மவ்லானா சைஃபுல் உம்மத் T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹள்ரத் ( ரஹ் ) அவர்கள்

மவ்லானா சைஃபுல் உம்மத் 
T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹள்ரத் ( ரஹ் ) அவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்ன மினல் பயானி சிஹ்ரா நிச்சயமாக பயானில் வசீகரம் உள்ளது" 

என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது போன்று T.J.M. ஹள்ரத் அவர்கள் சொற்பொழிவாற்ற துவங்கிவிட்டால் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் பார்வையாளர்கள் அனைவரும் தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

உடலில் இரட்டை உறுப்புகளால் ஏற்படும் பலனைவிட, மேலும் உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளால் ஏற்படும் நன்மைகளைவிட , ஒற்றை உறுப்பான நாவினால் ஏற்படும் நன்மை பெரிது. 

ஹள்ரத் அவர்கள் தம் நாவன்மையால் தமிழ் தெரிந்த மக்கள் அனைவருக்கும் நன்மையைச் செய்ய சொல்லி, தீமைகளைத் தடுக்கும் விதமான உபதேசங்கள் மூலம் பலரை நல்வழிப் படுத்தி இருக்கிறார்கள். 

பிறப்பு:
********

திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த K.T. ஜெய்னுல் ஆபிதீன் ஜமீலா பேகம் தம்பதியருக்கு முஹம்மது ஸலாஹுத்தீன், நிஜாமுத்தீன், முஹம்மது யஹ்யா என்ற மூன்று ஆண் பிள்ளைகளும் ஹலீமா பாத்திமா என்ற இரு பெண்குழந்தைகளும் பிறந்தனர். 12.12.1942ல் பிறந்த முஹம்மது ஸலாஹுத்தீன் என்பாரை நன்கு மார்க்க கல்வி பயிற்றுவித்து மகனை அழகு பார்க்க வேண்டும் என விரும்பினர் தந்தை.

கல்வி:
********

உள்ளுர் நகராட்சி பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்த, தம் மகன் பதிமூன்றாம் வயதில் திருநெல்வேலி பேட்டையில் உள்ள ரியாலுல் ஜினான் ஃபி உலூமில் அத்யான் அரபிக் கல்லூரியில் முதல் மூன்று வகுப்பு வரை கல்விகற்ற பிறகு லால்பேட்டை மன்பவுல் அன்வாரில் நான்கு ஐந்து ஜும்ராக்களை ஓதிவிட்டு மீண்டும் தமது சொந்த ஊரிலுள்ள ரியாலுல் ஜினான் மதரஸாவில் ஆறு, ஏழு வகுப்புகளை ஓதி 1963 இல் மௌலவி ஆலிம் ரியாஜி பட்டம் பெற்றார்கள். 

பேராசிரியர்:
***************

படிப்பு முடிந்ததும் படித்த மதராஸாவிலேயே பணி கிடைத்ததும் பணியில் அமர்ந்துவிட்டார்கள் ஹள்ரத் அவர்கள். 

1970 வரை எட்டாண்டுகள் சிறப்பாக பணிசெய்த பிறகு பேட்டை M.G.P மஹல்லாவில் அமைந்துள்ள அல் ஹஸனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரியில் 1971 முதல் 2012 வரை பேராசிரியராகவும், முதல்வராகவும் பணி செய்து வந்தார்கள்.

நான் ஹள்ரத் அவர்களிடம் கேட்டேன். ஹள்ரத் தங்களின் முதல் சொற்பொழிவு, முதல் அரங்கேற்ற அனுபவம் பற்றி கூறுங்களேன் என்றேன். அவர்கள் தமது வாயினால் கூறுவதை நீங்களும் கேளுங்கள்.

திருநெல்வேலி பேட்டை அரபிக்கல்லூரியில் ஏழாவது வகுப்பில் எனது ஆசிரியப் பெருந்தகை S.R.ஷம்சுல் ஹுதா ஹள்ரத் அவர்கள் பாடத்தில் நான் அமர்ந்திருக்கும்போது மிய்யான் பள்ளி என்ற ஊரிலிருந்து ஒருவர் ஹள்ரத் அவர்களை மீலாது விழா சொற்பொழிவுக்கு அழைத்தார்.

