ரமலான் ஒரு பொற்புதையல்


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் இறையச்சம் பெறுவதற்காக உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று, உங்கள் மீதும் (நோன்பு) கடமையாக்கப்பட்டுள்ளது. 2: 183

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் ஒரு சொல்லின் பொருளை விரிவாகக் காண்போம்.

كتب 
குதிப என்பதற்கும் فرض 
ஃபரள என்பதற்கும் 'கடமை' என்பதே பொருளாகும். ஆனாலும் 'ஃபரள' என்று சொல்வதை விட 'குதிப' என்று சொல்வதில் கனம் அதிகமாக இருக்கிறது.

 அதாவது 'ஃபரள' என்பதற்கு கடமை என ஒரு முறை பொருள் செய்தால்,
 'குதிப' என்பதற்கு ஐம்பது முறை கடமை கடமை என எழுதி பார்க்கும் பொழுது அதன் கணமும், அதன் உறுதி தன்மையும், அதன் அவசியமும் எப்படி நமக்கு அதிகமாக தெரியுமோ அது போல தான் குதிப என்கிற வாசகத்தின் பொருள். 

அதாவது நோன்பு , இதரக் கடமைகளை விட மிக மிக அவசியமானது என்பதை வலியுறுத்தவே அல்லாஹ் 'குதிப' என்கிற சொல்லை பயன்படுத்தி இருக்கிறான்.

"நோன்பு கடமை" என்கிற ஒரு விஷயத்தை இந்த ஒரு வசனத்தில் இரண்டு முறை அல்லாஹ் சொல்கிறான்.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ
இறைநம்பிக்கைகொண்டவர்களே!  உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ

உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று (உங்கள் மீதும் கடமை).

எனவே ஒரு வசனத்தில் நோன்பு கடமை என்கிற சட்டத்தை இரண்டு முறை சொல்லி இறைவன் நோன்பை வலியுறுத்துகிறான்.

தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை இறைவன் உங்களுக்கு முன்னிருந்தோர்கள் மீது கடமையாக்கியது போன்று உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என எங்கும் குறிப்பிடவில்லை. 
ஆனால் நோன்பை மட்டுமே இவ்வாறு குறிப்பிடுகிறான். 

எனவே ஆதம் (அலை) அவர்கள் முதற்கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் வரை இடைப்பட்ட அனைத்து நபிமார்களும் நோன்பு வைத்திருக்கிறார்கள் என இறைவன் இந்த வசனத்தின் மூலம் சொல்கிறான். 

இந்தத் தகவல், நோன்பின் கனத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. 

மேலும் இந்த வசனம் இன்னொரு கருத்தையும் சொல்கிறது. "நோன்பு நோற்பது கடினமாக இருந்தாலும், எல்லா சமுதாயமும் நோன்பு நோற்று இருக்கிறது. அவர்களெல்லாம் அதைக் கடுமையாகக் கருதவில்லை. எனவே நீங்களும் அவ்வாறு கருதாமல் நோன்பு வையுங்கள்" என சொல்கிறது.

ஆதம் (அலை) அவர்கள் மூன்று நாட்களும், நூஹ் அலை அவர்கள் சில தினங்களும், தாவூத் அலை அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளும், மூஸா (அலை) அவர்கள் வருடத்தில் நாற்பது நாட்களும், ஜகரியா, எஹ்யா, ஈஸா (அலை) அவர்கள் சில நாட்களும் நோன்பு நோற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*நோன்புக்கு முதலிடம் :*

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; பனீ கத்ரா  என்கிற யூத கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் மற்றும் அபா ஸலமா ஆகிய இரு சகோதரர்கள் ஒரே நேரத்தில் நபிகளாரின் சபைக்கு வந்து இஸ்லாத்தை ஏற்றார்கள். 

அவ்விருவருக்கும் உணவளிக்க ஆசைப்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தம் அனைத்து மனைவியரின் இல்லங்களுக்கும் "ஏதேனும் உணவு இருக்கிறதா?" என்று கேட்டு அனுப்பினார்கள். அனைத்து மனைவியரும், "சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை" என்று சொல்லி அனுப்பினார்கள்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தம் எதிரே அமர்ந்திருந்த ஸஹாபாக்களை நோக்கி, "இவ்விருவருக்கும் உணவளிக்க உங்களில் எவரேனும் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார்கள். 

தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள். 

