நபிகள் நாயகத்தை பார்க்க இயலாது என நிராசை அடைந்து விடாதீர் .......
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : ------ 3
தொடர் : ------ 19
நபிகள் நாயகத்தை பார்க்க இயலாது என நிராசை அடைந்து விடாதீர் ........
==================================
நபி (ஸல்) அவர்களை பூமியில் பார்க்க இயலாதவர்கள் மறுமை நாளில் கண்டு சந்தோஷம் அடைவார்கள்; மக்கள் அனைவரும் கவ்ழுல் கவ்ஸர் தடாகத்திற்கு அருகில் ஒன்று கூடி அவர்களின் கரங்களால் தண்ணீரைப் பெற்றுக் குடிப்பார்கள்; மேலும் தம் சொர்க்கத்திற்குள் நுழையும் வரை நபிகளாருக்குப் பின்னாலேயே அணிவகுத்துச் செல்வார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; கிராமப்புற மனிதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "மறுமை நாள் எப்பொழுது ஏற்படும்?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அதற்காக நீ எதை சேமித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "நான் அல்லாஹ்வையும் ரசூலையும் நேசிக்கிறேன்" என்று கூறினார். நபி ஸல்) அவர்கள், "நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் சொர்க்கத்தில் இருப்பாய்!" என்று கூறினார்கள் .
நூல் : புகாரி, முஸ்லிம்.
ஒரு கவிஞர் கூறுகிறார்;
நபியே நீங்கள்
எங்களுடன் வாழ்ந்தீர்
அப்பொழுது எங்கள் உள்ளம்
ஈரமாக இல்லை!
இப்பொழுது
உங்கள் மீதுள்ள ஏக்கம்
கொஞ்சமும் வற்றவில்லை!
இந்த உலகில்
தற்போது உங்களை
சந்திக்கக் கூடிய நிலை ஏற்பட்டால்,
கூட்ட நெரிசல்களுக்கு இடையே
உங்களை நாங்கள் சந்திப்போம்;
அது எங்களுக்கு போதும்!
மறுமை நாளில் யார் நபி (ஸல்) அவர்களை பார்க்கிறாரோ அவர் அவரின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வார்; கவ்ழுல் கவ்ஸர் தடாகத்தில் இருந்து தண்ணீரையும் அருந்துவார்; நபிகளாருக்கும் நபிகளாரை பார்த்தவர்களுக்கும் இடையே இடைவெளியே இருக்காது. நெருங்கி இருப்பார்கள்.
மறுமையில் நபி (ஸல்) அவர்களை பார்க்கும் பாக்கியத்தை எப்பொழுது ஒருவர் பெறுகிறாரோ அப்பொழுதிலிருந்து அவை அவருக்கு நிரந்தரமாகிவிடும்; அல்லாஹ்வின் ரிழா - பொருத்தமும் கிடைத்துவிடும். இதை அல்லாஹ் கூறுகிறான்;
وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُون
மனம் விரும்பியவைகளும், கண்கள் இன்புறக்கூடிய (அனைத்தும்) அவர்களுக்கு அங்கு உண்டு; மேலும் அவர்களிடம், "நீங்கள் இங்கேயே நிரந்தரமாக இருப்பவர்கள் ஆவீர்கள்" என்றும் கூறப்படும். 43:71
நபி நேசர்கள் நபியை நேசிப்பதில் நீடித்திருக்கட்டும்; விடா முயற்சியுடன் அவர்களை நேசிக்கும் நெஞ்சத்தை பெறட்டும்; நபிகளாரின் சுன்னாவை தம் வாழ்வியலாக ஆக்கிக் கொள்ளட்டும்; அவருக்கு கட்டுப்பட்டு இருப்பதிலும் அவர் போதித்த மார்க்கத்தை பின்பற்றுவதிலும் ஆர்வமாக இருக்கட்டும்;
அப்படி இருந்தால் மறுமையில் அவரோடு நாம் இருப்போம்; அவர் இதயத்திற்குள்ளும் நாம் இருப்போம்.
அபூ ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுடன் நான் தங்கியிருந்தேன்; இரவில் அவர்கள் உளூ செய்யவும், அவர்களின் சுயத் தேவைகளுக்காக தண்ணீர் கொண்டு வந்தும் கொடுத்தேன்; அப்பொழுது அவர்கள், "எது வேண்டுமோ கேள்!" என்று கூறினார்கள்.
"உங்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்" என நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறு எதையேனும் கேள்" என்று கூறினார்கள். "அது போதும்" என்று நான் கூறினேன்.
அதற்கு அவர்கள், "நீ ஸஜிதாவை (தொழுகையை) அதிகப்படுத்திக் கொள்! அது உனக்கு போதுமாகும்" எனக் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம், அபூதாவூத்.
நாம் வாழும் போதோ மறுமையிலோ நபிகளாரை காணும் ஆசையிலிருந்து பின் வாங்கி விடாதீர்.
.
.
.
.
.
தொடரும்..........
Comments
Post a Comment