நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தவர் என்னச் செய்ய வேண்டும்? :
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
=========================
மாதம் :.......2
தொடர் : .......10
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அகிலத்தாரால் நேசிக்கப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண்பது அல்லாஹ் அருளிய மிகப்பெரும் பாக்கியம். அல்லாஹ் அவருக்கு வழங்கிய பேரருள்! பெரும் கண்ணியம்.
மரியாதை மற்றும் அவரின் நற்பெயருக்கான வாசல்களை அல்லாஹ் அவருக்காக திறந்து இருக்கின்றான்.
அவர் இந்த வாசலில் நுழைந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . வீணடிக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. இந்த வாசல் அவருக்கு திறக்கப்பட்டதற்காக அவர் கடைப்பிடிக்க வேண்டிய பத்து அம்சங்கள்.
1. அல்லாஹ்விற்கு
நன்றி சொல்ல வேண்டும்:
==========================
நபிகள் நாயகத்தைக் கனவில் பார்த்ததற்காக அல்லாஹ்விற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பு மென்மேலும் தொடர்ந்து கிடைத்திடவும், இந்த வாய்ப்பு இறுதி வாய்ப்பாக ஆகிவிடாமல் இருக்கவும் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்;
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ
நீங்கள் நன்றியோடு நடந்து கொண்டால் உங்களுக்கு மேலும் வளங்களை நான் அதிகப்படுத்துவேன்; 14 :7
நபிகள் நாயகத்தை கனவில் பார்த்தப் பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியதற்காக தொடர்ந்து அல்லாஹ்விற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தால், அல்லாஹ் அந்த பாக்கியத்தை மீண்டும் நமக்கு வழங்குவான்.
அல் முஸன்னா பின் ஸஈத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு இரவிலும் நான் நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்திருக்கின்றேன்.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
அபூ ஜஃபருல் கத்தானீ (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் எத்தனை முறை நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்திருப்பீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "சுமார் ஏழு நூறு முறை நான் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்திருப்பேன்" என்று கூறினார்.
நூல் : ஹுல்யதுல் அவ்லியா
2. நன்றியை வெளிப்படுத்துதல்:
==============================
நபிகள் நாயகத்தைக் கனவில் பார்த்ததற்கான நன்றியை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு ரக்அத் நஃபில் தொழுதல், சுன்னத்தான நோன்பு நோற்றல், ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் வழங்குதல் ஆகியன முழுமையான நன்றியாக ஆகும்.
இவ்வாறான நன்றியை வெளிப்படுத்துவதின் மூலம் அல்லாஹ்விற்கும் ரசூலுக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு இருப்பதைக் காட்டும்.
3. கனவைப் பகிரங்கப்படுத்தக்கூடாது:
=========================
நபிகள் நாயகம் அவர்களைக் கனவில் கண்டவர்கள் தமக்குள் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தாம் கண்ட கனவை பிறரிடம் சொல்வது நல்லதல்ல!
மேலும் தாம் கண்ட கனவை வெறுக்கவோ, குறைத்து மதிப்பிடவோ, சந்தேகிக்கவோ கூடாது .
நிச்சயமாக இந்த கனவு அல்லாஹ் அவருக்கு வழங்கிய உண்மையும், உரிமையும் ஆகும்.
கனவைக் கண்டவர் தமக்குள் சந்தோசம் அடைய வேண்டும். நினைத்து நினைத்து பேரானந்தம் கொள்ள வேண்டும்.
4. சிலரிடம் சொல்லலாம்:
========================
நபிகள் நாயகத்தைக் கனவில் கண்ட நிகழ்வை நல்லவர்கள், நம் மீது நேசம் கொண்டவர்கள், நமக்கு நலவை நாடுவோர் ஆகியவர்களைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக்கூடாது.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ﴾
உம்மைப் படைத்தாள்பவனின் பேருபகாரத்தை நீர் எடுத்துரைப்பீராக! 93: 11
இந்த வசனத்தின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்த விஷயத்தைச் சொல்லலாம்.
பொறாமை குணம் உடையவர்கள் நமக்கு வழங்கப்பட்ட பாக்கியத்தை கண்டு பொறாமை அடைவார்கள். அதனால் மீண்டும் இது போன்ற கனவுகளை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போகக்கூடும். எனவே அப்படிப்பட்டவர்களிடம் சொல்லக்கூடாது.
நல்லவர்கள் மற்றும் நம் மீது பிரியம் உள்ளவர்கள், நாம் அனுபவித்த சந்தோசத்தை அவர்களையும் மகிழ்விக்கும் விதமாக நாம் நடந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்களுக்கு நபியின் மீது பேரன்பு உண்டாகும்.
மேலும் கனவு கண்டவருக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்வார்கள். மேலும் இது போன்ற கைர் - நல்ல விஷயங்கள் அதிகமாக நடக்க துஆ செய்வார்கள்.
5. இறைவழிபாட்டில் ஈடுபடுதல் :
===============================
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் அதிகமாக இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும். அல்லாஹ் மற்றும் ரசூலுடைய வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி நடக்க வேண்டும். ஃபரழ் மற்றும் வாஜிப் போன்ற இபாதத்துகளில் பேணுதலாக இருக்க வேண்டும்.
மேலும் அவர் கண்ட கனவு அவரை இறைவழிப்பாட்டை சிறப்பாகச் செய்யவும், இஸ்லாத்தின் விழுமியங்களை முழுமையாகப் பின்பற்றுவதில் தூண்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
Comments
Post a Comment