நபியின் உடலமைப்பு :
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் கண்டேன்
========================
மாதம் : ..........2
தொடர் : ........9
நபியின் உடலமைப்பு :
கீழ்க்கண்ட வார்த்தைகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமான 11 நபி மொழி நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவைகளாகும். மேலும் ஷமாயில் திர்மிதீ எனும் நூலில் கீழ்க்கண்ட கருத்துக்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ஆயிஷா அம்மையார், அபூ ஹுரைரா (ரலி) போன்ற ஒன்பது ஸஹாபாக்களின் அறிவிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டவை.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் வார்க்கப்பட்டவர்கள் போன்று வெண்மையாக இருந்தார்கள். கவர்ச்சி மிக்கவராகவும் பேரழகு உடையவராகவும் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு மிகவும் உயரமானவர்களாகவும் இருக்கவில்லை; குள்ளமானவர்களாகவும் இருக்கவில்லை; அவர்களின் சமூக மக்களிடையே நடுத்தர உயரமுடியவர்களாக இருந்தார்கள்.
முழுக்க முழுக்க வெண்மை நிறம் உடையவர்களாகவும் இருக்கவில்லை; கோதுமை நிறம் உடையவர்களாகவும் இருக்கவில்லை.
அழகிய உடலமைப்பு கொண்டவர்களாக இருந்தார்கள்.
அகன்ற தோல் புஜங்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அவர்களின் கைகளும் கால்களும் சதைப்பற்று உள்ளவையாக இருந்தது.
அவர்கள் கொழுத்த சரீரம் உடையவர்களாக இருக்கவில்லை.
அவர்களின் உடல் உறுப்புகளின் எலும்பு மூட்டுகள் பெரியதாக இருந்தது.
அவர்களின் உடல் முடிகள் அளவோடும் அழகாகவும் காணப்பட்டது.
அவர்களின் உள்ளங்கைகளும் கால்களும் வலுவான சதைப் பற்று உடையவையாக இருந்தது.
உள்ளங்கை அகன்று இருந்தது.
அவர்களின் இரு தோல்களுக்கு மத்தியில் நபித்துவ முத்திரை இருந்தது.
அவர்களின் மேனி மிகவும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் சரியான அளவில் இருக்கும்.
வயிறும் நெஞ்சும் சமமாக இருந்தது. எனினும் நெஞ்சு சற்று அகன்று இருந்தது.
நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடு போன்று மெல்லிய முடி இருந்தது. அதைத்தவிர மார்பகங்களிலும் வயிற்றிலும் முடி இல்லை.
முழங்கைகளுக்கும் மணிக்கட்டுகளுக்கும் இடையில் உள்ள பகுதியிலும் தோள்களிலும் நெஞ்சின் மேற்பகுதியிலும் முடிகள் இருக்கும்.
அவர்களின் உடலில் இருந்து வரும் நறுமணத்தைப் போன்று வேறு எந்த நறுமணத்தையும் எவரும் நுகர்ந்தது இல்லை.
அவர்களின் உடல் பனிக்கட்டியை விட குளிர்ச்சியாக, கஸ்தூரியை விட மனமானதாக இருந்தது.
கால் :
~~~~~
~~~~~~
நடு பாதம் பூமியை விட்டும் உயர்ந்து இருக்கும். இரு பாதங்களும் மென்மையாகவும் சம அளவிலும் இருந்தது.
குதிங்கால்களில் சதைப்பற்று குறைவாக இருக்கும்.
கை கால் விரல்கள் பொருத்தமான அளவுக்கு நீளமாக இருந்தது.
*தாடி:* அவர்களின் நெஞ்சில் இருந்து தொப்புள் வரை நீண்ட மெலிதான முடிகளாக அவை இருந்தன. மேலும் தாடி முழுவதும் அடர்ந்து காணப்பட்டது.
அவர்களின் கீழ் உதட்டுக்கு கீழே சிறிதளவு முடி வெண்மையாக இருந்தது.
தலைமுடி:
~~~~~~~~~
முற்றிலும் சுருள் முடியும் உடையவர்களாகவும் இருக்கவில்லை; முற்றிலும் நீண்டு தொங்கும் முடி உடையவராகவும் இருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தமது காதுகளில் சோனை வரை அடர்ந்தத் தலைமுடி வைத்திருந்தார்கள்.
