புத்தகம் குறித்து அவர்களின் கருத்து :

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரலாற்று வழியில் பெரிய வடகரை நூலுக்கு  அணிந்துரை வழங்கி இருந்தார்கள். 

அவர்களை சந்தித்து புத்தகத்தை வழங்கிய போது....

புத்தகம் குறித்து 
அவர்களின் கருத்து :
====================

பசுமை நிறைந்த நினைவுகளை அசைபோடுவது யாருக்கும் பிடிக்கும். இந்நூலை வாசிக்கும் போது எனக்கு எனது சொந்த ஊர் நினைவுகளும் மனதில் ஊசலாடி மறைகின்றன. நான் அறிந்தே இராத புதியதொரு கிராமத்தையும் சான்றோர் பெருமக்களையும் இந்நூல் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

பொதுவாகவே வரலாற்றைப் பதிவு செய்கிற போது மூன்று படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. 

ஒன்று:  கல் வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, வெளிநாட்டார் குறிப்பு போன்றவற்றிலிருந்து பதிவு செய்யப்படுவது. 

இரண்டு: இலக்கியங்களின் வழியாகப் பதிவு செய்யப்படுவது. 

மூன்று : வாய்மொழித் தரவுகள் மூலம் பதிவு செய்வது. 

இந்நூலில் மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி வரலாற்றைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

முதல் அத்தியாயத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில், பின்னணியில் யார் யாரெல்லாம் ஆண்டார்கள் என்கிற வரலாற்றுத் தரவை மிகத் தெளிவாக ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளார். 

அந்த மாவட்டத்திற்கு முஸ்லிம்கள் எவ்வாறு குடியேறி இருக்க முடியும் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் அபூர்வமானவை. 

குறிப்பாக தெலுங்கு பேசும் 'பஞ்சு கொட்டி' முஸ்லிம்கள் குறித்த பதிவுகள் பெரிதாக எந்த நூலிலும் கிடையாது. 

இந்நூலில் அவர்கள் குறித்தான பதிவு விரிவாக அடங்கியிருப்பது மகிழ்ச்சி.

நூலாசிரியர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பல தரவுகளை நினைவாற்றல் கொண்டு மிக எளிமையாக வகைப்படுத்தி புனைவு இல்லாமல் எழுதியுள்ளார். 

மௌலானா, முஹம்மது அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் குறித்தான பதிவுகளும் அவர்களால் அந்தப் பகுதியில் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த பதிவுகளும் வியப்பூட்டுபவை.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன்முதலில் அரபுத் தமிழ் அகராதித் தந்த மாமேதை முஹம்மது சுல்தான் ஹள்ரத், அந்த ஊரைச் சார்ந்தவர்தான் என்ற தகவலும் நெகிழ்ச்சிக்கு உரியது.

தமிழகத்தின் பல்வேறு இதழ்களில் எழுதிக் குவித்த அப்துல் பாரி பாகவி அவர்களும் பெரிய வடகரையைச் சேர்ந்தவர் தான் என்பதையும் இந்நூல் வழியாக
அறியமுடிகிறது.

தமிழகத்தில் இதே பெயரில் வேறு சில ஊர்கள் இருந்தாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வடகரை எனும் ஊரின் வரலாற்றுச் சிறப்பை உலகறியச் செய்வதில் இந்நூலுக்கு பெரும் பங்கு உண்டு.

ஓர் ஊரின் வரலாற்றையே பதிவு செய்வதென்பது ஆகக் கடினமான வேலை. அதனைச் செவ்வனே செய்து இருக்கும் மவ்லவி, கலீலுர் ரஹ்மான் மன்பயீ பாராட்டுக்குரியவர். 

இந்நூலில் இடம்பெற்றுள்ள சான்றோர் பெருமக்கள் அனைவரின் பாவங்களையும் வல்ல இறைவன் மன்னித்து அவர்களது மறுமை வாழ்க்கையைச் சிறப்பாக்கித் தருவானாக என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இந்நூலில் எடுத்துக் கொள்ளப்படும் வரலாற்றுச் செய்திகள் கருத்துகள் எல்லாம் இன்றைய தமிழ் சமுதாயத்தினரால் ஆழமாகச் சிந்தித்து வருங்கால வளர்ச்சிக்கான நடைமுறைகளை வகுத்துப் பேணுவதற்கு வழிகாட்டும் சக்தி உடையவை. இந்த ஊரைப் போலவே தமிழகமெங்கும் ஏன் உலகமெங்கும் சமூக நல்லிணக்கம் தழைத்து ஓங்கட்டும்.

அன்புடன்

M.H. ஜவாஹிருல்லா M.L.A. அவர்கள்,

13.10.2021 06.03.1443

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்