இலக்கணம் மாறாமல்இறைவன் திட்டினானா?
இலக்கணம் மாறாமல்
இறைவன் திட்டினானா?
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ
நபியே! உங்களை வெறுப்பவனே சந்ததியற்றவன் ....
திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களில் ஆகச்சிறிய அத்தியாயம் அல் கவ்ஸர். இதில் மூன்று வசனங்கள் இருக்கின்றது. மூன்று வசனங்களும் மூன்று வகையான கருத்துக்களைப் பேசுகிறது.
மூன்றாவது வசனம் தான் இது! இந்த வசனத்தின் விளக்கங்களை விரிவாகக் காண்போம். இந்த வசனம் ஆஸ் பின் வாயில் என்பவன் குறித்தும் மற்றும் சிலர் குறித்தும் அருளப்பட்டுள்ளது.
பின் வாயில் என்பவன் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவன். யாருக்கும் தோன்றிடாத சிந்தனைகளுக்குச் சொந்தக்காரன். இவன் கேட்ட கேள்விகளுக்கு திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் இருக்கின்றன.
அறிவாளியாக இருந்ததனாலதானோ என்னவோ இவனுக்கு இஸ்லாம் ஆகும் பாக்கியம் கிடைக்கவில்லை. அபுல் ஹிகம் எனும் அபூலஹபைப் போல! ஷைத்தானைப் போல!
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் விவரம்:
அல்-காசிம் பின் முஹம்மது 598–601
ஜைனப் பின்த் முஹம்மது 599–629
ருகையா பின்த் முஹம்மது 601–624
உம்மு குல்சூம் பின்த் முஹம்மது 603–630
ஃபாத்திமா பின்த் முஹம்மது 605/15–632
அப்துல்லா பின் முஹம்மது 611–615
நபி (ஸல்) அவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும், இறுதிக் குழந்தை ஆண் குழந்தையாகவும் பிறந்து இருந்தார்கள்.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மூலம் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்திருந்தார்கள். அவர்களின் இறுதியானவரான அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவில் காலமாகி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லை. பெண் மக்கள் மட்டுமே எனும் நிலை உருவானது.
நபி (ஸல்) அவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் என்று எவருமில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளில் எவரும் உயிருடன் இல்லை.
*இவன், கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்*
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் குரைஷிகளை மட்டும் கஅபா வளாகத்திற்குள் வரச் செய்து அவர்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கஅபாவின் வளாகத்தில் நபிகளாரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் 'பனீ ஸஹம்' எனும் வாசல் வழியாக கஅபா வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.
அச்சமயம் கஅபா வளாகத்தினுள் பேசிக் கொண்டிருந்த குரைஷி தலைவர்களில் ஒருவரான ஆஸ் பின் வாயில் என்பவன் "அவரை விடுங்கள் அவர் சந்ததியற்றவர்; அவருக்கு வழி தோன்றல்கள் யாரும் கிடையாது; அவர் இறந்து விட்டால் அவரது கதை அத்தோடு முடிந்து விடும்" என்று கூறினான்.
அங்கு கூடியிருந்த அனைவரும் இவ்வாறு கேலிப் பேசி சிரித்து மகிழ்ந்தார்கள். இவரைக் குறித்து தான் இந்த வசனம் அருளப்பட்டது.
பிற்காலத்தில் இவரை சிலர் இஸ்லாத்திற்கு அழைத்தார்கள். அப்பொழுது இவர், "நான் இறந்த பிறகு மீண்டும் உயிர்பெற்று வந்தாலும் முஹம்மதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று கூறினான்.
இவருடைய ஒட்டகங்களை இவர் மேய்த்துக் கொண்டிருக்கும் போது கருவேலமுள் ஒன்று இவரது காலில் குத்தியது.
