பெரிய வடகரையின் முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?:

பெரிய வடகரையின் 
முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?:
==================================

ஒருநாள் திருச்சி நத்ஹர் வலி (ரஹ்) அவர்கள், பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களை அருகில் அழைத்து, அவர்களுக்குக் கிலாஃபத் - என்னை போல் நீங்களும் செயல்படுங்கள் என ஆசி நல்கி, தங்களின் பல் துலக்கும் குன்னி மரக்குச்சியையும் அவர்களிடம் கொடுத்து ''இதனை எடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்கள் . 

இரவு தங்குமிடத்தில் இதனை மண்ணில் ஊன்றி வையுங்கள். வைகறையில் இது எந்த இடத்தில் முளைத்திருக்கிறதோ அதனையே உம்முடைய தங்குமிடமாக ஆக்கி, இஸ்லாத்தைப் பரப்பி வாருங்கள்" என்று கூறினார்கள். 

அவ்வாறே அவர்கள் புறப்பட , அவர்களுடன் இருநூறு ஃபக்கீர்களும் -  சீடர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

ஊர், ஊராக அவர்கள் தங்கிக் கொண்டே சென்றார்கள். தங்கும் இடமெல்லாம் அக்குச்சியை ஊன்றி வைத்தார்கள். ஒரு இடத்திலும்  அது தளிர்க் கவில்லை. 

ஓரிரவு அவர்கள் ஒரூரை அடைந்து, அங்கு இரவுத் தங்கினார்கள், வழக்கம் போல் தம் குருநாதர் தந்த குன்னி மரப் பல்குச்சியை அவ்விடத்தில் நட்டிவிட்டுத் உறங்கினார்கள். 

வைகறைத் தொழுகைக்கு எழுந்த அவர்களின் பார்வை, அந்தப் பற்குச்சியின் மீது எதிர்பாரா வண்ணம் பட அது தளிர்த்திருந்ததை கண்டார்கள். 

உடனே அவர்கள் தம்முடன் வந்திருந்த ஃபக்கீர்களை - சிஷ்ய துறவிகளை அழைத்து அந்த அற்புதத்தைக் காட்டினார்கள். 

அவர்களும் தங்களின் கண்களைத் துடைத்துக் கொண்டு அதனை உற்று உற்றுப் பார்த்து, "ஆம், ஆம்'' என்று கூறிய வண்ணம் மகிழ்ச்சித்  கூத்தாடினார்கள். 

இதுவே தங்களின் தங்குமிடம் என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள்,"இவ்வூரின் பெயர் என்ன? இவ்வூரின் பெயர் என்ன?" என்று ஒருவர் மற்றொருவரைக் கேட்டுக் கொண்டார்கள். 

ஒருவருக்குமே அவ்வூரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அப்பொழுது அவ்வழியே சில வழிப் போக்கர்கள் செல்ல, அவர்களிடம் அந்த ஊரின் பெயர் என்ன என்று வினவினர். 

'பில்குண்டா' என்று பதில் சொல்லி  விட்டுச் சென்றார்கள். அப்பொழுது ஃபக்கீர்களுடைய வாய்களும் பில்குண்டா, பில்குண்டா என்று முணுமுணுத்தன. 

இப்பொழுது ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் 'பெனு கொண்டா' என்று வழங்கப் பெறும் ஊரே அது.

அடுத்த நாள் இரவு அவர்கள் அங்குள்ள கோயிலின் முற்றத்தில் தங்கி உறங்கினார்கள். இது அரசனுக்குத் தெரியவரவே அவன் ஆட்களை அனுப்பி அவ்விடத்தை விட்டும் அகலுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான். 

அன்றிரவு மட்டும் அங்குத் தங்கிவிட்டுச் செல்வதாக அவர்கள் கூறினார்கள். 

இந்த நியாயமான கோரிக்கை அவனுக்கு அவமதிப்புப் போன்று தோன்றியது. அவர்களைப் பட்டினி போட்டுத் தண்டிக்க எண்ணிய அவன் தம் படையினரை அனுப்பி, அக் கோயிலைச் சூழ்ந்து கொள்ளுமாறும், எவரையும் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டா மென்றும் கண்டிப்பாக உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.

கோயில் முற்றத்தில் தங்கியிருந்த ஃபக்கீர்கள் விடிந்தெழுந்ததும், தொழுது விட்டு அவ்விடத்தை விட்டும் வெளியேற முற்பட்ட பொழுது அவர்கள் இராணுவ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். 

