ஆதம் (அலை) வாழ்வியலில் ஆன்மிக நெறிகள்

ஆதம் (அலை) வாழ்வியலில் 
ஆன்மிக நெறிகள்
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு பூமியில் 18000 உயிரினங்கள் மிகப்பெரிய தோற்றத்தில் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் ஜின். அதன் சந்ததியில் வந்தவன் தான் இப்லீஸ்.

சுமார் 6,36,000 ஆண்டுகள் இப்லீஸ் இறைவனை வணங்கி வந்தான். அதனால் அனைத்து வானவர்களும் அவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள். வானவர்கள் அனைவருக்கும் அவன் பேராசனாக இருந்தான்.

இந்நிலையில் தான் இறைவன் தன் கலீஃபா - பிரதிநிதியாக ஆதம் (அலை) அவர்களை படைக்க வேண்டும் என உத்தேசித்து வானவர்களை அழைத்தான்.

"வானவர்களே! ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை மண்ணினால் உருவாக்க வேண்டும்; அதற்காக பூமியில் உள்ள மிருதுவான, கெட்டியான, கருப்பு மற்றும் மஞ்சள் நிற மண்ணைக் கொண்டு வந்து தண்ணீர் விட்டு பிசைந்து மனித உருவத்தில் உருவாக்க வேண்டும்; அதை விரைந்து செய்து முடியுங்கள்.

அவர் படைக்கப்பட்டு உயிர் பெற்று எழுந்து அமர்ந்ததும் அவருக்கு நீங்கள் ஸஜிதா  - மரியாதை செலுத்த வேண்டும்" என்று கூறினான்.

இச்செய்தி இப்லீஸை சென்றடைந்தது. அவன் மிகவும் கவலைப்பட்டான். வானவர்களை ஆதம் (அலை) அவர்களுக்கு எதிராகத் தூண்டினான். 

ஆதம் (அலை) அவர்களின் படைப்பு நிறுத்தப்பட வேண்டும் என்று பெரும் முயற்சி செய்தான்.

ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை செய்ய தேவையான மண்ணை இஸ்ராயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்தார்கள். மீகாயில் (அலை) அவர்கள் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். 

அவற்றைக் கொண்டு ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பொதுவான மலக்குமார்கள் செய்து வைத்தார்கள்.

இஜ்ராயீல் (அலை) அவர்கள் அதன் மீது நெருப்பு - உஷ்ணத்தை பொழிந்தார்கள். பின்னர் இஸ்ராஃபீல் (அலை) அவர்கள் காற்று வீசச் செய்து அதை ஆற வைத்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் அந்த உருவ தோற்றத்தின் மீது நூர் ஒளியையும் பொலிவையும் அழகையும் தூவினார்கள். 

வின்னர் அதன் மீது சுமார் 2000 வருடங்கள் மழை பொழிந்தது. அதில் அந்த மண் உறுதி தன்மையை பெற்றது. 

வானவர்கள் ஆதம் (அலை) அவர்களின் உடல் அமைப்பை சிறப்பாக செய்திருந்தாலும் முகத்தை செவ்வையாக செய்து முடிக்கவில்லை. அவர்களுக்கு செய்ய தெரியவில்லை என்றே சொல்லலாம்.

"இறைவா! நாங்கள் மிகவும் சிரமப்பட்டு ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை செய்தோம். ஆனால் அவரின் முகத்தை லட்சணமாக உருவாக்க இயலவில்லை" என்று கூறினார்கள்.

"மனிதனைப் படைப்பதில் உங்களுக்கு தான் உடன்பாடு இல்லையே; நீங்கள் எப்படி அவனை அழகு தோற்றத்தில் உருவாக்குவீர்கள்; சரி சென்று வாருங்கள் அவனை நானே உருவாக்குகிறேன்" என்று சொல்லிவிட்டு கழுத்து வரை இருந்த உருவ அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு தலை பாகத்தை இறைவன் தனியாக எடுத்து வைத்து விட்டான். அதாவது வெறும் முண்டமாக உடல் இருந்தது.