அதனால் இவருடைய கால் வீங்கி சீல் சலம் வைத்து மிகப்பெரும் புண்ணாக ஆனது. மக்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்த அனைத்து மருத்துவர்களும் சிகிச்சை அளித்தும் முள் குத்தியதை சரி செய்ய இயலவில்லை.
சீல் சலம் வடிவதால் இவரை பார்க்க எவரும் வருவதில்லை. இவர் நதன் - நாற்றம் எடுத்த மனிதராக ஆகிப் போனார். இவருடைய குடும்பத்தினர் கூட மிகச் சிரமப்பட்டே இவரைக் கவனித்துக் கொண்டார்கள்.
இவருடைய மகன் ஹிஷாம் அவர்கள், "கைதேர்ந்த நல்ல மருத்துவரை சிரியாவிலிருந்து அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் மருத்துவரை அழைத்துக் கொண்டு மக்காவிற்கு வந்த போது அவருடைய தந்தை இறந்து சில நாட்கள் ஆகி இருந்தது.
இவர் நபியை "அப்தர் - ஆண் சந்ததி இல்லாதவர்" என பலித்துப் பேசியதால், எந்த ஆணும், எந்தப் பெண்ணும் இவரை நெருங்க முடியாத அளவிற்கு அல்லாஹ் தூரமாக்கி விட்டான்.
இவரும் ஒரு வகையில் அப்தர் - மக்கள் தொடர்பு இல்லாதவராக ஆகி விட்டார்.
இவருக்கு ஹிஷாம், அம்ரு என இரு ஆண் மக்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் பிற்காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். இவர்கள் ஹிஷாம் பின் அல் ஆஸ், அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) என அழைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் சொன்னது போல் ஆஸுடைய கருத்துகளுக்கும் கொள்கைகளுக்கும் வாரிசாக எவரும் இல்லாமல் ஆகிவிட்டனர்.
இந்த வசனம் அபூ ஜஹலை குறிப்பதாகவும், உக்பா பின் அபி முஐத் என்பவனை குறித்து அருளப்பட்டதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்,
தஃப்ஸீர் குர்துபி
இறைவன் யார் யாரைத் திட்டினான் ?
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; மதீனாவைச் சேர்ந்த கஅப் பின் அஷ்ரஃப் என்பவன் மக்காவிற்கு வந்திருந்த போது குரைஷியர்கள் "நீங்கள் மதீனாவில் உள்ள மனிதர்களில் சிறந்தவர்; அவர்களின் தலைவரும் கூட" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப் பின் அஷ்ரஃப் " ஆமாம் உண்மைதான்" என்று கூறினான்.
குரைஷிகள் " அவர் ஒரு புடை கட்டை ( வாழை மரத்தின் வேரிலிருந்து துளிரும் புடை கட்டைகள் எந்தப் பயனும் இல்லாதது; அதை வீணாகவே வெட்டி எறிவார்கள்;) தன் கூட்டத்தில் சந்ததி இல்லாத ஒரே மனிதர்; அவர் நம்மை விடச் சிறந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்; நாங்கள் தான் சிறந்தவர்கள், தோட்டம் துறவு உள்ளவர்கள்; கஅபே! நீங்கள் தான் அவரை விடச் சிறந்தவர்" என்று கூறினார்கள்.
அப்பொழுதுதான் "நபியே! உங்களை வெறுப்பவர்களே சந்ததியற்றவர்" எனும் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
நூல்: நஸாயீ , இப்னு ஹப்பான்.
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا
வேதத்தில் சிறிதளவு (ஞானம்) கொடுக்கப்பட்ட சிலரை (நபியே! நீர்) பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், அட்டகாசம் செய்யும் (ஷைத்தான்களையும்,) நம்பிக்கை கொள்கிறார்கள்; அவர்கள் இறை மறுப்பாளர்களைக் காட்டி, "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" என்று கூறுகிறார்கள். 4 : 51
இந்த வசனத்தில் "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" எனும் இந்த சொல், குறைஷியர்கள் 'கஅப் பின் அஷ்ரஃப்' என்பவனை சிறந்தவன் என்று சொன்னதை குறிப்பிடுகின்றது என தஃப்ஸீர் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
அதாவு பின் அபீ ரபாஹா (ரலி) அவர்கள் கூறுவதாவது; இந்த வசனம் அபூ லஹப் குறித்து அருளப்பட்டது.
