நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன் -7

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
========================

மாதம் ......2
தொடர்.....7

நபி (ஸல்) அவர்களின் 
உருவ அமைப்பு :
======================

உருவ அமைப்பிலும், குண நலனிலும் முழுமைப் பெற்ற மனிதராக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான்.

மேலும் வேறு எவருடனும் ஒப்பிடப்பட முடியாத அளவிற்கு, அவர்களுக்கு மட்டுமே உரிய அழகியப் பண்பாடுகளை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

பொதுவாகவே நபி (ஸல்) அவர்கள் நபிமார்களிலேயே மிக அழகானவர்கள் ஆவர்.

யூசுப் (அலை) அவர்களுக்கு அழகையும், சொக்க வைக்கும் பேச்சாற்றலையும் அல்லாஹ் வழங்கியிருந்தான். 

சொக்கி இழுக்கும் அழகும் பேச்சாற்றலும் உடைய யூசுப் (அலை) அவர்களை அப்பெண்கள் பார்த்ததும் தம்மையே தம்மால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத அளவிற்கு உள்ளானார்கள். இதை அல்லாஹ் கூறுகின்றான்; 

 ۖ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَٰذَا بَشَرًا إِنْ هَٰذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ

"(நகரத்துப் பெண்கள்) அவரைப் பார்த்ததும் அவர் பேரழகைப் பெரிதாகப் போற்றி (மெய்மறந்தார்கள்;) தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள்; "அல்லாஹ் தூய்மையானவன்; இவர் மனிதரே அல்லர்; இவர் கண்ணியமான மலக்காகவே தவிர இல்லை" என்று (அப்பெண்கள்) கூறினார்கள். 12 : 31

நிச்சயமாக நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அசாதாரண - யாருக்கும் வழங்கப்படாத அழகை , அனைவரும் அசந்துப் போகும் அழகை, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகை  வழங்கியிருந்தான். 

அனைத்து நபிமார்களின் அழகையும், அனைத்து மனிதர்களுடைய அழகையும் ஒரு தட்டில் வைத்தால் அது நபி (ஸல்) அவர்களின் அழகு உள்ள தட்டு கீழ் இறங்கி மிகைத்துக் காணப்படும். 

இறைவனால் படைக்கப்பட்ட அண்டத்தில் உள்ள அனைத்தின் அழகையும் ஒரு தட்டில் வைத்தாலும், அது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகுக்கு ஈடாகாது.

மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அழகுடன் கண்ணியத்தையும், மரியாதையையும் வழங்கி இருந்தான்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது;

ஃபதஹ் மக்கா நாளில் கடுமையாகப் பயந்த நிலையில் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். 

நூல்: இப்னு மாஜா 3303

நபிகள் நாயகத்தை பார்க்கிற எவரும் நபிகளாருக்கு கண்ணியத்தை வழங்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு காட்சி தான் தாங்கள் மேலே கண்டது.

அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்கள் உட்பட மக்களிடம் நான் அதிகமாக வெட்கப்படுபவனாக இருந்தேன். என் கண்கள் முழுவதையும் விரித்து ஒரு முறை கூட நம்பி (ஸல்) அவர்களை முழுமையாக நான் பார்த்ததில்லை. 

நூல் : முஸ்னது அஹ்மத்

நபி (ஸல்) அவர்களின் மீது அளவு கடந்த கண்ணியம் இருந்ததால்தான் அவரால் கண்களை விரித்து காண இயலவில்லை.

நபி (ஸல்) அவர்களின் கவிஞரான ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுவதாவது; 

உங்களைவிட அழகானவரை என் இரு கண்கள் பார்த்ததில்லை! 

உங்களை விட அழகானவரை எந்த பெண்ணும் பெற்றெடுத்திட வில்லை!

அனைத்துக் குறைகளை விட்டும் நீங்கி முழுமையானவராக நீர் பிறந்தீர்!

நீங்கள் விரும்பியதுப் போன்று நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்!

நபி (ஸல்) அவர்களின் அழகை விவரிக்க இதைவிட அற்புதமாக  வேறு யாரும் சொல்லிவிட இயலாது.

அப்து முனாஃப் உடைய சந்ததியினரில் ஐந்து மனிதர்கள் அப்படியே அச்சு அசலாக நபி (ஸல்) அவர்களைப் போன்று இருப்பார்கள். இந்த ஐவரில் ஒருவரை பார்க்கின்ற எவரும் குழப்பத்திற்கு உள்ளாகாமல் இருக்க மாட்டார்கள்.

1. அபூ சுஃப்யான் பின் அல்ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி)

2. குஸம் பின் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி)

3. ஸாயிப் பின் உபைத் பின் அப்து யஜீத் பின் ஹாஷிம் (ரலி)

4. ஜஃபர் பின் அபூ தாலிப் (ரலி) அவர்கள் 

5. ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள்

முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தில் இணைந்தவர். இவர் பார்ப்பதற்கு நபி (ஸல்) அவர்களைப் போன்று இருப்பார். 

இவர் உஹதுப் போரில் கொலை செய்யப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் தான் கொலை செய்யப்பட்டு விட்டார்களோ என்கிற குழப்பம் உண்டானது. அந்த அளவிற்கு உருவ ஒற்றுமையில் இருவரும் ஒன்று போல் காணப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் உருவ அமைப்பு குறித்து பல ஸஹாபாக்கள் சொல்லி இருக்கின்றார்கள். அது குறித்து விரிவாகக் காண்போம்.

தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்