அதன் மீது இறைவன் தொடர்ந்து மழையை பொழிய செய்தான் அது மேலும் வலுப்பெற்றது. 

அதே நேரம் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறுதி மனிதர் வரை உள்ள அனைத்து ஆன்மாக்களையும் படைத்து ஆலமுல் அருவாஹ் எனும் ஆன்மாக்கள் மட்டும் வாழும் தளத்தில் விட்டிருந்தான். 

இது ஆதம் (அலை) அவர்கள்  படைக்கப்படுவதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பே நடந்ததது.

ஆதம் (அலை) அவர்களின் தோற்றம் பொம்மையாகவே இருந்த 70 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அல்லாஹ் தலை பாகத்தை அழகு தோற்றத்தில் செய்து முடித்தான். பின்னர் ஆதமின் உடலில் ஆதமின் ஆன்மாவை நுழையுமாறு கூறினான்.

அது உள்ளே நுழைந்துப் பார்த்தது. உள்புறம் இருட்டாக இருந்ததால் பயந்து போய் வெளியே வந்துவிட்டது. பின்னர் அல்லாஹ் அந்த ரூஹ்  ஆன்மாவைப் பெற்று தானே உள்ளே புகுத்தினான். அது நவ துவாரங்கள் வழியாக உள்ளே சென்று வெளியே வந்தது. 

அது எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் இரத்தம், சதை, எலும்பு ஆகியன உருவானது. அன்று அவர்களின் உயரம் 60 அடியாக இருந்தது.


*செல்லப்பிள்ளை இப்லீஸ்*
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்பு வரை இப்லீஸ் இந்த அண்டத்தில் செல்ல பிள்ளையாக இருந்தான்.

அவனையும் தாண்டிய ஒரு இனத்தை இறைவன் படைக்கப் போவதாக சொன்ன பிறகு அதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஜீரணிக்க இயலவில்லை. 

இறைவன் நம்மை தானே கலீஃபா -  பிரதிநிதியாக உருவாக்க வேண்டும்? நம்மை விட்டுவிட்டு வேறு ஒருவரை உருவாக்குகிறானே என்று பொறாமை பட்டு, மனிதனை  படைப்பதில் குளறுபடிகளை உண்டு பண்ண நினைத்து வானவர்களிடம், மனிதனைப் பற்றி தவறாக எடுத்துச் சொன்னான். 

ஏனென்றால் வானவர்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை. சொன்ன வேலையை மட்டுமே செய்வார்கள். ஆனால் இப்லீஸிற்கு சிந்திக்கும் திறன் இருந்தது. அதனால் அவன் மனித இனத்தைக் குறித்து தவறாக சொன்னான். அதையும் வானவர்கள் நம்பினார்கள்.

பின்னர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதை விரும்பாத இப்லீஸ் அவரை எதிர்த்தான். அவர் குறித்து இறைவன் கூறிய கூற்றையும் எதிர்த்தான்.

அதனால் இப்லீஸிற்கு பொறாமை ஏற்பட்டது. தான் இருக்க வேண்டிய இடத்தில் மனிதன் வந்து விட்டானே என்கிற கடுப்பில் மனித இனத்தையே வெறுத்தான். 

அவர்களை இறைவனுக்கு எதிராக செயல்பட தூண்ட வேண்டும் என்று எண்ணி இன்றுவரை செயல்பட்டு வருகிறான் . அவனுக்கு நண்பனாகி விடாதீர்கள்.........

*கலீஃபா - பிரதிநிதி என்பது ஒரு பதவி*

இறைவன் படைத்தப் பேரண்டத்தில் பல கோடிக்கணக்கான உயிரினங்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான். அவற்றில் யாருக்கும் கலிஃபா என்கிற பதவியை  கொடுக்கவில்லை; மனிதனைத் தவிர. 

ஆனால் முதல் மனிதன் படைக்கப்படுவதற்கு  முன்பே சுமார் 18,000 உயிரினங்கள் படைக்கப்பட்டு இருந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றது. 