பொதுவாகவே அந்நாட்களில் புதிதாக எவரேனும் இஸ்லாத்திற்கு வந்தால் அவர்களுக்கு உணவளிக்கிற பொறுப்பை ஸஹாபாக்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். 

புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அந்தந்த ஸஹாபாக்களின் இல்லங்களில் சாப்பிட்டுக் கொண்டு மஸ்ஜிதுந் நபவியில் திண்ணை தோழர்கள் மூலம் நடைபெறும் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொண்டு மார்க்கம் பயில்வார்கள். பள்ளிவாசலிலேயே தங்கிக் கொள்வார்கள். சில தினங்களோ அல்லது சில மாதமோ மார்க்கத்தைக் கற்றுக்கொண்டு தம் ஊருக்குச் சென்று விடுவார்கள். பெண்களாக இருந்தால் அவர்களை ஸஹாபாக்கள் தம் இல்லங்களிலேயே தங்க வைத்துக்கொண்டு உணவளித்து மார்க்கம் கற்பிப்பார்கள்.

இந்நிலையில் அவ்விருவரும் ஒரு சிறிய படையெடுப்பில் கலந்து கொண்டார்கள். இஸ்லாமான ஒரு வார காலத்திற்குள் அப்துல்லாஹ் என்பவர் ஷஹீத் - வீர மரணம் அடைந்தார். 

மற்றொருவரான அபா ஸலமா அவர்கள் இஸ்லாமிய பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஸலமா என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதன் காரணமாகவே அவருக்கு அபா ஸலமா என பெயர் வந்தது. 

இந்நிலையில் அபா ஸலமா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடம் கழித்து இயற்கையாக இறந்துப் போனார். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.  

"ஒரு நாள் இரவில் சொர்க்கத்தை நான் கனவில் கண்டேன். அப்போது இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரே அவர், ஷஹீத் - போரில் வீர மரணம் அடைந்த வரைவிட சொர்க்கத்தில் முந்திச் செல்வதாகக் கண்டேன். எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. (ஷஹீது ஆகிறவர்கள் கேள்வி கணக்கு இல்லாமல் முதலில் சொர்க்கம் செல்லுவார்கள் என்கிற நபிகளாரின் சொல்லுக்கு எதிராக இங்கே நடைபெறுகிறதே என்று ஆச்சரியப்பட்டு) நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்ததேன்.  

அப்போது நபி (ஸல்) அவர்கள், "இரண்டாவதாத இயற்கையாக இறந்தாரோ அவரைவிட , முந்தியவருக்கு ஒரு ரமழான் மாதம் முழுமையாகக் கிடைத்துள்ளது. மேலும் அதில் ஆறாயிரம் ரக்அத்துகளைத் தொழுதுள்ளார், மேலும் ஒரு வருட தொழுகைகளை தொழுதுள்ளார்,  ( மேலும் ரமலான் மாத பகலில் நோன்பு நோற்று இருக்கிறார், ஒரு லைலத்துல் கதர் இரவையும் அடைந்திருக்கிறார்.) அதுதான் அவர் சொர்க்கத்திற்கு முந்தி செல்ல காரணம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

நூல் : முஸ்னது அஹ்மத், அல் பஸார். (புகாரி, முஸ்லிம் ஹதீஸ் மற்றும் விளக்க உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி)


*நீங்கள் விரைந்து நோன்பு துறப்பவரா?*

அபூஉமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருமுறை நான் என் குடும்பத்தினர் இடையே தூங்கிக் கொண்டிருந்தேன். 

இரண்டு மனிதர்கள் என்னிடத்தில் வந்து, என் இரு கைகளையும் அவர்களின் தோள்களின் மீது போட வைத்து கரடுமுரடான , உயரமான மலைக்கு அழைத்துச் சென்று என்னை ஏறச்சொன்னார்கள்.

"என்னால் ஏற இயலாது" என்றேன். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று கூறி என்னை மேலே அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது மலையின் நடுப்பகுதிக்குச் சென்றவுடன் கடுமையான ஓலம் கேட்டது. 

“இது என்ன சப்தம்”? என்றுக் கேட்டேன்? "இது நரகவாசிகளின் கூக்குரல்" என்று சொன்னார்கள். 

பிறகு சிறிது தூரம் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே சில மனிதர்களைப் பார்த்தேன். அவர்களின் கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார்கள். அவர்களின் வாய்கள் கிழிக்கப்பட்டு  இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. 

