நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக பொய் சொன்னால்..... :

நபி ஸல் அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
===========================

4

நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக பொய் சொன்னால்..... :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இஸ்லாமிய மார்க்கத்தில் பொய் சொல்வது ஹராம் -  தடை செய்யப்பட்டு இருக்கிறது. பொய் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் இரண்டும் ஒரே நிலையில் உள்ள தவறுதான். 

பொதுவாகவே யாரைக் குறித்து பொய் சொல்கின்றோமோ அவரின் சாபம் பொய்ச் சொன்னவருக்குக் கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் ; "பின்னர் நாம் சத்தியம் செய்து, பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்போம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! 3:61

பொய் சொல்கிறவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், நபி (ஸல்) அவர்களின் சாபம் ஏற்படும். நபி (ஸல்) அவர்கள் யார் குறித்து சாபம் செய்தார்களோ அதை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் பொய் சொல்கிறவர்களுக்கு நேர்வழியை வழங்க மாட்டான்.

அல்லாஹ் கூறுகிறான்; நிச்சயமாக இறை மறுப்பாளர்களான பொய்யர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 39:3

கனவுகள் விஷயத்தில் பொய் சொல்வதும், நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டதாக பொய் சொல்வதும் மிகப்பெரும் பொய்யும் குற்றமும் ஆகும். அது அருவருக்கத்தக்க செயலும் ஆகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தமது கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும்.

நூல்: புகாரி 7043

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தாம் காணாதக் கனவைக் கண்டதாகந் திட்டமிட்டுச் சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 

நூல்: புகாரி 7042

ஒரு மனிதனால் இரண்டு கோதுமைகளை முடிச்சுப் போட இயலாது. அது சாத்தியமே இல்லை. ஆனால் அதைச் செய்யும்படி தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவார். அதுதான் அவருக்கான தண்டனை. 

அவர் உலகத்தில் வாழும்போது நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறினார். அதனால் மறுமையில் அவருக்கு நடக்கச் சாத்தியமில்லாத ஒன்றைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்.

அதனால் அவர் நரகத்தில் களைப்பையும், அவமானத்தையும், இழிவையும், மன அமைதியின்மையையும் சந்திக்கிறார். இதுவே பொய்யர்களுக்கு இறைவன் வழங்கும் தண்டனையாகும்.

முகீரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றது அல்ல! யார் என் மீது வேண்டுமென்றே பொய் கூறுகின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.

நூல் : புகாரீ 1291

பொதுவானக் கனவுகளைப் பார்த்ததாகவோ, கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததாகவோ சொல்வது மிகப்பெரும் பாவச் செயலும் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். 

எனவே இவ்வாறான குற்றச் செயல்களில் இருந்து அனைவரும் விலகிக் கொள்ள வேண்டும். 

சிலர், நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் அதற்கு எந்த வகையான ஆதாரங்களும் இல்லை. " 

நீ கனவில் என்னத்தைப் பார்த்தாய்?" என்று கேட்டால், "வெள்ளை உடை உடுத்திய, வெள்ளையான ஒரு மனிதரை நான் பார்த்தேன்" என்பது போன்று தான் சிலர் சொல்லுகிறார்கள். இது மிகப்பெரும் அருவருப்பான பொய்யாகும். 

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்