கனவும் மார்க்கச் சட்டங்களும்....:
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
=========================
5.
கனவும் மார்க்கச் சட்டங்களும்....:
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
மறுமை நாள் வரை முபஷ்ஷிராத் - தன் புறத்திலிருந்து மக்களுக்கு நற்செய்தி வழங்குவதற்காகவே அல்லாஹ் நல்ல கனவுகளை நமக்காக ஏற்படுத்தி இருக்கின்றான்.
நல்ல கனவுகளால் நம் ஆன்மா குழப்பத்திற்கு உள்ளாகாமல் நிலையாக நிற்கும். மனம் அமைதி பெறும்.
நீண்ட காலத்திற்குப் பிறகு அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை இப்பொழுதே நல்ல கனவுகள் ஏற்படுத்தும்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் (இப்பொழுது) எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன்.
அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "நல்ல (உண்மையான) கனவு" என்று கூறினார்கள்.
அந்தக் கனவுகளை நல்ல இறையடியார்கள் காண்பர்; அல்லது அவருக்கு அந்த கனவுகளை (இறைவனால்) காட்டப்படும்.
நூல்: புகாரி 6990 , முஸ்லிம்.
நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தவோ, முன்கூட்டியே எச்சரிக்கைச் செய்யவோ கனவுகள் மூலம் இறைவன் செய்திகளை நமக்குச் சொல்லுவான்.
"அதே சமயம் கனவுகளில் காண்பதை மார்க்கச் சட்டமாக எடுத்துக் கொள்ள கூடாது" என்பது இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்று.
ஒரு கனவின் மூலம் எடுக்கப்படும் முடிவுகள், கனவு கண்டவரின் வீட்டாருக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே பொருந்தும்.
நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பே மார்க்கச் சட்டங்கள் புதிது புதிதாக அருளப்படுவது முற்றுப்பெற்று விட்டது. எனவே இன்று கனவில் கண்டதை மார்க்கச் சட்டமாகக் கருதக்கூடாது.
இதை அல்லாஹ் கூறுகின்றான்; இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நான் நிறைவு செய்து விட்டேன்; எனது அருளை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன்; இஸ்லாத்தை உங்களுக்கு மார்க்கமாக மனநிறைவோடு நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். 5:3
இந்த வசனத்தின் அடிப்படையில் இனி நமக்கு புதிதாக மார்க்கச் சட்டங்கள் வழங்கப்படாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை எவரேனும் கனவில் பார்த்தபோது நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் செய்யும்படி உத்தரவுகள் அளித்து இருந்தால், அது நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலோடும், வரலாற்றோடும், நபிமொழிகளோடும் ஒத்துப் போனால் அதைக் கொண்டு அவர் மட்டுமே அமல் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்குப் பொருந்தாது.
அவ்வாறு ஒத்துப் போகவில்லை என்றால் அதை நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது. அல்லது அந்தக் கனவின் அர்த்தம் - பொருள் நமக்கு முழுமையாகப் புரியவில்லை என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானீ ( ரஹ் )அவர்கள் கூறுகிறார்கள்.
நபி ( ஸல்) அவர்களை நாம் கனவில் பார்க்கும் போது அவர்கள் சொல்லுகிற விஷயங்களை சுன்னத்தாக கருத வேண்டும். ( ஃபர்ளு அல்ல! )
மேலும் அது மார்க்கச் சட்டத்திற்கு ஒத்துப் போகக் கூடியவைகளாகவும் இருக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்டு விட்ட மார்க்கச் சட்டத்திற்கு முரணாக இருக்குமேயானால் அது நாம் கண்ட கனவுக்கானப் பொருளை நாம் தவறாக விளங்கிக் கொண்டோம் என கருத வேண்டும்.
நூல் : ஃபதஹுல் பாரீ
இப்னு ஷாஹைன் ( ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தம் கனவில் நபிமார்களில் ஒருவரை காணுகிறார் ; அந்த நபி இன்றைய இஸ்லாமிய சட்டத்திற்கு முரணான ஒரு விஷயத்தைச் செய்யும்படி கூறுகிறார் என்றால் அதை அவர் செய்யக்கூடாது.
உதாரணமாக ஒரு நபிமொழியைப் பாருங்கள்.
அபூ மஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
உனக்கு நாணம் இல்லை என்றால் நாடியதைச் செய்துகொள் .
நூல்: புகாரி: 6120
"வெட்கம் இல்லை என்றால் விரும்பியதை செய்து கொள்" என்பதின் பொருள், வெட்கமில்லாதவர் விரும்பியதை எல்லாம் செய்யலாம் என்பது அல்ல!
"விரும்பியதை செய்" எனும் நபிகளாரின் சொல் உத்தரவு அல்ல! அது ஒரு எச்சரிக்கை.
அவ்வாறுதான் பிற நபிமார்கள் நமது கனவில் நமது மார்க்கத்திற்கு முரணாக ஏதேனும் சொன்னால், அதை நாம் உத்தரவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்; நீங்கள் விரும்பியவாறு செயல்படுங்கள்; நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உன்னிப்பாக கவனிப்பவனாக இருக்கின்றான்.
41 : 40
இந்த வசனத்தில், "நீங்கள் விரும்பியவாறு செயல்படுங்கள்" என்பது உத்தரவு அல்ல! எச்சரிக்கை!! ("மனிதா ! நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என அல்லாஹ் மிரட்டும் தொணியில் பேசுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே நமது கனவில் நபி (ஸல்) அவர்களோ மற்ற நபிமார்களோ ஏதேனும் அமல்களை சொல்லிக் கொடுத்து செய்யச் சொன்னால், அது இன்றைய நமது மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment