நூஹ் நபியின் இறுதி வஸியத் - வாக்குமூலம்
நூஹ் நபியின்
~~~~~~~~==========~~~~~~~~
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறுவதாவது;
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது கிராமத்திலிருந்து ஒருவர் நபியவர்களிடம் வந்தார். அவர் மேலாடை கைத்தறி ஆடையாக இருந்தது. அதில் பட்டுத்துணியால் ஆன பொத்தான்கள் இருந்தன. அவர் சொன்னார்;
"உங்களுடைய இத்தோழர் ஒவ்வொரு குதிரைப் படையினரையும் தோற்கடித்துவிட்டார். அல்லது (அறிவிப்பாளரின் மறதி ) அவர் ஒவ்வொரு குதிரைப் படையினரையும் தோற்கடித்துவிடவும் ஆடு மேய்ப்பாளர் ஒவ்வொருவரையும் உயர்த்திவிடவும் நாடுகிறார்."
அப்போது, நபி (ஸல்) அவர்கள் அவருடைய முன்சட்டையைப் பிடித்து, "உன் மீது அறிவற்றவரின் சட்டை இருப்பதை நீ காணவில்லையா? என்று கூறினார்.
பின்னர் , "நூஹ் (அலை) அவர்களுக்கு மரணவேளை நெருங்கியபோது, தம் மகனிடம், நான் உனக்குச் சில அறிவுரைகளை மட்டும் கூறுகிறேன். இரண்டை நான் ஏவுகிறேன்; இரண்டைத் தடுக்கிறேன்.
லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை நான் உனக்கு ஏவுகிறேன்.
நிச்சயமாக ஏழு வானங்களும் ஏழு பூமிகளும் ஒரு தட்டில் வைக்கப்பட்டு 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்பதை மற்றொரு தட்டில் வைக்கப்பட்டால் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' உள்ள தட்டுதான் மேன்மையடையும் (கனத்தால் தாழும்).
நிச்சயமாக ஏழு வானங்களும் ஏழு பூமிகளும் ஒருவேளை ஒரு வளையமாக ஆக்கப்பட்டால், அவற்றை 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்பது உடைத்துவிடும்.
மேலும், 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என்பது எல்லாப் பொருட்களின் தொழுகை ஆகும். அதன் மூலம் படைப்பினம் யாவும் உணவளிக்கப்படுகின்றன.
இணைவைத்தல் மற்றும் பெருமை கொள்ளுதல் இவற்றைவிட்டு உன்னைத் தடுக்கிறேன்" என்று நூஹ் (அலை) அறிவுரை கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, “இறைத்தூதரே! இணைவைத்தல் பற்றி நாங்கள் அறிவோம். பெருமை கொள்ளுதல் என்றால் என்ன? எங்களுள் ஒருவருக்கு அழகான இரண்டு காலணிகள் உள்ளன. அவ்விரண் டிலும் அழகான வார்கள் உள்ளன. அதுவா?" என வினவப் பட்டது. “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
“எங்களுள் ஒருவ ருக்கு (அழகான) ஆடை இருக்கிறது. அதை அவர் அணிந்து கொள்வதா?" என்று வினவினர். “இல்லை” என்பதே நபியவர் களின் பதிலாக இருந்தது.
"எங்களுள் ஒருவர் தம்முடைய வாகனத்தில் பயணம் செய்வதா?" என்று வினவினர். “இல்லை” என்று பதிலளித்தார் கள். .
"எங்களுள் ஒருவரிடம், அவரைச் சுற்றி நிறைய நண்பர்கள் அமர்கின்றார்களே அதுவா?" என்று வினவினார்கள். “இல்லை" என்றே பதிலளித்தார்கள்.
"இறைத்தூதரே! (அப்படியானால்) எது பெருமை?" என்று வினவப்பட்டது.
"உண்மையை ஏற்க மறுத்தலும் மக்களை இழிவாகக் கருதுவதும்தான் பெருமை" என பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்னது அஹ்மத்
எது பெருமை என்பதை இதைவிட எளிமையாகவும் அருமையாகவும் தெளிவாகவும் வேறு எவரேனும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
Comments
Post a Comment