ஒப்புதல் அளித்த ஆசிரியர் அவர்கள் "T.J.M ஸலாஹுத்தீன் என்ற பெயரையும் நோட்டீஸில் போட்டுக் கொள்ளுங்கள்" என்றார்கள். நான் மிகுந்த பயத்துடன், "உங்கள் முன்பு எப்படி பேசமுடியும்?" என்றேன்.

"எங்கள் முன்னால் பேசினால்தான் உனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்" என்று சொல்லி, "நாற்பது நிமிடம் பேசுவதற்கு செய்திகளை சேர்த்துக்கொண்டு என்னுடன் விழாவுக்கு வந்தாக வேண்டும்" என்று கட்டளையிட்டார்கள்.

ஹள்ரத் அவர்களுடன் மியான் பள்ளி சென்று சொற்பொழிவாற்றிவிட்டு வந்தேன். இதை அடுத்து மூன்றாவது நாள் திருநெல்வேலி டவுனில் மீலாது விழா நடக்கும் செய்தியரிந்து நானும் எனது தோழர் திருவனந்தபுரம் அப்துல் ரஜாக் அவர்களும் விழாவிற்கு சென்றிருந்தோம். மக்கள் திரளாக கூடியிருந்த அந்த விழாவில் சொற்பொழிவாளர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை.

விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு தலை சுற்றியது. அங்குமிங்கும் சுற்றிவந்தார்கள். எங்கள் இருவரையும் மதரஸா மாணவர்கள் என்று புரிந்துக்கொண்ட அவர்கள் எங்களை விழா மேடையில் ஏற்றிவிட்டு ஒதுங்கிக்கொண்டிருங்கள்".

ரஜ்ஜாக் பாய் கிராஅத் ஓதினார். என்னிடம் மியான் பள்ளி குறிப்பு இருந்ததால் அதை வைத்து பேசிக் கொண்டிருந்தேன். பிரதான பேச்சாளர் ஒருவர் வந்ததும் எனது சொற்பொழிவை நிறைவு செய்து விட்டு விழா மேடையில் அமர்ந்திருந்தேன். எங்கள் இருவரையும் பூமாலைப் போட்டு கண்ணியம் செய்தார்கள்.

விழா இரவு 12 மணிக்கு நிறைவுபெற்றதும் இரவு உணவுக்குப்பின் எங்களூர் பேட்டைக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது இரவு ஒருமணி எங்களுக்கு போடப்பட்ட பூமாலையும் கையிலிருந்தது. கடுமையான இருள் நிறைந்த அந்த அகால நேரத்தில் எதிரே அழகான இளம் பெண் ஒருத்தி வந்துக்கொண்டிருந்தாள்.

என்னுடன் வந்துகொண்டிருந்த நண்பர் நிலமையைப் புரிந்துக்கொண்டு எனது கையிலிருந்த பூமாலையையும் அவரது மாலையையும் சேர்த்து சற்று தூரத்தில் எறிந்துவிட்டு, உரத்த குரலில் பாங்கு சொன்னார். நான் பயத்தினால் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அதற்குப்பின்பு அந்தப் பெண்ணைக் காணவில்லை.

இப்படியெல்லாம் ஏன் செய்தீர்கள் என்று கேட்டபோது, "நமக்கு எதிரே வந்தது மோகினி பிசாசு. பூமாலையை தூக்கி எறிந்துவிட்டு, பாங்கு சொல்லாதிருந்தால் நம் இருவரையும் அது சாகடித்திருக்கும்" என்று சொன்னார்.

இது நடந்தது உண்மை! நான் நேரில் பார்த்ததும் உண்மை. ஆனாலும் கண்டதும் பொய்யன்று !
அல்லாஹ் மிக அறிந்தவன். 

ஒவ்வொரு வருடமும் தனது வகுப்பறையில் ஹள்ரத் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். இதனை அனைத்து மாணவர்களும் அறிவார்கள்.