(ஒரே சாயலில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரு உயிராகவே எண்ணப்பட்டுள்ளது. உதாரணமாக கொக்கு. இவை பல நூறு வடிவங்களில் இருக்கின்றன.)

அறிவியல் ஒரு படி மேலேச் சென்று மனிதன் உருவாகுவதற்கு முன்பே இருந்த உயிரினங்கள் என பல லட்ச உயிரினங்களை குறிப்பிடுகின்றது.

எனவே மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே இருந்த எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஒரு பதவி முதல் மனிதன் படைக்கப்பட்டதும் அவனுக்கு கொடுத்து அல்லாஹ் அலங்கரித்த போது அதை அன்றிருந்த ஒரே அறிவுள்ள ஜீவன் இப்லீஸ் கடுமையாக எதிர்த்தான்.

எனவே முதல் மனிதர் தோன்றிய உடனேயே பதவி சண்டை வந்துவிட்டது.  அந்தச் சண்டையில் மனிதனுக்கு பதவி கிடைத்து வெற்றி வாய்ப்பை பெற்று விட்டார். 

"மனிதனுக்கும் இபிலீஷ் ஆகிய எனக்கும் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோ அதே விஷயத்தைக் கொண்டு இந்த மனித இனத்தை நான் துண்டாடுகிறேன்" என்று சத்தியம் செய்து இருக்கிறான்.

மேலும் மனிதர்களுக்கிடையே பதவி மோகங்களை உண்டாக்கி வருகிறான். அதைப் புரிந்து கொள்ளாத மனிதன் பதவிக்காக கொலை செய்யவும் எதையும் செய்யவும் தயாராகிறான்.

கலீஃபா என்பது ஒரு பதவி. இன்றும் ஆன்மீகப் பாட்டையில் பயணிக்கும் தரீக்காவினர் தம் கைதேர்ந்த சீடர்களுக்கு 'கலீஃபா' எனும் அந்தஸ்தை கொடுத்து கௌரவிப்பது வழக்கம்.

கடந்த 1450 ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றில் எவ்வளவோ இஸ்லாமியர்கள் பெரும் பதவிகளை வகித்திருந்தாலும் நான்கு கலீஃபாகளின் பதவியே இன்றும் இஸ்லாமியர்களால் முதன்மைப் படுத்தப்பட்டு வருகிறது. அதுவே உயர்ந்த பதவியாகவும் மதிப்பிடப்படுகிறது.

ஆன்மீகப் பாட்டையில் பயணித்து  கலீஃபாவாக ஆக முயற்சி செய்யுங்கள். 

*எங்க அம்மா மாதிரி யாரும் சமைக்க முடியாது*

இந்த சொல்லாடலை சொல்லாத மனிதர்கள் யாருமே இல்லை.

ஒவ்வொருவரும் முதன் முதலில் தாயின் கைவண்ணத்தில் சமைக்கப்பட்ட உணவை சுவைத்து சாப்பிட்டதாலும், அந்த முதல் சுவை நாவில் ஒட்டிக்கொண்டதாலும், நெஞ்சில் நினைவுகளாக நீடித்திருப்பதாலும் எல்லோரும் இவ்வாறு சொல்லுகிறார்கள்.

இவ்வாறு சொல்வதற்கு காரணம் தாய் பாசமா? அல்லது தாயின் கைவண்ணத்தில் உருவான உணவு தானா என்கிற கேள்விக்கு விடை சொல்ல முடியாதவர்களாகவே இன்றும் ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள்.

இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று ஒரு தகவலைக் கூறுகிறேன் கேளுங்கள்.

உலகத்தில் தாய், தந்தை இல்லாத மனிதர்கள் என்று சொன்னால், அது ஆதம் - ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களே ஆவார்கள்.

ஆதம் (அலை) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது, முதன் முதலில் சொர்க்கத்தில் சுவைத்த கனிகளை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை மேலிட்டது. 

ஆனால், அற்பமான இந்த ஆசையை அல்லாஹ்விடத்தில் சொல்ல  வெட்கப்பட்டார்கள். அவர்களின் உள்ளத்தில் இந்த ஆசை நீண்ட நாட்கள் குடி கொண்டிருந்தது.