காரணம் வினவப்பட்ட பொழுது, அவர்கள் 'அரச ஆணை' என்று மட்டும் பதில் கூறினார்கள். ஃபக்கீர்களுக்கோ இந்த அரச ஆணை புரியாத புதிராக இருந்தது.

முற்றுகை பல நாட்கள் நீடித்தது. ஃபக்கீர்கள் கொண்டு வந்திருந்த
உணவுப் பொருள்களெல்லாம் முடிந்துவிட்டன. இனி என்ன செய்வதென அறியாமல் அவர்கள் கலங்கினார்கள். பசி அவர்களின் வயிற்றைக் கிள்ளியது. 

அப்பொழுது கொழுத்த கோயில் காளை ஒன்று அவர்களின் முன் எதிர்ப்பட அதனைப்பிடித்து அறுத்துக் கறி சமைத்துத் தாமும் உண்டு தம் குருநாதர் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களின் முன்பும் அக்கறியைக் கொண்டு போய் வைத்து 'உண்ணுக' என்று வேண்டி நின்றனர்.'

"கறி ஏது?" என்று வினவிய அவர்களிடம், விவரத்தைக் கூறினார்கள் ஃபக்கீர்கள். 

அது கேட்டு மகிழ்ந்து பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களும் அதனை உண்டு பசி தீர்ந்து அமர்ந்திருந்தனர்.

கோயில் காளையைப் ஃபக்கீர் கூட்டத்தினர் அறுத்துச் சமைத்து உண்டச் செய்தி அரசனின் செவியில் பட்டதும் அவனுக்கு ஏற்பட்ட சினத்திற்கு அளவே இல்லை. 

உணர்ச்சி வசப்பட்ட அவன் தானே சென்று அவர்களைத் தண்டித்து வரக் கிளம்பினான்.

நேரே பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களின் திருமுன் வந்த அவன், கடுமையான வார்த்தைகளாலும் தகாத வார்த்தைகளாலும் பேசினான். 

அவற்றால் சிறிதும் அமைதி குலையாமல் அவன் கூறுவது அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில், "நல்லது; உமக்குக் காளை தானே வேண்டும்?" என்றார்கள். "ஆம்; காளைதான் வேண்டும். அதே காளை தான் வேண்டும்” என்று, 'அதே' என்ற சொல்லை அழுத்தமாகக் கூறினான்.

உடனே பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் தாம் உண்ட பின், அங்கு சிதறிக் கிடந்த அந்தக் காளையின் எலும்புகளைத் தம் திருக் கரத்தால் ஒன்று சேர்த்து  'காளையே எழுந்திரு' என்று பணித்தார்கள். 

என்ன வியப்பு! வினாடி நேரத்தில்  அந்தக் பொலிகாளை பொலிவுடன் எழுந்து நின்றது. 

அதைக் கண்டதும் அரசனுக்கு ஏற்பட்ட வியப்பிற்கும், அச்சத்திற்கும் அளவில்லை. தாம் சாதாரண ஃபக்கீர் என்று எண்ணிய அவர், மாபெரும் மகானாக இருப்பதைக் கண்டதும், அவனை ஒருவித நடுக்கம் ஆட்கொண்டது. உள்ளமும் உடலும் சேர்ந்து உதற, அவர்களின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கோரினான் அவன். 

பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் அவனைப் பெரு மனத்துடன் மன்னித்தார்கள்.

அரண்மனை திரும்பிய அரசனின் உள்ளத்தில் என்னவென்னவோ தீய எண்ணங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுத்தது. 

அவர்களைக் கொன்றால் தான், தாம் சுதந்திர மன்னனாக வாழ இயலும் என்றும் இல்லையேல் என்றென்றும் அவர்களின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே தமக்கு ஏற்படும் என்றும் நினைத்த அவன், அவர்களைக் கொன்று விட சதி ஆலோசனையில் ஈடுபட்டான்.

நஞ்சிட்ட தின்பண்டங்களைத் தயார் செய்து அவர்களுக்குக் காணிக்கையாக அனுப்பி வைத்தான்.

அவனின் உள்ளத்தின் ஒவ்வோர் அசைவையும் தம் உள்ளுணர்வால் விளங்கி வந்த பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள், தம்முன் அரசனின் காணிக்கையான தின் பண்டக் கூடை வந்து இறங்கியதும், புன்முறுவல் பூத்தார்கள். 