நபி (ஸல்) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இறந்திருந்த போது அபூ லஹப் தன் நண்பர்களிடம் சென்றிருந்தான். அப்போது, "இன்று இரவு முஹம்மது சந்ததி அற்றவராக ஆகிவிட்டார்" என்று சொல்லி ஆனந்தம் அடைந்தான். அப்பொழுதுதான் இந்த வசனம் அருளப்பட்டது.
நூல்: தஃப்ஸீர் ராஜி
நபி (ஸல்) அவர்கள் குறித்துத் தவறாகப் பேசிய ஆஸ் பின் வாயில், அபூ லஹப், அபூ ஜஹல் ஆகிய மூவரும் ஒரே கருத்தையே திரும்பத் திரும்ப வெவ்வேறு இடங்களில் கூறினார்கள். அதனால் அவர்கள் கூறிய சொல் அவர்களுக்கே உரியது என அல்லாஹ் வழி மொழிந்த வார்த்தை தான் 'அப்தர்'.
"ஒரு வார்த்தை வெள்ளும் ஒரு வார்த்தை கொல்லும்" என தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
அவர்கள் சொன்ன வார்த்தை அவர்களுக்கே உரித்தாகிவிட்டது.
"Happy Ramzan Same to you - ரமலான் வாழ்த்துக்கள் ; அதுவே உனக்கும்" என்று இன்றைய நவ நாகரீக உலகத்தில், வார்த்தைகளை குறைத்து அதே நேரம் அழகிய மொழிநடையிலும், இலக்கண முறையிலும் பேசுவது போல் அன்றே அல்லாஹ் பேசி இருக்கின்றான். (இல்லை! அவன் பேசியது போல் இன்று நாம் பேசி வருகிறோம்.)
"அவர்கள் இன்னஹு அப்தர்" என்றார்கள். அல்லாஹ், "இன்னக்க அப்தர்" என்று சொல்லி முடித்துக் கொண்டான்.
இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த அரபியர்களிடம் அல்லாஹ்வும் இலக்கிய முறைப்படி பேசி இருக்கின்றான்.
நபியே !
நீங்கள் இல்லை
அவர்கள்தான்......!
÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×
إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
எனும் இந்த வசனம் மட்டும் மக்காவில் அருளப்பட்டது. மற்ற இரண்டு வசனங்களும் மதீனாவில் அருளப்பட்டது.
'சந்ததியற்றவர்' எனும் சொல் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் மனதை மிகப்பெரும் அளவில் பாதித்தது. மனம் காயப்பட்டு இருந்தது.
காயம்பட்ட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவே முதல் இரண்டு வசனங்களை அல்லாஹ் மதீனாவில் அருளினான். அதனால் நபி (ஸல்) அவர்கள் ஓரளவு ஆறுதலும் அடைந்தார்கள்.
அதே சமயம் மதீனாவில் அன்னை மாரியா கிப்தியா (ரலி) அவர்கள் மூலம் இப்ராஹிம் (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மகனாகப் பிறந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அந்த வார்த்தையின் நினைவில் இருந்து வெளிவந்து சந்தோசமாக வாழ்தார்கள்.
நபிகளாரை சோதிக்கும் விதமாக அல்லாஹ் மீண்டும் இப்ராஹிம் (ரலி) அவர்களையும் தன்னளவில் அழைத்துக் கொண்டான்.
அதனால் மக்கா இறை மறுப்பாளர்கள் சொன்னதை நினைத்து நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார்கள்.