தொங்கலான படிந்த முடி உடையவர்களாகவும் இல்லை; அவ்விரண்டிற்கும் இடையே அமைந்த நடுத்தரமான சுருள் முடியமைப்பு கொண்டவர்களாக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் மட்டுமே இருந்தது.
தலைமுடியில் எதார்த்தமாக எளிதில் வகிடு படிந்தால் வலப்புறமாக ஒன்று இடப்புறமாக ஒன்று என இரண்டு வகிடுகளாக ஆக்கி விடுவார்கள். இல்லையென்றால் வகிடு எடுக்காமல் தொங்க விட்டுவிடுவார்கள்.
அவர்களின் தலை நியாயமான அளவிற்கு பெரியதாகவும் அழகாகவும் இருந்தது.
நடை :
~~~~~~~~
நபி (ஸல்) அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடும், முன்பக்கமாகச் சாய்ந்த நிலையிலும் நடப்பார்கள்.
முகம் :
~~~~~~~~
நபி (ஸல்) அவர்களின் முகம் முற்றிலும் வட்டமான அமைப்பில் இருக்கவில்லை. ஆனால் சிறிதளவு வட்ட வடிவ அமைப்பு இருந்தது. நெற்றி அகன்றதாக இருக்கும். நீளமான முகம் உடையவர் அல்ல! திடீரென பார்த்தால் அச்சம் தரும் வடிவம் உடையவர்.
நபி (ஸல்) அவர்கள் சிரித்தால் அவர்களின் முகம் மிக ஒளி பொருந்தியதாக பார்ப்பவர்களுக்கு சந்திரனைப் போன்று இருக்கும்.
நபியவர்கள் கோபித்துக் கொண்டால் முகம் சிவந்து விடும். மாதுளம் பழ முத்துக்களை முகத்தில் தூவப்பட்டது போன்று காணப்படும்.
அவர்களின் சிரிப்பு புன்முறுவலாக தான் இருக்கும்.
புருவம் :
~~~~~~~~~~
இரண்டு புருவங்களும் கருத்துக் காணப்படும்.
புருவங்கள் மென்மையாகவும் அடர்ந்தும் காணப்படும். புருவங்கள் இரண்டும் தனித்தனியாக இருந்தன. மத்தியில் ஒன்றோடு ஒன்று சேர்வதில்லை. அவ்விரண்டுக்கும் இடையே நரம்பு ஒன்று இருந்தது. கோபத்தின் போது அது புடைத்துக் கொள்ளும். (கோபம் அதனை இரத்தச் சிவப்பாக்கிக் காட்டும்.)
அதாவது வில் புருவம் உடையவராக இருந்தார்கள்.
கன்னங்கள் மென்மையாக இருக்கும். வாய் மிதமாக அகன்று இருக்கும். பற்களுக்கு இடையே சிறிய இடைவெளி இருக்கும்.
குரல் :
~~~~~~~~~
கம்பீரமான குரல் வளம் கொண்டவராக இருந்தார்கள். அவர்களின் அமைதி கம்பீரத்தைத் தரும்.
கழுத்து :
~~~~~~~~~~
அவர்களின் கழுத்து (யானைத் தந்தம் அது போன்றவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட ) சிற்பத்தின் கழுத்தைப் போன்று அழகாகவும் அம்சமாகவும் வெள்ளியைப் போன்று பளபளப்பாகவும், தெளிவாகவும், உயரமாகவும் இருக்கும்.
கண்கள் :
~~~~~~~~~~~
நபி (ஸல்) அவர்களின் கண் விழிகள் இரண்டும் நன்கு கருத்திருந்தது. அவர்களின் கண் இமை முடிகள் நீளமாக இருந்தது.
கண்களில் உள்ள வெண்மையில் சிவப்புக் கோடுகள் இருக்கும்.
எப்பொழுதும் மை தீட்டியது போன்று கண்கள் காணப்படும்.
மூக்கு :
~~~~~~~~~~
நபி (ஸல்) அவர்களின் மூக்கு பெரிதாக இருப்பது போல் தோன்றும். அதில் ஒளியும் பிரகாசமும் இருக்கும். முதலில் பார்ப்பவர்கள் அவர்களின் மூக்கு பெரியதாக இருப்பதாகக் கருதுவர். (எனினும் சற்று உற்று நோக்கினால் அழகும் ஒளிர்வும்தான் அதனைப் பெரிதாக்கி காட்டுவதாக உணர்வார். உண்மையில் அது பெரிதாக இருக்காது)
Comments
Post a Comment