உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் |->5

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்ச்சி : 5
=============|->

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)

உலக வரலாற்றை புரட்டிப் போட்ட உத்தமரின் முன்மாதிரி :
================================

மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித் திளைத்த அரபியர்கள், எவருடைய பேச்சையும் கேட்க முன்வராத மூடர்கள், தாம் வணங்கி வந்த வழிபாட்டு முறையை முற்றிலும் துறந்து, மற்றொருவரின் சொல்லை கேட்டு அவரைப் பின்பற்றி, அவர் கூறிய வழிபாட்டு முறையையும், வாழ்வியல் முறையையும் தமதாக்கி இருக்கிறார்கள்  என்றால் அந்த உத்தம நபியின் வாழ்க்கை முறை எவ்வளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்களின் சிறு பருவம் முதல் நடந்து கொண்ட விதம் என்று சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் வசீகரித்தது என்றால் அது  மிகையாகாது. 

நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே ‘அல் அமீன், அஸ்ஸாதிக்' என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுகத்தினரால் அடையாளம் காணப்பட்டவர் ஆவார்.

மேலும் முன்மாதிரி என்றால் ஒருவர், தான் வாழும் காலத்தில் இருந்த கலை, இலக்கியம், தலைமைத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து தான், "முன்மாதிரி மிக்க மனிதர்" என சொல்ல இயலும். 

அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும், இனி உலகம் உள்ளளவும் நபி (ஸல்) அவர்களே அனைத்துத்  துறையினருக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக முன்மாதிரி மிக்க மா மனிதராக அன்றே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை!

இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது முன்மாதிரியானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அதிசயத்திலும் அதிசயம்.

ஒட்டுமொத்த மனித இனத்திலும் தான் அனுப்பிய நபி குறித்து அல்லாஹ் அறிமுகப்படுத்தும் போது, "அவர் ஓர் அழகிய முன்மாதிரி" என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறான் என்றால் அல்லாஹுவின் நற்சான்றிதழை பெற்ற மாமனிதரின் மேன்மை குறித்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவு செய்யப்பட்டதில்லை. 

மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது.

அவர் வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும், அவர் வீட்டுக்கு வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே இங்கு பதிவாகி இருக்கின்றது. 

அவர் கூறிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகி இருக்கின்றது.

புகழ்மிக்க மனிதர்கள் அனைவரும் பேரரசுகளை நிறுவினார்கள். ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். இவை, அவர்கள் வாழும் காலத்திலேயே சிதைந்து விழுந்ததை கண்கூடாகக் கண்டார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள், அன்று மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்கள். 

வென்றெடுக்க முடியாத வழிப்பாட்டு தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மனித மனங்களையும் ஈர்த்து, அவற்றில் தமது கருத்துகளைப் பதித்தார்கள்.

மக்காவில் இருக்கும் போது எவ்வித ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார்களோ, அதே போன்று மதீனாவிலும் தாங்கள் அரசராய், எல்லாவித பொருள் வசதி, பணியாள் வசதி, இருப்பிட வசதி போன்றன இருந்தும் எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டார்கள்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்