*நபிகளாரை ஆறுதல் படுத்தவே....*
====================
ஜுர்ஜானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் உள்ள 'இன்ன' எனும் சொல்லும், 'ஹுவ' எனும் சொல்லும், அல் அப்தர் என்பதில் உள்ள 'அல்' எனும் சொல்லும் " கண்டிப்பாக, உறுதியாக எனும் பொருளைத் தரக் கூடியது.
எனவே இதைச் சொன்னவர்கள்தான் "கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக சந்ததி அற்றவர்கள்" என இறைவன் உறுதிமொழி அளிக்கின்றான்.
அதாவது நபி (ஸல்) அவர்களை நம்ப வைப்பதற்காகவும், ஆறுதல் படுத்துவதற்காகவும் அரபு மொழியில் உறுதியளிக்கும் மூன்று சொற்களைப் பயன்படுத்தி அல்லாஹ் பேசி இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்களை எந்த சொல்லைச் சொல்லி எதிரிகள் திட்டினார்களோ அதே சொல்லையே அல்லாஹ் சொல்லி அவர்களை திட்டினான்.
மனிதர்கள் நபி (ஸல்) அவர்களைத் திட்டினார்கள். ஆனால் அல்லாஹ் நபிகளாரை திட்டியவர்களை திட்டியிருக்கின்றான். அல்லாஹ் சில மனிதர்களை திட்டியது தான் உயர்ந்த நிலை!
அண்ணலருக்காக
அல்லாஹ் பேசிய வார்த்தை
அப்தர்....
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மக்காவில் நபி (ஸல்) அவர்கள் ஓர் இறை கோட்பாட்டை முன்மொழிந்ததும் கருத்தியல் அடிப்படையிலான எதிரிகள் அதிகரித்தார்கள்.
அதனால் முஸ்லிம்களுக்கோ நபி (ஸல்) அவர்களுக்கோ ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு , மீள முடியாத நெடுந் துயரங்கள் ஏற்பட்டால் எதிரிகளான இறை மறுப்பாளர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அப்படி அவர்கள் சந்தோஷப்பட்டு சொன்ன ஒரு வார்த்தை தான் அப்தர் - நபியே! நீர் சந்ததி இல்லாதவர்.
பொதுவாகவே அரபியர்களிடம் பத்தர் - சந்ததியற்றவன் நாதியற்றவன் எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்தது.
ஆகக் கீழ்த்தரமாக, கேவலமாக ஒருவரைச் சாடவே அரபியர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்தார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நபிகளார் மீது பயன்படுத்தியதால் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
எதிரிகள் திட்டிய நேரம், காலம் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது . நபி (ஸல்) அவர்களுக்கு அந்த சூழல் எதிராக இருந்தது.
அதனால் நபி (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை காதில் கேட்டும், மௌனமாக அந்த இடத்தைக் கடந்தும் சென்றார்கள்.
ஆனால் அல்லாஹ் தன் ஹபீபை - நேசத்திற்குரியவரை திட்டியதை சகிக்க இயலாமல் எவன் சொன்னானோ அவனைப் பார்த்து அப்தர் - நீதான் சந்ததி அற்றவன் என்று பதில் கூறினான்.
நபி (ஸல்) அவர்களுக்காக அல்லாஹ் இவ்வாறு பல்வேறு சமயங்களில் பேசி இருக்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் : தஃப்ஸீர் குர்துபீ
ஒற்றைச் சொல்லால்
உருகுளைந்த குடும்பங்கள் :
`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•
தொடர்ச்சி .......6
அபூ லஹபும்
அவனது குடும்பமும் :
=====================
அபூ லஹப் என்பவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர் உத்பா, முஅத்தப், உதைபா மற்றும் மூன்று பெண் மக்களும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்களின் மகளை திருமணம் செய்து இருந்த உதைபாவை சிங்கம் கடித்து சாகடித்தது. தந்தை அபூ லஹப் இருக்கும்போதே மகன் இறை மறுப்பாளனாகவே இறந்து விட்டான். உத்பா, முஅத்தப் ஆகிய இருவரும் ஃபதஹ் மக்காவிற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அபூ லஹபிற்கு மூன்று பெண் மக்கள் இருந்தனர். துர்ரா, ஸபீஆ ஆகிய இருவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். தந்தை இருக்கும்போதே உஜ்ஜா என்பவர் இறை மறுப்பாளராக இருந்து விட்டாள்.
