ஸலவாத்து சொல்ல மறந்து விட்டீர்:
சூஃபிகளின் ஹஜ் : - 67
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
ஸலவாத்து சொல்ல மறந்து விட்டீர்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
முஹம்மது பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அபூ பக்ர் பின் முஜாஹித் (ரஹ் ) அவர்களிடம் படிப்பதற்காக நான் பங்தாது சென்றிருந்தேன்.
அவர்களிடம் பெரும் கூட்டமாக நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது வயதான ஒருவர் எங்களிடம் வந்திருந்தார். அவருடைய தலைப்பாகை கந்தலாக இருந்தது. அவருடைய சட்டையும் அவருடைய மற்ற ஆடைகளும் கந்தலாக இருந்தது.
அந்த வயதான மனிதருடைய பெயரும் அபூபக்ர் என்பதுதான்.
வந்திருந்த வயதானவர் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் நிலையையும் தன் குழந்தைகளின் நிலையையும் எடுத்துச் சொன்னார்.
அந்த சபையில் கலீஃபாவின் மந்திரிகளில் ஒருவரான அலீ பின் ஈஸா என்பவரும் அமர்ந்திருந்தார். அவரிடம்தான் தன் நிலையை எடுத்துச் சொன்னார்.
மேலும் கடந்த இரவில் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதனால் எனக்குத் தேனும், வெண்ணையும் தேவைப்படுகிறது. ஆனால் அதை பெறுவதற்கான எந்த முகாந்திரமும் எனக்கு இல்லை.
இந்நிலையில் கவலையோடு நேற்று இரவு படுத்து உறங்கினேன். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் என் கனவில் காட்சியளித்தார்கள்.
"ஏன் கவலையாக இருக்கின்றாய்? கலீஃபாவின் பிரதிநிதி அலீ பின் ஈஸ இந்த சபையில் இருப்பார். அவரிடம் சென்று, 'நான் ஸலாம் சொன்னதாகச் சொல்' மேலும் கலீஃபா அவர்களுக்கும் என் ஸலாத்தினை சொல்லுங்கள்.
கலிஃபா அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ இரவிலும் என் மீது ஆயிரம் முறை ஸலவாத்து சொல்லுவார்; ஆனால் கடந்த ஜும்மா அன்று எழுநூறு முறை மட்டுமே சொன்னார்" என்கிற தகவலை சொல்லச் சொல்லுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு சொல்லப்பட்டதும் அலி பின் ஈஸா அவர்கள் கலீஃபாவிடம் சென்று, வந்திருந்தவர் சொன்னதைச் சொன்னார்கள்.
கலீஃபா அவர்கள், "ஆமாம் நான் மறந்துவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே தன் தொழும் அறைக்குச் சென்று விடுபட்ட ஸலவாத்துக்களை சொல்லி ஆயிரம் முறையாக முழுமைப்படுத்தினார்.
பிறகு அந்த வயோதிகரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். அவர் அழைத்து வரப்பட்டார்.
வயதானவர் கலீஃபாவிற்கு ஸலாம் சொன்னார். கலீஃபா அவர்கள் பதில் ஸலாத்தினை சொல்லிவிட்டு அவரின் கைகளில் ஆயிரம் திர்கங்களை கொடுத்தார்.
கொடுத்துவிட்டு, "இதைத் தங்களுக்கு வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டிருந்தார்கள் அதனால் தருகிறேன்" என்று கூறினார்கள்.
நூல்: அஸ்ஸலாத்து அலந்நபியி
Comments
Post a Comment