நபி தாவூத் (அலை) அவர்கள் எப்படி மரணித்தார்கள்?
நபி தாவூத் (அலை) அவர்கள்
==========================
தாவூத் நபியின் மரணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளதாவது;
தாவூத் (அலை) அவர்கள் மிக அதிகமான ரோஷம் உடையவராக இருந்தார்கள். எனவே அவர் வீட்டிலிருந்து வெளியேறினால் கதவுகள் பூட்டப்பட்டுவிடும். அவர் திரும்பி வருகிற வரை யாரும் அவர் குடும்பத்தாரிடம் செல்ல முடியாது.
ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்தார் . வீடு பூட்டப்பட்டது. அப்போது அவருடைய மனைவி வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்தார்; அப்போது ஒருவர் வீட்டின் நடுவே நின்று கொண்டிருந்தார். வீடு பூட்டப்பட்டிருக்கும்போது இந்த மனிதர் எப்படி நுழைந்தார் என்று வீட்டினுள் இருந்தவர்களிடம் தாவூத் (அலை) அவர்களின் மனைவி கேட்டார்.
அல்லாஹ் மீது ஆணையாக! இன்று நாம் தாவூத் (அலை) அவர்களால் நிச்சயமாகக் கேவலமடையப் போகிறோம் (அதாவது அவர் நம்மைத் திட்டப் போகிறார்) என்றும் சொன்னார்.
தாவூத் (அலை) அவர்கள் வந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள். அப்போது திடீரென ஒரு மனிதர் வீட்டின் நடுவே நிற்பதைக் கண்டார். தாவூத் நபி அவரிடம், “நீர் யார்?" என்று கேட்டார்கள்.
“நான் அரசர்களுக்கு அஞ்சாதவன்; பாதுகாப்பாளர்களால் தடுக்கப்பட முடியாதவன்” என்று பதிலளித்தார்.
அதற்கு தாவூத் (அலை) அவர்கள், "அவ்வாறாயின் நீர் உயிர் பறிக்கும் வானவர்தான், அல்லாஹ்வின் கட்டளையே வருக!" என்று கூறினார்.
பின்னர் “தாவூத் (அலை) அவர்கள் அமைதிகாக, அங்கேயே (குறுக்கும் நெடுக்குமாக நடந்த வண்ணம் இருந்தார்கள்.) இறுதியில் அவரது உயிர் கைப்பற்றப்பட்டது”
பின்னர் அவருடைய உடல் குளிப்பாட்டப்பட்டு பிரேத ஆடை அணிவிக்கப்பட்டு இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிவுற்றபோது சூரியன் உதித்தது.
அப்போது (அவருடைய மகன்) சுலைமான் (அலை) பறவைகளிடம், "தாவூதுக்கு நிழலிடுங்கள்" என்று கூறினார்.
எனவே பறவைகள் அவருக்கு நிழலிட்டன; அதனால் பூமியே இருட்டாகிவிட்டது.
அப்போது சுலைமான் (அலை) பறவைகளிடம், “உங்கள் இறக்கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்பறவைகள் எப்படிச் செய்தன என்று எங்களுக்குச் செய்து காட்டினார்கள்; நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையைப் பிடித்துக்
காட்டினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
அந்நாளில் அவருக்கு நிழலளிப்பதில் நீண்ட இறக்கைகள் கொண்ட இராஜாளிகள் மிகைத்திருந்தன.
நூல் : முஸ்னது அஹ்மத்
தாவூத் நபியின் இறுதி ஊர்வலம் :
===============================
வஹப் பின் முனப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக இஸ்ஹாக் பின் பிஷ்ர் (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருப்பதாவது;
தாவூத் (அலை) அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டனர். அது ஒரு கோடைக்காலம். ஆதலால் அவர்கள் கடுமையான வெயிலில் அமர்ந்து இருந்தனர். அவருடைய ஜனாஸாவில் பொதுமக்கள் தவிர்த்து மார்க்க அறிஞர்கள் மட்டும் நாற்பதாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் நீண்ட தொப்பிகள் அணிந்திருந்தனர். மூஸா, ஹாரூன் (அலை) ஆகிய இருவருக்குப் பிறகு இஸ்ரவேலர்கள் அதிகம் மனத்துயரத்துக்கு ஆளான ஒருவரின் மரணம் என்றால் அது தாவூத் (அலை) அவர்களின் மரணம்தான்.
அந்நேரத்தில் வெயில் கடுமையாக அவர்களை வாட்டி வதைத்தது. அவர்களை வாட்டி வதைத்த வெயிலிலிருந்து பாதுகாக்குமாறு சுலைமான் (அலை) அவர்களிடம் கோரினர்.
எனவே அவர் வெளியே சென்று பறவைகளை அழைத்தார்; அவை அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரிடம் வந்தன.
மக்களுக்கு நிழலிடுமாறு அவர் அப்பறவைகளிடம் கேட்டுக்கொண்டார்.
எல்லாப் புறத்திலிருந்தும் ஒன்றோடு ஒன்றாகத் தம் இறக்கைகளை வரிசையாக விரித்து வெயில் படாதவாறு மூடிக்கொண்டன.
இதனால் காற்று அடைபட்டுவிட்டது. அத்துன்பத்தால் அவர்கள் இறந்துவிடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.
எனவே அத்துன்பத்தை அகற்றுமாறு சுலைமான (அலை) அவர்களைச் சப்தமாக அழைத்தார்கள்.
எனவே சுலைமான் நபி சென்று, பறவைகளை அழைத்து, காற்றிற்கு வழிவிட்டு, சூரிய வெப்பத்திலிருந்து மட்டும் நிழலிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே அவை செய்தன.
இப்போது காற்று வீசுவதுடனே நிழலில் அவர்கள் இருந்தார்கள். அப்போதுதான் முதன்முறையாக சுலைமான் (அலை) அவர்களின் அதிகாரத்தை அவர்கள் நேரில் கண்டனர்.
நூல்: அல் பிதாயா வந் நிஹாயா
Comments
Post a Comment