நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை
சூஃபிகளின் ஹஜ் :- 27
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நபிகள் நாயகம் செய்த
ஹஜ்ஜின் செயல்முறை :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
தொடர் .......1
ஹிஜ்ரி ஒன்பதாவது வருடம் முதல் ஹஜ் கடமையாக்கப்பட்டது. அந்த வருடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பல்வேறு அரசியல் நெருக்கடிகள் இருந்ததால் அவ்வாண்டு அபூ பக்ர் (ரலி ) அவர்களை அமீருல் ஹஜ்ஜாக நியமித்து ஹஜ்ஜு செய்ய அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லிம்களின் முதல் ஹஜ் :
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு ஹஜ் மட்டுமே செய்து இருக்கிறார்கள். அந்த ஹஜ்ஜின் முழு விபரங்களும் நாம் காணலாம்.
ஹிஜ்ரி 10 துல்கஅதா பிறை 25 சனிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மதீனாவில் இருந்து புறப்பட்டுச் சென்று, துல் ஹுலைஃபாவில் அன்று இரவு தங்கினார்கள். அந்த இரவில் தமது அனைத்து மனைவியருடனும் உடலுறவு கொண்டார்கள்.
மறுநாள் பிறை 26 ஞாயிற்றுக்கிழமை லுஹருடைய நேரத்தில் இஹ்ராம் உடுத்துவதற்காக குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்தார்கள்.
ஜிப்ரயீல் (அலை) அவர்களின் உத்தரவுக்கிணங்க கிரான் (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒரே இஹராமில் செய்யும் வகையில் ஆன) ஹஜ் செய்வதாக நிய்யத் செய்து கொண்டார்கள்.
அதேநேரம் தமது மற்ற தோழர்களை இஃப்ராத், தமத்துவு போன்ற தாம் விரும்புகிற வகையிலான ஹஜ்ஜை மேற்கொள்ள பொது அனுமதி வழங்கினார்கள்.
லுஹர் தொழுத பிறகு இஹ்ராமுக்காக இரண்டு ரக்அத்துகள் தொழுது ஹஜ்ஜுகான நிய்யத் செய்து தல்பியாவை ஓதிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
தமது ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சப்தமாக தல்பியாவை கூறினார்கள். மக்கள் அனைவரும் சப்தமாக தல்பியாவை சொன்னார்கள்.
பின்னர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அருகில் இருந்த பைய்தா எனும் மலையின் மீது ஏறி இறங்கும் சமயத்தில் தல்பியாவை அனைவரும் உரக்கமாக சொன்னார்கள். அந்த சப்தம் விண்ணை முட்டியது.
பின்னர் செல்லும் வழியில் 'வாதீ ரவ்ஹா' என்னும் இடத்தில் அஸர் தொழுகையை ஜமாஅத்தாக நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சாமான்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் சாமான்களும் ஒரே ஒட்டகத்தில் வைத்து கட்டப்பட்டு ஓர் அடிமையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவர்தான் அந்த ஒட்டகத்தை இழுத்து வந்து கொண்டிருந்தார்.
'வாதீ அரஜ்' எனும் இடத்தை அடைந்தபோது அந்த ஒட்டகம் காணாமல் போய்விட்டதாக அடிமை கூறினார். அதனால் கோபமுற்ற அபூ பக்ர் (ரலி) அவர்கள் அவரை அடித்து விட்டார்கள்.
இதனை அறிந்த மற்ற நபி தோழர்கள் நபிகளாருக்கும் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கும் உணவு சமைத்து கொடுத்தார்கள் .
ஸஅது (ரலி) அபூ கைஸ் (ரலி) போன்றவர்கள் பயணத்திற்கு தேவையான சாமான்களை கொடுக்க முன் வந்தார்கள். அவர்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பாத நபிகளார் 'தமது ஒட்டகம் கிடைத்து விட்டதாக சொல்லிவிட்டார்கள்.
தொடரும்......
B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ எனும் பெயரில் பிளாக் ஸ்பாட் - வலைப் பக்கம் தொடங்கியிருக்கின்றேன். மேலதிக தகவல்களுக்கு அதில் சென்று பாருங்கள்.
https://bmkmanbayee.blogspot.com/
Comments
Post a Comment