அபூ ஜஹலும்
அவனதுகுடும்பமும் :
===================
அபூ ஜஹலுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அபூ ஜஹல் பத்ர் போரில் கொலை செய்யப்பட்டான். இவனுக்கு மூன்று ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் பிறந்தனர்.
அபூ ஹாஜிப், அபூ அல்கமா என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். இவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. அபூ அல்கமா அறியாமை காலத்திலேயே தந்தை இருக்கும் போதே எமனில் கொலை செய்யப்பட்டு விட்டான்.
மூன்றாவது இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு - இவர் இஸ்லாத்தில் இணைந்து குழந்தைகளோடு தாயிஃபில் நீண்ட காலம் வாழ்ந்தார்.
ஹுனஃபா, ஸக்ரா, அஸ்மா, ஜுவைரியா என்ற நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.
இவர்கள் நால்வரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் இருக்கும் போதே அலீ (ரலி) அவர்கள் இந்த நான்கு பெண் மக்களில் ஒருவரை திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள்
واللَّهِ لا تَجْتَمِعُ بنْتُ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ واحِدٍ، فَتَرَكَ عَلِيٌّ الخِطْبَةَ.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும், அல்லாஹ்வின் எதிரி உடைய மகளும் ஒரே மனிதரிடத்தில் இருப்பது சாத்தியமல்ல" என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் அந்த பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்கள்.
நூல் :புகாரி
கஅப் பின் அஷ்ரஃப் என்பவன் மஸ்லமா (ரலி) அவர்கள் மூலம் கொலை செய்யப்பட்டான். இவனுடைய மரணத்திற்குப் பிறகு இவனை குடும்பத்தினரும் அழிந்து போனார்கள்.
ஆஸ் பின் வாயில் என்பவனுடைய முடிவை ஏற்கனவே பார்த்து விட்டோம்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களை அப்தர் - சந்ததியற்றவர் என்று சொன்னதால் இவர்கள் அனைவரும் சிறுவயதில் மரணித்தது மட்டுமின்றி இவருடைய ஆண்மக்கள் பலர் சிறுவயதிலேயே இறந்துப் போனார்கள். எஞ்சி இருந்த பிள்ளைகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அதனால் இவர்களுடைய இறை மறுப்பு கொள்கையை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்ல எவரும் இல்லாமல் ஆகி விட்டார்கள்.
இவர்கள் கொள்கை பிடிப்போடு இருந்தது போல் இவருடைய சந்ததிகளில் எவரும் கொள்கையில் உறுதியாக இருக்கவில்லை. அதைத்தான் அல்லாஹ், "அவர்கள் கொள்கைக்கு சந்ததி அற்றவர்கள்" என்று சொல்லிக் காட்டுகிறான்.
நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?
•~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~•
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைவரும் மரணித்தார்கள் என்பதே உண்மை. இதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை என்பதே உண்மை.
பொதுவாகவே அரபியர்கள் தமக்கு ஆண் பிள்ளைகள் இருப்பது பெருமை என்றும், பலம் என்றும், சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தித் தரும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதில் உறுதியாகவும் இருந்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லாமல், சமூகத்தில் அந்தஸ்தையும், மரியாதையையும் வழங்கி அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கின்றான்.
பொதுவாகவே அல்லாஹ்வின் வல்லமை என்னவென்றால், எதை மனிதர்கள் மதிக்கிறார்களோ அது இல்லாமலே அல்லாஹ் மதிப்பையோ அந்த தேவையையோ நிறைவேற்றி விடுவான்.
