மஸ்ஜிதுந் நபவி பச்சை குப்பாவின் வரலாறு
சூஃபிகளின் ஹஜ் : - 68
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
மஸ்ஜிதுந் நபவி
பச்சை குப்பாவின் வரலாறு :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
நபி (ஸல்) அவர்கள் தாம் வசித்து வந்த வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டதால் வீட்டின் மேல் கூரை இருந்தது.
ஒருமுறை மதீனாவில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்பொழுது ஸஹாபாக்களும் தாபியீன்களும் அன்னை ஆயிஷா (ரலி) அவரிடம் வந்து வறட்சி நிலையை முறையிட்டார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "வானத்திற்கும் நபி (ஸல்) அவர்களின் அடக்க தளத்திற்கும் இடையே கூரை இல்லாமல் செய்து விடுங்கள் மழை பொழியும்" என்று கூறினார்கள்.
அவ்வாறே செய்யப்பட்டது; மழை பொழிந்தது. நபிகளாரின் கப்ரில் கிடந்த தானியங்கள் சில நாட்களில் முளை விட்டது. மேலும் சில நாட்களில் செடி கொடிகளும் பயிர்களும் வெளிப்பட்டது.
நபி (ஸல்) அவர்களுடைய கப்ரின் மீது ஹிஜ்ரி ஏழாவது நூற்றாண்டு வரை எந்த குப்பாவும் கட்டப்படவில்லை.
சுல்தான் கலாவுன் அவர்கள் காலத்தில் ஏழாவது நூற்றாண்டில்தான் முதன்முதலாக கட்டப்பட்டது.
இதன் வண்ணம் முதல் முதலில் மர கலரிலும், பின்னர் வெள்ளை நிறத்திலும், பின்னர் நீல நிறத்திலும் இருந்தது. அதற்கு பின்புதான் பச்சை நிறம் பூசப்பட்டது. அது இன்று வரை நீடிக்கிறது.
ஆரம்ப காலத்தில் ரவ்ளா ஷரீபிற்கும் மஸ்ஜிதுந் நபவிக்கும் இடையில் தனித்தனியே செங்கல் கர்களாலான சுவர்கள் இருந்தது.
மஸ்ஜிதுந் நபவிக்கும் ரவ்ளாவிற்கும் ஒரே மாதிரியாகவும், ஒரே சம தளமாகவும் போடப்பட்டிருந்தது.
ஹிஜ்ரி 678 இல் சுல்தான் கலாவுன் அவர்கள் முதன் முதலில் குப்பாவை உருவாக்கினார். அது 18 முழம் , 8.88 மீட்டர் உயரம் கொண்டதாக கட்டப்பட்டது.
கீழ்புறம் சதுரமாக கட்டப்பட்டது அதன் நான்கு புறங்களிலும் வட்ட வடிவில் கண்ணாடி வைத்து ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் சற்று மேல் எண் கோணத்திலும், அதற்கு மேல் மரப்பலகைகளும், இவற்றின் உள்பாகம் செங்கற் கற்கள் வைத்து காரைகளாலும் பூசப்பட்டிருந்தது.
இவற்றின் ஒரு பகுதிக்கு மர கலரும், மற்றொரு பகுதிக்கு அலுமினியத்தால் வெண்ணிறமும் பூசப்பட்டிருந்தது.
மன்னர் ஹஸன் பின் முஹம்மது கலாவுன் அவர்கள் காலத்தில் இவ்வாறு முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹிஜ்ரி 765 இல் அலுமினிய வண்ணம் யாவும் உரிந்து கொண்டு வந்து விட்டது. எனவே ஷஃபான் பின் ஹுசைன் பின் முஹம்மத் அவர்கள் கும்பாவை செப்பனிட்டு வெள்ளை நிறம் பூசினார்.
பின்னர் மன்னர் சுல்தான் காயித்பாயி அவர்கள் ஹிஜ்ரி 881 இல் குப்பாவை மராமத் பணி செய்து மீண்டும் வெள்ளை நிறம் பூசினார்.
ஹிஜ்ரி 886 இல் இரண்டாவது முறையாக பள்ளிவாசல் எரிந்து போனது. அப்பொழுது குப்பாவும் சேதாரத்திற்கு உள்ளானது.
ஹிஜ்ரி 887 இல் பழைய குப்பாவும், அது சார்ந்த கட்டிடமும் முழுமையாக இடிக்கப்பட்டது. பின்னர் மிக உறுதியான அஸ்திவாரம் போடப்பட்டது. நான்கு புற சுவர்கள் உட்பட தரையில் இருந்து குப்பா வரை அனைத்தும் முற்றிலும் புதிதாகக் கட்டப்பட்டது. அத்துடன் குப்பா ஏற்கனவே இருந்தது போல் வடிவமைக்கப்பட்டது.
