அன்பார்ந்த ஆலிம் பெருமக்களே!
அன்பார்ந்த
ஆலிம் பெருமக்களே!
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
மவ்லானா, அல்லாமா, பேராசிரியர்,
P.S.P. ஜைய்னுல் ஆபிதீன் ஹள்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புதுப்பேட்டை மஸ்ஜிதில் பேசிய ஆன்மிக உரை.
எல்லாமே ஒன்று போலிருக்க; நாம் ஒன்றும் தொழிற் சாலையிலிருந்து வெளிவந்தவர்களல்ல. நாம் 'இன்ஸானியத்' - மனிதத் தொழிற்சாலை எனும் மதரஸாவிலிருந்து வெளிவந்தவர்கள். நம்மில் சிலர் அறிவில் கூடுதல் - குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும். அதுதானே மனித இயல்பும் கூட.
ஆலிம்களான நமது 'ஸில்ஸிலா' தொடர், திண்ணைத் தோழர்களைச் சென்றடைகிறது. அவர்கள் அடைந்த துன்பம் நம்மையும் வந்தடைவதே இயல்பு. எனவே அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டுதான் நாம் நமது மார்க்க - சமூக பணிகளைச் செய்ய வேண்டும்.
நாம் மதரஸாவிலிருந்து ஆலிமாக வெளிவரவில்லை. ஜாஹிலாக - படுமுட்டாளாகவே வெளிவந்தோம். என்னே! ஹள்ரத் இப்படியெல்லாம் சொல்றாங்க என்று நினைக்காதீர்கள். ஆனால், அதுதான் உண்மை!
ஏனென்றால், ஒன்றுமே தெரியாமல் மதரஸாவிற்குச் சென்று, முதல் ஜும்ராவில் சில நூல்களைப் படிக்கும் போது சில கல்வி கிடைக்கிறது. அப்போது இது சம்பந்தமாக இன்னும் தெரிய வேண்டியது ஏராளம்
இருக்கிறது என்பதை அறியும்போதுதான் நமது அறியாமை நமக்கே தெரிகிறது. இப்படி ஒவ்வொரு வகுப்பை கடந்துச் செல்லும்போதும் 'இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது' என்பது புரிகிறது.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள் : "காலம் எனக்குக் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. காலம் என்னை அறிவாளியாக மாற்றுகிறது"
மதரஸாவில் படிக்கும்போது நம்ரூத், ஹாமான், அபூலஹப், அபூஜஹ்ல் போன்ற கடும் எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட்டதை படித்திருப்போம். அவர்கள் அன்று மட்டுமே இருந்தார்கள் என்று எண்ணினோம்.
ஆனால், இமாமத் மற்றும் உஸ்தாத் போன்ற பணிகளுக்கு வந்த பிறகு. ஒவ்வொரு பகுதியிலும் சில நம்ரூத்கள், அபூ ஜஹ்ல்கள் இருப்பதைக் கண்கூடாகக் கண்டோம். அப்படி என்றால் நாம் தெரிந்த ஒன்றை அனுபவபூர்வமாக அறிந்துகொண்டோம் என்றுதானே பொருள்.
இப்படி நாம் ஏட்டுக் கல்வியையும், வாழ்க்கைக் கல்வியையும் படித்து தெளிவு பெறும்போது நம்மில் இருந்த ஜஹாலத் - அறியாமை எனும் அப்பகுதி நம்மிலிருந்து விலகிச் செல்கிறது.
ஒரு மாணவர், ஏழாவது ஜும்ரா படித்துவிட்டு ஸனது பெறுவதற்காக விடப்பட்ட விடுமுறை நாட்களில் முதல் ஜும்ராவில் ஓதிய 'மீஸான்' என்ற நூலை எடுத்துப் படித்துப் பார்க்கிறார். ஒன்றுமே தெரியவில்லை; எதுவுமே புரியவில்லை!
இதே நிலையில் அவர் ஒரு மதரஸாவில் ஆசிரியராக இணைந்து படித்துக்கொடுக்க துவங்கும்போது, அந்த அறியாமையை அகற்ற, அது தொடர்பான
மேலும் பல நூல்களைப் புரட்டி, விளக்கங்களைப் பெறும்போது அவரது அறியாமை விலகுகிறது.
நமது அறியாமையை நாமே விளங்குவதும், அதை ஏற்றுக்கொள்வதும், அதை அகற்றும் வழியைத்தேடி
அறிந்துகொள்வதும்தான் அல்லாஹ் நமக்களித்த பெரிய ரஹ்மத் - பேரருள்.