மரணப் படுக்கை, முதுமை, நோய் போன்ற காரணங்களால்  அவதியுற்று வந்த ஆதம் (அலை) அவர்களின் ஆன்மாவை கைப்பற்றுவதற்காக அல்லாஹ் வானவர்களின்  குழுவை அனுப்பி வைத்தான்.

இஸ்ராஃபீல் (அலை) அவர்களைத் தவிர முதன்மையான மூன்று வானவர்களும் மற்றும் சில வானவர்களும் ஆதம் (அலை) அவர்களின் வீட்டிற்குள் வந்தார்கள். வரும்பொழுது சொர்கத்துக் கனிகள் பலவற்றை கொண்டு வந்திருந்தார்கள்.

அப்பொழுது வீட்டிற்குள் இருந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஹவ்வா (அலை) அவர்கள் என அனைவரையும் வெளியே இருக்கும் படி செய்துவிட்டு, ஷீத் (அலை) அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

மனம் கமலும் சொர்க்கத்து கனிகளை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அறுத்து சின்னச் சின்ன துண்டுகளாக எடுத்து அவற்றை ஆதம் (அலை) அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். 

அதை அவர்கள் சாப்பிடும் போது சொர்க்கத்தில் இருப்பது போலவும், எந்த சிரமங்களும் இல்லாமல்  சொர்க்கத்தில் சுற்றித் திரிவது போலவும் உணர்ந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் அந்த நாள் நிலையை அடைந்தது. 

முதலில் பார்த்தது, முதலில் சுவைத்தது, முதலில் பேசியது, முதலில் வியந்தது  போன்ற பழைய நினைவுகளை மனம் அசை போட்டது. அவர்களின் உடல் வானவர்கள் இடையே இருந்தாலும், உள்ளம் வானுலகை வட்டமிட்டு கொண்டிருந்தது.

அச்சமயம் இஜ்ராயீல் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு மலரை ஆதம் (அலை) அவர்களின் கைகளில் கொடுத்து நுகரச் சொன்னார்கள். 

ஆதம் (அலை) அவர்களும் நுகர்ந்தார்கள். அந்த வாசனை மிகவும் இன்பகரமாக இருந்தது. அதை தொடர்ந்து நுகர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் இயற்கை எய்தினார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நம் வாழ்வில் முதன் முதலில் அனுபவித்த முதல் பயணம், முதல் உணர்வு, முதல் உணவு போன்றவை நம் இதயத்தை விட்டும் நீங்காது.

அந்த வகையில் தான் ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் சொர்க்கத்தில்  சுவைத்த கனிகளை இறுதி காலங்களில் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறான்.

ஆனால், நம்மில் அதிகமானவர்களுக்கு தம் இறுதி காலத்தில் தாயின் கைகளால் உணவருந்த வேண்டுமென ஆசைப்பட்டாலும் அன்று தாய் இருக்கு மாட்டாள். நமது ஆசை நிறைவேறாமலே கழிந்து விடும். 

அந்த வகையில் ஆதம் (அலை) அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம்.

உங்களில் யார் யார் தாயைப் பெற்று இருக்கிறார்களோ அவர்கள், அடிக்கடி அவளின் கரங்களால் சாப்பிடுங்கள்.

அவளுக்கு நீங்கள் சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் சந்தோஷமாக இருக்காது. 

சாப்பிடும் போதெல்லாம் "உன் சமையல் மாதிரி வராதும்மா" என்று சொல்லி அவளை ஆனந்தப் படுத்துங்கள்.

*பூமியில் தோன்றிய முதல் பெண் புர்காவில் இருந்தார்?*


ஆதம் (அலை) அவர்களின் உருவ பொம்மையை பூமியின் 2000 வருடங்களுக்கு மேலாக படைக்கப்பட்டு மழையிலும் வெயிலிலும்  கிடந்தது. அந்த தோற்றத்தை தினம் தினம் வானவர்களும், இப்லீஸ் இனத்தைச் சேர்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஹவ்வா (அலை) அவர்கள் படைக்கப்பட்ட போதும் படைக்கப்பட்ட பிறகும் அல்லாஹ்வைத் தவிர சொர்க்கத்தில் வேறு யாரும் பார்க்கவில்லை.

