ஆன்மீக ஒளிபரப்பிய நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) 145 - 208
ஆன்மீக ஒளிபரப்பிய நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) 145 - 208
******************************************
ஹுசைன் (ரலி) அவர்களின் சந்ததியில் ஹசன் அன்வர் (ரஹ்) அவர்களின் மகளாக நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 145 ரபியுல் அவ்வல் பிறை 11 இல் மக்காவில் பிறந்தார்கள். மதீனாவில் வளர்ந்தார்கள்.
மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியில் உள்ள பேராசிரியர்களிடம் திருக்குர்ஆனை மனனம் செய்தார்கள். அங்கே இருந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் 'முஅத்தா' நூல் மற்றும் ஹதீஸ் கலையை கற்றுத் தேறினார்கள். இவர்கள் பெற்றிருந்த கல்விக்கு எல்லையே இல்லை. மாபெரும் கல்வியாளராக ஆனார்கள். இவர்களுடைய கல்வி அறிவை அறிந்தவர்கள் 'நஃபீஸத்துல் உலூம் - கல்வித் தாய்' என்று அழைத்தனர்.
இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பேரன் இஸ்ஹாக் பின் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களிடமிருந்து தஸவ்வுஃப் கலையை கற்றார்கள். இவர்களுக்கு 'காசிம்' என்ற ஒரு ஆண்மகனும் 'உம்மு குல்சூம்' என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.
பின்னர் இவர்கள் தன் முழு நேரத்தையும் கல்வி வளர்ச்சிக்காகவும், மக்களிடம் ஈமானிய ஒளியை பரப்பவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
பின்னர் ஹிஜ்ரி 193 இல் ரமலான் பிறை 26 அன்று மிஸ்ரு சென்றடைந்தார்கள். அங்கிருந்த அறிஞர்களும், ஆட்சியாளர்களும் ஊருக்கு வெளியே வந்து அன்னை அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். அன்னையவர்களுடன் கணவர், பிள்ளைகள், மற்றும் தன் தந்தை ஆகியவர்களும் இருந்தார்கள்.
முதலில் ஜமாலுத்தீன் அப்துல்லாஹ் அல்ஜுஸாஸ் என்ற பெரு வணிகரின் மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.
பின்னர் உம்மு ஹானி எனும் பெண் அழைத்ததற்காக கெய்ரோ சிட்டியில் சிறியதொரு வீட்டில் தங்கிக்கொண்டு கல்வியை கற்பிக்க தொடங்கினார்கள். அவர்கள் கல்வி கற்பிப்பதற்காக சில நாட்களை தேர்ந்தெடுத்து அறிவித்திருந்தார்கள். அந்த நாளை எவரும் வீணாக விட்டுவிடாமல் அந்த சபையில் வந்து கலந்து கொண்டார்கள். மேலும் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் அவர்களின் துஆவை பெறுவதற்காக காத்திருந்தார்கள்.
இவர்கள் நடத்துகிற திக்ரிலும் கல்வி மஜ்லிஸிலும் பெருங்கொண்ட கூட்டத்தினர் கூடினார்கள். ஆகவே அந்த உம்மு ஹானி அவர்களின் சிறிய வீடு போதவில்லை. பின்னர் 'சரியீ பின் ஹகம்' என்பவர் மிகப்பெரும் வீட்டை அன்பளித்தார்.
அவ்வீட்டில் வாரத்திற்கு இரண்டு நாள் கல்வி போதனையும் திக்ரு மஜ்லிஸும் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக் கானோர் வந்து கலந்து கொண்டார்கள். (அதாவது கெய்ரோ சிட்டியிலிருந்த வீடுகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன. இந்த ஒரு வீட்டைத் தவிர என்று சொல்லுவார்கள்.)
நபிகளாரின் சந்ததியினர் என்பதனாலும், அவர்களின் இறையச்சத்தையூட்டும் பேச்சினாலும் கவரப்பட்ட கெய்ரோ வாசிகள் நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்களை மிகவும் நேசித்தார்கள்.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்களின் அவையில் வந்து அமர வேண்டும் என்பதில் மிகவும் ஆவலாக இருந்தார்கள். சில சமயம் வந்து அமர்ந்துமிருக்கிறார்கள்.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுக்கு நோய் ஏற்படும்போதெல்லாம் ஒரு தூதுவரை நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்களிடம் அனுப்பி வைப்பார்கள். அவர் வந்து, "உங்கள் சிச்சா மகன் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் நோயாளியாக இருக்கிறார்கள். உங்களை துஆ செய்ய சொன்னார்கள். எனவே நீங்கள் துஆ செய்யுங்கள்" என்பார்.
உடனே அம்மையார் துஆ செய்ததும் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் அங்கே நலம் பெற்று விடுவார்கள். சில சமயம் வந்திருந்த தூதுவரிடம்
متعه الله بالنظر الى وجهه الكريم
கண்ணியமான இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் முகத்தை அல்லாஹ் பார்ப்பதின் காரணமாக சுகம் அளிப்பானாக" என்று கூறுவார்கள்.