ஏழு வருடங்கள், பத்து வருடங்கள் என படித்த பிறகு நாம், 'கற்றது கையளவு; கல்லாதது உலகளவு உள்ளது என்பதை அறிந்தபோது ஜஹாலத் - அறியாமை எவ்வளவு இருக்கிறது என்பதை உணர்ந்தோம்.
ஏழு வருடங்கள், ஒன்பது வருடங்கள் வரை ஆசிரியர்களிடம் படித்தோம். இனி அவர்கள் படித்துக் கொடுக்கப்போவதில்லை; படித்துக்கொடுக்கவும் முடியாது. ஜாடிக்குள் கடலை அடைத்துவிட முடியுமா என்ன? அது சாத்தியமற்ற விஷயம்.
ஒவ்வொரு நூலிலும் சிறிதளவுதான் ஓதிக்கொடுக்க முடியும். பிறகு அவரவர் தங்கள் முயற்சியில் படித்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 'முதாலஆ' எனும் வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். இன்னும் கற்க வேண்டும் என்ற தேடலும், விடா முயற்சியும் இருக்க வேண்டும்.
'இலம்' எனும் கல்வி மூன்று வகை.
1. திராஸத் (ஆசிரியரிடம் கற்பது)
2. திராயத் (இஸ்திஃதாத் - சுய முயற்சியால் கற்பது)
3. வராஸத் (அல்லாஹ்வின் மூலம் கிடைக்கும் கல்வி),
'அல் உலமாவு வரஸதுல் அன்பியா' - “ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்" என்ற நபிமொழி யில் 'வராஸத்' எனும் வார்த்தை உள்ளது. எனவே, ஆலிம்கள் நபிமார்களின் வாரிசு என்றால், இந்த 'வராஸத்' இறைவன் மூலம் கிடைக்கும் கல்வியை அடைபவர்கள்தாம் (ஆலிம்கள்). இந்தக் கல்வியை அடைவதைக் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும்.
ஆனால், நாம் திராஸத்' - ஆசிரியரிடம் படித்ததும் 'இனி படிப்பதற்கு ஒன்றும் இல்லை' எனும் எண்ணத்தில் 'ஸனது' பட்டம் பெற்று வெளிவருகிறோம்.
உண்மையாகவே எல்லாம் கற்றாகிவிட்டதா? இல்லை. பிறகு எதிலிருந்து ஃபாரிகு' விடுதலை? கற்பதிலிருந்தா? மதரஸா சாப்பாட்டிலிருந்தா?
அதாவது, இனி இவர் ஆசிரியரின் துணை இல்லாமல் சுயமாகவே எல்லா நூல்களையும் படித்து விளங்கி, பிறருக்கு விளக்கவும் தகுதிபெற்றவாகி விட்டார் என்று பட்டம் தந்து வெளியேற்றுகிறோம்.
1950 களில் திண்டுக்கல் பேகம்பூர் மஸ்ஜித் மதரஸாவில் நானும் மற்றும் பலரும் படிக்கும்போது, வேலூர்
மதரஸாவில் ஓதிய ஆறு மற்றும் ஏழாம் ஜும்ரா மாணவர்கள். தங்கள் ஊருக்குப் போகும்போது பேருந்து கிடைக்காமல் இங்கு வந்து தங்குவார்கள்.
அந்த சமயங்களில், நாங்கள் அவர்களிடம் நூருல் ஈளாஹ், குதூரி போன்ற நூல்களை எடுத்துச்சென்று சந்தேகம் கேட்போம். அவர்கள் நடுவில் இருக்கும் வரிகளை விட்டுவிட்டு, அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் (ஹாஷியா எனும் ஓரக் குறிப்புகளைப்) பார்ப்பார்கள்.
நான் கேட்பேன்: "என்னங்க பாய்! நான் நடுவரியை சந்தேகம் கேட்க, நீங்க அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பார்க்கிறீர்களே! இதையல்லாமா அங்கே (வேலூரில்) ஓதிக்கொடுக்கிறார்கள்?
இதற்குப் பெயர்தான் 'இஸ்திஃதாத்' சுயமுயற்சியில் கற்பது.
சில ஆலிம்கள் "ஸனது கூட படிக்கத் தெரியாமல் இருக்கிறார்களே" என்று சிலர் என்னிடம் கேட்டனர். நான் சொன்னேன்: "இப்படி ஆலிம்களில் மட்டும் இல்லை. டாக்டர். இன்ஜினியர், வக்கீல் என எல்லா துறையிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சுயமாக மேலும் மேலும் பிராக்டீஸ் செய்யும்போது எல்லாம் சரியாகிவிடும்".
