P. S. P. ஜைய்னுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
P. S. P. ஜைய்னுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.
1976, 77 களில் நான் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் பணியாற்றி வரும் போது எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் எனது பேரன்புமிக்க பேராசான்களில் ஒருவரான மர்ஹூம், அல்லாமா, காணலில்லாஹ், லால்பேட்டை மன்பஉல் அன்வாரின் முதல்வர் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள்.
அந்தக் கடிதத்தில், "தாங்கள் பாக்கியத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருவதாக அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எனக்கோர் உதவி செய்ய வேண்டும். எனக்கு அதிகமாக எனது ஆசிரியர் அஃலா ஹள்ரத் மற்றும் எனது பேராசிரியர்களின் நினைவு அதிகமாக இப்போது ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் அதிகமான காலம் வாழ்ந்த இடத்தில் நானும் சில காலம் வாழ வேண்டுமென ஆசைப்படுகிறேன். அவர்களின் நினைவை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவர்களின் அடக்கத் தளமும், அவர்கள் உண்டு உறங்கி, நடமாடிய இடமுமான பாக்கியத்தில் வந்து சில காலம் தங்க வேண்டும், எனது பேராசான்களின் நினைவோடு வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு மேலோங்கி இருக்கிறது. எனவே தாங்கள், பாக்கியாத்தின் செயலாளர் ஜமீல்பா அவர்களிடம் சொல்லி அங்கு பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருக்குமா என கேட்டு பதில் கடிதம் எழுதுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று இருந்தது.
அதாவது லால்பேட்டை ஜாமிஆவில் முதல்வராக இருக்கக்கூடிய மவ்லானா அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் தமது பேராசிரியர்கள் வாழ்ந்த இடத்தில் தாமும் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஒரு பேராசிரியராக பணி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
இதை நமது பி. எஸ். பி. ஹள்ரத் அவர்கள் செயலாளர் ஜமீல்பா அவர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள். "ஹள்ரத் அவர்கள் இங்கு வருவது எனக்கு மிகவும் விருப்பமானது தான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதில் எனக்கு மிகவும் விருப்பம்தான், அதில் எனக்கு கருத்து முரண்பாடு இல்லை. ஆனால், ஒரு மதரஸாவின் வளர்ச்சியில் முழு பங்கெடுத்து வழிநடத்திச் சென்று கொண்டிருக்கக் கூடிய ஒரு முதல்வர் நமது மதரஸாவில் பேராசிரியராக இணைவதில் எனக்கு விருப்பமில்லை.
அவர் இங்கே வந்து விட்டால் அந்த மதரஸாவின் நிலை என்னவாகும் அதை எப்படி வழி நடத்திச் செல்வார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்போது மனம் நெருடுகிறது. எனவே ஹள்ரத் அவர்கள் இங்கு வருவதைவிட அங்கேயே பணி செய்வதுதான் சிறந்தது என்று நான் நினைப்பதாக தாங்கள் விபரமாக கடிதம் எழுதி விடுங்கள்" என்று சொன்னார்கள்.
அதேபோல் பி . எஸ். பி. ஹள்ரத் அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள். அதனை படித்த நமது கானலில்லாஹ் ஹள்ரதவர்கள் அமைதி கொண்டார்கள்.
எப்பொழுதும் இறை நினைவோடு வாழ்கிறவர்கள், தம் இறுதிக் காலங்களை ஏற்கெனவே இறை நினைவோடு வாழ்ந்து மறைந்தவர்களின் அருகில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்கிற தத்துவத்தை இந்த நிகழ்வு சொல்லிக் காட்டுகிறது.
Comments
Post a Comment