ஆம்! ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருமே இல்லாத சொர்க்கத்திற்குள் தனியாக , மறைவாகப் படைக்கப்பட்டார்கள். அப்பொழுது அவரது கணவர் உடன் இருந்தார்.

அந்நியனான ஷைத்தான் ஒருமுறைதான் ஹவ்வாவை திரையின்றிப் பார்த்தான். அத்துடன் ஆதம் ஹவ்வா (அலை) இருவரும் சொர்க்கத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.

பெண்கள் பர்தா -  திரைக்குள் இருக்க வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. அப்படித்தான் அல்லாஹ் திரை மறைவில் அதாவது சொர்க்கத்தில் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான்.

ஒரு கவிஞர் பாடுகிறார். 

ஆதமை அல்லாஹ் திரையின்றி படைத்தான். 

ஹவ்வாவை திரைக்குள் வைத்து படைத்தான்.

அல்லாஹ்வும் கூட திரைக்குள் தான் இருக்கின்றான். 

ஆமாம்! அவனை யாரும் பார்த்ததில்லையே! 

அவன் தன்னை யாருக்கும் காட்டியதும் இல்லையே! 

அப்படி என்றால் அவனும் திரைக்குள் தானே இருக்கிறான்?.....

*ஆதம் (அலை) அவர்களின் இறுதி உபதேசம்*
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_

ஆதம் (அலை) அவர்கள் மரண தருவாயில் இருந்த போது மகன் ஷீத் (அலை) அவர்களை அழைத்து கூறினார்கள். 

மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களை மறந்து விடாதே! 

அவர்களின் பெயர் தாங்கிய ஸலவாத்தை தினமும் ஓதிக் கொண்டிரு! 

அவர்களின் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திரு! 

அவர்களின் மீது ஈமான் - நம்பிக்கை கொண்டிரு! 

அவர்களால்தான் என் சந்ததியினர் அனைவருக்கும் மறுமை நாளில் பாவமன்னிப்பு கிடைக்கும்.! 

அவர்கள்தான்
இறுதி நபி! அவர்கள் என் சந்ததியிலிருந்து தோன்றுவார்கள்! 

அவர்கள் அனைத்து மனித ஆன்மாக்களின் தந்தை! 

நான் அவர்களுடைய உடலின் தந்தை மட்டுமே!

நூல் : தஸவ்வுஃப் ரஹ்மானீ

*இரண்டு பெண்களிடம் இப்லீஸ் தோன்றினான்.*
==============

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு பெண்களிடம் இப்லீஸ் தோன்றினான். அதில் ஒருவரிடம் இப்லீஸ் வெற்றி பெற்றான்.  மற்றொருவரிடம்  தோல்வியுற்றான்.

ஹவ்வா (அலை) அவர்களைச் சந்தித்து, "இந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நிரந்தரமாக சொர்க்கத்தில் தங்கி விடலாம்" என்ற ஆசை வார்த்தையை சொன்ன போது அதை அவர் நம்பி அவன் சொற்படி நடந்து கொண்டார். அதனால் அவர் மிகப் பெரும் நஷ்டத்தை அடைந்தார்.

மற்றொரு சமயம் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிட அழைத்துச் சென்ற போது ஹாஜரா அம்மையாரிடம் ஷைத்தான் தோன்றி, "உங்கள் கணவர் நீங்கள் பெற்றெடுத்து, ஆசை ஆசையாய் வளர்த்த மகனை அறுத்து பலியிட அழைத்துச் செல்கிறார்; நீங்கள் கேட்க மாட்டீர்களா?" என்று தூண்டினான்.  

ஹாஜரா அம்மா அவர்கள் "நீ யார் என்று எனக்குத் தெரியும் தூரப்போ -  அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்று சொல்லி அவனை விரட்டினார்கள்.