நான் ஓர் அரசியல் மேடையில் பேசும்போது ஒரு எம்.பி, "அந்த காலத்து ஆலிம்சா மாதிரியெல்லாம் இன்று இல்லைங்களே" என்று தன் உரையில் கூறினார். நான் எனது உரையில், "அந்த காலத்துல இருந்த எம்.பி., எம்.எல்.ஏ. போல கூடத்தான் இன்று இல்லை" என்று சொன்னேன். அவர் வாயடைத்துப் போனார். இப்படி ஆலிம்களைக் கேலி, கிண்டல் செய்வதை ஒரு பழக்கமாகவே சிலர் வைத்துள்ளனர்.
ஆலிம்களாகிய நமது 'ஜின்ஸ்' - இனத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும், நான் உடனே பதில் கொடுத்து விடுவேன்.
ஒரு பூட்டை ஒரு சாவிதான் திறக்கும். அது ஏட்டுக் கல்வி. ஒரே சாவி பல நூறு பூட்டுக்களைத் திறக்கும் அதுதான் இஸ்திஃதாத். சுய முயற்சியாகக் கற்ற கல்வி.
எனவே, 'வரஸதுல் அன்பியா' எனும் நபிமார்களின் கல்வி, வாரிசாக வேண்டுமானால், முதல் இரண்டு வகையையும் முறையாகக் கற்க வேண்டும்.
மூன்றாவதாகத்தான் 'வராஸத் கல்வி' கிடைக்கும். எடுத்த எடுப்பிலேயே அவ்வளவு எளிதில் அது கிடைத்துவிடாது. முயற்சியும் பயிற்சியும் வேண்டும்.
நாயகம் (ஸல்) அவர்கள், "இன்னமா புஇஸ்த்து முஅல்லிமா" நான் ஆசிரியராகவே அனுப்பப்பட்டுள்ளேன்" என கூறிச் சென்றார்கள். நபிகளார் தங்களது அறிவால், மக்கா - மதீனா என உலகையே ஞானத் தாலும், கல்வியறிவாலும் நிரப்பினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "உத்லுபுல் இல்ம; வ லவ் பிஸ்ஸீன்" - "கல்வி, அது சீனாவில் இருந்தாலும் நீ தேடிச் சென்று கற்றுக்கொள்" என கூறினார்கள்.
அன்று சீனா அறிவின்மையின் மொத்த உருவமாக காட்சியளித்தது. அப்படிப்பட்ட ஓர் இடத்தை, கல்வியின் தந்தையாகவும், கல்வியின் மொத்த உருவமாகவும் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களே ஏன் சுட்டிக் காட்டினார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கலாம்.
"உத்லுபுல் இல்ம: வ லவ் குன்த பிஸ்ஸீன் - நீ சீனாவில் இருந்தாலும் இங்கே (மதீனா) வந்து கற்றுக் கொள்" என்பதுதான் பொருள். இதில் 'குன்த' எனும் வார்த்தை 'காயிப்' - மறைமுகமாக இருக்கிறது.
நபிகளாரின் நாவிலிருந்து வெளிவந்த 'சீனா' எனும் ஒரு வார்த்தையினால், நபிகளாரின் மறைவுக்குப் பிறகு 8 சஹாபாக்கள் சீனா சென்றார்கள்.
அவர்கள் அங்கு இஸ்லாமிய மரபுபடி வணிகம் செய்தார்கள். மக்களிடம் அன்பாக பேசினார்கள். கொள்ளை லாபம் இல்லாமல், முறையான நேர்மையான வணிகத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் எல்லா வகையான வியாபாரங்களையும் செய்ததால், ஒரு வருடத்திற்குள் மக்கள் அனைவரும் இவர்களிடமே வியாபார பரிவர்த்தனை செய்துவந்தனர்.
இதை சகிக்காத உள்ளூர் வியாபாரிகள். மன்னரிடம் சென்று, அன்பளிப்புகளை வழங்கி, விபரத்தைக் கூறியதும் அவர்கள் அனைவரையும் நாட்டை விட்டுச் செல்லும்படி அரசர் உத்தரவிட்டார்.
மக்கள் நபித்தோழர்களுக்கு ஆதரவாக திரண்டனர். மக்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லியும் அரசர் ஏற்கவில்லை. (அவர்தான் அன்பளிப்பு என்ற பெயரில் 'வாங்க வேண்டியதை' வாங்கிவிட்டாரே!
இறுதியில். "நீங்கள் போரை அறிவியுங்கள். நீங்களா அல்லது நாங்களா என பார்த்துவிடுவோம்" என ஒட்டுமொத்த மக்களும் கூறியபோது, "உள்நாட்டு யுத்தம் வந்து நாம் தோற்றுவிட்டால், நமது பதவி பறிபோய்விடுமே" என அஞ்சிய மன்னர், இறுதியில் மக்களுக்கு உடன்பட்டார்.