அதாவது இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களை அல்லாஹ் பார்க்கட்டும் என பிரார்த்தனை செய்வார்கள். ஒருவரை அல்லாஹ் பார்த்துவிட்டால் எல்லா வகையான நலன்களும் கிடைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை.
நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்கள் 30 முறை ஹஜ்ஜை , நடந்தே சென்று செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியதும் தன் வீட்டிலேயே தனக்கான கபூர் - அடக்கத்தலத்தைத் தானாகவே தோண்டிக் கொண்டு அதற்குள் அமர்ந்து தினமும் குர்ஆன் ஷரீஃப் ஓதும் பழக்கம் உடையவர்களாக ஆனார்கள்.
மேலும் அங்கேயே தொழுகை, திக்ர் போன்ற அமல்களையும் செய்யத் தொடங்கினார்கள். அந்த வகையில், அந்த அடக்கத்தலத்தில் தனக்காக 190 முறை குர்ஆனை ஓதி முடித்திருந்தார்கள்.
ஹிஜ்ரி 208 ரஜப் மாதத்தில் ரஜப் மாதம் முதல் ரமலான் முதல் பிறை வரை நோன்பு நோற்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். அப்படி அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது கடுமையான நோய் ஏற்பட்டது. அதனால் மருத்துவர்கள் நோன்பை விடும்படி வேண்டினார்கள்.
அப்பொழுது அவர்கள் சொன்னார்கள். "நான் கடந்த முப்பது வருடமாக ரஜப் மாத பிறையை பார்த்ததும் நோன்பு நோற்க தொடங்குவேன். நான் நோன்பாளியாக இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன், நானா நோன்பை விடுவேன்?" என்று கேட்டார்கள். (அதாவது முப்பது வருடமாக ரஜப், ஷஃபான், ரமலான் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்று வந்திருக்கிறார்கள்.)
இந்நிலையில் அவர்கள் மக்களிடையே ஸூரத்துல் அன்ஆம்
6: 127 ஆம் வசனத்தை ஓதி வந்தார்கள்.
لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
அவர்களுக்கு
அவர்களுடைய இறைவனிடம் தாருஸ்ஸலாம் எனும் சொர்க்கம் உண்டு. அவர்கள் செய்த நன்மைகளின் காரணமாக அவன் அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறான்" எனும் வசனத்தை ஓதும்போது அவர்களுடைய ஆன்மா அல்லாஹுவை சென்றடைந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவர்களின் கணவர் இஸ்ஹாக் பின் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் மதீனாவிற்கு ஜனாசாவை கொண்டு சென்று ஜன்னத்துல் பகீவுவில் அடக்கம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
ஆனால் மிஸ்ருவாசிகள் சம்மதிக்கவில்லை. இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டனர். வற்புறுத்தினர். எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஓர் இரவு கழிந்தது. அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி
وقال له: "يا إسحق لا تعارض أهل مصر في نفيسة، فإنّ الرحمة تنزل عليهم ببركتها"
"இஸ்ஹாக்! நஃபீஸா விஷயத்தில் மஸ்ருவாசிகளின் கருத்துக்கு முரண்படாதீர்! நஃபீஸா இங்கே அடக்கம் செய்யப்படுவதின் காரணமாக மிஸ்ருவாசிகளும் அருள் வழங்கப்படுவர்" என்று கூறினார்கள்.
பின்னர் நஃபிஸா (ரஹ்) அவர்கள் வழமையாக தொழுது வந்த இடத்தில், தானே தோண்டி வைத்திருந்த கப்ரில் ஸய்யிதா நஃபீஸா (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று இந்த இடம் மிஸ்ரு - கெய்ரோ பட்டினத்தில் 'தர்புஸ் ஸிபாவு' எனும் இடத்தில் இருக்கிறது.
அன்னை நஃபிஸா (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய இடத்திற்கு நான்
23/ 2 / 2020 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு 13 ஆலிம்களுடன்
சென்றிருந்தேன்.
அன்று இந்த இடத்தில் ஒரு யாசீன், தபாரக் ஓதி துஆ செய்தேன். மனதுக்கு ஆறுதலாகவும், அமைதியாகவும் இருந்தது.
அவர்களின் மக்பராவும், மிகப்பிரமாண்டமான மஸ்ஜிதும் எகிப்து கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தது. இது மிக பிரம்மாண்டமாக இருந்தது. அதன் அழகு இன்னும் கண்களில் நிழலாடுகிறது.
நஃபீஸா (ரஹ்) அவர்களைப் போல் நம்மையும் அல்லாஹ் வாழச் செய்வானாக! ஆமீன்.!
Comments
Post a Comment