பின்னர் அதில் தம் திருக்கரத்தை வைத்து பிரார்த்தனை செய்து விட்டு ஐந்து பணியாரங்களை எடுத்துத் தம் முன் உட்கார்ந்திருந்த ஐந்து ஃபக்கீர்களுக்கு ஆளுக்கு ஒன்று வீதம் கொடுத்தார்கள். 

அவர்கள் அவற்றைப் பெற்றுச் சுவைத்துச் உண்டார்கள். அந்நஞ்சால் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், அவர்கள் அவற்றைச் சுவைத்துத் தின்னத் தின்ன அந்நஞ்சு அரசனின் வயிற்றிற்குள் இறங்கினாற் போன்று அவனுக்குத் தாங்க முடியாத வலியை உண்டாக்கியது. 

ஃபக்கீர்களின் தாடை அசைய, அசைய அவனின் வயிற்றை வலி கெளவிப் பிடித்துப் பிசைந்தது. 

வலி தாங்க இயலாமல் அலறினான். அரண்மனை மருத்துவர்கள் ஓடோடி வந்து மருந்து கொடுத்தும், அதனால் யாதொரு பயனுமில்லை. மந்திரவாதிகள் வந்து மந்திரித்தும் வலி தீரவில்லை.

தன் வினை தன்னைச் சுட்டது என்பதை விளங்கிக் கொண்ட அரசன், தம் மனைவியை பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களிடம் அனுப்பித் தம் தவற்றை மன்னிக்குமாறும், தன் வயிற்று வலி நீங்க இறைஞ்சுமாறும் வேண்டிக் கொண்டான். 

மகான் அவர்களிடம் ஓடோடி வந்த அரசி அவ்வாறே செய்ய மகான் அவர்கள் அரசன் அனுப்பிய பணியாரங்களில் ஒன்றை எடுத்து, அரசியின் கையில் கொடுத்து அதனைத் தன் கணவனுக்குக் கொடுக்குமாறும், அதனை அவர் உண்டதும் வயிற்று நோய் நீங்கப் பெறுவார் என்றும் நற்செய்தி கூறினார்கள்

தான் அனுப்பிய பணியாரங்களில் ஒன்றே தன் பிணி தீர்க்கும் அரு மருந்தாக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டதும், அரசனின் உள்ளத்தில் ஆயிரம், ஆயிரம் ஐயங்கள் தோன்றி மறைந்தன. 

எனினும் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து அதனை உண்டான். உண்ட சில நிமிடங்களில், அவனைப் பீடித்திருந்த வயிற்று நோய் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

இதன்பின் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் மீது அரசனுக்கு அளவற்ற பக்தி ஏற்பட்டது. இதன்பின் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள், அவ்விடத்திலேயே தங்கி ஆன்மீகச் செங்கோல் செலுத்தி வந்தார்கள். 

ஆண்டுதோறும் திருச்சி சென்று தம் குருநாதர் நத்ஹர் வலி (ரஹ்) அவர்களை தரிசித்து வருவதைத் தங்களின் நீங்கா வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 

அவர்களின் அடக்கவிடம் பெனுகொண்டாவில் இருக்கிறது. அங்கு அவர்களின் குருநாதரின் பற்குச்சி முளைத்துப் பெருமரமாக நிற்பதை இன்றும் காணலாம். 

பஞ்சுத் தொழிலாளர்கள் அவர்களைத் தங்களின் மகானாகக் கருதி, ஆண்டுதோறும் அவர்கள் மரணித்த நாளாகிய ஜமாதுல் ஆகிர் பிறை 11 ஆம் நாள் மிகப்பெரிய அளவில் விழா எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

பெனுகொண்டாவிற்கும் திருச்சிக்குமான தொடர்பு :
==========================

தப்லே ஆலம் நத்ஹர் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 347 / கி.பி.  14 / 02 / 952 சனிக்கிழமை அன்று பிறந்தார்கள். சுமார் 19 வருடங்கள் திருச்சி நகரில் வாழ்ந்து 18 / 10 / 1026 களில் மரணித்தார்கள். 

நத்ஹர் (ரஹ்) அவர்களிடம் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் சுமார் கி.பி.  1019 களில் வந்து ஒரு வருட காலம் தங்கியிருந்து ஞானத் தீட்சைப் பெற்றார்கள். 

