மஸ்ஜிதுந் நபவி மிம்பரின் வரலாறு

சூஃபிகளின் ஹஜ் : - 46
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

மஸ்ஜிதுன் நபவி 
மிம்பரின் வரலாறு : 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

அமீருல் முஃமினீன் ஹள்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்தில் மதீனாவின் அமீராக இருந்த மர்வான் அவர்கள், கலீஃபாவின் உத்திரவுப்படியோ அல்லது அவர்களின் உத்திரவின்றியோ, அல்லது அமீருல் முஃமினீன் முஆவியா (ரலி) அவர்களின் சந்தோ
ஷத்தையும், நெருக்கத்தையும் பெறுவதற்காக மஸ்ஜிதுந் நபவியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் மிம்பர் ஷரீபை எடுத்து ஷாம் நாட்டிற்கு (திமிஷ்கு நகரத்திற்கு) அமீர் முஆவியாவிடம் அனுப்பிவிட எத்தனித்தார். 

அந்த எண்ணத்துடன் மிம்பரைத் தோண்டி எடுக்க உத்திரவிட்டார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென சூரிய கிரகணம் உண்டாகி மதீனா முனவ்வராவில் கடும் இருள் சூழ்ந்தது. 

அப்போது வானில் நட்சத்திரங்களும் தெரிந்தது.

உடனே மர்வான் மக்கள்  முன் தோன்றி உரை நிகழ்த்தினார். அதில் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், "மிம்பரை எடுத்து அனுப்பும் எவ்வித நோக்கமும் நமக்கு இல்லை; அமீர் முஆவியா [ரலி] அவர்கள்  அதனை திமிஷ்கு நகரத்திற்கு அனுப்பி வைக்குமாறு எனக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை.  

மாறாக மிம்பரின் அடி பாகத்தில்  கரையான் பிடித்து அரித்து இருக்குமோ என்று அஞ்சுவதாக அமீர் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

எனவே அதற்குக் கீழாக இன்னும் சில படிகளை ஏற்படுத்தி அவைகளின் மேல் அதனை வைக்கவேண்டும் என்பதே அமீருல் முஃமினீன் முஆவியா ரலி அவர்களின் எண்ணமாகும்" என்று கூறினார்.

உடனே தச்சனை வரவழைத்து ஆறுபடிகளைச் செய்து அதன்மேல் பழைய மிம்பர் ஷரீஃபை வைத்தார். அதன் காரணமாக மிம்பர் ஷரீஃபின் படிகள் மொத்தம் ஒன்பதாக ஆகிவிட்டது. 

அதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து மிம்பர் படிக்கு மூன்று படிகள் மட்டுமே இருந்தது. இரண்டு ஏறுவதற்கும், ஒன்று  உட்காருவதற்குமாக இருந்து.

நூல்: ஷம்சுல் மஆரிபுல் குப்ரா

நபிகளார் கால மிம்பர் 
கடந்து வந்த பாதை :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று படிகள் மட்டுமே இருந்தது.

2. முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் காலத்தில் ஆறு படிகள் அதிகரிக்கப்பட்டு ஒன்பது படிகளாக ஆனது.

3. அப்பாஸிய ஆட்சிக்காலத்தில் அதே எண்ணிக்கையில் மிம்பர் படி புதிதாக செய்து வைக்கப்பட்டது.

4. ஹிஜ்ரி 654 இல் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் எரிந்து போனது. அப்போது மிம்பர் படியும் எரிந்து விட்டது. அன்று இருந்த கலீஃபா முலஃபர் அவர்கள் ஒரு மிம்பர் படியை தயார் செய்து அனுப்பி வைத்தார்கள். அதன் கைப்பிடிகள் மாதுளை பழம் வடிவத்தில் இருந்தது. அது பத்து வருடங்கள் மட்டுமே இருந்தது. 

5. ஹிஜ்ரி 664 இல் மன்னர் லாஹிர் பைபரஸ் அவர்கள்  புதிதாக ஒரு மிம்பர் படியை அனுப்பி வைத்தார். அது ஹிஜ்ரி 797 வரை இருந்தது. 

6. மன்னர் லாகிர் புர்கூக் அவர்கள் 797 இல் புதிதாக ஒரு மிம்பரை தயார் செய்து அவ்விடத்தில் வைத்தார்.

7. அல் முஅய்யிது ஷைஹு மன்னர் அவர்கள் ஹிஜ்ரி 820 இல் புதிதாக ஒரு மிம்பர் படியை தயார் செய்து அவ்விடத்தில் வைத்தார்.

8. ஹிஜ்ரி 886 இல் மீண்டும் மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் எரிந்து போனது. அப்பொழுது ஏற்கனவே இருந்த மிம்பர் படியும் எரிந்தது. அதனால் மதீனாவாசிகள் அனைவரும் ஒன்று இணைந்து செங்கற்கர்களால் ஆன ஒரு மிம்பர் படியை தயார் செய்து அவ்விடத்தில் வைத்தார்கள். அதற்கு அழகான வண்ணம் பூசி இருந்தார்கள்.

9. ஹிஜ்ரி 888 இல் மன்னர் காயித்பாயி அவர்கள் பளிங்கி கற்களால் ஆன ஒரு மிம்பரை தயார் செய்து அனுப்பி வைத்தார்கள். ஏற்கனவே இருந்த மிம்பர் படி அகற்றப்பட்டது.

10. ஹிஜ்ரி 998 இல் மன்னர் முராத் உஸ்மானீ அவர்கள் பலுங்கி கற்களால் ஆன ஒரு மிம்பர் படியை தயார் செய்து அனுப்பி வைத்தார்கள். அது மிக அழகான வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்திலும் அமையப்பெற்று இருந்தது. அதுவே இன்று வரை இருந்து வருகிறது.

நூல்: தாரிக் மதீனா முனவ்வரா 

மன்னர் காயித்பாயி அவர்கள் ஹிஜ்ரி 888ல் வைத்த மிம்பர் படி இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அதுதான் இரண்டாவது புகைப்படம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்