குடும்பம்:
**********

ஹள்ரத் அவர்கள் 15.12.1963 அன்று சிந்தாமதார் பாத்திமா என்ற பெண்ணை மணம்செய்துக் கொண்டார்கள். அஹ்மது அனஸ் ஷம்சுல்ஹுதா முஸம்மில் சாதிக் என்று மூன்று ஆண் குழந்தைகளும் ஜுவைரிய்யா, மிஸ்பாஹுன்னிசா நஜியா என்ற இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 

ஹள்ரத் அவர்கள் தன் குடும்பத்திற்காக செலவிட்ட நேரத்தைவிட , பொருளாதாரத்தை தேடுவதற்காக செலவிட்ட நேரத்தை விட, தமிழக இஸ்லாமியர் முன்னேற்றத்திற்காக ஒதுக்கிய நேரம் மிக அதிகம்.

ஆலிம்களின் அன்பர் :
*************************

ஹள்ரத் அவர்கள் 1963 முதல் கல்லூரி பேராசிரியராக இருந்து வந்தார்கள். இவர்களிடம் ஓதிய மாணவர்கள், இவருக்கு அறிமுகமான ஆலிம்கள் என அனைவரும் ஹள்ரத் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். 

ஹள்ரத் அவர்களிடம் “இவர் ஒரு ஆலிம்" என அறிமுக செய்யப்பட்டால் ஏதோ நூறாண்டுகள் ஏற்கெனவே அறிமுகமுள்ளது போல் மிக அன்பாக பேசுவார்கள். அந்த ஆலிம் சொல்வதை செவிதாழ்த்திக் கேட்பார்கள். ஏதோ தனது ஆசிரியரை கண்ணியப்படுத்துவதுபோல் கண்ணியப்படுத்துவார்கள். இதனால் ஹள்ரத் அவர்களிடம் ஒரு முறை பேசிப் பழகியவர் ஹள்ரத் அவர்களை தன் உயிரினும் மேலாக மதிக்க துவங்கிவிடுவர்.

மாணவர்களும், அறிமுகமான ஆலிம்களும் இணைந்து 'T.J.M பாசறை’ என்று ஹள்ரத் அவர்களின் பெயரில் பொதுநல சங்கம் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். இதனை பற்றி நான் ஹள்ரத் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் சொன்னார்கள்.

எனது மாணவர்களும், அவர்களின் நண்பர்களும் என்னை பின்தொடர்ந்து சமுதாய பொது நலச் சேவைக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு டீ.ஜே.எம் (T.J.M) பாசறை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

T.J.M பாசறை எனது மாணவர்களால் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு (நான் ஹள்ரத் அவருடைய சந்தித்தது 2004 இல் ) ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த அமைப்பின் மூலமாக எனது மாணவர்கள் வழியாக பல பொதுநலச் சேவைகள் நடைபெற்று வருகிறது.

சங்கைக்குரிய ஆலிம்கள் அரபிக்கல்லூரிகளின் மாணவ கண்மனிகள், இவர்களின் கண்ணியம் காக்க உழைப்பது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து நிம்மதியாக செயல்பட ஆவன செய்து கொடுப்பது, சங்கைக்குரிய ஆலிம்களுக்கு பணி செய்ய இடம் அமைத்துக்கொடுப்பது, ஒற்றுமைக்காக உழைப்பது, அவ்வப்போது சமுதாயத்தின் வழிக்காட்டுதலுக்காக பிரசுரங்கள் வெளியிடுவது, இது போன்று மேலும் பலச் சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அவற்றை செய்ய எவ்வித பொருளாதார வசதியும் கிடையாது. ஆனாலும் எனது மாணவர்களின் மூலமாக இந்தச் சேவைகள் மிகச் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மாநில, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தீர்மானங்கள் நமது சமுதாய மக்களிடம் பரவலாக சென்றடைய இந்த பாசறை செயல்பட்டு வருகிறது.

இந்த பாசறையின் மூலமாக எனது மாணவர்களுடன் அவர்களின் நண்பர்களும், சமுதாய உணர்வு நிறைந்த இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது, எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

எப்படியாவது பொது நலச்சேவைகளும் சமுதாயப் பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்பது எனது ஆசையும், ஆவலுமாகும். 