"இவர்கள் யார்?” எனக் கேட்டேன். இவர்கள் தம் நோன்பை (சரியான காரணமின்றி வேண்டுமென்றே) முறித்தவர்கள்" என்று கூறினார்கள். 

நூல் : ஹாகிம், இப்னு ஹிப்பான்

قَبْل تَحِلَّةِ صَوْمِهِمْ

இந்த ஹதீஸில் "கப்ல தஹில்லத ஸவ்மிஹிம்" என்கிற வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பொருள் " நோன்பு துறக்கும் நேரம் வருவதற்கு முன்னரே வேண்டுமென்றே விரைந்து நோன்பை துறப்பது" என்று பொருள் செய்திருக்கிறார்கள். 

நூல் : ஃபதஹுல் பாரி

எனவே மிகச் சரியான நேரத்தில் நோன்பை துறக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக வேண்டி அவசரப்பட்டு துறந்து மறுமையில் அவதிப் படாதீர்கள்.
*ஒரு கூறு கொய்யாப்பழம் போன்றது*

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான். நோன்பு எனக்குறியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து நன்மைகளுக்கு ஒப்பானது. 

நூல் :  புகாரி 

லைலத்துல் கதுர் என்கிற ஒரு இரவு, ஆயிரம் மாதங்களைப் போன்றது என இறைவன் சொல்வது போல, ரமலான் மாதத்தில் செய்யப்படுகிற ஒரு செயலுக்கான "ஒரு நன்மை" என்பது பத்து நன்மை முதல் 700 நன்மை வரை கிடைக்க இருக்கின்ற ஒரு நன்மையான செயலாகும்.

அதாவது ரமலான் மாதத்தில் இறைவன் ஒரு அடியானுடைய ஒரு செயலுக்கான நன்மையாக பத்து நன்மைகளை எழுதி இருந்தால், அது 100 நன்மை முதல் 7000 நன்மை வரை கிடைக்க வாய்ப்புள்ள ஓர் நற்செயலாகக் கருதப்படும்.

மேலும் ரமலான் மாதத்தில் ஒரு நன்மை என்று சொன்னாலே அது குறைந்தது பத்து நன்மையை உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரு கூறு கொய்யாப்பழத்தில் பத்து, பதினைந்து பழங்கள் இருப்பது போன்றது ரமலானின் ஒரு நன்மை என்பது.


*ரமலானில் ஒரு ஹஜ்*

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவர் நம்பிக்கையோடும்,
நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ அவருடையது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது" 

நூல் : புகாரி (38), முஸ்லிம் (1393)

ஒரு ஹஜ் அல்லது உம்ரா செய்தால் முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே! 

ஆனாலும் ஒரு ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளையும் முறையாக நோற்றாலும் கூட ஒரு மனிதன் முன் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது இந்த நபிமொழியின் விளக்கம்.

ஹஜ் செய்யாதவர்களுக்கு, ஹஜ் செய்ய இயலாதவர்களுக்கு, ஹஜ் செய்தால் அதிகபட்சமாக என்ன நன்மை கிடைக்குமோ அது நோன்பு நோற்பதில் கிடைத்து விடுவது பெரும் பாக்கியம் அல்லவா?

*உலகம் முழுவதற்கும் ஒரு யூனிபார்ம்*

உலகில் வாழும் சுமார் 200 கோடி இஸ்லாமியர்கள் தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பது பெரிய அதிசயம் இல்லையா?

உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களும் ஒரே நேரத்தில் ஒரு தொழுகையை தொழுவதில்லை. ஜகாத் வழங்குவதில்லை. ஆனால் உலகில் வாழும் எல்லா முஸ்லிம்களும் அவரவர் வீட்டில் இருந்தவாறு ஒரு நாள் முன் பின் என தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பதும், அது ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதும் பேரதிசயம் இல்லையா?

நான் ஒன்றை சொன்னால், நீங்கள் "இது அதிசயம் தான்" என்ற முடிவிற்கு வருவீர்கள்.

நீங்கள் நேபாளத்து இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "பசுபதிநாத்" என்று சொல்லுவார்கள்.

மகாராஷ்டிரா இந்துக்களிடம், "உங்கள்  இறைவன் யார்?" என்று கேட்டால், "கணேஷ்" என்று சொல்லுவார்கள்.

