மன்னித்து விட வேண்டுமே எனும் மனநிலையில் தம் பாவங்களை எண்ணி அஞ்சியவர்களாக அங்கே ஒன்று கூடி இருக்கிறார்கள்.
ஆலமுல் அர்வாஹில் அலஸ்த்து பிரப்பிகும் - நான் உங்கள் இறைவன் அல்லவா? என்று அல்லாஹ் ஏற்கனவே ஆன்மாக்களின் உலகில் அனைவர் முன்னிலையில் கேட்டபோது, அனைவரும், "ஆம்! நீ எங்களின் இறைவன்தான்" என பதில் அளித்தார்கள்.
அந்த பதிலை நினைவுறுத்தும் விதமாகவே அரஃபா மைதானத்தில் அனைவரும் ஒன்று கூடி, அதே இறைவனை நினைத்து உள்ளம் உருகி வேண்டுகிறார்கள். நீ மட்டுமே எங்கள் இறைவன் என்றும் கூறுகிறார்கள்.
இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் தம் இஹ்யாவில் ஒரு சூஃபியின் வரலாற்றை கூறுகிறார்கள்.
அரஃபா நாளன்று ஒரு சூஃபியின் கண்களுக்கு ஷைத்தான் தெரிந்தான். அவன் மிகவும் பலவீனமாக காணப்பட்டான்.
அவன் முகம் சிவந்து, கண்களிலிருந்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தது. முதுகை நிமிர்த்தி அவனால் நிற்க முடியவில்லை. முதுகு வளைந்து காணப்பட்டது.
சூஃபி : நீ ஏன் அழுகிறாய்?
ஷைத்தான் :
இந்த ஹாஜிகள் வியாபாரம் போன்ற உலக நோக்கம் எதுவுமில்லாமல் அல்லாஹ்வின் தர்பாருக்கு வந்திருக்கிறார்கள். இறைவன் இவர்களின் ஆசைகளையும் வேண்டுதல்களையும் நிராகரிக்க மாட்டானே என்று வேதனைப்படுகிறேன்.
சூஃபி :
நீ ஏன் நலிந்து மெலிந்து விட்டாய்?
ஷைத்தான் :
குதிரைகளின் கால்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹஜ், உம்ரா, ஜிஹாத் போன்ற மார்க்க காரியங்களுக்காக என் கண் எதிரே இப்பொழுது சென்று கொண்டே இருக்கின்றது.
அந்த வாகனங்கள் என்னுடைய பாதையில் (அதாவது வீண் விளையாட்டு, கூத்து, கேளிக்கை, விபச்சாரம், ஹறாமான சம்பாதிப்பு போன்ற விஷயங்களுக்காக) செல்லுமேயானால் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்"
சூஃபி: "உன் நிறம் ஏன் வெளிறிவிட்டது?"
ஷைத்தான்:
மக்கள் ஒருவருக் கொருவர் நன்மைகளைச் செய்யும்படி ஏவிக் கொள்கின்றனர். அவ்வேலையில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருக்கின்றனர். ஆனால் அதே உதவியும் ஒத்தாசையும் பாவங்களைச் செய்வதில் இருக்குமேயானால் எனக்கு அளவிலா மகிழ்ச்சி அளிக்குமே!
சூஃபி: உன் முதுகு ஏன் கூனிவிட்டது?
ஷைத்தான்:
அடியான் எந்நேரமும் 'யா அல்லாஹ்! என் முடிவை நல்லதாக ஆக்கு' எனக்கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
தன் இறுதி முடிவு பற்றிய கவலை ஒரு மனிதனின் மனதில் மிகைத்திருக்கும் போது, தன் எந்த நற்செயலின் மீதும் கர்வங் கொள்ளமாட்டானே" என்றான்.
நூல் : இஹ்யா உலூமிதீன், துர்ருல் மன்சூர்
அரஃபா நாளில் ஷைத்தான் அடையும் கேவலம், மற்றும் கோபமடையும் அளவு வேறு எந்த நாளிலும் அவன் அடைவதில்லை.
இதற்குக் காரணம் அரஃபா நாளன்று, அல்லாஹ்வின் ரஹ்மத்துகள் அளவின்றி ஏராளமாக பொழிவதினால், அடியார்களின் பெரும் பாவங்கள் மன்னிக்கப்பட்டுப் போவதைப் பார்ப்பதினாலேயே ஆகும்.
நூல் : மிஷ்காத்
ஷைத்தானுக்கு அந்நாளில் கோபம் உண்டாவது நியாயம் தான். ஏனெனில் அவன் காலமெல்லாம் பாடுபட்டு உழைத்து மனிதர்களை பாவங்களில் ஈடுபடுத்துகிறான்.
அவை அனைத்தும் அன்று ஒரே நாளில் அல்லாஹ்வின் அருளினால் அடியானின் பாவங்கள் மன்னிக்கப்படுவதை பார்க்கும்போது அவனுக்கு அந்த அளவு கோபமும் ஆவேசமும் உண்டாவது நியாயந்தானே!
அரஃபா நாளில் அல்லாஹ்வின் கருணை:
சூஃபி ஹள்ரத் புழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்கள் ஒரு முறை அரஃபாவில் இருந்தவர்களைப் பார்த்து "மக்களே! இங்குள்ள அனைவரும் ஒன்று திரண்டு, செல்வம் நிறைந்த வள்ளல் ஒருவரின் வாசலுக்குச் சென்று, ஒரு பைசா தருமம் கேட்டால், அவர் அதைத் தர மறுத்துவிடுவாரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள் "ஒரு போதும் மறுக்கமாட்டார்!" என்றார்கள்.
உடனே சூஃபி அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்விற்கு இங்குள்ள அனைவரையும் மன்னிப்பது, அந்த வள்ளல் ஒரு பைசா அளிப்பதை விட மிகவும் இலேசானது. அல்லாஹ்வின் கருணைக் கடலின் முன்பு இதொரு பொருட்டல்ல" என்று கூறினார்கள்.
மத்ரப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் அரஃபாவில் ''யா அல்லாஹ்! இவர்கள் அனைவரையும் என் பீடை தனத்தின் காரணமாக உன் அருளிலிருந்து அகற்றி விடாதே!" என்று துஆச் செய்தார்கள்.
பக்ர் மதானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு சூஃபி அரஃபாவில் ஹாஜிகளைப் பார்த்துக் கொண்டே, "நான் மட்டும் இங்கு இல்லாதிருந்தால் இவர்கள் அனைவருக்கும் பாவ மன்னிப்பு கிடைத்திருக்கும்'' எனக் கூறினார்கள்.
நூல்: இத்திஹாப்
Comments
Post a Comment