அதை T.J.M பாசறையின் மூலமாக எனது மாணவர்களும் அவர்களின் நண்பர்களும் சமுதாய உணர்வு நிறைந்த இளைஞர்களும் செயல்படுத்துவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஹள்ரத் அவர்கள் இன்று வரை சுமார் ஐந்தாயிரம் மேடைகளில் சொற்பொழிவாற்றி இருப்பார்கள். 

எங்கு சொற்பொழிவாற்ற சென்றாலும் சொற்பொழிவுக்கு முன் அங்குள்ள ஆலிம்களை சந்தித்து அவ்வூரின் நிலை, மஸ்ஜித், மற்றும் மதரஸா நிர்வாகிகளின் செயல்பாடு, மற்றும் அவ்வூர் ஆலிமின் சூழ்நிலை என அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ப சொற்பொழிவாற்றுவது இயல்பாகும். 

அவ்வூரில் எவரேனும் தப்பு செய்தாலோ, அங்குள்ள ஆலிமிற்கு எவரேனும் தொந்தரவு செய்திருந்தாலோ அதை நாசூக்காக பயானில் சுட்டி காட்டி விடுவார்கள். 

அதுபோல் அவர்கள் ஒருமுறை தேனியில் பேசினார்கள். அதனை அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள்.

தேனி மாவட்டத்தில் பெரிய குளத்தில் ஷரீஅத் மாநாடு நடைப்பெற்றது. அங்கு வடகரையில் மௌலானா ஸைய்யத் இபுறாகீம் ஹள்ரத் அவர்களும், தென்கரையில் அஹ்மது இபுறாகீம் ஆலிம் அவர்களும் இமாமாக பணி செய்துக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் இருவரும் 80 வயதை தாண்டியவர்கள்.

மாநாட்டு மேடையில் முன்னிலை வகித்தார்கள். மாநாட்டிற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நான் சொற்பொழிவாற்றும் போது, நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் இந்த இரண்டு மௌலானாக்களைப்போல உழைத்து உழைத்து உருகுலைந்து போன எழும்பும் தோலுமாக உள்ள வயது முதிர்ந்த ஒட்டகை ஒன்று கண்ணீர் வடித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தது. 

வடித்த கண்ணீரின் பொருளை புரிந்துக்கொண்ட நபி (ஸல்) அவர்கள் இந்த ஒட்டகத்தின் சொந்தக்காரரை அழைத்து வாருங்கள் என்றார்கள். அவரும் வந்தார். 

அவரிடம், இந்த ஒட்டகையிலிருந்து கறக்க வேண்டிய அளவிற்கு பால் கறந்துவிட்டு, கடுமையான வேலையயையும் வாங்கிய பின்பு, வயோதிகமாக இருப்பதால் இந்த ஒட்டகையை கவனிக்காமல் தெருவில் விட்டு விட்ட உன்னை வன்மையாக கண்டிக்கிறேன். 

இதை உனது வீட்டிற்கு அழைத்து சென்று உணவு கொடுத்து கண்ணியமாக வைத்துக்கொள்கிறாயா? அல்லது உனக்கு உழைத்துப் போட்ட இந்த ஒட்டகையை நான் பாதுகாக்கட்டுமா? என்று கேட்டார்கள்.

அது போல உங்களுக்காக உழைத்து உருக்குலைந்துபோன இந்த இரண்டு மௌலானாக்களுக்கும் பெரிய அளவு உதவி செய்து கண்ணியம் செய்கிறீர்களா? அல்லது உங்களுக்கு உழைத்து நலிந்து போன இவர்களை எங்களிடம் ஒப்படைக்கிறீர்களா? என்று பேசினேன். 

அங்குள்ள நிர்வாகிகளுக்கு கோபம் வந்துவிட்டது. என்னை வார்த்தைகளால் தாக்க முயன்றார்கள்.

அங்குள்ள இளைஞர்கள் நான் பேசியதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் உணர்ந்து நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார்கள். 

கூட்டம் நிறைவுப் பெற்ற பின்பு மௌலானா ஹள்ரத் ஸைய்யத் இபுறாகீம் வீட்டிற்குசென்றேன். அப்போது மௌலானா அவர்கள் என்னிடம், "மேடையில் நாலு வார்த்தை நறுக்கென்று சொல்லி விட்டீர். எனக்கு மன நிறைவாக இருந்தது" என்று சொன்னார்கள்.