நமது நபித்தோழர்களின் அறிவுப்புரட்சி ஆறேழு மாதங்களில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்திருந்தது. (நூல்: குதுபாது ஹகிமுல் இஸ்லாம்.)
இறையச்சம்: ஆலிம்களுக்குத் தேவை :
___________________________________________
"இன்னமா யக் ஷல்லாஹு மின் இபாதிஹில் உலமா"
நிச்சயமாக மனிதர்களில் அல்லாஹ்வை
அஞ்சுவோர் ஆலிம்களே" என அல்லாஹ் கூறுகிறான்.
ஆலிம்களுக்கு அல்லாஹ்வின் மீது பயம் இருக்கிறதா? என்று சிலர் கேட்கிறார்கள். இதன் பொருள் என்னவெனில், இல்ம் - கல்வி இருப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சியே ஆக வேண்டும்" என்பதாகும்.
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு இல்ம் / கல்வி தேவை. ஆனால், இல்மு - கல்வி இருந்தால் பயப்படுவது அவசியமில்லை. பயம் கல்வியில் ஒரு பகுதிதான்.
கல்வி இருப்பவரிடம் பொறுமை நற்குணம் ஆகியன இருப்பதுபோல், இறையச்சமும் ஒரு பகுதி. அல்லாஹ்வின் மீது பயம் வரவேண்டுமானால் அமல் செய்ய வேண்டும். இபாதத் இருந்தால்தான் அல்லாஹ்வின்மீது பயம் வரும்.
உடலுக்கு ஓர் உள்ளம் இருப்பதுபோல் உலகத்துக்கும் ஓர் உள்ளம் இருக்கிறது. அதுதான் ஆலிம்கள். எனவே, ஆலிம் திருந்தினால், ஆலம் -உலகம் திருந்தும்.
நாம் அல்லாஹ்வுக்காக அமல் செய்தால் நம்மைப் பற்றிய நல்லெண்ணங்களை மற்றவர்களிடம் அல்லாஹ் உண்டாக்குவான் அவன் நமக்கு தேவையானதைத் தருவான்.
அவர்கள் நமக்கு தரவில்லையெனில் அல்லாஹ்வே நமக்குத் தருவான். எனக்குத் தருகிறான். அல்லாஹ் பொய் பேச மாட்டான். நீங்கள் இறையச்சத்தோடு வாழுங்கள் அவன் தருவான்..
எனவே, நீங்கள் அல்லாஹ்வை, அவன் வல்லமையைப் புரிந்தால்தான் நீங்கள் அல்லாஹ்வை பயப்பட முடியும். நீங்கள் அல்லாஹ்வை அறிய கல்வி தேவை எனவே, கப்ருக்குச் செல்லும்வரை கற்றுக் கொண்டே இருங்கள்; சுணங்கிவிடாதீர்கள்.
பாம்பு, நெருப்பு ஆகியன இருக்கிறது. இது பற்றி ஒருவன் ஏற்கெனவே அறிந்திருந்ததால்தான். அதைப் பார்த்ததும் அச்சப்படுகிறான்.
ஒருவருடைய மாடு மாலை நேரத்தில் காணாமல் போய்விட்டது. அவர் பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒருவர், 'உனது மாட்டை நமது மலையடிவாரத்தில் கண்டேனே" என்கிறார். உடனே இவர் தேடிச் சென்றார். ஆனால், நன்கு இருட்டிவிட்டது.
அங்கிருந்த மரத்தடியில் ஏதோ படுத்திருப்பது போல் தெரிந்தது. இவர் நேராகச் சென்று தொட்டு தடவிப் பார்த்தார். அதன் தலை பாகத்தை தொட்ட போதுதான் தெரிந்தது. அது சிங்கம் என்று உடனே அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என அலறியடித்துக்கொண்டு ஓடினார். இதற்கும் அந்த சிங்கம் சப்தமாக மூச்சு கூட விடவில்லை.
இவர் இப்படி பயந்ததற்கு காரணம், இவர் ஏற்கெனவே சிங்கத்தை, அதன் இயல்பை, அதன் சக்தியை, அதன் ஆற்றலை அறிந்திருந்ததுதான். இப்படி நாம் ஏற்கெனவே அல்லாஹ்வை அறிந் திருந்தால்தான் நாம் அல்லாஹ்வை அஞ்ச இயலும். இப்படி அல்லாஹ்வை முதலில் அறிவதே நமது மார்க்கத்தின் முதல் கடமை.
