மவ்லவீ, ஆவூர் அப்துஷ் ஷுகூர் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள்

மீலாது விழாக்களின் அவசியம் :
===============================

மவ்லவீ, ஆவூர் அப்துஷ் ஷுகூர் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இஸ்லாத்தைப் பரப்ப 
இனிய நாள் 
இறைத்தூதரின் பிறந்தநாள்.

1973 களில் மவ்லவீ, ஆவூர், அப்துஷ் ஷுகூர் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) கும்பகோணம் அருகே உள்ள ஆவூருக்கு மீலாது விழா சொற்பொழிவாற்றச் சென்று இருந்தார்கள். 

தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு தெருவில் பயான்  நடைபெற்றது. அந்த பயானில் ஊரில் இருந்த முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அத்துடன் சகோதர சமயத்தைச் சார்ந்த இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட கலந்துக் கொண்டார்கள்.

ஹள்ரத் அவர்கள் அமர்ந்திருக்கிற இடத்தில் மட்டும் இரண்டு ராந்தல்கள் இருக்கும். 

தெருவின் ஒரு சில இடங்களில் மட்டும் ராந்தல்கள் வெளிச்சத்திற்காக கட்டப்பட்டு இருந்தது.

உபன்யாசத்தை கேட்க வந்திருந்த மக்கள் அவரவர் வீட்டு வாசலிலும், தெருவில் பாய் விரித்தும், சாக்குகளை விரித்தும், தம் வீட்டுத் திண்ணையிலும், ஆங்காங்கே இருந்த மணல்மேடுகளிலும் , நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டிகளிலும், கற்களின் மீது அமர்ந்தும் கேட்டார்கள்.

தினமும் இரண்டு மணி நேரம் சொற்பொழிவு நடை பெற்றது. ஹள்ரத் அவர்கள் தமக்கே உரிய பாணியில்  குரலை உயர்த்தியும் தாழ்த்தியும், சோகமாகவும் சிரிப்பாகவும் பேசினார்கள். 

பேச்சைக் கேட்க வந்திருந்த அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் சென்று அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பது போன்று அழகுறப் பேசினார்கள்.

அன்றெல்லாம் நல்லதை யார் சொன்னாலும் மக்கள் கேட்பார்கள்.

இவ்வாறு பன்னிரண்டு நாட்களும் சொற்பொழிவு நடைபெற்று முடிவுற்றது.

பன்னிரண்டாம் நாளில் சொற்பொழிவாற்றிய ஹள்ரத் அவர்களுக்கு அன்பளிப்புகளும் பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

அப்பொழுது ஊரின் தலைவராக இருந்த சகோதரச் சமயத்தைச்  சார்ந்தவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.  

"பாய்! உங்கள் மூலம் இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் நானும் என்னை போன்றவர்களும் மிகச் சரியாக விளங்கிக் கொண்டோம்; உங்களுக்கு நான் ஏதாகிலும் செய்ய வேண்டும்; நான் உங்களுக்கு என்னச் செய்வது? சொல்லுங்கள் நான் செய்துத் தருகிறேன்" என்று கேட்டுக் கொண்டார். 

ஹள்ரத் அவர்கள், "அல்ஹம்துலில்லாஹ் ! அதுவெல்லாம் ஒன்றும் வேண்டாம்;  நீங்கள் கேட்டதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றுச் சொன்னார்கள்.

அவர், "இல்லை பாய்! நான் உங்களுக்கு கண்டிப்பாக ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். 

சில நாட்களுக்குப் பிறகு ஹள்ரத் அவர்கள் பணி செய்த பள்ளிவாசலின் வாசலில் ஒரு போஸ்ட் பாக்ஸ் -  அஞ்சல் பெட்டியை வைத்தார். 

"பாய்! நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு தினமும் கடிதம் எழுதுகிறீகள்; நீங்கள் உங்களுடைய கடிதங்களை அஞ்சல் செய்ய தொலை தூரத்திற்கு தினமும் சென்று வருவதைப்  பார்க்கின்றேன்.  எனவே உங்களின் சிரமத்தைக் குறைக்க உங்களுக்காக ஒரு அஞ்சல் பெட்டியை  வைக்கிறேன்" என்று சொல்லி வைத்தார். 


அது இன்று வரை பள்ளிவாசலின் வாசலில் இருந்து வருகிறது.

மீலாது விழாக்களை நடத்துவதின் மூலம் அனைவருக்கும் நன்மையே ஏற்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று!

மேலும் மீலாது விழாக்கள் நடத்துவதன் மூலம் சமயநல்லிணக்கம் , சகோதரத்துவம் வளரும் என்பதற்கான எடுத்துக்காட்டு இது!

ஹள்ரத் அவர்களின் சொந்த ஊர் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை . 

ஹள்ரத் அவர்களின் சொந்த ஊர் செங்கோட்டை என்று சிலருக்குத் தான் தெரியும். ஆனால் ஆவூரில் பணிச் செய்ததால், ஆவூர் தான் அவர்களின் சொந்த ஊர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அறியப்படாமல் இருந்த கிராமம் இது! ஹள்ரத் அவர்களின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகிவிட்டது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்