எனது அந்த சொற்பொழிவை கேட்டு ஜீரணிக்க முடியாமல் நிர்வாகிகள் தகாத வார்த்தைகளால் என்னை தாக்கினாலும் எனது சொற்பொழிவு மௌலானா அவர்களுக்கு திருப்தியாகவும், மனநிறைவாகவும் இருந்ததை நினைத்து இன்றளவும் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்!

ஷரீஅத் பேசுகிறது:
*********************

ஹள்ரத் அவர்கள் ஆலிமான புதிதில் இஸ்லாமிய இதழ்களான பிறைக்கொடி, வெள்ளிமலர், பத்ஹுல் இஸ்லாம், கண்மலர், அறமுரசு, போன்ற மாத இதழ்கள் மொத்தமாக தன்னிடம் வரவழைத்து வீடுவீடாக சென்று விற்பனைசெய்தார்கள். காரணம் மக்கள் இதன் மூலமாகிலும் பலன் பெறட்டுமே என்ற ஆசைதான்.

மேலும் ஹள்ரத் அவர்கள் 'ஷரீஅத் பேசுகிறது' என்ற பெயரில் 1984 முதல் 2000 வரை 16 ஆண்டுகள் பத்திரிக்கை நடத்தினார்கள். அதில் பல ஆக்கப்பூர்வமான பல பணிகளை சமுதாய பிரச்சனைகளை எழுதினார்கள். மக்கள் பலன் பெற்றார்கள்.

இன்னும் ஹள்ரத் அவர்கள் 1975 இல் "இப்லீஸின் அறைகூவல்" என்ற பெயரில் ஒரு சின்ன புத்தகம் வெளியிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது சமுதாயத்தின் அவசியம் கருதி சமீபத்தில் ஹாபிழ்களை வளர்ப்போம் ஹிப்ளுக் கலையை பாதுகாப்போம், சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் ஆலிம்கள் எல்லா ஊர்களிலும் மீலாது நடத்த வேண்டும் போன்ற இலவச பிரசுரங்களை வெளியிட்டார்கள். ஷரீஅத் பேசுகிறது மாத இதழ் நின்ற பிறகு அதற்கு பகரமாக இப்படி பல இதழ்களை வெளியிட்டு வந்தார்கள்.

செயலாளர்:
**************

T.J.M.  ஹள்ரத் அவர்கள் 1992 முதல் 2002 வரை மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக இருந்தார்கள். அச்சமயம் சமுதாயத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக பெருநாள், நோன்பு பிறைவிசயத்தில் குழப்பம் இல்லா நிலையை ஏற்படுத்தினார்கள். ஸதக்கத்துல் ஃபித்ர் ஷாஃபி , ஹனஃபி மத்ஹபின் 'படி' அளவுமுறையையும், சரியான அதன் கிரயத்தையும் வரைமுறைபடுத்தினார்கள். 

தமது பத்தாண்டுகால பதவியின் போது பல்வேறு வகையான சேவைகளை செய்துள்ளார்கள். தற்போது கடந்த சில ஆண்டுகளாக நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவராக இருந்தார்கள். மேலும் தாஜ்ஜு ஷரீஅத் அல்லாமா ஷம்சுல்ஹுதா ஹள்ரத் அவர்கள் மதரஸாக்களின் ஒருங்கிணைப்பு சங்கமான மஜ்லிஸுல் மதாரிஸுல் அரபியாவின் தலைவராக இருந்த போது பத்தாண்டுகள் T.J.M அவர்கள் செயலாளராக இருந்தார்கள். 

பேச்சாளர்:
************

ஹள்ரத் அவர்கள் சொற்பொழிவாற்றுவதற்கென்று 1990 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஷரீஅத் மாநாட்டிற்கும் 1993 இல் துபாய் ஈமான் சங்க மீலாது விழா கூட்டத்திற்கும் சென்றுள்ளார்கள்.