ஆமன்த்து பில்லாஹ்! அல்லாஹ்வை நம்பினேன்' என்றால் எப்படி நம்பினாய்? அவனைப் பற்றி தெரிந்தால்தானே நம்ப முடியும்? முன்பு நாம் சிறு வர்களாக இருந்தோம். இப்போது படித்து
ஆலிம்களாகவும் ஆகிவிட்டோம். இப்போதாகிலும் நாம் அல்லாஹ்வை அறிந்திருக்கிறோமா? ஏதோ ஓரளவு தெரிந்திருக்கிறோம்.
முழுமையாக. அல்லாஹ்வை அறியவேண்டுமானால் அண்டத்தையே அறிய வேண்டும்.
அண்டத்தையே அறிந்தால்தான் ஓர் அணுவளவேனும் அல்லாஹ்வை அறிந்ததாக ஆகும். அப்படியெனில், இப்போது நாம் அல்லாஹ்வை அறிந்து வைத்திருப்பதாகச் சொல்வது? ஒன்னுமே இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய அறிவு நம்மிடம் பூஜியம். எந்த ஒரு மனிதனும் அண்டத்தின் அணு முதற் கொண்டு அனைத்தையும் அறிந்தவன் இல்லை.
உச்சகட்ட இறையச்சம் :
_________________________
நான்கு இமாம்கள் இருக்கிறார்கள்; இவர்கள் அல்லாமல் மேலும் பல முஜ்தஹிதீன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இமாம்கள் சொல்லாத பலதை. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கூறியுள்ளார்கள்.
நமது இஸ்லாமிய மார்க்கத்தை வழிநடத்துவோர் மூவர் உண்டு. 'ரப்புல் லில் ஆலமீன்' (1:1) அகிலத்தைப் படைத்த அல்லாஹ், 'ரஹ்மதுன் லில் ஆலமீன்' (21:107) அகிலத்தின் அருளாக வந்த நபி (ஸல்) அவர்கள். திக்ருன் லில் ஆலமீன் (38:87) அகிலத் தாரின் வழிகாட்டியாக வந்த வான்மறை குர்ஆன். இம்மூன்றுக்குப் பிறகுதான், நான்காவதாக சஹாபாக்கள். இமாம்கள். முஜ்தஹிதீன்கள் உள்ளிட்ட அனைவரும்.
ரஹ்மதுன் லில் ஆலமீனாகிய நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் 'அல் - குவ்வத்துல் குத்ஸியா பரிசுத்தமான அல்லாஹ்வின் சக்தி எனும் ஆற்றலை
வழங்கியுள்ளான். இது 124,000 நபிமார்களுக்கும் வழங்கப்படாத ஓர் அற்புதம் அது.
இந்த சக்தியின் மூலம் அல்லாஹ்வுடன் நபிகளார் இணைந்தார்கள். இப்படி ஒவ்வொரு ஆலிமும் இறைவனுடன் இணைய வேண்டும். அதேநேரம் ஆலிம்களாகிய நாம். நமது சமுதாய மக்களுடன் நெருங்கிய தொடர்பும் வைத்திருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் அப்தியத் - இறையடியான் எனும் மனிதத் தன்மைகளோடுதான் மக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். அல்லாஹ்வோடு நெருங்கிவிட்டதற்காக அண்ணலாருக்கு 'அப்தியத்' மனிதத் தன்மைகள் இல்லாமல் போய்விட்டது என எவரும் கருதக் கூடாது.
அவருக்கும் தேள் கடித்தது. அதனால் வலி ஏற்பட்டு மருத்துவரை அழைத்துவந்து, வைத்தியம் பார்த்தார்கள்.
அவருக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் பாதிப்பு ஏறத்தாழ ஆறு மாதம் வரை நீடித்தது.
ஒரு யூதப் பெண், நபிக்கு விஷம் கலந்த இறைச்சியை அளித்தாள். அதன் தாக்கம் மரணப் படுக்கையில் இருக்கும்போதும் பிரதிபலித்தது.
ஜுரம் வந்தது. அதை ஒரு தோழர் தொட்டுப் பார்க்கும் நோக்கில், அண்ணலார் போர்த்தியிருந்த
போர்வையைத் தொட்டார். அது கொதித்திருந்தது.
அல்லாஹ்வுடைய சக்தி நபிக்கு இருக்கிறது. அது அல்லாஹ் கொடுத்த சக்தி. அது இருக்கும்போதே இவ்வளவு சிரமங்கள்! இதற்குக் காரணம், நபிகளாரிடம் 'அப்தியத்' மனிதத் தன்மையும் இருந்ததே ஆகும். மேற்கண்ட சிரமங்கள் யாவும் அல்லாஹ் அண்ணலாருக்கு வழங்கியதே!