பின்னர் அவர்கள் கூறிய வழிமுறைப்படியே இன்றைய ஆந்திராவிற்குச் சென்று பெனுகொண்டா பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரங்களைச் செய்து கொண்டு இருந்தார்கள்.  

நத்ஹர் (ரஹ்) அவர்கள் உயிரோடு இருந்த காலம் வரை வருடத்திற்கு ஒருமுறைச் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு சில நாட்கள் தங்கி இருந்து ஞானம் பெற்றுத் திரும்பினார்கள்.

நத்ஹர் (ரஹ்) அவர்கள் மரணித்த பிறகு பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும் காலம் வரை ஒவ்வொரு வருடமும் நத்ஹர் (ரஹ்) அவர்களின் அடக்கத் தலத்திற்குச் சென்று ஜியாரத் செய்துவிட்டு வந்தார்கள். 

இவர்கள் போகும்போது ஆயிரக்கணக்கான சீடர்களை அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள். அப்படிச் செல்கிற அனைவரும் திரும்பி வந்து விடுவதில்லை. சிலர் அப்பகுதியிலேயே குடியேறி விடுவார்கள். 

இந்நிலையில் பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுடைய சீடர்கள் திருச்சிக்கு வந்து ஜியாரத் செய்து விட்டு திரும்பிச் செல்வார்கள். 

இப்படியாக பெனுகொண்டாவிற்கும் திருச்சிக்குமான தொடர்பு இருந்து வந்தது. 

இந்தத் தொடர்பின் வழியாகத்தான் பெனுகொண்டா பகுதியில் பருத்தி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள் நத்ஹர் (ரஹ்) அவர்களை ஜியாரத் -  தரிசனம் செய்ய திருச்சிக்கு வந்திருந்த போது திருச்சியின் நீர் வளத்தையும் காவேரி ஆற்றங்கரையின் இரு புறத்திலும் உள்ள நில வளத்தையும் பார்த்த  சில முஸ்லிம்கள் இப்பகுதியில் குடியேறி தாம் வழமையாகச் செய்யும் பருத்தி விவசாயத்தை இப்பகுதியில் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கி.பி. 1000 காலகட்டத்தில்  திருச்சி காவேரி கரையின் வடக்கு புறத்திலிருந்து விழுப்புரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் தெற்குப் பகுதி வரை உள்ள இடைப்பட்ட நிலப்பரப்பில் பருத்தி விவசாயம் அவ்வளவாக இல்லை என வரலாற்று ஆவணங்களும், ஆய்வாளர்களும்  கூறுகிறார்கள். 

கி.பி. 1000 திற்குப் பிறகுதான் இந்தப் பகுதியில் பருத்தி விவசாயம் பெருகியதாக வரலாற்று ஆவணங்கள் சாட்சி சொல்கிறது. 

பெனுகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் மற்றும் சகோதரச் சமயத்தைச் சார்ந்தவர்கள்  பழைய திருச்சி மாவட்டத்தில் குடியேறி பெருமளவு பருத்தி விவசாயத்தை செய்து இருக்கிறார்கள். 

எனக்குத் தெரிந்து 1985 கள் வரை பெரிய வடகரை போன்ற வானம் பார்த்த பூமி உள்ள நிலப்பரப்பில் பருத்தி மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 

இந்த தரவுகளின் அடிப்படையில் நமது பெரிய வடகரை கிராமத்தின் முன்னோர்கள் பெனுகொண்டா பகுதியில் இருந்து கூட வந்து குடியேறி இருக்கலாம். 

பெரம்பலூர் மாவட்டத்திலும் பழைய திருச்சி மாவட்டத்திலும் தெலுங்கு பேசும் முஸ்லிம்கள் பெனுகொண்டா பகுதியில் இருந்து வந்தவர்களாகவே இருக்கலாம். 

முதல் இரண்டு படங்களும் திருச்சி நத்தர் வலீ தர்கா ஆகும். 

அடுத்த இரண்டு புகைப்படங்களும் பெனுகொண்டா தர்கா புகைப் படங்களாகும். அடுத்தப் படம் குன்னி மரம்.

ஆதார நூல் :  வலிமார்கள் வரலாறு பாகம் 2 . ஆசிரியர்:  எம். ஆர். எம். அப்துல் ரஹீம் அவர்கள். இவர்களுக்கு ஆதார நூல் : ஃப தாரிகுல் அவ்லியா எனும் அரபி நூல்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்