உதாரணமாக கன்தக் - அகல் யுத்தத்தில் இரண்டு மூன்று நபர்கள் சாப்பிடும் அளவிற்கு இருந்த பாதாம் பிஸ்தா பேரித்தம் பழம் போன்றவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் கையை வைத்து துஆ செய்த பிறகு அந்த துணியில் கிடந்த nuts - நட்ஸ்களை பல நூறு பேர் சாப்பிட்டார்கள்.
அதைப்போல் ஜாபிர் (ரலி) அவர்கள் ஐந்தாறு பேருக்கு சமைத்த உணவில் நபி (ஸல்) அவர்கள் துஆ செய்த பிறகு ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமான உணவை ஒரு ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு அதில் விசாலத்தை வழங்கியது அல்லாஹ் ஆவான்.
ஆயிரம் நபர்களுக்குத் தேவையான உணவை தயார் செய்து வைத்துக் கொண்டு விருந்துக்கு அழைப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.
ஐந்தாறு நபர்களுக்கான உணவை வைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கானவர்களை அழைக்க சொல்பவன் அல்லாஹ். இதுதான் இறைவனுடைய ஸ்டைல் - நடைமுறை.
அல்லாஹ் பின்புறத்தில் இருந்து உதவி செய்து, நபி (ஸல்) அவர்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டினான்.
பொதுவாக ஒரு தந்தையின் கருத்தை, சீரான ஆட்சி முறையை மகன்கள் தான் எடுத்துச் செல்வார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மகன்கள் இல்லாமலே நபித் தோழர்கள் அதைச் சுமந்து, உலகம் முழுவதும் சென்றடையச் செய்தார்கள்.
பனு இஸ்ரவேலர்களில் தோன்றிய நபிமார்களின் மகன்கள் நபியாக இருந்திருக்கிறார்கள்.
இப்ராஹிம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) ஒரு நபி ஆவார். யாகூப் (அலை) அவர்களின் மகன் யூசுஃப் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். தாவூத் (அலை) அவர்களின் மகன் சுலைமான் (அலை) அவர்கள் ஒரு நபி ஆவார். ஜகரியா (அலை) அவர்களின் மகன் யஹ்யா ஒரு நபி ஆவார்.
1. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என இறைவன் முத்திரையிட்டு முடிவு செய்து விட்டதால், அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.
அதேநேரம் நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக அல்லாஹ் அறிவித்ததால் அவர்களுக்கு மகன் இருந்தால் மக்கள் நபியாக அறிவிக்கவோ, மன்னராட்சி முறையில் மன்னராக ஆக்கவோ சாத்தியக் கூறுகள் உண்டு என்பதால் அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் வாரிசு இல்லாமல் செய்துவிட்டான் என முஹம்மது ஸப்ரீ அப்துல் ரஹீம் மக்கீ அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் இரண்டு ஹதீஸ்களைப் பாருங்கள்.
عن الصحابي الجليل أنس بن مالك -رضي الله عنه- أنّه قال: (لو عاش إبراهيمُ لكان صدِّيقًا نبيًّا) رواه الألباني، في صحيح الجامع ومسند احمد .
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹிம் (ரலி) அவர்கள் மட்டும் இருந்திருந்தால் அவர் உண்மையான நபியாக இருந்திருப்பார்.
நூல் : முஸ்னது அஹ்மத்
عن إسماعيل بن أبي خالد قال: (قُلتُ لِابْنِ أبِي أوْفَى: رَأَيْتَ إبْرَاهِيمَ ابْنَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ؟ قالَ: مَاتَ صَغِيرًا، ولو قُضِيَ أنْ يَكونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَبِيٌّ عَاشَ ابنُهُ، ولَكِنْ لا نَبِيَّ بَعْدَهُ). رواه البخاري
இஸ்மாயில் பின் காலித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நான் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் "நீங்கள் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்து இருக்கிறீர்களா?" என்று கேட்டேன்.