ஹவ்வா (அலை) அவர்களை விட ஹாஜரா (அலை) அவர்கள் சிறந்தவர்கள் என்று நீங்கள் கருதி விடாதீர்கள்.

ஹாஜரா (அலை) அவர்கள் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாலே வெற்றி பெற்றார்கள்.  

ஆதம் - ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் வரலாற்றுச் சிந்தனைகள் உங்களின் உள்ளத்தை பக்குவப்படுத்தவே எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. 

*உங்கள் உள்ளத்தை சரி செய்து கொள்ளுங்கள்*


ஆன்மீக வாழ்வை வாழ முயற்சிப்பவர்கள் மனதை அடக்கி ஆளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இல்லையென்றால் உள்ளம் உடல் மீது ஆதிக்கம் செலுத்தும். உடல் உள்ளத்திற்கு அடிபணிந்து நடக்கும். இந்நிலையில் இருப்பவர்கள் ஆன்மீக வழியில் தொடர்ந்து பயணிக்க இயலாது.

எனவே உறுதியான உள்ளத்தை பெற்றிட வேண்டும். அதற்காக இறைவழிபாடுகளும் திக்ருகளும் மேற்கொள்ள வேண்டும்.

நிலையான, தூய்மையான உள்ளத்தைப் பெறுகிறவர் மறைவான விஷயங்களை அறிவார்.

மேலும் உறுதியான உள்ளத்தைப் பெற்றவரின் பார்வை சிங்கத்தின் மீது பட்டால், அது அடி பணிந்திட வேண்டும். 

ஒரு வியாதி உள்ளவரின் மீது பட்டால், அவர் குணமாகிட வேண்டும். 

வானத்தின் பக்கம் பார்த்தால், மழை பொழிந்திட வேண்டும். 

தவறான வழியில் செல்கிறவனை பார்த்தால் அவன் நேர்வழி பெற்றிட வேண்டும். 

ஒருவரின்  உள்ளத்தை பார்த்து அவரின் குறைகளை நீக்கிட வேண்டும். 

இந்த நிலையை அடைய உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்த வேண்டும்.

அதேசமயம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

எனவே ஆன்மீகத்தில் உச்சநிலையை அடைய வேண்டுமானால், உலகத்தின் மீதுள்ள பற்றை விட்டொழிக்க வேண்டும்.

ஆன்மீகத்தின் உச்சநிலையை அடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

حب الدنيا رأس كل خطيئة

ஹசன் பஸரீ (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை நேசிப்பது, மற்ற அனைத்து குற்றங்களை விடவும் முதன்மையான குற்றமாகக் கருதப்படுகிறது. 

நூல் : பைஹகி

ترك الدنيا راس كل عباده

உலக ஆசையை துறப்பது, அனைத்து இறைவழிபாடுகளிலும் முதன்மையானது.

நூல்: தந்கிரதுல் முத்தகீன் 

الدنيا جيفة طلابها كلاب

அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 'உலகம்' பிணத்திற்குச் சமமானது. அதைத் தேடுவோர் நாய்கள் ஆவர். 

நூல் : அபு நயீம்

طالب الدنيا مخنث وطالب المولى مذكر

உலகை தேடுகிறவன் பெட்டையன் ஆவான். அல்லாஹ்வை தேடுகிறவன் ஆண் மகனாவான்.

நூல்: தந்கிரதுல் முத்தகீன் 

தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல் பூமியில் வாழ்ந்தாலும் அதன் மீதுள்ள பற்று உள்ளத்தில் ஒட்டாமல் வாழ்ந்திடுவோம்.

சூஃபியாக்கள் கூறுகிறார்கள். "ஒரு முறை உள்ளத்தினுள் உலகத்தின் மீதான பற்று வந்துவிட்டால், அது விலகிச் செல்ல நாற்பது இரவுகள் ஆகும்.  

நூல் : மிஸ்பாஹுல் ஹயாத் & அஸ்ராரே ரஹ்மானீ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்