நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?
நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?
•~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~•
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைவரும் மரணித்தார்கள் என்பதே உண்மை. இதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை என்பதே உண்மை.
பொதுவாகவே அரபியர்கள் தமக்கு ஆண் பிள்ளைகள் இருப்பது பெருமை என்றும், பலம் என்றும், சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தித் தரும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதில் உறுதியாகவும் இருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லாமல், சமூகத்தில் அந்தஸ்தையும், மரியாதையையும் வழங்கி அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கின்றான்.
பொதுவாகவே அல்லாஹ்வின் வல்லமை என்னவென்றால், எதை மனிதர்கள் மதிக்கிறார்களோ அது இல்லாமலே அல்லாஹ் மதிப்பையோ அந்த தேவையையோ நிறைவேற்றி விடுவான்.
உதாரணமாக கன்தக் - அகல் யுத்தத்தில் இரண்டு மூன்று நபர்கள் சாப்பிடும் அளவிற்கு இருந்த பாதாம் பிஸ்தா பேரித்தம் பழம் போன்றவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் கையை வைத்து துஆ செய்த பிறகு அந்த துணியில் கிடந்த nuts - நட்ஸ்களை பல நூறு பேர் சாப்பிட்டார்கள்.
அதைப்போல் ஜாபிர் (ரலி) அவர்கள் ஐந்தாறு பேருக்கு சமைத்த உணவில் நபி (ஸல்) அவர்கள் துஆ செய்த பிறகு ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமான உணவை ஒரு ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு அதில் விசாலத்தை வழங்கியது அல்லாஹ் ஆவான்.
ஆயிரம் நபர்களுக்குத் தேவையான உணவை தயார் செய்து வைத்துக் கொண்டு விருந்துக்கு அழைப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.
ஐந்தாறு நபர்களுக்கான உணவை வைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கானவர்களை அழைக்க சொல்பவன் அல்லாஹ். இதுதான் இறைவனுடைய ஸ்டைல் - நடைமுறை.
அல்லாஹ் பின்புறத்தில் இருந்து உதவி செய்து, நபி (ஸல்) அவர்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டினான்.
பொதுவாக ஒரு தந்தையின் கருத்தை, சீரான ஆட்சி முறையை மகன்கள் தான் எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மகன்கள் இல்லாமலே நபித் தோழர்கள் அதைச் சுமந்து, உலகம் முழுவதும் சென்றடையச் செய்தார்கள்.
பனு இஸ்ரவேலர்களில் தோன்றிய நபிமார்களின் மகன்கள் நபியாக இருந்திருக்கிறார்கள்.
இப்ராஹிம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) ஒரு நபி ஆவார். யாகூப் (அலை) அவர்களின் மகன் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். தாவூத் (அலை) அவர்களின் மகன் சுலைமான் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். ஜகரியா (அலை) அவர்களின் மகன் யஹ்யா ஒரு நபி ஆவார்.
1. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என இறைவன் முத்திரையிட்டு முடிவு செய்து விட்டதால், அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.
அதேநேரம் நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக அல்லாஹ் அறிவித்ததால் அவர்களுக்கு மகன் இருந்தால் மக்கள் நபியாக அறிவிக்கவோ, மன்னராட்சி முறையில் மன்னராக ஆக்கவோ சாத்தியக் கூறுகள் உண்டு என்பதால் அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் வாரிசு இல்லாமல் செய்துவிட்டான் என முஹம்மது ஸப்ரீ அப்துல் ரஹீம் மக்கீ அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் இரண்டு ஹதீஸ்களைப் பாருங்கள்.
عن الصحابي الجليل أنس بن مالك -رضي الله عنه- أنّه قال: (لو عاش إبراهيمُ لكان صدِّيقًا نبيًّا) رواه الألباني، في صحيح الجامع ومسند احمد .
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹிம் (ரலி) அவர்கள் மட்டும் இருந்திருந்தால் அவர் உண்மையான நபியாக இருந்திருப்பார்.
நூல் : முஸ்னது அஹ்மத்
عن إسماعيل بن أبي خالد قال: (قُلتُ لِابْنِ أبِي أوْفَى: رَأَيْتَ إبْرَاهِيمَ ابْنَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ؟ قالَ: مَاتَ صَغِيرًا، ولو قُضِيَ أنْ يَكونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَبِيٌّ عَاشَ ابنُهُ، ولَكِنْ لا نَبِيَّ بَعْدَهُ). رواه البخاري
இஸ்மாயில் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நான் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் "நீங்கள் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்து இருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.
(நான் அவரைப் பார்த்திருக்கின்றேன்;) அவர் சிறு வயதில் மரணித்து விட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகனார் மட்டும் வாழ்ந்திருந்தால், அவர் நபியாக ஆகியிருப்பார்; ஆனாலும் நபிகளாருக்கு பிறகு நபித்துவம் என்பதே இல்லை.
நூல் : புகாரி
2. "பொதுவாகவே ஆண் பிள்ளைகள் தான் பெற்றோருக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்கி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது உலக நடைமுறை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள், தாம் வாழும் வரை எந்த பிள்ளைகளுடைய வருவாயையும் எதிர்பார்த்து இல்லை. அல்லாஹு ஒருவனையே நம்பி இருக்கின்றார் என்கிற கருத்தை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் குழந்தைகளை வழங்கவில்லை" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் விதமான ஒரு வசனத்தைப் பாருங்கள்.
قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى
உறவினர்கள் (என்னிடம்) அன்பாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு கூலி (பணம் காசு ) எதையும் நான் உங்களிடம் கேட்கவில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! 42 : 23
எனது குடும்பத்தினர் என் மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எனது குடும்பத்தினரிடம் எனக்கு இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி வந்தார்கள். அதையே அல்லாஹ் வசனமாக அருளி விட்டான்.
நபிகளாரின் இந்த வேண்டுகோளை ஏற்றுத்தான் ஹசன் ஹுசைன் (ரலி) அவர்கள் உட்பட வேறு யாரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
தன்னை நபி என்றும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அப்படிச் சொன்னால் மறுமை நாளில் நபிகளாரின் அன்பில் இருந்தும், ஷஃபாஅத்திலிருந்தும் தூரமாக்கப்படுவோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
3. "இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் அல்லாஹ் சோதித்தான்.
மேலும் நெருப்பு குன்றத்தில் எறியப்படுகிற நேரம் வரை அல்லாஹ் சோதித்தான்.
இப்படி ஒவ்வொரு நபியும் சோதனைகளுக்குள் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் ஆண் குழந்தைகள் இல்லாமல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் ஒரு ஹதீஸைப் பாருங்கள்.
عن سعد بن أبي وقاص -رضي الله عنه- أنّه قال: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ، فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ البَلَاءُ بِالعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ» رواه الترمذي
ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.
ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதீ - 2398
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், பல்வேறு வகையானத் துன்பங்களை வழங்கியது போன்றே ஆண் குழந்தை இல்லை என்கிற மிகப்பெரும் துன்பத்தையும், சோதனையையும் வழங்கினான். அவை அனைத்திலும் நபிகள் நாயகம் அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.
Comments
Post a Comment