நாம் அல்லாஹ்வை நெருங்க, நெருங்க சோதனைகளும் கஷ்டங்களும் அதிகமாகும். எனவே, நிறைய தொழுது, குர்ஆன் ஓதி, திக்ரு செய்து வந்தால் சோதனை அதிகமாகும். அதற்காக நாம் இபாதத் செய்யாமல் இருக்கலாமா?
அழகான மனைவி, அவளோடு தனிமையில் இருக்கிறீர்கள். அப்போது உச்சகட்டத்தில் அவள் உங்களை அறைகிறாள். நீங்கள் கோபப்படுவீர் களா?- இன்னொன்று கொடு என மறு கன்னத்தை காட்டமாட்டீங்க? அது மாதிரிதான் அல்லாஹ்வின் சோதனையும்.
மகன், பேரன், பக்கத்து வீட்டுக்காரன் ஆகிய மூன்று சிறுவர்களும் விளையாடுகிறார்கள். ஏதோ சேட்டை செய்துவிட்டார்கள். உடனே பாட்டி சென்று மகனை வேகமாக அடிக்கிறாள். பேரனைச் சற்று குறைவாக அடிக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து "உங்க அத்தா வரட்டும் சொல்கிறேன்" என்கிறாள்.
மகனை, தாய் வேகமாக அடித்த காரணம், நெருக்கம் அதிகம்; உரிமை அதிகம். பேரனைச் சற்று குறை வாக அடிக்கக் காரணம். கொஞ்சம் உறவு முறை தூரமாகிறது. பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடியே இல்லை. காரணம் அவனைக் கண்டிக்க நமக்கு எந்த நெருக்கமும் இல்லை.
இப்படி இறைவனிடம் அதிகம் நெருக்கம் பெற்ற யாவருக்கும் சோதனைகள் வரும். ஆனால், அதை பொருட்படுத்தக் கூடாது. அந்த சோதனையை மனைவி அடித்ததுபோல், அய்யூப் நபி பொறுத்தது போல பொறுத்துக்கொண்டால் சுகம் அதிகமாக கிடைக்கும்.
சஹாபாக்களின் சிறப்பு :
_________________________
பஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஒருவர் நபிகளாரிடம் வந்து நபிகளாரின் கரங்களால் முஸ்லிமானார். அவர் லுஹருக்கு முன்னர் ஜனாஸாவாக வந்தார். அவருக்கு நபி (ஸல்) தொழ வைத்து நல்லடக்கம் செய்துவைத்தார். இப்படிப்பட்ட ஒரு சஹாபிக்குக் கூட முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியோ, குவாஜா அஜ்மீரியோ, இன்ன பிற சாலிஹீன்களோ, ஈடாக மாட்டார்கள். ஏனெனில் சஹாபாக்கள் அவ்வளவு உயர்ந்தவர்கள்.
நபித்தோழர்களில் மூன்று வகையினர் உண்டு.
1. அஜல்லத்து சஹாபா : நபிகளாருக்கு மிக நெருக்க மானவர்கள்.
2. அவ்சத்து சஹாபா: நபிகளோரோடு நடுநிலையான அளவு தொடர்பு உடையவர்கள்.
3. அத்னா சஹாபா : நபிகளாரோடு அவ்வப்போது தொடர்பு உடையவர்கள்.
இம்மூன்று நிலையையும் தாண்டி உள்ளவர்தான் அந்த சஹாபி. அவருக்குக் கூட எவரும் ஈடாக மாட்டார்கள் என்றால், மற்ற சஹாபாக்களின் அந்தஸ்த்தை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
நபியின் வாரிசுகளே! :
_________________________
நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த குர்ஆனையும் அவர்களின் பொன்மொழிகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இந்த இரண்டையும் பின்பற்றும் சஹாபாக்கள். இமாம்கள், வலிமார்கள் மற்றும் நாம் அனைவரும் நபிகளாரின் வாரிசுகளாவோம்.
நபிகளாரின் சொத்து குடும்பத்துக்குச் சொந்தமல்ல. அது மக்களுக்குத்தான். நபிமார்களின் வாரிசான ஆலிம்களின் சொத்தும் பைத்துல் மாலுக்கு உரியதா? என்றால் இல்லை... நாம் நபிமார்களின் வாரிசு என்பது கல்விக்குத்தான்.
கடைத் தெருவில் ஒரு சஹாபி, மஸ்ஜிதுந் நபவியில் சொத்துகள் பங்கிட்டுத் தரப்படுகிறது; ஓடிச்சென்று பெற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறினார். மக்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள். சிலர் குர்ஆன் ஓதிக்கொண்டும், தொழுதுகொண்டும், திக்ரு செய்து கொண்டும் இருந்தார்கள்.
