நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்தவர் என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
========================
மாதம் : .......2
தொடர் : ......11
நபி (ஸல்) அவர்களை கனவில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6. நபிகளாரின்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது:
==============================
ஒருவருடைய கனவில் தோன்றி நபி (ஸல்) அவர்கள் எதையேனும் அவரிடத்தில் எதிர்பார்த்து இருப்பதாக உணர்ந்தாலோ, அல்லது எதையேனும் செய்ய உத்தரவிட்டிருந்தாலோ அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அதை செய்து முடிப்பதில் அசட்டையாக இருந்து விடக் கூடாது.
அல்லது கனவில் தோன்றிய நபி (ஸல்) அவர்கள் "இதை நீங்கள் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை; ஆனால் நீங்கள் செய்தால் நான் சந்தோஷப்படுவேன்" என்று சொல்லி இருந்தால் அது அவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.
7. பெருமை கொள்ளக் கூடாது:
==============================
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் பெருமை கொள்ளக்கூடாது. சில சமயம் இவ்வாறான கனவுகளின் மூலம் ஏமாற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
(அதாவது அல்லாஹ் ஒருவரை சோதிப்பதற்காகக் கூட கனவில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைத் தோன்றச் செய்திருக்கலாம்.) எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில சமயம் அவர் கண்ட கனவு, அவருக்கு எதிராகவே கூட அமையலாம்.
எனவே அல்லாஹ்விடம் பணிவாக இருப்பதின் காரணமாக மட்டுமே அவரின் அந்தஸ்துகள் அதிகரிக்கக்கூடும்.
கனவு கண்டவர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் இணக்கமாகவும், பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறானக் கனவுகள், காண்பவரை (உலகக் காரியங்களில்) வலுப்படுத்துவதாகக் கருதக்கூடாது. அது அவருக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியமும், அல்லாஹ்விடத்தில் அவருக்கு இருக்கும் இடத்தையும் குறிப்பதாகவே கருதப்படும்.
8. வளீபா - தொடர் அமல்
செய்ய வேண்டும்:
=========================
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர்கள், காண விரும்புகிறவர்கள் அனைவரும் பொதுவான அல்லது குறிப்பிட்ட திக்ருகளை வளமையாக ஓதி வர வேண்டும்.
அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் தோழர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஸலவாத்துகளை அதிகமாக ஓதி வர வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மறுமை நாளில் எனக்கு நெருக்கமானவர்கள் யார் என்றால், (அதிகமானவர்கள் இருக்கிறார்கள்;) அவர்களில் அதிகமானவர்கள் என் மீது ஸலவாத்து ஓதியவர்களே ஆவர்.
நூல் : திர்மிதீ
என் மீது எவரேனும் ஸலாம் சொன்னால், அவருடைய ஸலாத்திற்கு பதில் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு மீண்டும் உயிரைத் தருகின்றான். நான் அவருக்கு பதில் ஸலாம் சொல்லுகின்றேன்.
நூல் : அபூதாவூத்
உபை பின் கஃப் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடு இரவில் எழுந்து (வீட்டிலிருந்து) வெளியேச் சென்றார்கள். அப்போது "பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில் அதனைத் தொடரும் நில நடுக்கம் தொடர்ந்து வரும்; அத்தோடு மரணமும் தொடர்ந்து வரும்" எனக் கூறினார்கள்.
நான் சொன்னேன்; "அல்லாஹ்வின் தூதரே! நான் இரவில் உங்கள் மீது ஸலவாத் சொல்லி வருகின்றேன். அந்த ஸலவாத்தை இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் சொல்லி வரட்டுமா?" என்று கேட்டேன். நபியவர்கள், "பாதி (இரவு ஸலவாத் சொல்லுங்கள்)' என்றார்கள்.
நான் சொன்னேன்; "நான் உங்கள் மீது இரவில் பாதி நேரம் ஸலவாத் சொல்லட்டுமா?" என்று கேட்டேன். நபியவர்கள், "இரவில் மூன்றில் இரு பகுதி நேரம் (ஸலவாத் சொல்லி வருவீராக!)" என்றார்கள்.
நான் சொன்னேன்; "(இரவு) முழுவதும் உங்கள் மீது நான் ஸலவாத் சொல்லி வரட்டுமா?" என்று கேட்டேன். நபியவர்கள், "அப்படி செய்தால் அல்லாஹ் உமது பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான்" என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதீ
எனவே அதிகமாக திக்ருகளையும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தையும் ஸலாமையும் சொல்லி வர வேண்டும்.
9. தன்னைச் சீர் செய்ய வேண்டும்:
================================
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் தன் குணத்தையும் தன் பழக்கவழக்கங்களையும், ஒழுக்கத்தையும் அழகுப் படுத்தி, மென்மேலும் அதில் கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண்பதற்குக் காரணமாக இருந்த, வழிகாட்டிய முன்னோர்களின் வாழ்வியலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்தக் கனவைக் கண்டவருக்கு நன்மைகளின் வாசல் திறக்கப்பட்டு விட்டதாகவும், நேரிய வழி இன்னது தான் என காட்டப்பட்டு விட்டதாகவும் கருத வேண்டும்.
எனவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தையும், வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் நடத்தையையும் முழுமையாகப் பின்பற்றி நடக்க அவர் கடமைப்பட்டு இருக்கின்றார்.
10. பாவங்களை விட்டும்
விலக வேண்டும்:
==========================
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் பாவங்களை விட்டும் விலகுவதோடு அதற்குக் காரணமானவர்கள், காரணமானவைகள், அதைச் செய்ய தூண்டுவோர் ஆகிய அனைவரையும் விட்டு விலகிட வேண்டும்.
அப்படி அவர் விலகவில்லை என்றால் அவருடைய கல்பு - இதயம் கெட்டு போவது மட்டுமின்றி கருமை அடைந்து விடும். அவரது அந்தஸ்து அல்லாஹ்விடம் குறைந்து விடும். அல்லாஹ் அவருக்கு வழங்கிய வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அவர் இழக்க நேரிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு மனிதன், தான் செய்கின்ற பாவங்களின் காரணமாக தன் ரிஜ்க் - வாழ்வாதாரத்தை இழக்கின்றான்.
நூல் : இப்னு மாஜா
ஒரு கவிஞர் கூறுகிறார்;
ஒரு நிஃமத் - அருள் வழங்கப்பட்டிருந்தால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நிச்சயமாக பாவங்கள் நிஃமத் - அருள் வளத்தை நீக்கிவிடும்!
அல்லாஹ்விற்கு நன்றி சொல்வதின் மூலம் அதை நிரந்தரம் ஆக்கிக் கொள்ளுங்கள்!
நீங்கள் நன்றி சொல்ல வில்லை என்றால், நிச்சயமாக இறைவன் விரைந்து அருள் வளத்தை நீக்கிடுவான்!
எனவே நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர்களும், காண விரும்புகிறவர்களும் மேற்கண்ட பத்து அம்சங்களையும் தம் வாழ்நாள் முழுவதும் நடைமுறைப்படுத்தி வர வேண்டும்.
தொடரும்......
Comments
Post a Comment