ரவ்ளா ஷரீஃப் கட்டிடப் பணி துவங்குவதற்கு முன்பே மேப் - வரைபடம் போடப்பட்டிருந்தது. அதுபோலவே கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் குப்பாவில் விரிசல் காணப்பட்டது.
பின்னர் அரசரின் உத்தரவுப்படி சேதாரத்திற்கு உள்ளான பகுதிகளை மட்டும் இடித்துவிட்டு மீண்டும் கட்டுமானக் குழுவினர் மிகச் சரியாகக் கட்டி முடித்தார்கள். குப்பாவின் மேற்பகுதியில் ஜிப்ஸ் எனப்படும் வெள்ளை நிற டைல்ஸ் மிஸ்ரிலிருந்து கொண்டுவரப்பட்டது. இது அன்றுதான் அரபுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பணி ஹிஜ்ரி 892 இல் முடிவுற்றது.
மிச்சம் இருந்த கர்க்கலை கொண்டு மஸ்ஜிதுந் நபவியின் கிழக்குப்புற சுவரில் 2 1/4 அடி உயரம் அளவிற்கு ஒட்டப்பட்டது. அப்பொழுது இந்தப் பகுதியில் தான் ஜனாசாவை வைத்திருப்பார்கள்.
பின்னர் மன்னர் அல் காஸி மஹ்மூதுல் உஸ்மானீ அவர்களுடைய காலத்தில் பச்சை குப்பா விரிசல் விட்டு காணப்பட்டது. அவர் அதை மட்டும் சிறப்பாக சரி செய்தார்.
ஹிஜ்ரி 1253 இல் மன்னர் அப்துல் ஹமீத் உஸ்மானி அவர்கள் ரவ்ளா ஷரீஃபையும், குப்பாவையும் மராமத்து பணிகள் செய்து குப்பாவில் முதன் முதலில் பச்சை வண்ணம் பூசினார்.
பிற்காலங்களில் மராமத்துப் பணிகள் அவ்வப்பொழுது நடைபெற்றது. ஆனால் எவரும் பச்சை வண்ணத்தை மாற்றவில்லை. அதுவே இன்று வரை நீடித்திருக்கிறது. அதனால்தான் இன்றும் மக்கள் இதை "பச்சை குப்பா" என்று அழைக்கிறார்கள்.
நூல் : தாரிக் மதீனா முனவ்வரா, பக்கம் 127/128
ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலமும் பள்ளிவாசலும் தனித்தனியாகவே இருந்தது. ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் அமீருல் முஃமினீன் வலீது பின் அப்துல் மலிக் அவர்களின் உத்தரவின் பேரில் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களும் அன்று மதீனாவில் இருந்த மூத்த உலமாக்களும் பேரறிஞர்களுமான பத்து நபர்களிடம் ஆலோசனை பெற்றார்கள்.
அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தான் இன்றுள்ள வடிவத்தில் பள்ளிவாசலையும் நபிகளாரின் அடக்கத்தலத்தையும் இணைத்து பள்ளிவாசலுக்குள் நபிகளாரின் அடக்க தளம் இருப்பது போல் அமைத்தார்கள்.
இதுவும் கூட இன்று ஸியாரத்து செய்ய வருவோருக்கு எளிதாக இருக்கிறது.
பூமியில் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தளத்தைத் தவிர வேறு எந்த நபிமார்களுடைய அடக்கத் தளமும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இங்குதான் இருக்கிறது என குறிப்பிட்டுச் சொல்லவோ, ஆதாரங்களுடன் நிரூபிக்கவோ வழி இல்லை.
அந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் அடக்க தளம் இருக்கும் இடம் நம் சமுதாயத்தினருக்கு ஆதாரத்துடன் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் ஆகும்.
அடக்கத்தளம் நம்மிடம் இருந்தும் அதை வணக்கத்தளமாக மாற்றப்படாமல் இருப்பதும் இஸ்லாமிய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
பனிரெண்டாம் நூற்றாண்டு வரை ஜன்னத்துல் பக்கீவுவில் உள்ள ஸஹாபாக்கள் மற்றும் நபிகளாரின் மனைவியர் மற்றும் பிள்ளைகள் அனைவருடைய கப்ருக்கு மேலாகவும் சிறிய அளவிலான குப்பாக்கள் கட்டப்பட்டு அடையாளம் இடப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் 12 ஆம் நூற்றாண்டில் சவூதியினர் பொறுப்பேற்ற பிறகு இடித்து நொறுக்கி விட்டார்கள்.
Comments
Post a Comment