நான் இறைவனின் தேர்வு :
நான் இறைவனின் தேர்வு :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
எனது சிறிய தந்தை மர்ஹூம் மௌலானா B. முஹம்மது சுல்தான் ஃபாஜில் தேவ்பந்தி அவர்கள் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், அரபு தமிழ் அகராதி போன்ற ஆக சிறந்த ஆக்கங்களை அளித்த எனது ஆசிரியர்.
1994 இறுதியில் ஷரீஅத்தும் தக்லீதும் எனும் நூலை வெளியீட்டு இருந்தார். அந்த நூலின் விற்பனையாளனாக ஒரு ரமலான் மாதத்தில் திருச்சி நகர் முழுவதும் சுற்றி, அனைத்து பள்ளிவாசல்களிலும் கூவி கூவி விற்பனை செய்தேன்.
ஒரு ரமலான் மாதம் முழுவதும் திருச்சியில் தங்கியிருந்து இந்தப் பணியை செய்தேன்.
அன்று நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், அவமானங்கள், நூல்கள் விற்பனையாகாததால் ஏற்பட்ட விரக்தி, பள்ளிகளில் தங்க அனுமதிக்காததால் உண்டான மன அழுத்தம் ஆகியன " நீ எழுத்தாளனாக மட்டும் ஆகிவிடாதே! " என என் மனமும், உடலும் ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டது.
நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர், எனது ஆசிரியர் மௌலவி முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹள்ரத் அவர்கள் மிஃராஜ் போன்ற சில நூல்களை எழுதி இருக்கிறார்கள். அவற்றையும் நான் விற்பனை செய்து இருக்கிறேன். அந்த நூல்களை விற்ற அனுபவமும் சொல்லும்படி இல்லை.
நானும் சரி! எனது தம்பி அப்துல் ரஷீதும் சரி!! இருவரும் ஆங்காங்கே ஓதுகிற காலத்தில் நிறைய நூல்களை வாசிப்போம்.
பெரும் பெரும் கதை புத்தகங்கள், நாவல்கள், காமிக்ஸ் புத்தகங்கள், சிறுகதை தொகுப்புகள் , உலகின் பல்வேறு வரலாற்று நூல்கள் ஆகியவற்றை தன்னை மறந்து வாசிப்போம். பல நூற்றுக்கணக்கான நூல்களை படித்து ரசித்திருக்கிறேன்.
"எழுத்தாளனாக மட்டும் ஆகிவிடக் கூடாது" என்கிற எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்ததால் அதற்கான எந்த முனைப்பும் நான் மேற்கொள்ளவில்லை.
ஆனால் அதற்கான அடித்தளமாகவே அநேக நூல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்... என்னை அறியாமல்!
இந்நிலையில் சென்னையில் இமாமத் பணி, திருமணம் ஆகி மனைவி, குறைந்த சம்பளம், கூடுதல் பொருளாதாரத் தேவை ஆகியன என்னை இமாமத்து மட்டுமின்றி வேறு ஏதேனும் ஒரு வகையில் சம்பாதித்தாக வேண்டும் என்கிற நிர்பந்த நிலையை காலச்சூழல் உருவாக்கியது.
நானும் என்ன செய்யலாம் என யோசித்தேன். எனது மஹல்லாவில் அதிகமான டைலர்கள் இருந்ததால் அவர்களின் ஆலோசனைப்படி டைலரிங் தொழிலை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காக ஒரு டைலர் கடையில் காலை முதல் லுஹர் வரை பணியாற்றினேன்.
ஒரு வருடம் ஆகிவிட்டது. பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. டைலரிங் ஓரளவு கற்றுக் கொண்டேன்.
தையல் தொழிலில் உள்ள சிரமங்கள், அதில் உள்ள வருமானம், டைலர்கள் தம் தொழிலில் சரியான வருமானம் இல்லாததால் வேறு தொழிலுக்கு செல்லுதல் ஆகியவற்றை பார்த்த பிறகு நானும் வேறு தொழில் செய்ய முனைந்தேன்.
