பல்வேறு வடிவங்களில் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க இயலுமா?

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
=========================

6

பல்வேறு வடிவங்களில் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க இயலுமா?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது குறித்து சில வரையறைகளை உலமா - அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களை அவர்களின் எதார்த்தமான தோற்றத்தில் நாம் கனவில் காண்போமா? அல்லது நபித்தோழர்கள் நபிகளாரை வர்ணித்திருப்பது போன்ற தோட்டத்தில் காண்போமா? 

அல்லது மேற்கண்ட இரண்டும் அல்லாத முற்றிலும் வேறுபட்ட ஒரு தோற்றத்தில் காண்போமா? என்கிற விஷயத்தில் அறிஞர்களிடையே இரண்டு கருத்துகள் நிலவுகின்றது. 

1. நபி (ஸல்) அவர்கள் உலகத்தில் வாழும் போது எந்தத் தோற்றத்தில் இருந்தார்களோ அந்த காமில் - முழுமையான தோற்றத்தில் தான் கனவில் காண வேண்டும்.

நபி ( ஸல்) அவர்கள் மரணித்த சந்தர்ப்பத்தில் எந்தத் தோற்றத்தில் இருந்தார்களோ அந்தத் தோற்றத்தில் தான் காண வேண்டும். 

மேற்கண்ட நிபந்தனைகளில் சில அறிஞர்கள் கூடுதலாக கூறுவதாவது; நபி (ஸல்) அவர்களை கனவில் காண்கிறவர் நபி ( ஸல்) அவர்களின் முதுமை தோற்றத்தில், அவர்களின் தலை நரை முடி உட்பட பார்த்திருப்பது  அவசியம்.

மேற்கண்ட நிபந்தனைகள் அனைத்தும் இருக்க வேண்டுமென அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்று உண்மைப்படுத்துகிறது.

தந்தை கூறியதாக ஆஸிம் பின் கலீப் ( ரஹ் ) அவர்கள் கூறுவதாவது; "எனது கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன்.

அதற்கு அவர்கள், "நீங்கள் பார்த்ததை என்னிடம் வர்ணித்துச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

நான் வர்ணித்துச் சொன்னேன்; அது ஏறத்தாழ ஹஸன் பின் அலீ ( ரலி ) அவர்களின் தோற்றத்தை ஒத்திருந்தது.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நிச்சயமாக நீங்கள் நபி ( ஸல் ) அவர்களையே பார்த்தீர்கள்" என்று கூறினார்கள். 

நூல் : ஹாகிம்,  ஃபதஹுல் பாரீ

இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் நபி ( ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகச் சொன்னால் அதைக் கேட்பவர் , " நீங்கள் பார்த்ததை எனக்கு வர்ணித்துச் சொல்லுங்கள்" என்று கேட்பது மார்க்கத்தில் ஆகுமானதாகும். 

அவர் அந்தக் கனவை வர்ணித்துச் சொன்ன பிறகு அதைக் கேட்டவர், அது நபி (ஸல்) அவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டால், "நீங்கள் பார்த்தது நபியை அல்ல!" என்று சொல்வதற்கும் மார்க்கம் அனுமதித்து இருக்கிறது. ( இதற்கும் மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்துதான் ஆதாரமானது.)

நூல் : தஃதீருல் அனாம் ஃபீ தஃபீருல் மனாம்.

2. நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகச் சொல்கிற ஒவ்வொருவரும், தான் கண்டது நபி ( ஸல் ) அவர்களைத்தான் என்று கூறுகிறார்கள். 

அல்லது ஒருவர், கனவில் நபி (ஸல்) அவர்களைத்தான் பார்த்தேன் என நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் அவர் நபிகளாரைத் தான் பார்த்தார் என கனவில் யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் அவர் நபி (ஸல்) அவர்களைத்தான் பார்த்தேன் என உறுதியாக  இருக்கின்றார்.

இந்நிலையில் நபி (ஸல்) அவர்களின் தோற்றம் குறித்து ஏற்கனவே  வர்ணிக்கப்பட்டு இருந்தது போல் ஒருவர் பார்த்து இருந்தாலும், அல்லது தோராயமான வடிவத்தில் பார்த்து இருந்தாலும் அவர் நபி (ஸல்) அவர்களையே பார்த்து இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி  
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். 

நூல் : புகாரி: 6997

எனவே மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்ததாக நம்புகிறவர் நபி (ஸல்) அவர்களையே பார்த்திருக்கிறார் என்பதே உண்மை.

இமாம் இப்னு ஹஜருல் அஸ்கலானீ ( ரஹ் ) அவர்கள் கூறுவதாவது; எனது கருத்து என்னவென்றால், எந்த அமைப்பில் நபி ( ஸல் ) அவர்களை ஒருவர் கனவில் பார்த்தாலும் அவர் சந்தோஷம் கொள்ளட்டும்; அவர் உண்மையானக் கனவையே கண்டிருக்கிறார்; அந்தக் கனவு  அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டு இருக்கிறது; அந்தக் கனவு பொய்யல்ல! நிஜம். 

நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிச்சயமாக ஷைத்தான் எனது தோற்றத்தில் காட்சியளிக்க மாட்டான்.  நூல்: புகாரீ

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; உண்மை என்னவென்றால் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தவர் உண்மையாகவே நபிகளாரைப் பார்த்திருக்கிறார். அவர் பார்த்த உருவ அமைப்பு அனைவரும் அறிந்த உருவ அமைப்பில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர் பார்த்தது நபியையே!. 

நூல் : அல் மின்ஹாஜ்

இமாம் காழி இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; சில உலமா - அறிஞர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒரு தனித்தன்மையை வழங்கி இருக்கின்றான். அது என்னவென்றால் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் உண்மையாகவே நபியையே பார்த்து இருக்கிறார்; அவர் அந்தக் கனவில் கண்ட அனைத்தும் உண்மைதான்; நபி (ஸல்) அவர்களின் தோற்றத்தில் ஷைத்தான் காட்சியளிக்காத வகையில் அல்லாஹ் அவனை (ஷைத்தானை ) தடுத்து வைத்திருக்கின்றான். 

மேலும் நபிகளாரை கனவில்  கண்டவரிடம், ஷைத்தான் பொய் சொல்லிவிடக் கூடாது என்பதிலும் அல்லாஹ் கவனமாக இருக்கின்றான்.

நூல் : அல் மின்ஹாஜ்

எனவே நபி (ஸல்) அவர்களின் தோற்றம் குறித்து பேசப்பட்ட இரண்டு விஷயங்களில் இரண்டாவதாக சொல்லப்பட்ட கருத்துகள்தாம் உண்மையானதும் உறுதியானதும் ஆகும்.

முற்கால, பிற்கால உலமாக்கள் என மிகப் பெரும் அறிஞர்கள் கூட்டம், இரண்டாவது கருத்தே சரியானது என சொல்லி இருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பு பல நூல்களில் எழுதப்பட்டு இருக்கின்றது. அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது போன்ற உருவ அமைப்பிலும் அல்லது வேறு வகைகளிலும் கூட நபிகளாரைக் கனவில் காண இயலும்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு தோற்றத்தில் இருந்தார்கள். ஒவ்வொரு வகையான ஆடைகளை உடுத்தியிருக்கும் போதும் ஒரு தோற்றத்தில் இருந்தார்கள். 

எனவே 63 வருட வாழ்வியலில் எந்தத் தோற்றத்தில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இருந்தாலும் அது உண்மையாகவே கருதப்படும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்