மேலும் ஹள்ரத் அவர்கள் தன் ஆசான் S.R.S ஷம்ஷுல் ஹுதா ஹள்ரத் அவர்களையே ஞானகுருவாகவும், ஆன்மீக ஞானியாகவும் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 2006 ஆம் ஆண்டு இறுதிக் கடமையான ஹஜ்ஜை செய்தார்கள்.

ஹள்ரத் அவர்களே என்னிடம் எழுத்து மூலம் எழுதிக்கொடுத்துள்ள ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். 

அதாவது ஆலிம்களோ மற்றும் பொதுமக்களோ, தலைவர்களோ, மஸ்ஜித், மதரஸா மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளோ ஏதேனும் தப்பு செய்து விட்டால், அச்சமயத்தில் அவ்வூருக்கு சொற்பொழிவாற்ற சென்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை மிக கடுமையாக தாக்கி பேசிவிடுவார்கள். இதனால் அங்கு சலசலப்பு ஏற்படும். "இவர் கொடுத்த தலைப்பில் பேச வேண்டியதுதானே” என்று கிசுகிசுப்பார்கள். 

ஆனால் இந்தப்பேச்சுக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்கள் திருந்திவிடுவார்கள். பேச்சின நோக்கம் நிறைவேறிவிடும்.

அதேபோல் எவரேனும் ஊர்மக்களுக்கு நல்லது செய்ததாக செவியேற்றால், அவர்களை அதே மேடையில் மிகவும் பாராட்டி தமக்கு போர்த்திய பொன்னாடையை சிலசமயங்களில் அவருக்கும் போர்த்தி கண்ணியப் படுத்துவார்கள். 

அதனால் அதுபோன்ற சேவையாளர்கள் அதே ஊரில் அதிகரிப்பார்கள். அதை செய்வதுதானே ஆலிம்களின் கடமை?
 

ஜமாஅத்துல் உலமா சபையை பற்றியும், அதில் தாங்கள் இருந்ததைப் பற்றியும் சொல்லுங்கள் என்று மவ்லானா T.J.M.ஹள்ரத் அவர்களிடம் கேட்டபொழுது, அவர்களே எழுதி கொடுத்தது.

ஜமாஅத்துல் உலமா சபை வழியாக நான் வந்த பாதையில் எதிர்கால ஆலிம்களுக்காக சில வழிகாட்டல் நினைவுபடுத்துகிறேன்.

மாநில ஜமாஅத்துல் உலமா சபையில் மூன்று முறை மொத்தம் பத்து வருடம் பொது செயலாளராக இருந்தேன்.

சங்கையான ஆலிம்களின் பெரும் துணையுடனும் ஆதரவுடனும் சபை மகத்தான வளமிக்க சக்தியாக வளர்க்கப்பட்டு எல்லாரையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டு சபை என்ன சொல்கிறது என்பதாக பார்த்து செயல்பட வைத்தது பெரும் சாதனை ஆகும்.

மார்க்க சட்டபிரச்சனைகளில் சங்கையான ஆலிம்களும், அரபிக் கல்லூரிகளும் பலதரப்பட்ட தெளிவுகளை சொல்லிக் கொண்டிருந்தாலும் சமுதாய மக்கள் ஜமாஅத்துல் உலமா சொல்வதைக் கேட்டு அப்படியே செயல்பட்டது ஜமாஅத்துல் உலமா சபையின் வெற்றியாகும்.

பிறை தொடர்பாக பலதரப்பட்ட குழப்பங்கள் நீடித்து மக்களை கசக்கிபிழிந்து கொண்டிருந்தபோது மாநில சபையும் தலைமை காஜியும் பிறை தொடர்பாக சொல்வதை மட்டும் உறுதியான முடிவாக எடுத்து அப்படியே செயல்பட வேண்டும் என்ற அமைதியான நிலைபாடு உருவாக்கப்பட்டு, பிறை தொடர்பான நாளில் 9 மணிக்கு மேல் வரும் தகவல்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும், தொடர்ந்து பிறை பார்க்கும் நாளில் தெளிவான தகவல் கிடைத்திட அந்த நாளில் தலைமை காஜி அருகில் மவ்லவி சைய்யது மஸ்வூது ஜமாலி அவர்களும், K.M.அபுதாஹிர் சிராஜி அவர்களையும் அமரச் செய்து பிறை குழப்பம் தீர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.