ஓடி வந்தவர்கள் 'எங்கே சொத்து?' என்று வினவியதற்கு. "இதுதான் சொத்துகள்" என்று அவர் பதில் கூறினார். எனவே, இந்த சொத்துகளுக்குத்தான் ஆலிம்களாகிய நாம் வாரிசு ஆவோம்.
ஆலிம்களாகிய நம்மிடம் இருக்கும் இல்மு- கல்விக்கு 'அமல்' இருந்தால்தான் நமக்கு 'தக்வா' எனும் இறையச்சம் வரும். இப்படி இறையச்சத்தோடு கூடிய கல்விதான் உயிரோட்டமுள்ள, ஜீவனுள்ள கல்வியாகும். எனவே அமல் செய்ய வேண்டும்.
ஒரு 40 நாள் தொடர்ந்து தஹஜ்ஜுத் தொழுதால் பிறகு தானாகவே உடல் எழுந்து அமல் செய்யத் துவங்கிவிடும். "தத ஜாஃபா ஜுனூபுஹும் அனில் மளாஜி... 32:16" தொழுகை நேரம் வந்துவிட்டால் அவர்கள் உடல் தானாக படுக்கையைவிட்டும் எழுந்துவிடும் என்பதுபோல, நல்ல இல்மு - கல்வி வந்துவிட்டாலும் அது நம்மை அமல் செய்யத் தூண்டும். சும்மா இருக்க விடாது.
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஷகவ்த்து இலா வகீஇன் சூஅ ஹிஃப்ளீ வ அவ்ஸானீ பி தர்கில் மஆஸீ ஃப இன்னல் இல்ம ஃபள்ளுன் மின் இலாஹி ஃபள்லுல்லாஹி லா யுஃதா லி ஆஸீ
"நான் என் ஆசிரியர் வகீஇ (ரஹ்) அவர்களிடம் எனக்கு மனனக்குறை ஏற்படுவது பற்றி கூறினேன். அதற்கு அவர்கள் என்னை, பாவத்தை விடும்படி கூறினார்கள். நிச்சயமாக கல்வி என்பது இறை வனிடமிருந்துள்ள பேருபகாரம்; பேரருள். அந்தப் பேரருள் பாவம் செய்பவருக்கு கொடுக்கப்படாது" என்றும் கூறினார்கள்.
ஆசிரியர், மாணவரின் இந்த உரையாடலில் சூஅ ஹிஃப்ளீ மனக்குறைவு என்பதன் பொருள், சாதாரண ஞாபகசக்தியைக் குறிப்பிடுவது நோக்கமல்ல.
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் 'தக்வா' - இறையச்சத்தின் காரணமாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு பிரகாசம் - பேரொளி கிடைத்தது. அது இப்போது இல்லை. அது ஏன் போனது? அது கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இமாம் ஷாஃபி கேட்டார்கள்.
அதற்கு அவர் "தக்வாவினால் கட்டமைக்கப்பட்ட இல்மு - கல்வி இருப்பவரிடம் மனனக்குறை ஏற்படாது. அந்த இறை பேரொளி விலகாது" என கூறினார். எனவே சின்னச் சின்ன பாவங்கள் செய்தால்கூட இறைநெருக்கம் விலகிப்போகும்.
ஓர் ஆலிம் ஏழு மணியிலிருந்து பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் அருகே சாதாரண ஒரு ‘மனிதர் ஏழு மணியிலிருந்து தொழுது கொண்டிருந் தார். மணி பத்து ஆகிவிட்டது. இவ்விருவருக்கும் நடுவே ஷைத்தான் நின்றுகொண்டு இருவரையும் மாறிமாறி பார்த்தான்.
இந்த சமயம், இன்னொரு ஆலிம் அங்கு வந்தார். ஷைத்தான் அமைதியாக நிற்பது கண்டு வியந்து போய், "ஏன் சும்மா நிற்கிறாய்?" என்று கேட்டார். "இந்த இருவரில் யாரைக் கெடுப்பது?" என யோசிக்கிறேன். என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை" என்று பதில் கூறினான்.
இந்த ஆலிம், "நீ தொழுது கொண்டிருப்பவரைத் தானே கெடுப்பாய்? அதுதானே உன் தொழில் தர்மம்; உன் குணம்?" என்று கேட்டார். அதற்கு அவன் “இல்லை, இவனில் நான் நுழைந்து இவன் தொழுகையில் சந்தேகத்தை உண்டாக்கி, இரண்டு ரக்கஅத்தா, நான்கு ரக்கஅத்தா என்று குழப்பிவிட்டால், அவனும் குழம்பிவிடுவான். ஆனால், அவன் உடனே இந்த ஆலிமை எழுப்பிவிடுவான்" என்றான்.