ரெடிமேடு துணிகளை மொத்தமாக எடுத்து ஃபிளாட்பார கடைகளில் போடுதல், ஓட்டுநர் பயிற்சி எடுத்துக் கொண்டு ஸ்கூல் சவாரி ஓட்டுதல், ஆம்வே போன்ற சங்கிலி தொடர் ஆன்லைன் பிஸ்னஸ் செய்தல், பகுதி நேரமாக கடைகளில் நிற்குதல் போன்ற பல்வேறு தொழில்களை தேர்வு செய்து செயல்பட முனைந்தேன்.
ஆனால் இவை அனைத்தும், இமாமத் பணிக்கு மிகப் பெரும் பின்னடைவாகவும் இடையூறாகவும் இருப்பதை எண்ணி இவற்றில் எதையும் செய்ய துணியவில்லை.
இமாமத் மற்றும் மக்தப் மதரஸா சேவைகளை விட்டு வெளியே செல்ல மனமே இல்லை.
இச்சமயத்தில், இமாமத்திற்கு இடையூறு இல்லாத, அதேசமயம் மார்க்கம் சார்ந்த பணிகளை மட்டும் தொடர்ந்து செய்வோம் என முடிவு செய்தேன்.
அதற்காக டியூஷன் எடுத்தல், மேற்கொண்டு படிக்குதல், எழுத்துத் துறையில் ஈடுபடுதல், பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பணிகளில் முனைப்பு காட்டினேன்.
மேற்கண்ட வரிசை முறைப்படியே தொடர்ந்து செயல்பட்டேன். B.A. ARABIC, M.A ARABIC, M. A, PHILOSOPHY AND RELIGION ., M, PHIL போன்ற நான்கு டிகிரிகளை பெற்றேன்.
அதிகமாக படித்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை அற்றுப் போனது.
இமாமத்தில் இருந்தவாறு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கிற மனநிலை என்னில் மேலோங்கி நின்றது.
அதனால் வெளிநாட்டு வாய்ப்புகள், படித்ததற்கான உள்நாட்டுப் பணிகள், அதிக ஊதியம் தருவதாக ஆசை காட்டிய பிறகும் நான் எதிலும் ஈடுபாடு காட்டவில்லை.
ஒரு நேரத்தில் பண தேவைக்காக எதுவெல்லாமோ செய்யலாம் என்று இருந்தேன்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் விசாலமாக வந்த போது நான் பண தேவைகளிலிருந்து முற்றும் துறந்தவனாக ஆகிவிட்டேன்.
இதற்கிடையில் நான் எதை செய்து விடக்கூடாது என்று முடிவு செய்து இருந்தேனோ அந்த எழுத்துத் துறையில் என்னையும் அறியாமல் ஈடுபட்டிருந்தேன்.
அஷ் ஷரீஅதுல் இஸ்லாமியா, பிஸ்மி, குர்ஆனின் குரல், சிந்தனைச் சரம், முஸ்லிம் இதய குரல் போன்ற மாதாந்திர இதழ்களில் எழுதத் தொடங்கியிருந்தேன்.
எழுத்துத் துறையில் தத்தி தவழ்ந்து நான் எழுதி வந்த வேளையில், என் கையைப் பிடித்து நடத்தி அழைத்துச் சென்றவர்களில் ஒருவர் தான் என் ஆன்மிக ஆசான் O.M. ஹள்ரத் அவர்கள் .
ஹள்ரத் அவர்களும் நானும் இணைந்து 'திருக்குர்ஆன் தமிழுறை' எனும் பெயரில் திருக்குர்ஆனுக்கு மொழிபெயர்ப்பு செய்தோம். அதைத் தாங்கள் அறிவீர். 2018 ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணியை நானும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து எழுத்து துறையில் ஈடுபடுத்தி இருக்கிறான் போலும்.
அதனால்தான் 'நான் அல்லாஹ்வின் தேர்வு' என இதற்கு தலைப்பிட்டு இருக்கிறேன்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் என்னைப் பற்றி எழுதுவது தொடரும்.....
Comments
Post a Comment