சதகத்துல் ஃபிதர் ஹனஃபி 1600 அல்லது அதன் காலகிரயம், ஷாஃபி 2500 தானியமாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நிலையில் சில பென்னம் பெரிய ஆலிம்களின் தீர்வின் படியும் ஆய்வின் படியும் ஹனஃபியை தழுவி ஷாஃபிகளும் அன்றைய காலகிரயத்தை கொடுத்து கொள்ளலாம்.

கூத்தாநல்லூர் மன்பவுல் உலாவில் மாணவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் மதரஸா மூடப்பட்டது. கமிட்டி கூடி இனிமேல் இந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மதரஸாவில் சேர்த்து கொள்வதில்லை என்பதுடன் ஆசிரியர்களுக்கு போனஸ் கொடுக்கமாட்டோம். 

இவர்கள் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்பதாக முடிவு
செய்து மினிட் புக்கில் பதிவு செய்துவிட்டார்கள். 

நான் சில ஆலிம்களுடன் கூத்தாநல்லூருக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து பேசிய போது எங்களிடம் அவர்கள், "நீங்கள் எங்கள் மதரஸாவில் ஒதவும் இல்லை, ஓதி கொடுக்கவும் இல்லை அல்லாஹ் ரசூல் கல்விகூடம் என்பதற்காக நீங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளீர்கள் உங்களோடு ஒத்துழைக்கிறோம். மினிட்டில் ஏற்றியதை கிழித்துவிடுகிறோம் உங்கள் விருப்பப்படி மதரஸாவை திறக்கிறோம்" என்றார்கள். 

ஜமாஅத்துல் உலமா சபையின் பொறுப்பில் நான் இருக்கும் போது கடுமையான பாதிப்பில் தள்ளப்பட்ட சில ஆலிம்கள் குடும்பத்திற்கு சமுதாய மக்கள் உதவியுடனும் சங்கையான ஆலிம்களின் துணையுடனும் பல லட்ச ரூபாய் சேர்த்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, நான் பொறுப்பில் இல்லாத போதும் பாதிக்கப்பட்ட ஆலிம்களின் குடும்பத்திற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பணம் சேர்த்து கொடுத்திருக்கிறேன். 

T.J.M. அறிவிப்பு என்றதும் சமுதாய மக்கள் தாரளமாக பண உதவி செய்தார்கள். எனக்கு ஜமாஅத்துல் உலமா பதிவு இருப்பதை அறிந்து கொண்ட சமுதாய மக்கள் இப்படியெல்லாம் தாராளமாக உதவி செய்தார்கள்.

அச்சம் தயை தாட்சணம் இல்லாமல் உள்ளதை உள்ளபடி உரக்க பேசியதால் மக்கள் மத்தியில் கண்ணியமும் தனிப்பார்வையும் நிரம்ப இருந்தது என்றாலும் சிலருடைய எதிர்ப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் அடுத்தடுத்த காலங்களில் வெற்றி கிடைத்தது.

மீலாது விழாக்கள் மூலமாக சமுதாய மக்கள் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் இப்படியாக பலரும் பயன் அடைந்தார்கள்.

மனிதாபிமானம் மனிதநேயம் ஒற்றுமை எல்லாம் மீலாது விழாவால் வளர்ந்தோங்கியது. பிறந்தநாள் விழாக்கள் கண்டிக்கதக்கது என்றெல்லாம் சிலர் பிரச்சாரம் செய்து இடைக்காலத்தில் மீலாது விழாக்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. 

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக மீலாது விழாக்களின் அவசியம் பற்றி நோட்டீஸ் மற்றும் பத்திரிக்கைகள் வழியாக சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்திகளை உத்வேகத்துடன் கொண்டு சென்றதால் நல்ல பலன் கிடைத்து கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் முந்திய காலம் மாதிரி மீலாது விழாக்கள் எல்லா ஊர்களிலும் மஹல்லாகளிலும் பரவலாக நடைபெற்று வருவது மிகுந்த மன நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்!" என்று ஹள்ரத் அவர்கள் கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்