அவர், ‘அதுவும் உனக்கு நல்லதுதானே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய், அவனையும் கெடுத்து விடுவாய். ஓர் ஆலிமின் உறக்கமும் இபாதத் ஆகும் அதையும் கெடுத்து, இரண்டையும் கெடுத்த ஒரு நற்செயல் செய்ததாகதானே ஆகும் உனக்கு" என கேட்டார்.
"அது உண்மைதான். தொழுகிறவனை நான் கெடுத்தால், உடனே அவன் அந்த ஆலிமை எழுப்பி எனக்கு தொழுகையில் இப்படியொரு சந்தேகம் வந்துவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும் என கேட்பான். அவர், "இப்படி ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்" என விளக்கமாகச் சொல்லிவிடுவார்.
எனவே, இதுவரை தெரியாதிருந்த விஷயத்தை அவர் தெரிந்துகொண்டால், அதற்குப் பிறகு இனி, எப்பொழுது தொழுகையில் தவறு ஏற்பட்டாலும், சரிசெய்து கொள்வார். அவர் நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்வார். பின்னர் அவரை நான் வழி கெடுத்தாலும் அவர் தன்னைத்தானே சரி செய்து கொள்வார். ஆகவேதான் இருவரையும்
கெடுக்காமல் இருக்கிறேன்" என்று கூறினான் ஷைத்தான்.
எனவே. நம் ஒவ்வொருவரிடமும் இறையச்சத் தோடு கூடிய கல்வி இடம்பெற வேண்டும்.
அல்லாஹ், ரஸூல், ஆகிரத் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கும்போது தக்வா வரும். இப்படி தக்வா வந்துவிட்டால் அல்லாஹ், அகிலத்தை நம் காலடியில் கொட்டுவான்.
யூதர்களைப் போல உலகில் அறிவாளிகள் வேறு யாரும் இல்லை என்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இறையச்சம் இல்லை. அதனால் அவர்கள் சிறுமைப்பட்டு நிம்மதியிழந்து வாழ்கிறார்கள்.
முழுமையான அறிவு அதிக அறிவு என்பதெல்லாம் மிருகங்களுக்கும்கூட இருக்கிறது. சர்கஸில் மிருகங்கள் சொல்வதை செய்கின்றன. போலிஸ். நாய், குற்றவாளியை, திருடனை, கொலைகாரணைக் கண்டுபிடிக்கிறது. ஜோசியகாரனிடம் உள்ள கிளி அவன் சொல்வதைச் செய்கிறது.
வேட்டை நாயிடம் பிஸ்மி சொல்லி ஏவிவிட்டால் அது முயலைப் பிடித்து வந்து கொடுத்தால், அது இறந்துபோயிருந்தாலும் நாம் சாப்பிடுவது கூடும்.
அபூஜஹ்ல். அபூலஹப் போன்றவர்கள் அரபு மொழியை நன்கு பேசவும் எழுதவும். கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.
ஜெர்மனி, இங்கிலாந்து
போன்ற நாடுகளில் யூத, கிருத்தவ தேவாலயங்களில் அவர்கள் மத கல்வி பயிலும் கல்விக் கூடங்களில் குர்ஆன் - ஹதீஸ்களை ஆய்வு செய்கிறார்கள். அதை கற்பவரும் கற்பிப்ப வரும் பெரிய ஆலிம்கள்தாம்.
எனவே. முழுமையான அறிவு பெற்ற இவர்கள் எல்லோரும் ஆலிம்களாகிவிடுவார்களா? என்றால் இல்லை தக்வா எனும் இறையச்சம் உள்ளவர்தான். உண்மையான ஆலிம் அவரிடம் இருப்பது இல்ம் - அறிவு.
அறிஸ்டாடலுக்கும் அறிவு உண்டு. ஐன்ஸ்டீனுக்கும் அறிவு உண்டு. இப்படி அறிவுள்ள அனைவரும் ஆலிமாக, மவ்லானாவாக ஆகிவிட முடியுமா என்ன?
மவ்லானா, மவ்லவீ ஹாபிழ், ஆலிம் என அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலம் பட்டம் வழங்கியிருக் கிறான். காரணம், நம்மிடம் இறையச்சம் இருக்கிறது. எனவே, நம்முடைய இந்த இறையச்சத்தை மென் மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் இறையச்சத்தோடு இணைந்த கல்வியை வழங்கிக் கொண்டே இருப்பானாக! ஆமீன்.
இறையச்சத்தை அதிகப்படுத்தும் ஆன்மிகத் தொடர், சூபிதுவ வாழ்வு தொடர்பான செய்திகள் அடுத்த இதழிலிருந்து வெளிவரும்.
அன்புடன்
மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
Comments
Post a Comment