உண்மையே உன் விலை என்ன?
உண்மையே
உன் விலை என்ன?
•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உத்திரப்பிரதேசம் முஸஃபர் நகர் மாவட்டத்தில் காந்தலா என்றொரு ஊர் இருந்தது. இந்த ஊர் இன்று ஹரியானா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த ஊரில் முஸ்லிம்களும், இந்துக்களும் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊரில் உள்ள ஒரு இடத்தை இந்துக்களும், முஸ்லிம்களும் 'தமக்கான வணக்கத்தளம்' என வாதிட்டு வந்தார்கள். அதனால் இரு சாராரிடையே கலவரம் மூலும் சூழல் ஏற்பட்டது.
இதனை அறிந்த ஆங்கிலேய அரசாங்கம் அப்பகுதியின் கலெக்டரை அனுப்பி வைத்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி சொல்லி அனுப்பியது.
இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த கலெக்டர் அவர்கள் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. இரு தரப்பினரும் அந்த ஒரு இடம் எங்களுக்கே உரியது என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால் இரு சாராரிடமும், "அந்த இடம் தமக்கானது" என்பதற்கு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் ஆங்கிலேய கலெக்டர் மிகவும் செய்வதறியாது திணறினார். இந்நிலையில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
இஸ்லாமியர்களில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்து, "இந்த இடம் உங்களுக்கு உரியது தான்' என இந்து மதத்தில் உள்ள வயது முதிர்ந்தவர்களில் எவரேனும் ஒருவர் சொன்னால் அந்த இடத்தை உங்களுக்கே நான் கொடுத்து விடுகிறேன் ; அப்படி யாரேனும் இருந்தால் அவரை அழைத்து வாருங்கள்" என சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.
ஆனால் முஸ்லிம்களுக்கு சாதகமாக பதில் சொல்லும் இந்து சகோதரர்கள் எவரும் இல்லை. இந்நிலையில் இந்து சகோதரர்களை அழைத்து, "இந்த இடம் உங்களுக்கு உரியது தான்' என இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள வயது முதிர்ந்தவர்களில் எவரேனும் ஒருவர் சொன்னால், இந்த இடத்தை உங்களுக்கே நான் கொடுத்து விடுகிறேன்; அப்படி யாரேனும் இருந்தால் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
அந்த சபையில் இருந்த ஒருவர் கூறினார். "முஸ்லிம்களில் முஃப்தி இலாஹி பக்ஸ் என்றொருவர் இருக்கிறார். அவர் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்; வயதானவர்; பொய் பேசாதவர் அவரை நாங்கள் அழைத்து வருகிறோம்".
ஷா அப்துல் அஜீஸ் திஹ்லவீ (ரஹ்) அவர்களின் சீடர்களில் ஒருவரான அஹ்மது ஷாரித் அவர்களின் மகன்தான் முஃப்தி இலாஹி பக்ஸ் அவர்கள். அஹ்மது ஷாரித் அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராடியதில் வீர மரணம் அடைந்தவர் ஆவார்.
அதனால் முஃப்தி இலாஹி பக்ஸ் அவர்கள், "தந்தையின் மரணத்திற்குக் காரணமான வெள்ளையர்களை இனி பார்க்கவே மாட்டேன்" என சத்தியம் செய்து ஒதுங்கி சூஃபியை போல் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டிருந்தார்.
இந்துக்கள் அனைவரும் ஒன்று இணைந்து முஃப்தி இலாஹி பக்ஸ் அவர்களிடம் சென்று விபரத்தைக் கூறினார்கள். அவர்களும் சாட்சி சொல்ல வருவதாக சொன்னார்கள்.
ஆங்கிலேயர் தன் முகத்தை பார்க்காத வண்ணம் முகத்தை கட்டிக் கொண்டும், ஆங்கிலேயரின் சபையில் தன் முதுகை காட்டிய வாரு நின்றிருந்த போது, கலெக்டர் "அந்த பிரச்சனைக்குரிய இடம் குறித்து உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்" என கேட்டார்.
"நான் சிறுவனாக இருந்த போது அந்த இடத்தை இந்து சகோதரர்கள் தான் பயன்படுத்தி வந்தார்கள்; அவர்களின் அனுபவ பாத்தியத்தில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள்.
அங்கிருந்த இந்துக்கள் அனைவரும் அவரை தம் தோளில் தூக்கி ஆரவாரம் செய்தார்கள். ஒரு முஸ்லிமின் வாக்குமூலம் இந்துக்களுக்கு சாதகமாக சொல்லப்பட்டதை நினைத்து சிலர் செய்வதறியாது ஸ்தம்பித்து போய் சிலையாக நின்றிருந்தார்கள். பலரும் பாராட்டினார்கள்.
அதற்கு அவர்கள், "என் மார்க்கம் உண்மையைப் பேசும்படி சொல்லி இருக்கிறது; எந்த நிலையிலும் உண்மையவே பேசுவேன் என உறுதிமொழி எடுத்திருக்கிறேன்; எனவே நான் என் கடமையை தான் செய்தேன்" என தாழ்மையாகக் கூறினார்கள்.
இவர்களின் நேர்மையை கண்ட சில இந்துக்கள் அதே இடத்தில் கலிமாவைச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்கள். புதிய முஸ்லிம்களின் கரம் பிடித்து இல்லம் சென்றார்கள்.
அல்லாஹ் மற்றும் ரசூலின் சொற்களுக்கு கட்டுப்பட்டு உண்மையாக வாழ்வோரின் வார்த்தைக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது. அந்த வார்த்தை தான் சிலரை இஸ்லாத்தை இணைத்து இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
எனவே உண்மையை பேசிடவும், உண்மைகளை செய்திடவுமே உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் !
Comments
Post a Comment