தல்பியா
சூஃபிகளின் ஹஜ் :-37
~•~•~•~•~•~•~•~•~•~•~•~
தல்பியா :
=÷=÷=÷=÷=÷=
லப்பைக் - இறைவா நீ அழைத்ததற்காக நான் வந்து விட்டேன் என்று அழுது, புலம்பி சப்தமாக தல்பியாவை கூறுவது, தன் பேரன்பை சந்தோசமாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதே நிலையில் தல்பியாவை சொல்லிக் கொண்டு ஒவ்வொரு ஹாஜியும் மக்கா நகரை அடைகிறார்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்த போது ஸஃபா மர்வாவிற்கு இடையில் லப்பைக் கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அச்சமயம் வானிலிருந்து "லபைக் அப்தீ அன மஅக - அடியானே! நானும் 'லப்பைக்' சொல்கிறேன்; நானும் உம்மோடுதான் இருக்கின்றேன்" என அசரீரி சத்தம் உண்டானது. இதை செவியேற்ற மூஸா (அலை) அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து நன்றி செலுத்தினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் மூஸா (அலை) அவர்கள் லப்பைக் என சொல்லும் பொழுதெல்லாம் அல்லாஹ் 'லப்பைக் யா மூஸா' - நானும் தான் உங்களோடு இருக்கின்றேன்' என மறுமொழி சொல்லிக்கொண்டே இருந்தான் என காணப்படுகிறது.
நூல் : துருல் மன்சூர்
ஹஜ்ரத் அலீ ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது அவர்களின் முகம் சிவந்துவிட்டது. உடல் நடுக்கம் கண்டது. லப்பைக் என அவர்களால் சொல்ல இயல வில்லை.
ஒருவர் "தாங்கள் இஹ்ராம் கட்டியவுடன் லப்பைக் கூறவில்லையே'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், "நான் கூறும் லப்பைக்கிற்கு பதிலாக 'லா லப்பைக் (- நீயெல்லாம் வர வேண்டாம்)' என சொல்லப்பட்டு விடக்கூடாதே என அஞ்சுகிறேன்" என்றார்கள்.
பிறகு மிக சிரமத்துடன் லப்பைக் ஓதியதும் அவர்கள் மயக்கமடைந்து தமது ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதற்குப் பிறகும் தல்பியா சொல்லும் போதெல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தார்கள். இதே நிலையில் ஹஜ்ஜையும் செய்து முடித்தார்கள்.
நூல் : மனாஸிகுல் ஹஜ்
Comments
Post a Comment