(நான் அவரைப் பார்த்திருக்கின்றேன்;) அவர் சிறு வயதில் மரணித்து விட்டார். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகனார் மட்டும் வாழ்ந்திருந்தால், அவர் நபியாக ஆகியிருப்பார்; ஆனாலும் நபிகளாருக்கு பிறகு நபித்துவம் என்பதே இல்லை.
நூல் : புகாரி
2. "பொதுவாகவே ஆண் பிள்ளைகள் தான் பெற்றோருக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்கி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது உலக நடைமுறை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள், தாம் வாழும் வரை எந்த பிள்ளைகளுடைய வருவாயையும் எதிர்பார்த்து இல்லை. அல்லாஹு ஒருவனையே நம்பி இருக்கின்றார் என்கிற கருத்தை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் நபிகளாருக்கு ஆண் குழந்தைகளை வழங்கவில்லை" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் விதமான ஒரு வசனத்தைப் பாருங்கள்.
قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى
உறவினர்கள் (என்னிடம்) அன்பாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு கூலி (பணம் காசு ) எதையும் நான் உங்களிடம் கேட்கவில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! 42 : 23
எனது குடும்பத்தினர் என் மீது பேரன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எனது குடும்பத்தினரிடம் எனக்கு இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி வந்தார்கள். அதையே அல்லாஹ் வசனமாக அருளி விட்டான்.
நபிகளாரின் இந்த வேண்டுகோளை ஏற்றுத்தான் ஹசன் ஹுசைன் (ரலி) அவர்கள் உட்பட வேறு யாரும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
தன்னை நபி என்றும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அப்படிச் சொன்னால் மறுமை நாளில் நபிகளாரின் அன்பில் இருந்தும், ஷஃபாஅத்திலிருந்தும் தூரமாக்கப்படுவோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
3. "இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் அல்லாஹ் சோதித்தான்.
மேலும் நெருப்பு குன்றத்தில் எறியப்படுகிற நேரம் வரை அல்லாஹ் சோதித்தான்.
இப்படி ஒவ்வொரு நபியும் சோதனைகளுக்குள் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் ஆண் குழந்தைகள் இல்லாமல் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்" எனவும் கூறுகிறார்கள்.
இந்தக் கருத்தை வலு சேர்க்கும் ஒரு ஹதீஸைப் பாருங்கள்.
عن سعد بن أبي وقاص -رضي الله عنه- أنّه قال: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ، فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ، فَمَا يَبْرَحُ البَلَاءُ بِالعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ» رواه الترمذي
ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.
ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதீ - 2398
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், பல்வேறு வகையானத் துன்பங்களை வழங்கியது போன்றே ஆண் குழந்தை இல்லை என்கிற மிகப்பெரும் துன்பத்தையும், சோதனையையும் வழங்கினான். அவை அனைத்திலும் நபிகள் நாயகம் அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் புகழ் எவ்வளவு பரவி இருக்கிறது?
=_==_==_==_==_==_==_==_=
وقال محمد بن إسحاق : عن يزيد بن رومان قال : كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول : دعوه ، فإنه رجل أبتر لا عقب له ، فإذا هلك انقطع ذكره .
நபி (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்ட போது ஆஸ் பின் வாயில் என்பவன் கூறினான். அவரை விடுங்கள்; அவர் சந்ததி அற்ற மனிதர்; அவருக்கு எதிர்காலமே இல்லை; அவர் இறந்து போனால் அவரைப் பற்றி பேச யாருமே இருக்க மாட்டார்கள்.
நூல்: தஃப்ஸீர் தப்ரீ
இப்படி சொன்னவனுக்கு பதில் அளிக்கும் விதமாக சில வரிகள்.
வளர்ப்புத் தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு பருவத்தையும் புகழ்ந்துப் பேசி வந்தார்கள்.