டெல்லியிலுள்ள இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "ராம்" என்று சொல்லுவார்கள்.

பீகார் இந்துக்களிடம், "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "சங்கர்" என்று சொல்லுவார்கள்.

பெங்கால் இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், "மா துர்காதேவி" என்று சொல்லுவார்கள்.

குஜராத் இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால் , "கிருஷ்ணர்” என்று சொல்லுவார்கள்.

தென்னிந்திய இந்துக்களிடம் "உங்கள் இறைவன் யார்?" என்று கேட்டால், எங்கள் இறைவன் "முருகன் - விநாயகர் - திருப்பதி பெருமாள்" என்று சொல்லுவார்கள்.

சத்தியமாக சொல்கிறேன். இந்த உலகில் எந்த இடத்திலும், எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் உள்ள எந்த முஸ்லிமிடமும், "உன் இறைவன் யார்" என்று கேட்டால், அவர்கள் அனைவரும் ஒரே ஒரு பதிலைத் தான் சொல்லுவார்கள். 

எங்கள் இறைவன் "அல்லாஹ் ஒருவனே" என்று!!!!

அது போலத்தான் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிற்கு நோன்பு நோற்பது பேரதிசெய்யும் இல்லையா? பேரதிசயம் தான்!

*பேசும் நோன்பு :*

عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: « الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ ، رواه مسند احمد

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு சொல்லும், "இறைவா! நான் இவ்வடியான் உணவு சாப்பிடுவதை விட்டும், பகலில் இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் . இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக! அல் குர்ஆன் சொல்லும். "நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன். 
எனவே, இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக!

 நூல் :  முஸ்னது அஹ்மத்

இந்த அண்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துச் செல்லும் அனைத்து ஜீவராசிகளும் பேசும் ஆற்றல் பெற்றது. ஒரே இடத்தில் உள்ள கல், மண், கண்ணாடி குடுவை, கள்ளிமரம் போன்ற எதுவும் பேசாது.

அதைப்போல் உலகத்தில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டு ஜீவராசிகளும் ஒரே மொழியைத் தான் பேசும். உதாரணமாக தமிழ்நாட்டு கோழியும், அசாம் மாநில கோழியும், அமெரிக்கா கோழியும் ஒரே மொழியில் தான் பேசும். 

இவ்வாறே உலகில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரே மொழியைத்தான் பேசும். 

அதேநேரம் ஒரு கோழியை சுற்றி உள்ள ஆடு, மாடு, குரங்கு, பறவைகள் என அவை ஒவ்வொன்றும் பேசுகிற மொழியவும் அந்தக் கோழி அறிந்திருக்கும்.

உலகத்தில் பேசுகிற ஆற்றல் பெற்ற எந்த உயிரினமும் மறுமை நாளில் பேசும் சக்தியைப் பெறாது. மனிதனின் நாவு இப்பொழுது பேசுகிறது. மனிதனின் கை, கால்கள் பேசுவதில்லை. ஆனால் மறுமை நாளில் மனிதனின் கை, கால்கள், நகம் உட்பட அனைத்தும் பேசும் ஆற்றல் பெற்றதாக இருக்கும்.  

மேலும் புத்தகம், கல், மண், பேனா போன்றவை இந்த உலகத்தில் பேசும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. ஆனால் மறுமை நாளில் இவற்றுக்கு பேசும் ஆற்றலை அல்லாஹ் வழங்குவான். 

அந்த வரிசையில் உள்ளதுதான் நோன்பும். குர்ஆனும். 
மறுமை நாளில் இவற்றுக்கு, அவற்றுக்கே உரிய உருவ அமைப்பை கொடுத்து அல்லாஹ் பேசும் ஆற்றலையும் கொடுப்பான். அப்பொழுதுதான் அவை மேற்கண்டவாறு பேசும்.

எனவே இவ்வுலகத்தில் பேசாத நோன்பு மறுமை நாளில் பேச இருப்பதால், உங்கள் வாய்கள் எதையும் உண்ணாமல் இருக்க பூட்டு போட்டு வையுங்கள். உங்களுக்காக நோன்பு வாய் திறந்துப் பேசும்.

மறுமை நாளில், பேசாதவைகள்
வாய் திறந்து பேசும்போது நாம் வாய் திறந்து பார்த்திருப்போம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்