நபி (ஸல்) அவர்களின் தரிசனம் ஏன் ஏற்பட்டது? :

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 
==========================

மாதம் :.......2
தொடர் :.......11

நபி (ஸல்) அவர்களின் 
தரிசனம் ஏன் ஏற்பட்டது? :
=========================

அல்லாஹுவே, தான் நாடியவர்களுக்கு கொடுக்கின்றான்; தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுத்துக் கொள்கின்றான். 

தான் விரும்புகிறவருக்கு உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குகிறான்; தான் விரும்பாதோரின் அந்தஸ்தை குறைத்து விடுகின்றான். 

தான் விரும்புவோரை கண்ணியப்படுத்துகின்றான்; தான் விரும்பாதோரை இழிவுபடுத்துகின்றான். 

தான் நாடியோருக்கு நல்வழி காட்டுகிறான்; தான் நாடியவர்களை வழிகேட்டில் விடுகிறான்.

لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُونَ

அல்லாஹ் செய்தது குறித்து வேறு யாரும் கேள்வி கேட்க இயலாது; (ஆனால் அவரவர்கள் செய்தது குறித்து) அவரவர்கள் தான் கேள்வி கேட்கப்படுவர். 21:23

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்வது போல் அவனை ஏன் செல்வந்தனாகப் படைத்தாய்? இவனை ஏன் ஏழையாகப் படைத்தாய்? என்றெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க இயலாது. சிலரை காரணத்தோடு படைத்திருக்கின்றான். சிலர் 'எந்த காரணமும் இன்றி' என்கிற காரணத்தோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

எனவே இதை ஏன் அல்லாஹ் செய்கிறான்? அதை ஏன் அல்லாஹ் செய்யவில்லை? என்றெல்லாம் நாம் அவனிடம் கேள்வி கேட்க இயலாது. அதைப்போல் அண்டத்தில் நடக்கின்ற அனைத்துச் செயல்கள் குறித்தும் நமக்குத் தெரிந்தது கடுகளவு தான்.

நாம் பார்த்தும், புரிந்தும் அறிந்து கொண்டது சிறிதளவு தான்! நாம் அறியாதது அளவிட முடியாத அளவு உள்ளது.

 وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ 

அல்லாஹுவே அறிவான்; நீங்கள்  அறிய மாட்டீர்கள். 3 : 66

அந்த வகையில் உள்ளது தான் நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் கனவில் கண்டது. அல்லாஹ் ஒருவருக்கு நபிகள் நாயகத்தைக் கனவில் காட்டியிருக்கின்றான் என்றால் அதில் ஆயிரம் ஆயிரம் ரகசியங்களும் நுட்பமான காரணங்களும் இருக்கும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. உலகக் காரியங்களில் சுபச் செய்தி சொல்வதற்காகக் கனவு ஏற்பட்டு இருக்கலாம். 

அது, கனவு கண்டவருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கோ கூட அது சுபச் செய்தியாக இருக்கலாம். 

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 4,23,74, ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

2. மறுமைச் சார்ந்த விஷயங்களை சுபச் செய்தியாக சொல்வதற்காக  ஏற்பட்டக் கனவுகளாகக் கூட இருக்கலாம். சொர்க்கம் செல்வது போல் நரகத்திலிருந்து விடுதலை பெறுவது போல் அந்த கனவுகள் அமைந்திருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 44,83,95, ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

3. ஈமான் உறுதிபடவும், அல்லாஹ் மற்றும் ரசூலுக்கு கட்டுப்படுதல் அதிகரிக்கவும் ஏற்பட்ட கனவாகக் கூட இருக்கலாம். 

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 19,46,56 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

4. இறைமறுப்பு மற்றும் வழிகேட்டிலிருந்து திரும்பி, இஸ்லாத்தின்பால் நுழைவதற்கும் ஹிதாயத் -  நேர்வழியில் தொடர்ந்து இருப்பதற்கும் ஏற்பட்ட கனவாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 3,33,88 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

5. ஏதோ ஒன்றை விவரிப்பதற்காக ஏதோ ஒரு கனவு ஏற்படும். அந்தக் கனவினால் கனவு கண்டவருக்கோ அல்லது உம்மத்தினருக்கோ நன்மை உண்டாகும்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 8,72,73 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

6. ஒருவரிடம் உள்ள ஒரு செயலையோ ஒரு சொல்லையோ தடுப்பதற்காகக் கூட கனவு ஏற்பட்டு இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 86 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

7. மார்க்கத் தீர்ப்பு போன்ற தெரியாத அல்லது குழப்பமான ஒரு விஷயத்திற்கு தெளிவை ஏற்படுத்தும் கனவுகளாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 11,18,61 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

8. (மரணமோ, மலை சரிவோ, சுனாமியோ) ஏதோ ஒன்று ஏற்படப் போவதாக முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய கனவாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 15,43,71,87 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

9. பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் நீங்கப் போவதை அறிவிக்கக்கூடிய கனவாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 14,31,94 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

10. நோய்கள், வலிகள் போன்றப் பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகின்றது என்பதை அறிவிக்கக்கூடிய கனவாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 96,98 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

11. விதியை விவரிக்கக் கூடிய , தன் நிலையை இன்னது தான் என தெளிவுபடுத்தக் கூடியக் கனவாகக் கூட இருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 27,32,39 ஆகிய எண்ணில் அமைந்த வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

12. நீண்ட நாள் ஏக்கங்களுக்கு அமைதியைத் தரக்கூடியதாகவும் நீண்ட நாள் மன வலிகளுக்கு ஆறுதல் தரக்கூடியதாகவும் அந்த கனவுகள் அமைந்திருக்கலாம்.

பின்னால் சொல்லப்பட இருக்கின்ற 7, 99,100 ஆகிய எண்ணில் அமைந்துள்ள வரலாற்று நிகழ்வுகளைக் காணுங்கள்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்