இளைஞராக இருந்தபோது குடும்பத்தினர் பேசிய புகழ் வார்த்தைகள் அனைத்தும் அவருக்கு உரியது தான் என அவரின் செய்கைகளை கண்டு ஊர் மக்கள் ஒப்பு கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் நடத்தையை மென்மேலும் அழகு படுத்திக் கொண்டே சென்றதால் அவர்களின் புகழும் ஓங்கியது.
சிறுவராக, இளைஞராக, ஆடு மேய்ப்பாளராக, வியாபாரியாக, கணவனாக, தந்தையாக இருந்த அனைத்துத் தருணங்களிலும் தன் புகழ் ஓங்கும்படியே வாழ்ந்தார்கள்.
அதிலும் நபியாக தன்னை அறிவித்துக் கொண்ட போதும், அது சார்ந்த புரட்சிகரமான பல கருத்துக்களை உதிர்த்த போதும் அவர்களின் புகழ் மேலும் பெருகியது.
இன்று உலகம் முழுவதிலும் 200 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உலகில் உள்ள சாதி மதங்கள் வாரியாக அந்த மக்களை பிரித்துப் பார்த்தால் முஸ்லிம் மக்கள் தொகை தான் மிக அதிகமாகக் காணப்படும்.
200 கோடி முஸ்லிம்களுக்கு ஒரு கோடி பள்ளிவாசல்கள் உலகம் முழுவதிலும் இருக்கும்.
ஒரு கோடி பள்ளிவாசலிலும் தினம் தினம் ஐந்து முறை பாங்கின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் இகாமத்தின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் நினைவு கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இருபது கோடி முறை நபி ஸல் அவர்களின் பெயர் பள்ளிவாசலில் ஓங்கி ஒழிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு பள்ளிவாசலுக்கு ஒரு நேரத் தொழுகைக்கு 25 பேர் தொழ வருவதாக வைத்துக் கொண்டால் 25 கோடி பேர் ஒரு நேரத் தொழுகையில் ஒன்று கூடுகிறார்கள்.
இவர்கள் தொழுகையில் ஸலவாத் ஓதுவார்கள். அதன் மூலம் நபி ஸல் அவர்களின் பெயரை நான்கு முறை சொல்வார்கள். அதனால் தொழுவோரின் மூலம் ஒரு நாளில் ஒரு நேர தொழுகையின் போது மட்டும் 100 கோடி முறை நபி (ஸல்) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுகிறது.
லா அகீப லஹு அவரைப் பின்பற்ற ஆட்கள் இல்லை என்று சொன்னான் ஆனால் இன்று 200 கோடி பேர் நபிகள் நாயகத்தை பின் துயர்ந்து வருகிறார்கள்.
*ஃப இதா ஹலக இன்கதஅ திக்ருஹு" அவர் அழிந்தால் அவரை நினைத்துப் பார்க்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னான்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் அவர்களை பல நூறு முறை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை.
அப்தர் - சந்ததி அற்றவர் என்று சொன்னான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மூலமாக பிறந்த குழந்தைகளின் சந்ததியினர் இன்றும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சந்ததிகள் மென்மேலும் பெருகவும் அவர்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் பெற்று வளமாக வாழவும் ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில் ஸலவாத்து ஓதுவது மூலம் "அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் - முஹம்மது நபிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும்" என பிரார்த்தனை செய்து கொண்டும் அவரை நினைத்து கொண்டுமே இந்த சமுதாயம் இருக்கிறது.
தொழுகையில் ஸலவாத்தை ஓதவில்லை என்றால் அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரைச் சொல்லி நபிகளாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்யவில்லை என்றால் அவருடைய தொழுகை கூடாது எனும் நிலையை அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரையும், அவர்களின் நினைவையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்க வேண்டும் என இறைவன் இயற்கையாகவே அமைத்திருக்கின்றான்.
Comments
Post a Comment