தமிழகத்தில் நடைபெறும் கந்தூரி விழாக்கள் ஓர் ஆய்வு :

தமிழகத்தில் நடைபெறும் 
கந்தூரி விழாக்கள் ஓர் ஆய்வு  :
=============================

கந்ரீ قدرى எனும் சொல் மருவி கந்தூரி என ஆகி இருக்கின்றது. கந்ரீ எனும் சொல்லுக்கு, "என் விதி! என் தலையெழுத்து" என்று பொருள்.

قَدْ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَىْءٍۢ قَدْرًا
ஒவ்வொரு பொருளுக்கும் நாம் ஒரு அளவை ( - தலையெழுத்தை - விதியை) நிர்ணயம் செய்து இருக்கின்றோம். 
அத்தலாக் அத்தியாயம், வசன எண் 3.

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

நாம் இந்தக் குர்ஆனை கண்ணியமான இரவில் இறக்கி வைத்தோம்; லைலத்துல் கத்ர் -  கண்ணியமான இரவு எது என்று உமக்குத் தெரியுமா? 

மேற்கண்ட வசனங்களில் கத்ரு எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கத்ரு எனும் சொல்தான் கத்ரீ , கந்தூரி என மருவி  வந்திருக்கின்றது. 

இது 'கந்தூரி' எனும் சொல்லிற்கான விளக்கமாகும்.

இன்று கந்தூரிகளில் காணப்படும் செயல்கள், நடைமுறைகள் ஆகியன எப்படி உருவானது என்பதை விளக்கமாகக் காண்போம்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் பிறந்த நாளிலும், இறந்த நாளிலும் அரபியர்கள் நபிகளாருக்கு நன்மைகள் சேர்க்கும் விதமாக அன்னதானம் செய்தார்கள்.

அதைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் தமது ஊர்களிலும் நபி (ஸல்) அவர்கள் பிறந்த மற்றும் இறந்த நாளில் அன்னதானம் செய்து தம் அன்பை வெளிப்படுத்தி வந்தார்கள். 

இறந்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் இக்காரியத்தை நபிகளாருக்கு செய்யும் போது நாம் ஏன் நமது இறைநேசர்களுக்கு செய்யக்கூடாது என நினைத்து, ஒவ்வொருவரும் தமது ஊரில் வாழ்ந்து மறைந்த, இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு நன்மை சேர்க்கும் விதமாக அன்றைய தினம் அன்னதானம் செய்தார்கள். 

அவர்கள் பிறந்த அல்லது இறந்த நன்னாளில்  நபிகளாருக்கோ, ஸாலிஹின் -  நல்லவர்களுக்கோ நாம் உணவளிப்பதின் மூலம் கத்ரீ எனது தலையெழுத்து மாறும் எனது கஷ்ட நிலைகள் மாறும் என்கிற நம்பிக்கையோடு ஏழை எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உணவளித்து வந்தார்கள்.

அது காலப்போக்கில் தர்ஹாக்களில் மட்டும் நடைபெறும் காரியமாக சுருங்கிவிட்டது.  தர்காக்களில் மட்டும் கந்தூரி - ஏழை எளியவர்களுக்கு உணவளிக்கும் செயல்  நடைபெறுவதால் சிலர் அதை தவறு என்று சொல்லி  வருகிறார்கள்.

ஆனால் இன்று ரபியுல் அவ்வல் மாதத்தில் இருந்து ரமலான் நோன்பு தொடங்குகிற வரை தமிழகத்தில் முஸ்லிம்கள் வாழும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலும், நகரங்களிலும், மஹல்லாவிலும் கந்தூரி நடைபெற்று வருகிறது.

ரபியுல் அவ்வல் மாதத்திற்குப் பிறகே கந்தூரிகள் பெரும்பாலும் நடைப்பெறுவதால் அது நபிகளாரை முன்னிறுத்தி மட்டுமே தொடங்கப்பட்ட செயல் எனத் தெளிவாகத் தெரிய வருகிறது.

கந்தூரி நடைபெறும் நாளில்  ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் நன்மையை நாடியே அன்னதானம் செய்யும் பழக்கம் உருவானது எனவும் தெரிய வருகிறது.

இன்று தர்ஹாக்கள் இல்லாத பல நூறு ஊர்களிலும் கூட கந்தூரி எனும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. 

அன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒரே கிராமத்து மக்கள் தமது ஊரில், ஒரே இடத்தில் ஒன்றுகூடி உண்டு மகிழ்ந்து உறவினர்களோடு சில நாட்கள் தங்கி இருந்து தம் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஒரு வீட்டில்  திருமணம், வீடு திறப்பு விழா, கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் அந்த குடும்பத்து உறவினர்கள் மட்டுமே ஒன்று சேர்வார்கள்.

இன்று ஒரு ஊரின் பொது விழாவாக இருக்கிறது என்றால் அது கந்தூரி விழா தான். இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு ஊரின் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இன்புற்று இருக்கிறார்கள். இரண்டு பெருநாட்கள் போல!

ஒரு ஊரின் அனைத்து மக்களும் ஒரே நாளில் ஒன்றுசேர்ந்து  சந்தோஷமாக இருப்பதை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும்?

கந்தூரி நடைபெறும் நாட்களில் லுஹர் தொழுகைக்கு முன்போ, அல்லது  பின்போ ஒரு யாஸீன் தபாரக் ஆகியன ஓதி அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் அனைவருக்காகவும், நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக நன்மையை சேர்த்து வைக்கும் விதமாக பிரார்த்தனை செய்து விட்டு, சமைத்ததை அனைவரும் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். 

இங்கே எந்த இடத்தில் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள் இருக்கின்றது?

அனாச்சாரங்களும், அட்டூழியங்களும், மூட பழக்க வழக்கங்களும் நடைபெறாத வரை கந்தூரி நற்செயல்களில் ஒன்றுதான்!

அகல் யுத்தத்தின் போது பசித்திருந்த நபித்தோழர்களுக்கு 
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் வழங்கிய சிறிதளவு உணவை நபிகளார் செய்த பிரார்த்தனையின் காரணமாக அமுதசுரபி போல் பெருகியது. அதை  ஆயிரக்கணக்கானோர் பசியாறினார்கள். (புகாரி கருத்து)

பல நாட்களாக சாப்பிடாமல் வயிற்றில் கல்லை கட்டிக் கொண்டிருந்த தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உணவளித்ததைப் போன்று தான் நமது முன்னோர்கள் பசித்தவர்களுக்கு உணவளிக்க இந்த கந்தூரியைத் தொடங்கினார்கள்.

உணவு இல்லாதவர்களுக்கும், பசித்தவர்களுக்கும் உணவளிப்பதற்காகவே தொடங்கப்பட்ட இந்த கந்தூரி விழா இன்று வரை தொடர்வது மிகப்பெரும் நற்செயலரில் ஒன்றே!

********

கந்தூரி எனும் சொல் ஃபார்ஸீ மொழி சொல் என்றும் சொல்லப்படுகிறது. 

தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்களின் அடக்கத் தலத்தின் மீது குறிப்பிட்ட நாளில் போர்த்தப்படும் போர்வைகளுக்கு கந்தூரி  كندورى என்றும் சொல்லப்படும் என்ற ஒரு கூற்றும் உண்டு.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்